இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

வாழ்வும் சாவும் வாழ்வும்

June 12th, 2007 · 12 Comments

N2D2 Feb 2007“அப்பா…”, குரல் கேட்டுத் திரும்பினேன். “திடீர்னு ஒருநாள் நான் செத்துப் போயிட்டா, என்னோட பொருள்லாம் என்னப்பா பண்ணுவீங்க?”, எப்போதும் போன்ற சாதாரண நாளொன்றின் மாலைப்பொழுதில் நிவேதிதாவிடம் இருந்து வந்த கேள்வி கேட்டுத் துணுக்குற்றுப் போனேன்.

“என்னம்மா, என்ன சொல்றே?”

“சும்மா ஒரு பேச்சுக்குப்பா. ஒரு உதாரணத்துக்கு நம்ம கார் ஒரு மரத்து மேல மோதி விபத்து நடந்துடுச்சுனா… அதுல நான் செத்துப் போயிட்டா, என் கிட்ட இருக்குற பொருள் எல்லாம் என்ன பண்ணுவீங்க?”

மரணத்தை இவர்களிடம் இருந்து மறைத்து வைக்க வேண்டும் என்று எண்ணியிராமல் சாதாரண ஒரு நிகழ்வாய்ப் பேசியிருக்கிறோம். மனித வாழ்வும், வயதானால் சாவும் இயற்கை நிகழ்வு தான் என்பதை முழுதும் புரிந்தோ புரியாமலோ இவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ‘நாங்கெல்லாம் வளந்து பெருசாகுறப்போ உங்களுக்கு வயசாயிடும். அப்புறம் செத்துப் போயிடுவீங்க’ என்று ஒரு நாள் வர இருக்கும் எங்கள் சாவு பற்றியும் இவர்கள் எங்களிடமே பேசியதும் உண்டு! மரணத்தை ஒரு புனிதமாகவோ, பயங்கரமானதாகவோ அறிமுகப்படுத்தாதிருந்தாலும், திடீரென்று மாலைத்தீனி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு எட்டு வயதினள் தன் மரணத்திற்குப் பிறகு… என்று பேசுகையில் சற்று திடுக்குற்றுத் தான் போனேன். ஒரு நுணுத்தத்தில் சுதாரித்துக் கொண்டவன், இந்தச் சிந்தனை செல்லும் திசையில் பயணிக்க எண்ணிப் பேச்சைத் தொடர்ந்தேன்.

“ம்ம்ம்… விபத்துல எங்களுக்கு ஒண்ணும் ஆகலயா? நாங்க எல்லாம் இன்னும் இருக்கிறோமா?”

“ம். நான் மட்டும் தான் செத்துப் போயிட்டேன்னு வச்சுக்கலாம்”

“அப்படின்னா… என்ன பண்ணுவோம்? நாங்க இருக்கோம்ல? உன் பொருள் பத்தியெல்லாம் நாங்க கவனிச்சுக்குவோம். நந்துவுக்குக் (சின்னவளுக்குக்) கொடுத்துருவோமா இருக்கும். இல்லன்னா எதாவது நன்கொடையா யாருக்காச்சும் கொடுத்துருவோம்”

அக்காவின் பொருட்கள் எல்லாம் தனக்கு வரும் என்று கேட்ட சின்னவள் பெருமகிழ்வுற்றுத் தன் முகத்திலே முறுவலாய்க் காட்டினாள்.

“என்ன நந்து? இப்படிச் சந்தோஷப் படுற? அக்கா இல்லையேன்னு உனக்கு வருத்தம் இருக்காதா?”

“நோ அப்பா. நிவேதிதாவின் பொருட்கள் எல்லாம் எனக்குக் கிடைக்கும்னா எனக்கு நல்லா இருக்கும். ஆனா ‘ஐ வில் மிஸ் ஹெர் வெரி மச்’. அதுனால எனக்கு அவ சாகவெல்லாம் வேண்டாம்”

தெளிவான பதில். இந்தத் தலைமுறையினர் பல விஷயங்களில் தெளிவாகத் தான் இருக்கின்றனர். வெறும் பொருள் மீதன்றி உறவுக்கும் உணர்வுக்கும் அன்புக்கும் முக்கியத்துவம் தருவதாய் அமைந்திருந்த அந்தப் பதிலில் நிச்சய திருப்தி அடைந்தவனாய்ப் பெரியவளிடம் திரும்பினேன்.

“ஏம்ப்பா? உனக்கு என்ன பண்ணனும்?”

“நந்துவுக்கு என் பொருள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும்ப்பா… அதனால, என்னுடையதெல்லாம் அவளுக்கே கொடுக்கணும்னு தான் எனக்கு ஆசை”

அதைக் கேட்டு இன்னும் முறுவலிக்கும் சின்னவளை இப்போது புரிந்து கொள்கிறேன்.

“அவ்வளவு தானே… அப்படியே செஞ்சுடலாம். கவலைப் படாதே”, எனது சம்மதத்தில் ஓரளவிற்கு நிம்மதியை முகத்தில் காட்டியவள் மேலும் தொடர்ந்தாள்.

“இல்லை அப்பா. இறந்து போனவங்களோட பொருள் எல்லாம் அவங்களையே எப்பவும் ஞாபகப் படுத்தும்னு சிலர் அவற்றை எல்லாம் எடுத்து கண்மறைவா யார்க்கிட்டயாவது கொடுத்துடுவாங்கன்னு படிச்சிருக்கேன். அதுனால தான் கேட்டேன். என்னுடையதெல்லாம் உங்களுக்கு என் ஞாபகத்தையே கொடுத்து சோகமா ஆக்கிரும்னு நீங்க யாருக்காவது கொடுத்துடலாம்னு நினைச்சீங்கன்னா… அதனால தான்”

“ஓ… யார் அப்படிக் கொடுத்தாங்க?”

“நான் சில புத்தகங்கள்ள படிச்சேன். ஆபிரகாம் லிங்கன் அவரோட மகன் இறந்தப்போ அப்படித்தான் பண்ணினாராம். மகனோட பொருட்கள் எல்லாத்தையும் தானமாக் கொடுத்திட்டாராம்”

அப்படியா? இந்தக் கதையெல்லாம் எனக்குத் தெரியாதே என்று பிறகொரு நாள் இணையத்தில் தேடி அறிந்து கொண்டேன். லிங்கனின் இரண்டாவது மகன் நான்கு வயதிலும், மூன்றாவது மகன் பதினொரு வயதிலும் இறந்து போயிருக்கின்றனர். அதனால் லிங்கன் தம்பதியினர் மனமுடைந்து இருந்த காலம் உண்டு.

Lincoln (c) http://bensguide.gpo.gov/images/symbols/lincoln_head.jpgஆபிரகாம் லிங்கனை இவளுக்கு மிகவும் பிடிக்கும். பள்ளியிலே லிங்கன் பற்றிப் படித்ததுவும் வேறு புத்தகங்கள் வழியாக அறிந்ததில் இருந்தும் எப்படியோ பிடித்திருக்க வேண்டும். அடிமைப்பிடியில் சிக்கியிருந்த ஒரு இனத்தின் சுதந்திரத்திற்காகச் சிந்தித்துச் செயலாற்றிச் சட்டமியற்றறிய ஒரு தலைவனைப் பற்றி இவளோடு சேர்ந்து நானும் அதிகம் தெரிந்து கொள்ளலாம். அருகில் தானே இருக்கிறது – ஒரு நாள் லிங்கன் நினைவகத்துக்குக் கூடக் கூட்டிப் போக வேண்டும். எல்லையில்லாது விரிந்து கொண்டிருக்கிறது இவளின் / இவர்களின் உலகம். அதன் விரிதலுக்கு உதவியும் அதன் உள்ளேயே எப்போதும் இருந்து வரவும் எனக்கும் சின்ன ஆசை.

“சரிம்மா…. உன் ஆசைப்படியே நந்துவுக்கே எல்லாப் பொருளும் கொடுத்துடலாம். நாங்க வேற யாருக்கும் கொடுக்கல்லே. அதோடு, உன்னை நினைவுபடுத்தவென்று அவை இருக்கின்றன என்று நான் மகிழவே செய்வேன்”. அவளை/அவர்களைப் பற்றிய நினைவுகளைச் சேகரித்து வைத்துக் கொள்ள முயன்றும் முழுதாய் முடியாமல் படைப்புக்களால் நிறைந்து வழியும் கோப்புக்களும் உணர்வுகளால் நிறைகின்ற உள்ளமும், அனுபவங்களாய் நிறையும் நேரங்களும்… எதை இழக்க மனம் வரும்?

“அது சரி அப்பா… ஆனால், இந்த என் விருப்பத்தை எங்காவது ஆவணப்படுத்த வேண்டுமா? சட்டபூர்வமாய் (லீகலாக) எதையேனும் செய்யவேண்டுமா?” என்று வந்த அடுத்த கேள்விக்கு நிச்சயமாய் நான் தயாராய் இல்லை.

“இல்லம்மா… அது வந்து… அதெல்லாம் வேண்டியதில்லே. எங்க கிட்டச் சொல்லீட்டல்லியா? அது போதும். நாங்க அத ஞாபகம் வச்சுக்குவோம்”, என்று வெறும் மொண்ணையாக மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

ஒரு தலையசைப்போடும் தீனிச்சுவையில் திளைத்தும் வேறு நிலைக்கு மாறி அவள் ஓடிவிட்டாள். பல நாட்கள் ஆகியும் எனது குளத்தில் அவள் எறிந்த கல் எழுப்பிய அலைகள் மட்டும் ஓய்ந்தபாடில்லை.

* * * *
தான் இறந்த பின் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு குழந்தை யோசிக்கிறது. அந்தக் குழந்தைக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று என் இறப்புப் பற்றி நான் பெரிதும் யோசித்திருக்கின்றேனா? இத்தனைக்கும் இது பற்றிய யோசனையை மனைவி என்னிடம் சொல்லிப் பல்லாண்டு பல்லாண்டு ஆகிவிட்டது.

என் வரட்டுப் பிடிவாதமும், என்றும் இழக்காத குருட்டுப் பொதிவுணர்ச்சியும் காரணமா என்று தெரியவில்லை, “நூறு வயசாகற வரைக்கும் எனக்குச் சாவில்லை”, என்று சொல்லித் திரிந்தேனே தவிர சுயமரணம் பற்றிப் பேசவும் திட்டமிடவும் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. இப்போதும் பெரிதாய் இல்லை என்பது ஒருவகை முட்டாள்த்தனம் தானோ?

மரணத்தின் பின் பணியிடத்து ஆயுள் காப்பீடு, விபத்தானால் ஈட்டுத் தொகை, ஓய்வூதியம், அரசின் சமூகக்காப்பீடு (சோசியல் செக்யூரிட்டி) இன்ன பிறவும் பொருளாதார உறுதியைத் தர முடியும் என்று சில கணக்குப் போட்டு நிம்மதியை வாங்கிக் கொள்ள முயன்றாலும் பின்னணியில் மனைவியின் குரல் அசரீரியாய் அதனை நீண்ட காலம் நிலைக்க விடுவதாயில்லை.

“அது எல்லாம் சரிங்க. அதே மரத்து மேல மோதுன காரில் நம்ம ரெண்டு பேருக்கும் ஆபத்தாகிப் பொண்ணுங்க மட்டும் பொழச்சாங்கன்னா அவங்களுக்கு என்ன நிலைன்னு யோசிச்சுப் பாத்தீங்களா?” என்ற கேள்வி சற்று பயமுறுத்துவதானது.

பெற்றோரில் ஒருவர் இறந்து ஒருவர் பிழைத்தால் கூடப் பெரும் பாதகம் இல்லை. ஆனால் இருவருக்கும் ஏதாவது ஆனால்? அதிலும் சொந்த ஊரும் மண்ணும் அருகில்லாத புலம் பெயர் வாழ்வில் அப்படியான ஒரு நிலையில் என்னவாகும் என்பது குழப்பமான ஒன்று. இந்த அரசாங்கம் குழந்தைகளின் வளர்ச்சிக்குப் போதுமான உதவிகளைச் செய்யும் என்றாலும், தொலைக்காட்சியில் பார்க்கிற தொடர்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து அது அவ்வளவு ஆறுதலான ஒன்றா என்று முடிவு செய்ய இயலவில்லை. அரசால் தத்துக்கு விடப்படும் குழந்தைகளின் வளர்சூழல், அதனைச் சார்ந்த பிரச்சினைகள் என்று பல அம்சங்கள் யோசிக்க இருக்கின்றன.

“ஏன்? நமது நண்பர்களோ, உறவினர்களோ பாத்துக்குவாங்க. இல்லாட்டி தாத்தா பாட்டி அப்பச்சி அம்மாயி கிட்ட ஊருக்கு அனுப்பிடச் சொல்லிடுவாங்க” என்று முனகலாய்ச் சொல்ல முடிந்தாலும், உறுதியாக என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. பெற்றோரின் விருப்பம் என்ன என்று தெரியாவிட்டால், அரசே அவர்களைத் தத்தெடுத்து வளர்க்கும் வழிவகைகளை முடிவு செய்யும் வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் சட்டபூர்வமாய் நாம் ஏதேனும் ஆவணம் செய்து வைக்க வேண்டும்” என்று மனனவி பல காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

குறைந்த பட்சம் அது பற்றிய விவரங்களை அறிந்து வைத்துக் கொள்ளவாது செய்ய வேண்டும். சொந்தக் காப்பாளர் (பெர்சனல் கார்டியன்) யார் என்று மட்டுமாவது பிடித்த நண்பர், உறவினர், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் யாராவது பெயரைக் குறிப்பிட்டு ஒரு ‘பத்திரம்’ (“வில்”) எழுதி வைப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல தான். மக்களுக்குச் சொத்து விட்டுப் போனாலும், அவர்களுக்குப் பதினெட்டு வயதாகும் வரையாவது அதனை நிர்வகிக்கவென்று ஒருவரையும் நியமித்து விடுவதும் எளிமையான ஒன்று தான். சுய இறப்பு பற்றிய சிந்தனை குறித்த பெரும் மனத்தடையைத் துடைத்துவிட்டு இது பற்றி யோசிக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன்.

Choosing a Guardian for Your Children
Leaving Property to Young Children

* * * *
N2D2 Apr 2007இரண்டு நாட்கள் கடந்த இன்னொரு நாள் மாலையில் வீட்டில் அடிதடிச் சண்டைச் சத்தம் கேட்டது. என்னவென்று எட்டிப் பார்த்தபோது ஒரு சிறு கருப்பு நாற்காலிக்காகப் பெண்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். உயிரைக் கொடுக்கவும், உயிரான பொருட்கள் அனைத்தையும் கொடுக்கவும் தயாராக இருப்பவர்கள் ஒரு சின்ன நாற்காலிக்காக அடிதடியில் இறங்கி இருப்பதை என்னவென்பது? வாழ்க்கை தான்.

சாவைத் தாண்டி வாழ்வை நினைந்து மனதுள் மெல்லவொரு புன்னகை அரும்புகிறது.

* * * *

Tags: கண்மணிகள் · வாழ்க்கை

12 responses so far ↓

  • 1 Vaduvur kumar // Jun 13, 2007 at 1:11 am

    குழந்தைகள் வெள்ளேந்தியாக கேட்கும் கேள்விகள் நம்முள் அலையை ஏற்படுத்துவது,தவிர்க்கமுடியாதது.

  • 2 Alex Pandian // Jun 13, 2007 at 2:11 am

    செல்வராஜ்,

    அருமையான பதிவு. பலரும் இதைப்பற்றி எண்ணமாட்டார்கள் எனினும், தற்போதைய காலகட்டத்தில் (விர்ஜினியா பேராசிரியர் சம்பவம் மற்றும் இன்னபிற இந்திய சம்பவங்கள்) இதைப் பற்றி சிந்தித்து ஒருவித ப்ளான் செய்து கொள்வதற்கு உதவும்.

    அடிக்கடி வலைப்பதியவும்.

    – அலெக்ஸ்

  • 3 தங்கமணி // Jun 13, 2007 at 2:38 am

    கேள்விகள் துணுக்குற வைத்தாலும், என் குளத்திலும் ஒரு கல் வீசத்தான் செய்தன.

  • 4 மணியன் // Jun 13, 2007 at 2:40 am

    நல்ல பதிவு. அனைவரையும் சிந்திக்க வைக்கும் பதிவு. மரணம் என்று சொல்வதையே தவிர்க்கும் மனபயத்தைக் கடந்து நம் வாழ்விற்கு பின்னும் நம் சிறாரின் வாழ்வை சீரமைக்க வழிவகை காணும் அவசியத்தை உணர்த்தியது.நிவேதிதாவின் பொறி அனைவருக்கும் பரவ உதவியது.

  • 5 நாகு // Jun 13, 2007 at 9:51 am

    நாம் எத்தனையோ தடவை யோசித்திருந்தாலும் செய்யாத விஷயங்களில் இது முதல் இடம் பெறும். உயில் மட்டும்தான் நான் யோசித்திருக்கிறேன். நாம் போனால் நம் பெற்றோர்கள் கார்டியனாக இருப்பார்கள் என்று நம்மில் பலர் எண்ணலாம். ஆனால் நம் குழந்தைகளுக்கு பதினெட்டாகும்வரை அவர்கள் இருப்பார்களா என்பது கேள்வி. உயில், கார்டியன் இரண்டும் அவசியமானது.

    லிங்கனின் வாழ்வில் பெரிய சோகங்கள். அவர் காதலித்த பெண் இளவயதிலேயே இறந்துபோனது. அந்த சோகத்திலிருந்து அவர் மீள வெகு நாட்களாயின. பின்பு அவர் கல்யாணம் செய்து கொண்ட மேரி டாட்(என நினைக்கிறேன்) அவர் வாழ்க்கையை மேலும் சோகப் படுத்தியிருக்கிறார்.

  • 6 சதங்கா // Jun 13, 2007 at 11:06 am

    செல்வராஜ்,

    அனைவரும் கவணிக்க வேண்டிய பதிவு. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    உலகத்தில் ஆண்கள் அனைவரும் பெண்களின் உந்துதலால் தான் காரியங்களைச் செய்கிறார்கள் என்றும் மென்மையாய்ப் பதிந்திருக்கிறீர்கள்.

    என் மனைவியும் இதையே பலதடவை சொல்லியும் நான் செயலில் இன்னும் இறங்கவில்லை.

    இந்தக் காலகட்டத்தில் நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் பலவற்றில் இது முதன்மையான ஒன்று என்று மறுப்பதற்கில்லை.

    சதங்கா.

  • 7 செல்வராஜ் // Jun 14, 2007 at 7:21 am

    நண்பர்களுக்கு நன்றி. இது குறித்த வேறு சிந்தனைகள், அனுபவங்கள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • 8 Vimala // Jun 15, 2007 at 11:48 am

    Conversation about getting old and death has happened in our home too.
    We got that long pending work done last year, a Trust and Will. Answering questions to that process is also tough.
    Beautiful pictures of the girls.

  • 9 வாழ்வும் சாவும் வாழ்வும் - Selvaraj « கில்லி - Gilli // Jun 17, 2007 at 12:46 pm

    […] விகல்பமில்லாத கேள்வியும் குழப்பமில்லாத பதிலும் தொடர்ச்சியான செயல்திட்டங்களும். […]

  • 10 Padma Arvind // Jun 17, 2007 at 4:36 pm

    Discussions and living will are very important especially here as we dotn have immediate family to attend to kids. In NJ, if no will, govt takes the kids until the Court decides.
    estate planning for life insurance is also needed to avoid taxation, proper care etc. we got a will and trust made couple of years ago.
    we also have a will as of what to do if life support (medical)becomes essential to avoid any trouble to our son.
    Your daughters pictures are very beautiful, speak volumes of happiness.

  • 11 maria ponipas // Jun 19, 2007 at 3:14 am

    thambi sowkyama.aramba varigal pidithu poi ullae nulainthen.well done.

  • 12 Pandian // Jun 19, 2007 at 10:44 am

    ம்ம்ம்.. குழந்தைகளிடம் இந்த வயதிலேயே இவ்வளவு முதிற்சியா? நன்று.

    ஒரு பிரதி எடுத்து வத்திருக்கிறேன் என் மனைவிக்கு படிக்க கொடுப்பதற்கு. என் வீட்டில் நிலைமை தலைகீழ். she wouldn’t even want to imagine that situation. what can i say 🙁 .. hope your article will be an eye opener.

    //நாற்காலிக்காகப் பெண்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்//
    நாற்காலின்னாலே சண்டைதான்போல?