சிறுகதை எழுதாமல் இருப்பது எப்படி?
Sep 4th, 2007 by இரா. செல்வராசு
பழனிமலைச் சரவணனை நான் கடைசியாகப் பார்த்தது பம்பாயில் தான் என்று நினைக்கிறேன். அது பம்பாய் இல்லையப்பா, ‘மும்பை’ என்போரிடம் நான் போயிருந்த நாளிலே உங்கள் மும்பை பம்பாயாகத் தான் இருந்தது என்று சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி, ஆங்கிலேயப்படுத்தப்பட்ட உள்ளூர்ப் பெயர்களை மீட்டெடுக்கும் முயற்சிக்கு என்னிடம் ஏதும் ஆட்சேபம் இல்லை. ஆதரவே உண்டு. நிற்க. பம்பாயோ மும்பையோ அதற்கும் நான் இங்கு சொல்லப் போவதற்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்ள வேண்டும். ஆனால் சரவணனுக்குச் சிறு சம்பந்தம் உண்டு.
துகில் நுட்பியல் படித்த சரவணன் சிலரோடு சேர்ந்து கொண்டு இளநிலை நுட்பியல் காலத்தில் ஓராண்டு தமிழிலே கையெழுத்துப் பத்திரிக்கை ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் எங்கள் விடுதியில் ஈடுபட்டிருந்தான். எத்தனை இதழ்கள் வந்தன என்பதை விரல் விட்டு எண்ணினாலோ இல்லை வெறுமனே எண்ணினாலோ ‘ஒன்று’ என்று தான் முடியும் என்று நினைக்கிறேன். அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கைக்கும் முன்னர் கூட நான் ஏதேனும் கதையென்று எழுதியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், அப்போது எழுதியது தான் நினைவில் முதலாவதாக இருக்கிறது.
‘சலனங்கள்’ என்ற தலைப்பிலே ஒரு கல்லூரிக் காதல் கதையை எழுதியிருந்தேன். கல்லூரிக் காதல் வழியாகப் பின்னாளில் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நண்பனொருவன் அதற்கு விமரிசனமாக, ‘இந்தக் கதையைப் படிக்கும் போது எனக்கும் கூட கதை எழுதலாம் என்று தோன்றுகிறது’ என்று எழுதியிருந்தான்!
‘இதுவெல்லாம் ஒரு கதையா? இதற்கு நானே கூட எழுதலாமே’ என்று சொன்னானா, இல்லை, ‘இப்படி அருமையான கதையைப் படிக்கும்போது எனக்கும் எழுத வேண்டும் என்னும் உத்வேகம் பிறக்கிறது’ என்பது போல் சொன்னானா என்று இன்று வரை எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. என்றாலும் வழக்கம் போல் அதனையும் பொதிவான பார்வையிலேயே பார்க்க எத்தனித்தேன்.
“கிரீடம்” தல(!) அஜீத்தின் கதையைப் போல ‘சலனங்கள்’ கதையின் என் நாயக நாயகியர் முடிவை நேர் எதிராய் மாற்றிக் கொள்ள வேண்டியதாகிப் போனதும் நடந்த கதை தான். பழைய முடிவை நீக்கிவிட்டுப் புது முடிவு மட்டும் வைத்து அனுப்பு என்று நான் வைத்த வேண்டுகோள் விதியிட்ட கோட்டின் காரணமாய் மாறிப் போய், பழைய முடிவு வெறும் கோட்டால் அடிக்கப் பட்டு அதன் கீழ் புதிய முடிவும் இருந்தது. நண்பர்கள் வெறும் நண்பர்களாகவே இருப்பதும், காதலர்களாக மலர்வதுமாய் இரண்டு முடிவுகளையும் படிக்கக் கிடைத்த வாசகப் பெருமக்கள் ‘சலனங்கள்’ என்று பெயர் வைக்காமல், ‘ஊசல்கள்’ என்று ஏன் பெயர் வைக்கவில்லை என்று கேட்காதது ஒன்று தான் குறை! (அப்படியும் கேட்டிருப்பார்கள். எனக்குத் தான் மறந்துவிட்டது!).
சிறுகதை ஒன்றை எழுதிவிடுவது என்பது என்னைப் பொருத்தவரையில் எளிமையானதொன்றல்ல. வெறும் புனைவாகவன்றி தம்மைச் சுற்றி நடப்பனவற்றை மையமாக வைத்தே சற்றுப் புனைவைச் சுற்றி எழுத (என்னால்) முடியும் என்று தோன்றுகிறது. வெறும் புனைவு என்றால் பரவாயில்லை. இல்லை, உண்மைக் கதையை எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டாலும் கூடப் பரவாயில்லை. ஆனால், உண்மையையும் புனைவையும் கலந்து எழுதக் கிளம்பி, படிப்போர் புனைவை உண்மை என்றும் உண்மையைப் புனைவு என்றும் நினைத்து விட்டால் என் செய்வது? ஐயகோ!
இப்படித்தான் பாருங்கள்… பன்னிரு வருடங்கள் கழித்து ஒருநாள் ‘ஏமி’யை அலுவ உணவகத்தின் முன்பு பார்த்தேன். நான் படித்த கல்லூரியில் படித்த பெண்ணை தற்செயலாகப் பல்லாண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்து உரையாட முடிந்தது எனக்கு ஒரு அசாதாரண நிகழ்வாய்த் தான் இருந்தது. அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றிற்குப் படிக்க வரும் தமிழக மாணவன் ஒருவனுக்கும் அமெரிக்கப் பெண்ணொருத்திக்கும் இடையே ஏற்படும் காதல், அதன் சிக்கல்கள், பிரிவு, சேர்தல் என்று எதையேனும் வைத்துக் கதை ஒன்று எழுதலாம் என்று பலகாலமாய் எண்ணியிருக்கிறேன். போன வருடம் வீட்டைச் சுற்றிய புல்வெட்டும் பொழுதொன்றிலும் கூட இது போன்ற கதையொன்றை யோசித்துக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் சொல்லி எதற்கு நான் உங்கள் முன் வாதாட வேண்டும் என்று புரியவில்லை. இருங்கள். அப்போது நான் ஏமியைச் (மீள்) சந்தித்திருக்கவில்லை.
தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிக்கும் பழக்கம் வேண்டும் என்றும் சொல்வார்கள். அதைக் கேட்டபோதிருந்து போகிற வருகிற வழியில் ஓடும் எந்த நாயையும் கூட நான் விடுவதில்லை. சென்னையில் இருந்து கிளம்பும் இரயில்வண்டியின் பெட்டியொன்றில் உச்சத்தில் சத்தமாய் ஓடும் ஒரு காற்றாடியின் கூண்டில் படிந்த குப்பையைப் பார்த்துக் கொண்டேவென முன்னொரு நாள் மரத்தடி சிறுகதைப் போட்டிக்கும் கூட ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். ஆனால், என் இரயில் கிளம்புவதற்குள் கதைக்கான கெடு முடிந்துவிட்டது. சரி என்று பாதியில் தொங்கியிருந்த கதையை அப்படியே வார்த்துச் சில நாள் கழித்து நடத்தப்பட்ட அறிவியல் புனை கதைக்கு அனுப்பலாமா என்று பார்த்தேன். ஒரு காதல் கதையாக ஆரம்பித்து அதையே அறிவியல் புனைவாக மாற்ற முடியும் திறமை எனக்கு மட்டும் தான் உண்டு என்று என் மனைவி உளமாரப் பாராட்டினார். அதையும் முடித்து அனுப்பி இருந்தால், ஒரு வேளை இந்த உலகமே கூட என்னைப் பாராட்டி இருக்கக் கூடும். இல்லை, இது புனைவா, சொந்தக் கதையா என்று மனைவி என் முதுகில் டின் கட்டியிருக்கவும் கூடும். யார் கண்டது? நதிமூலம், ரிஷிமூலம் மட்டுமல்ல. என் கதைகளின் மூலமும் பார்க்கக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொள்ளவேண்டியிருக்கும்.
தேன்கூடு-தமிழோவியம் சிறுகதைப் போட்டிக் காலத்தில் களத்தில் இறங்கி நாமும் கூட எழுதலாம் என்று முனைந்தேன். ஒரு கதையைப் படித்து விட்டு, ‘இது நல்லாத் தான் இருக்கு; ஆனா இது கட்டுரை தானே கதையென்று எப்படி சொல்றீங்க’ என்று கேட்டார்கள்! ‘அட அது பரிசோதனை முயற்சிங்க; விட்டுடுங்க’ என்று சொல்லிவிட்டேன். மற்றொரு கதையையும் பார்த்து, ‘இதுவும் நல்லா இருக்கு; ஆனா தலைப்புக்கு என்னங்க அர்த்தம்?’ என்று கேள்வி எழுந்தது.
இடையில் ‘பரவாயில்லையப்பா’ என்று சொன்ன இரண்டு பேருக்காகவும், ‘ஏன் நீ சிறுகதை வடிவத்தில் எழுதலாமே’ என்று சொன்ன ரெண்டு நட்புக்காகவும், இன்னும் என் மனதிலே சமைந்து கொண்டிருக்கிற வெளிவரத் துடிக்கிற சில கதைகளுக்காகவும் என்றாவது நான் சிறுகதைகள் கூட எழுதக் கூடும் என்று எச்சரிக்கை விடுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஹலோ… சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். நான் அமெரிக்கப் பெண் சம்பந்தப் பட்ட காதல் கதை எழுதினால் அது எத்தனை சதவீதம் உண்மை எத்தனை புனைவு என்று ஆராய்ச்சியெல்லாம் செய்து கொண்டிருக்காதீர்கள். புனைவை உண்மையாகத் திரித்தலும், உண்மையைச் சற்றே புனைவு முலாம் பூசி மறைத்து வைத்தலும் ஒரு சிறுகதை ஆசிரியனின் தனியுரிமை!
நல்ல படைப்புக்கள் தம்மைத் தாமே எழுதிக் கொள்ளும் என்பார்கள். நான் கூட அப்படித்தான். இந்தப் பக்கமாய் எப்போது ஒரு நல்ல கதை வந்து தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அக்கம்பக்கம் எங்கேனும் பார்த்தால் ஒரு வார்த்தை சொல்லி அனுப்புங்கள். பிடித்துப் போட்டுவிடுகிறேன்!
🙂
அடுத்தமுறை சென்னையிலிருந்து கிளம்பும் ரயிலுக்கு பதிலாக, ஏர் இண்டியா விமானம் என்றெழுதிப்பாருங்கள். கதையே முடிந்தாலும் வண்டி கிளம்பாது!
துகில் நுட்பியல் – textile technology ?
//அக்கம்பக்கம் எங்கேனும் பார்த்தால் ஒரு வார்த்தை சொல்லி அனுப்புங்கள்.// ம்ம் இங்கேயே பார்த்துவிட்டேனே 🙂
நேரில் பேசுவதுமாதிரி நடை நலலா இருக்குது. ரசித்தேன்
பாலராஜன்கீதா, அது டெக்ஸ்டைல் டெக்னாலஜி தான். அடைப்புக் குறிக்குள் போட எண்ணி மறந்துவிட்டேன். வேறேதேனும் நல்ல சொல் உண்டா?
கண்ணன் :-), ஜெசிலா, காசி, நன்றி.
/அது எத்தனை சதவீதம் உண்மை எத்தனை புனைவு என்று ஆராய்ச்சியெல்லாம் செய்து கொண்டிருக்காதீர்க
ள்./
இருக்கமாட்டோம் ஆனால்.. இது 100% உண்மைதான் என்று சொல்லாமலும் இருக்கமாட்டோம்
நெய்தல் தொழில்நுட்பம்
நெசவுத்தொழில்நுட்பம்
ஆமாஞ்சாமி, இந்தப் பக்கமா வந்துராதீங்க. ஆபத்தான ஆசாமிப்போவ்!
grilled humburger: கல்லூரியில் என்ன பாவித்தனர் என்பது மறந்து போயி. நெய்தல்/நெசவு எவ்வளவு பொருத்தம் என்பது தெரியவில்லை. துகிலு’க்கு இவை ஒன்றும் மோசமில்லை தான் 🙂
நடை நலலா இருக்குது. ரசித்தேன்
//அதைக் கேட்டபோதிருந்து போகிற வருகிற வழியில் ஓடும் எந்த நாயையும் கூட நான் விடுவதில்லை//
அன்பரே,இதைப் படித்து விட்டு வாய் விட்டுச் சிரித்தேன்…மேலும்,ஐ.பி பற்றிய பதிவு மிகவும் அருமை…வருத்தத்தை தரும் விஷயம் என்னவென்றால்,பலர் நீஙகள் பயன்படுத்தும் தமிழ்ச் இணையான சொற்களுக்கு ஆங்கில சொற்கள் கேட்பது தான்..!!தொடரட்டும் உங்கள் பணி.
படிச்சுட்டு நல்லா சிரிச்சேன்.
நன்றிகள்!!
:-). நல்ல பதிவு.
இன்று மீண்டும் நிதானமாக படித்தேன். ஆங்காங்கே நகச்சுவை மிளிர, அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
தலைப்பை பார்த்து விட்டு அட! செல்வராஜ் கதை எழுதி இருக்காரா! என்ற வியப்புடன் படித்தால்!
கதையைவிட மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக் கிறீர்கள்!
செல்வநாயகி,பாலாஜி-பாரி,பிரகாஷ்,பத்மா: மிக்க நன்றி.
நெல்லைத் தமிழன்: வருந்த வேண்டாம்:-) நான் பாவிக்கும் சொற்கள் எப்போதும் சரியானவையாக இருப்பதில்லை. இருந்தாலும் விடாது முயன்று வருகிறேன். பலருக்கும் இந்தச் சொற்களோ அல்லது இந்த முயற்சியோ புரியாததாக இருக்கலாம். காலப்போக்கில் சரியாகிவிடும் (இரண்டில் ஒன்று!) 🙂
மீனா, நீங்களே தானா? பல காலம் கழித்து உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. நன்றி.
Test
\\ நீங்களே தானா?
நானேதான் 🙂
Simply Superb. Keep this up and you will be the next P.G. Wodehouse.:-)
அய்யோ அநியாயம் என் கமண்டு காணம போச்சு
//சிறுகதை எழுதாமல் இருப்பது எப்படி?//
இந்த மாதிரி பதிவெல்லாம் வாசிக்ககூடாது.
Please take part in testing Tamil Domain
http://���தாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்/
http://���தாரணம்.பரிட்சை/தமிழ்
குமுதாவின் புண்ணியத்தில் இது இன்று கண்ணுக்குத் தெரிந்தது. வாசிக்க மிக நன்றாக இருந்தது.
சிறு கதை நன்றாகத்தான் எழுதுகிறிர்களே (விடுகிறீர்களே) செல்வா
நன்றி – சொ. சங்கரபாண்டி