பூங்காவில் இளங்குமரனார்
Jul 29th, 2007 by இரா. செல்வராசு
“அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்வதே தவம்” என்று தனது எண்பத்தொரு வயதிலும் தமிழுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் இளங்குமரனாரின் செவ்வி தமிழின்பால் ஆர்வமுள்ளவர்கள் தவற விடக்கூடாத ஒன்று. வட அமெரிக்காவின் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவரை நேர்கண்டு அந்த உரையாடலைக் கடந்த வார ‘பூங்கா’ இதழ் வெளியிட்டிருக்கிறது.
பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றபின்னும் தனது ஓய்வூதியத்தை வைத்துத் திருச்சிக்கருகே திருவள்ளுவர் தவச்சாலை என்று அமைத்துத் தமிழாய்வுக்குத் தொண்டாகவும் பல வசதிகளும் செய்துகொண்டிருக்கும் இளங்குமரனார் சுமார் நானூறு புத்தகங்களை வெளியிட்டிருப்பதாகவும் கூறுகிறார். அதில் பெரும்பான்மையான நூல்கள் வள்ளுவத்தைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்.
தமிழ்வழிக் கல்விக்கூடங்கள் ஆங்காங்கே ஆரம்பிக்கப் படுவதாய்க் கூறுபவர், செம்மொழியாக அறிவித்த பின்னணியில் பெரும் ஆதாயம் ஒன்றும் ஏற்படவில்லை என்று வருந்துகிறார். ஆனால், ஒரு பக்கம் தமிழ்ப்பற்றும் தமிழ்த்தொண்டும் குறைவது போலத் தோன்றினாலும் இன்னொரு பக்கம் துடிப்புள்ள இளையவர் ஆர்வம் கொண்டும் பற்றுக் கொண்டும் தமிழ் கற்கவும் ஆய்வுசெய்யவும் முன்வருவதைப் பார்க்க முடிகிறது என்று பொதிவான (positive) கருத்தை அவர் முன்வைப்பது மிகவும் உவப்புக்குரியது.
தமிழில் கலைச்சொல்லாக்கம், பிறமொழிக் கலப்பு, அறிவியல் தமிழ், முதலியனவற்றைத் தொட்டுச் செல்லும் அவரது குறிப்புக்கள் ஆங்காங்கே தகுந்த காட்டுக்கள் மூலம் எளிமையாகவும் இருக்கின்றன. ‘வை’ என்னும் சொல்லுக்கு கூர் என்னும் பொருள் உண்டு. பேழையிலே வைக்கப்பட்ட பொருள் போன்றும் ஒரு பொருள் உண்டு. இரண்டு வகையாகவும் அது ‘நெல்’-ஐக் குறிக்க உதவுகிறது. பேழையிலே வைக்கப்பட்ட பொருளைப் போல, அரிசியைத் தன்னகத்தே கொண்டுள்ள நெல்லைத் தாங்கி இருப்பதால் வைக்கோல் என்ற பெயர் வருகிறது. ‘நெல்லும், பயிறும், நெய்யும் (oil), நீரும் தன்னிடத்தே வைத்திருக்கும் நிலம்’ என்னும் பொருளிலே வையம், வையகம் என்ற சொல் உருவாகிறது என்று சொற்களின் வேரில் இருந்து தொடங்கும் ஆய்வுகள் சிறப்பாக இருக்கின்றன. ஒரு நெல்லின் முனை மிகவும் கூராக இருக்கும். ஒரு மழிதகட்டினை விடக் கூராகவும் கிழிக்க வல்லதாகவும் இருக்கும் என்று அவர் கூறும்போது, ‘வைதல்’ என்று தமிழகத்தின் சில பகுதிகளில் (திட்டுவது குறித்து) வழங்கி வருவது ஒரு தொடர்புடைய சொல்லாக நம் மனதில் எழுகிறது. (“சீக்கிரமா வீட்டுக்குப் போகணும். இல்லாட்டி எங்க ஆத்தா வையும்”). வைதல் = கூர் சொல்லாலே கிழித்தல் ?! 🙂
“இலக்கியங்களில் இருந்தும் மக்கள் வாழ்வியலில் இருந்தும் சொற்களைப் பெற வேண்டும்”, என்று சொல்லாக்கத்திற்குத் தொல்காப்பியம் நல்ல வழியைக் கூறியிருக்கிறது என்னும் இளங்குமரனார், தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுக் கட்டுரைகளைப் பதினான்கு தொகுதிகளாகத் தொகுத்து ‘தேவநேயம்’ என்று வெளியிட்டிருப்பதாய்க் கூறுகிறார். (எனக்கு அவற்றை எல்லாம் பெற்று வைத்துக்
கொள்ள வேண்டும் என்னும் பேரவா எழுகின்றது).
சொற்பொருள் களஞ்சியம் என்று 6000 பக்க அளவில் தன் வாழ்நாள் பணியாக வேர்ப்பொருளில் இருந்து கிளைக்கும் சொற்களைப் பற்றிய பணியொன்றைச் செய்துகொண்டிருப்பதாகவும் அதில் பாதியை முடித்துவிட்டதாகவும் கூறுகிறார். மேலும் பல்லாண்டு சிறப்பாக வாழ்ந்து இத்தகு அரிய தமிழ்த்தொண்டினைத் தொடர வேண்டும் என்று என் வாழ்த்துக்களையும் மின்வெளியில் சொல்லிக் கொள்கிறேன்.
பின் குறிப்பு:
1. பூங்காவின் செவ்வி Real Audio வடிவத்தில் இருப்பதால், தகுந்த Player இருந்தால் மட்டுமே கேட்க முடியும். இது பற்றிய குறிப்பும் அங்கிருந்தால் நலமாய் இருக்கும். விரும்புவோர் முயன்றும் கேட்க முடியாவிட்டால் வேறு வடிவத்தில் தரவிறக்கிக் கொள்ளக் கேட்கலாம்.
2. பூங்கா ஒரு வலைப்பதிவு இதழாக வெளிவந்தாலும், இது போன்ற அரிய பல செவ்விகளும் கட்டுரைகளும் வலைப்பதிவுகளிலே வராமல் பூங்காவிற்கென்று சிறப்பு ஆக்கங்களாக வெளியிடப்படுகின்றன. அறிவீரா?
வெளிப்பாட்டுக் குறிப்பு: (disclosure)
பூங்கா இதழுக்கும் எனக்கும் தொடர்புண்டு.
உரையாடல் அறிமுகப் பதிவுக்கு மிக்க நன்றி.
பி.கு:- நீண்ட நாட்களாக தமிழகத்தவர்களிடம் கேட்க வேணும் என நினைத்திருந்த கேள்வி.
/* “சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்” */
இந்தச் ‘சீக்கிரம்’ என்பது தமிழ்ச் சொல்லா? ஈழத்தில் சீக்கிரம் என்ற சொல் புழக்கத்தில் இல்லை என்றே நம்புகிறேன். இச் சொல் ஈழத்தில் எனது ஊரில் புழக்கத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியும்.
சீக்கிரம் எனும் சொல்லுக்கு இணையாக எனது ஊரில் “சுறுக்காய்” அல்லது “கெதியாய்” எனும் சொற்களே புழக்கத்தில் உண்டு.
“சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்” இதை எனது ஊரின் பேச்சுவழக்கில் எழுதினால்:
” சுறுக்காய் வீட்டை போக வேணும்”
சுறுக்கு என்ற சொல்லில் ‘ரு’ ஆவா அல்லது ‘று’ ஆவா வருமென சரியாகத் தெரியாது. 🙂
செவ்வியை குறித்து நீங்கள் பதிவிட்டது நன்றாக இருக்கிறது. இது போல மூல சொற்களை குறித்து தெரிந்துகொள்வது இனிமையாக இருக்கிறது இராமா.கி அய்யாவின் கட்டுரைகள் போல.
test
கட்டுரையை படித்து பார்த்தேன். நன்றாக உள்ளது.
இப்படிக்கு
பெ.பாலாஜி
இன்று இந்த இடுகையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அருமை
வாழ்த்துகள்
அன்புடன்