ஓட்டக்காரன் குறிப்புகள்
Aug 26th, 2007 by இரா. செல்வராசு
நில்லாது ஓடுகின்ற வாழ்விலே சொல்லாத சொற்களும் செய்யாத செயல்களும் ‘உள்’ளிற்குள் தேங்கிப் போகின்ற பேச்சுக்களும் கனத்துப் போய்ச் சில சமயம் ஆளை அழுத்தும். ஆழ்நீரினிலிருந்து மிதவையாய் மிதவையாய் மேலெழும்பிக் காட்டும். வீரியமற்று வார்த்தைப் பொங்கல்கள் வழிந்துகிடக்கும். தயங்கிச் சொல்லாத வார்த்தைகள் ஒருபுறம் எனில், தயங்காது சொல்லப்பட்ட வார்த்தைகள் மறுபுறம் வாள்சுழற்றும். சொன்னவையும் சொல்லாதவையும் சமராடுகையில் இடைப்பட்ட ஒருவன் செய்யவேண்டியது சோர்வுதறி நிதானமாய் இருப்பதே. ஒரு சுவருக்குள் ஒதுங்கித் தன்னைக் காத்துக் கொள்வோம் என்பது எளிய வழியாய்த் தோற்றங்காட்டினாலும் அது ஒரு மாயையே! சுயமாய் எழுப்பிக் கொள்ளும் சுவர்களில் இருந்தும் கட்டிக்கொள்ளும் தளைகளில் இருந்தும் விடுபட்ட தன்மையதாய், இலகுவாய்ப் பறக்க மனம் ஏங்கும்.
அன்றாட ஓட்டத்தில் தேங்கிப் போகாமல் இருக்கத் தொடர்ந்த ஓட்டம் அவசியமாகிப் போகிறது. ஓட்டம் என்பதே முதல்த்தேவையாய் இருக்க, பிற தேக்கநிலைகள் குறித்து வருத்தமேன்? என்று அவற்றை ஓரளவிற்கு நயன்மைப் படுத்திக் கொள்ள முடியும். இருப்பினும், இது தப்பித்துக் கொள்ளும் ஒரு உத்தியன்றோ என்று மனது இடித்துச் சொல்லும். உண்மை தான், அதே கணம், ஊதிப்பெருகும் அழுத்தங்கள் பட்டென்று வெடிப்பதால் நீங்காமல், கட்டுற்று மெல்ல அழுத்தம் குறைய இஃது வழியென்னும் சமதானத்தை மனம் புரிந்து கொள்ளும். இருந்தும், கிடக்கட்டும் மனம், அப்படியாய்ச் சக்தியற்றவனா நான் (மனிதன்) என்று சுயம் உதைக்கும். ‘விட்டேனா பார்!’ என்று ஓட்டத்திற்கிடையே சொற்களையும் செயல்களையும் மீண்டும் கட்டி இழுத்துக் கொண்டு செல்ல வைக்கும். மீண்டும் அவற்றின் கனம் இழுக்கும்; ஓட்டத்திற்கு எதிர்த்தடையை உருவாக்கும். சுழல் தொடரும்.
முன்முடிபுகள் கொண்ட உலகம் பலசமயம் ஆயாசம் தரும். அவரவர் நிலைகளில் இறுகி ஒன்றி ஒரு தவறைத் தவறென உணர்ந்தும் ஒத்துக் கொள்ள இடம் தராமல் முரண்டு பிடிக்கும் பிடிவாதம் எதனால் உருவாகிறது? என்னை விட நீ பெரியவனா என்னும் சுயவீம்பா? நீ மட்டம் நான் மேல் என்னும் திணிப்பா? திணிப்பிற்கான எதிர்ப்பா? அண்டம் பேரண்ட அலகில் நீயும் நானும் சிறு துகள் அளவில் கூட இல்லை என்பதை உணரும் போதும் இதே வீம்பும், பிடிவாதமும், சுயப்பெருக்கமும் உணர்வோமா? சுழன்றோடும் காலத்தில் சில பத்தாண்டுகளையும் சில புத்தாண்டுகளையும் தவிர நமக்கிங்கே வேலை இல்லை எனில் சொல்லும் வெட்டும் குத்தும் எதற்காக? முடிவாய்த் தெரிவது என்னவெனில் சொன்னவையும் சரி, சொல்லாதவையும் சரி ஒரு தொடர்புப் பாலத்தை ஏற்படுத்த முடிவதில்லை என்பதே.
ஆயாசங்கள் நிறைகையில் சற்றைக்கேனும் எழுத்தும் இலக்கியமும் சாமரம் வீசி ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவும். ஆற்றங்கரையோரத்திலே முகத்தில் அள்ளியறைந்து கொண்ட நீரைப் படபடவென்று அடிக்கும் காற்று வந்து காயவைத்துச் சோர்வை நீக்கிச் செல்வதைப் போல இதம் கிடைக்கும். சிலசமயம். தூரத்தில் எவரோ சுட்டெரிக்கும் சுள்ளிகளில் இருந்து கிளம்பும் புகைமணமும் முன் நெற்றியில் கீற்றிட்ட திருநீற்றின் மணமும் கலந்து நாசிகளின் வழியாய் மனதை நிறைக்கும். ஒரு சில கணங்களாயினும் இலகுவாய் மனம் மிதக்கும். ஆன்ம விடுப்பின் அந்தக் கணங்களை ஓட்டத்திற்கிடையே தேட மறந்து விடாதீர்கள். வருகிறேன். அல்லது வந்து கொண்டிருக்கிறேன்.
ஓட்டமென்ன ஓட்டம் 🙂