இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

மோசமான ஒரு கதையும் மூன்று வரமும்

June 25th, 2007 · 5 Comments

n2d2-nbm.jpg“அப்பா, எனக்கு மூணு வரம் கெடச்சா நான் என்ன கேப்பேன்னு உங்களுக்குத் தெரியுமா?”, சிறு நடையாய்க் கடையொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் ஒரு கதையொன்றைச் சொல்லிமுடித்த என்னிடம் நிவேதிதா கேட்டாள்.

“என்ன கேப்பே? சொல்லுமா”

* * * *

இன்றைய என் கதை அப்படியொன்றும் சுவாரசியமாய் இருக்கவில்லை. மனம் வடிவானவள் வாடியிருந்த நாளொன்றில் கண்ணிலே இரண்டு சொட்டுவிட்டு அழுத கணம் நினைவில் வந்தது. ‘நீங்க இப்போ கதையெல்லாம் சொல்லுரதேயில்ல’ என்ற குற்றச்சாட்டு ‘என் கதையையும் விரும்பிக் கேட்கிறாளே’ என்று பெருமிதம் கொள்ள வைப்பதொன்று. பாட்டி சொன்னதும், பால்யத்தில் அறிந்ததுமான கதைகளைத் தாண்டி பசியெடுத்த இவளுக்குக் கதைகள் சொல்லி மாளவில்லை என்று சொந்தமாய்க் கதைகளைத் திரித்துவிடுவது சில ஆண்டு முன் என் வழக்கமாய் இருந்தது. ஒரு நாள் சொன்ன கதை மறுநாளே மறந்து போகும் என்னை, அவற்றை மறவாது இன்னும் நினைவு கொண்டு இவள் சொல்லுவது ஆச்சரியப்படுத்தும் ஒன்று. ‘அந்தக் கதையெல்லாம் தான் எனக்கு ரொம்பப் பிடிக்குமப்பா’ என்றவளுக்குச் சொல்வதற்காக நிறையக் கதைகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனச் சிந்திப்பதுண்டு. சிந்தனை செயலாக மாறாத காரணத்தால், இன்றைக்கு ஒரு கதை சொல்லத் தயாராய் இல்லாமல் ஏனோதானோவாய் ஒன்றைச் சொல்லி வைத்தேன்.

‘கார் ஒன்றிலே பயணமாகும் தந்தையோடு பின்னிருக்கையில் இரு பெண்கள். இரட்டையர். முன்னிரவு (வலைப்பதிவின் காரணமாய்:-) ) தூங்க நேரமானதால் அரைத்தூக்க அப்பா திடீரென்று ஏதோ காரணத்தால் பெருஞ்சிலந்தி ஒன்றைக் கண்டதாய்ப் பயந்து போனார். விசித்திரமான குணம் ஒன்றின் காரணமாய், பயக்கிற போதெல்லாம் காற்றில் மேலே கட்டின்றி ஏறிடும் அவர் உடம்பு. நல்ல வேளையாய்க் காரின் உள்ளே இருந்ததால், மேல் கூரை அவர் தலையைத் தட்டித் தடுக்க, மீண்டும் கீழே வந்துவிட்டார்’.

rs-nbm.jpg‘மக்கள் பட்டம் விட்டுக் கொண்டிருந்த ஒரு பூங்காவிற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். குட்டிப்பையன் ஒருவனும் அவன் தந்தையும் பட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். பக்கத்தில் வந்து நின்று வேடிக்கை பார்த்தனர். பறக்க விட்ட பட்டம் அறுந்து போக, சின்னப் பையன் வருந்தி அழ, பெண்களுக்குச் சோகமாகி விட்டது. பலரும் எட்டிப் பிடிக்க முயன்றும் முடியாத போது, அவன் முகத்துச் சோகம் தாங்காத பெண்கள் அப்பாவிடம் வந்து “எதாச்சும் செய்ய முடியாதாப்பா… பாவம் அவனுக்குப் பட்டத்தப் பிடிச்சுக் கொடுக்க முடியாதா?” என்றனர். தானும் எட்டிப் பிடிக்க முயன்றும் முடியாத அப்பா “ஒண்ணும் பண்ண முடியலியே, கைக்கெட்டாமப் பறந்து போச்சே” என்றபோது, பெண்களுக்கு ஒரு யோசனை வந்தது. குசுகுசுவென்று அவர்களுக்குள் பேசிக் கொண்டவர்கள், அப்பாவின் பின்னிருந்து…’ என்றபோது பிறகென்ன நடக்குமென்று கண்டுபிடித்து விட்டவள்,

“ஓ அப்பா, இது ஒரு மோசமான கதையப்பா” என்றாள்.

“அதான்மா நான் சொன்னேன்… நீ பெரிய பெண்ணாயிட்டே. இந்தக் கதையெல்லாம் உனக்கு இப்போ பிடிக்காது”

“இல்லை அப்பா. உங்க கதை எனக்குப் பிடிக்கும். ஆனா, என்னால கண்டு பிடிக்க முடியாம ஒரே ஆச்சரியமா இருக்கணும். அடுத்தது என்ன ஆகுமோன்னு ஒரு படபடப்பும் பயமும் இருந்துட்டே இருக்கணும். இது ரொம்ப எளிமையா எதிர்பார்க்குற மாதிரியே இருந்துடிச்சு. இப்படி மோசமான கதை சொன்னதுனால தான் இது எனக்குப் பிடிக்கல்லே”, என்றவளிடம் சரணடைந்து உண்மையை ஒப்புக்கொண்டேன்.

“உண்மை தான். இது மோசமான கதை தான்”.

* * * *

kk-nbm.jpgகதைக்கும் கடைக்கும் முன்னர், வாஷிங்டன் நகரத்து அருங்காட்சியகம் ஒன்றில் நடந்த ஓவியக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருந்தோம். டேவிட் மெக்காலேவின் ஒவியங்கள் எனக்குப் பிடித்திருந்தன. ஓவியமும் பழக வேண்டும் என்னும் ஆசை எனக்குள்ளும் எழுந்தது. பென்சில் இன்றி மையிட்ட பேனாவினாலேயே வரையும் வழக்கத்தைக் கொண்டிருப்பவர் டேவிட் மெக்காலே. “வரைவதற்கு எது சிறந்தது என்ற கேள்வி அவசியமில்லை. எது உங்களுக்கு ஒத்து வருகிறதோ அதனைப் பயன்படுத்துங்கள். ஓவியக்கருவி என்று தனியாகக் கருத வேண்டாம். உங்கள் கரத்தின் நீட்சியாகத் தான் அதனை நீங்கள் பார்க்க வேண்டும்” என்கிறார்.

“தவறு என்று எதுவுமில்லை. ஒரு கோடு வேறாகப் போய்விட்டதா? அப்படியே சிறு திருத்தமாய் அதனையே நீட்டி அப்படியே வரையுங்கள்” என்கிறார். அதனாலேயே அவர் மைப்பேனாவையே பயன்படுத்துகிறார்.

“வரைவதற்குத் தயங்க வேண்டாம். உங்கள் படைப்புச்சக்தியைப் பரவ விடுங்கள்” என்பவர், அன்று ஒரு குமுகாய ஓவிய முயற்சி என்று விரித்து வைத்துவிட்ட பெருந்தாளில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரையலாம் என்று அவிழ்த்து விட்டார். ஆர்ப்பரித்த நீர்த்தூவல் ஒன்றின் பின்னணியில் துணியிலே பெருஞ்சாந்தும், தாளிலே கரித்துண்டும் கொண்டு நாங்களும் கொஞ்சம் வரைந்தோம்.

* * * *

உங்கள் கதையையும் கரித்துண்டோவியத்தையும் விட்டுவிட்டு என் கதைக்கு வாங்க அப்பா! ஓ… அதுவும் சரிதான்.

d2-nbm.jpg“எனக்கு மூணு வரம் கெடச்சா இது தான்ப்பா கேப்பேன். ஒண்ணு… காலத்துல பின்னோக்கிப் போக முடியணும்” (Travel back in time).

“அப்படியா? அப்புறம்?”

“அப்புறம்… ரெண்டாவது என்னால மாயமா மறைஞ்சுக்க முடியணும்” (Become Invisible)

“ம்”

“மூணாவது… என்னால பறக்க முடியணும்” (Be able to fly)

“ம்ம்ம்… சுவாரசியமா இருக்கே! சரி இதெல்லாம் வச்சு என்ன பண்ணுவே?”

“ஓ… மொதல்ல என்னால காலத்துல பின்னோக்கிப் போக முடிஞ்சா, நான் ஏதாவது வரையும்போது வர்ற தப்பெல்லாம் போய் சரி செஞ்சுடலாம்!”

“ஓ…”, எதிர்பாராத பதில் தான். (Back to the Future என்று படம் எடுத்தவரும் சரி, டேவிட் மெக்காலேவும் சரி, இதைக் கேட்டால் தலையைப் பிச்சுக்கணும்!)

“என்னால மாயமா மறைய முடிஞ்சா, யார் பின்னாடியாவது போய் கிச்சுக்கிச்சு மூட்டி விட்டுடுவேன், அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்”, என்றவளின் முகத்துக் குறும்பும் குறுகுறுப்பும் எனக்குள்ளும் சிரிப்பை வரவழைத்தது. (என் கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்கிறீர்கள்? 🙂 )

“அப்புறம், பறக்கறது ரொம்ப நல்லா இருக்கும். எனக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன். சுதந்திரமா அப்படியே பறக்க முடிஞ்சா எப்படி நல்லா இருக்கும்!”

* * * *

n2-nbm.jpg‘இரட்டைப் பெண்கள் ‘பே’ என்று பயமுறுத்திக் கிச்சுக்கிச்சு மூட்டிவிட்ட அப்பா பயந்து போனார். பயத்தால் பூங்காவிலே மேலே மேலே அவர் உடல் எழும்பிப் போனது. அறுந்து பறந்த பட்டத்தைப் பிடித்து விட்ட அப்பா சந்தோஷப் பட்டுப் போனார். கீழேயும் எல்லோருக்கும் சந்தோஷம். சந்தோஷம் பயத்தைப் போக்கவே மேலே போனவர் பிறகு கீழே வழுக்கிக் கொண்டு வர ஆரம்பித்தார்’.

“ஓ… அவர் உடம்பு எலும்பெல்லாம் கரஞ்சு ஒரு சதைப் பந்தாய் உருகிப் போயிடுச்சா?” என்றாள் குறும்புக்காரி.

என் கதையும் ஒரு பேனா ஓவியம் போன்றது தான். கிடைத்த கோட்டில் அப்படியே வாகாய் இழுத்தேன். “ஆமாம். பந்தாய் உருகி வந்தவர் கீழே தரையில் பட்டதும் அதிர்ந்து எழுந்து கையில் பட்டத்தோடு மீண்டும் மனிதராகி விட்டார்”. ‘பட்டம் கிடைத்த பையன் மகிழ்ந்து போனான்’.

“மோசமான கதையப்பா” என்றாள் நிவேதிதா. பட்டம் கிடைத்த பையனை விட எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

Tags: கண்மணிகள் · வாழ்க்கை

5 responses so far ↓

  • 1 DJ // Jun 27, 2007 at 12:45 am

    இனி பிள்ளைகளிடந்தான் நீங்கள் கதை கேட்கவேண்டும் :-).

  • 2 Aruna Srinivasan // Jul 3, 2007 at 7:18 am

    உங்களை எட்டு போட அழைத்துள்ளேன் செல்வராஜ். தனி மடலும் அனுப்பியுள்ளேன். ஜோதியில் சேர்ந்து கொள்ளுங்கள் 🙂

    அருணா

  • 3 வெற்றி // Jul 3, 2007 at 12:04 pm

    வாசிக்க நல்ல சுவாரசியமாக இருந்தது.

    /* காலத்துல பின்னோக்கிப் போக முடியணும்” (Travel back in time). */

    ம்ம்ம்…நானும் பலதடவைகள் இதை யோசிப்பதுண்டு.-:)

  • 4 selvanayaki // Jul 3, 2007 at 10:26 pm

    நானும் அவர்களோடு சேர்ந்து வரங்கள் வேண்டியும் அவற்றைப் பெற்றுக்கொண்டதுபோலவும் உணர்ந்தேன் இதைப் படித்தபோது.

  • 5 தங்கமணி // Jul 3, 2007 at 11:30 pm

    🙂