Feed on
Posts
Comments

தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?

நீங்கள் எந்த ஊர்க்காரராக இருந்தாலும், எந்தப் பள்ளியில் தமிழ் பயின்றிருந்தாலும், இந்தக் கேள்விக்குப் பதிலாக 247 எழுத்துக்கள் (மற்றும் சில வடமொழி எழுத்துக்கள் ~ கிரந்தம்) என்று தான் படித்திருப்பீர்கள். உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு, உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு, ஆய்தம் ஒன்று சேர்த்து ஆக மொத்தம் இருநூற்று நாற்பத்தியேழு.

ta letter

இருநூற்று நாற்பத்தியேழு எழுத்துக்கள்.

இந்தக் கொத்தில் (set) சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் முழுதாய் ‘எழுத்து’ என்றே வழங்கப்படும். இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியரால் வகுக்கப்பட்ட இலக்கண நூல் முதல் இவை ஒவ்வொன்றும் ‘எழுத்து’ என்றே வழங்கப்பெறும் தகுதியுடையவை. ‘தொல்காப்பியம் நீ படித்திருக்கிறாயா?’ என்று கேட்டால் ‘இல்லை’ என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றாலும், படித்தவர்கள் சொல்வதைக் கொஞ்சம் கேட்டுக் கொள்ளலாமே! (இராம.கி யின் தொல்காப்பியமும் குறியேற்றங்களும் – ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு). இப்போது அழிந்துவிட்ட சில எழுத்துக்களையும் சேர்த்து அவர் எழுத்துக்கள் இருநூற்று ஐம்பத்தாறு என்று ஒரு கணக்குச் சொல்வதையும் ஒருபுறம் வைத்துக் கொள்ளலாம்.

சரி. இப்போது எதற்காக இந்த எழுத்துக் கூட்டற்கணக்கு என்று கேட்கிறீர்களா ?

நிற்க. அதற்குப் பதில் சொல்லும் முன், ஒருங்குறி (அ) யூனிக்கோடு என்றால் என்ன என்பதையும் பார்ப்போம். இதனை வேறு எங்கும் துழாவாமல் யூனிக்கோடு இணைய தளத்திற்கே சென்று பார்ப்போம். அதற்கும் முன், சமயம் கிட்டினால் ஆதியிலே இருந்த ஆசுக்கியில் (ASCII) ஆரம்பித்து ஆன்சி (ANSI) தசுக்கி (TSCII) தாம் (TAM) தூம்(!!) என்று குதியாட்டம் போட்டு எளிமையாக விளக்கிய தமிழ்மணம் காசியின் தொடர் கட்டுரைகளைப் (என் கோடு, உன் கோடு, யுனிகோடு, தனி கோடு) படித்துக் கொள்ளுங்கள். ஒரு பாமரன் பாமரனுக்குச் சொன்னது என்று காசி எச்சரிக்கையோடு ஆரம்பித்தாலும், பெரும்பாலும் சரியான விளக்கங்களே. மிகவும் அகலமாகவும் தேவையான அளவிற்கு ஆழமாகவும் செல்லும் இந்த விளக்கங்கள் எளிமையான நடையில் சொல்லப் பட்டிருக்கின்றன.

யூனிக்கோடு என்பது என்ன?

unicode 5.0

Unicode provides a unique number for every character, no matter what the platform, no matter what the program, no matter what the language.

யூனிக்கோடு என்பது எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு குறியேற்றம் (character-based encoding). அதோடு, குறிப்பாக அது எழுத்து-வடிவங்களை அடிப்படையாகக் கொண்டது (glyph-based encoding) அன்று. இதற்கு முன்பிருந்த இசுக்கி (ISCII), தசுக்கி(TSCII) இவை எல்லாம் வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பட்டவை.
Continue Reading »

“It’s a consonant, vowel, vowel, consonant… நந்து”, என்று தங்கைக்கு துப்புக் கொடுக்க முயன்றாள் நிவேதிதா.

நெடுந்தொலைவு பயணம் சென்றால் பெண்களின் அயர்வு தெரியாதவண்ணம் இருக்க ஏதேனும் கேட்டு அவர்களின் மனதைச் சுவாரசியமாக வைத்திருக்க முயல்வதுண்டு. சில சமயம் கணக்கு. சில சமயம் ஆங்கிலம். சில சமயம் கதை, இப்படி. அப்படியொரு பயணமொன்றில் ஒரு வருடத்திற்கும் முன்பு நடந்த கதை தான் இது. ஆங்கிலச் சொற்களுக்கு எழுத்துவரிசை சொல்லச் சொல்லி அன்று சின்னவளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். Cat, Dog, Pen, Top என்று மூன்றெழுத்துச் சொற்களைச் சரியாக அவள் சொல்லிவிடவே அடுத்து நான்கெழுத்துச் சொற்களுக்கு நகர்ந்தேன்.

இடையிலே, “டேய், அமைதியா இருடா! நான் உன்னையா கேட்டேன்?’ அவள் சொல்லட்டும்” என்று பெரியவளைச் சற்றே மிரட்ட வேண்டியிருந்தது உபகதை.

“அவளும் சரியாக் கத்துக்கணும்ல?” என்று நான் சொன்னது தனக்கும் ஒரு பொறுப்பைத் தந்துவிட்டாற்போல், “சரியப்பா… நான் அவளுக்கு கொஞ்சமா உதவுறேன்” என்று நல்லவிதமாய் எடுத்துக் கொண்டு சில துப்புக்களும், உதட்டசைவுகளும், ஆரம்பங்களும் தந்து கொண்டிருந்தாள்.

நான்கெழுத்து எழுத்துக்களும் சிலவற்றைச் சரியாகச் சொல்லிக் கடந்தாள் நந்திதா. ஒவ்வொரு வெற்றிக்கும் காருக்குள்ளே கைதட்டல்கள் வேறு!

“POUR” என்று அடுத்த வார்த்தையைச் சொன்னேன். மெல்ல யோசித்துப் “P… O… R… E…?” என்றாள். அதுவும் சரிதான் என்றாலும் நான் கேட்டது வேறு சொல் என்றேன். “இன்னொரு போர் (POUR) இருக்கு… தண்ணி ஊத்து அப்படீங்கற மாதிரி அர்த்தம்” என்றேன்.

“ஓ, ஐ நோ, ஐ நோ” என்று உற்சாகப்பட்ட நிவேதிதா மேற்சொன்ன வகையில் ஒரு துப்புத் தந்தாள். “It’s a consonant, vowel, vowel, and a consonant… நந்து”.

Continue Reading »

shortstory.jpgபழனிமலைச் சரவணனை நான் கடைசியாகப் பார்த்தது பம்பாயில் தான் என்று நினைக்கிறேன். அது பம்பாய் இல்லையப்பா, ‘மும்பை’ என்போரிடம் நான் போயிருந்த நாளிலே உங்கள் மும்பை பம்பாயாகத் தான் இருந்தது என்று சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி, ஆங்கிலேயப்படுத்தப்பட்ட உள்ளூர்ப் பெயர்களை மீட்டெடுக்கும் முயற்சிக்கு என்னிடம் ஏதும் ஆட்சேபம் இல்லை. ஆதரவே உண்டு. நிற்க. பம்பாயோ மும்பையோ அதற்கும் நான் இங்கு சொல்லப் போவதற்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்ள வேண்டும். ஆனால் சரவணனுக்குச் சிறு சம்பந்தம் உண்டு.

துகில் நுட்பியல் படித்த சரவணன் சிலரோடு சேர்ந்து கொண்டு இளநிலை நுட்பியல் காலத்தில் ஓராண்டு தமிழிலே கையெழுத்துப் பத்திரிக்கை ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் எங்கள் விடுதியில் ஈடுபட்டிருந்தான். எத்தனை இதழ்கள் வந்தன என்பதை விரல் விட்டு எண்ணினாலோ இல்லை வெறுமனே எண்ணினாலோ ‘ஒன்று’ என்று தான் முடியும் என்று நினைக்கிறேன். அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கைக்கும் முன்னர் கூட நான் ஏதேனும் கதையென்று எழுதியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், அப்போது எழுதியது தான் நினைவில் முதலாவதாக இருக்கிறது.

‘சலனங்கள்’ என்ற தலைப்பிலே ஒரு கல்லூரிக் காதல் கதையை எழுதியிருந்தேன். கல்லூரிக் காதல் வழியாகப் பின்னாளில் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நண்பனொருவன் அதற்கு விமரிசனமாக, ‘இந்தக் கதையைப் படிக்கும் போது எனக்கும் கூட கதை எழுதலாம் என்று தோன்றுகிறது’ என்று எழுதியிருந்தான்!
Continue Reading »

Ottam (c) Agathish V
நில்லாது ஓடுகின்ற வாழ்விலே சொல்லாத சொற்களும் செய்யாத செயல்களும் ‘உள்’ளிற்குள் தேங்கிப் போகின்ற பேச்சுக்களும் கனத்துப் போய்ச் சில சமயம் ஆளை அழுத்தும். ஆழ்நீரினிலிருந்து மிதவையாய் மிதவையாய் மேலெழும்பிக் காட்டும். வீரியமற்று வார்த்தைப் பொங்கல்கள் வழிந்துகிடக்கும். தயங்கிச் சொல்லாத வார்த்தைகள் ஒருபுறம் எனில், தயங்காது சொல்லப்பட்ட வார்த்தைகள் மறுபுறம் வாள்சுழற்றும். சொன்னவையும் சொல்லாதவையும் சமராடுகையில் இடைப்பட்ட ஒருவன் செய்யவேண்டியது சோர்வுதறி நிதானமாய் இருப்பதே. ஒரு சுவருக்குள் ஒதுங்கித் தன்னைக் காத்துக் கொள்வோம் என்பது எளிய வழியாய்த் தோற்றங்காட்டினாலும் அது ஒரு மாயையே! சுயமாய் எழுப்பிக் கொள்ளும் சுவர்களில் இருந்தும் கட்டிக்கொள்ளும் தளைகளில் இருந்தும் விடுபட்ட தன்மையதாய், இலகுவாய்ப் பறக்க மனம் ஏங்கும்.

அன்றாட ஓட்டத்தில் தேங்கிப் போகாமல் இருக்கத் தொடர்ந்த ஓட்டம் அவசியமாகிப் போகிறது. ஓட்டம் என்பதே முதல்த்தேவையாய் இருக்க, பிற தேக்கநிலைகள் குறித்து வருத்தமேன்? என்று அவற்றை ஓரளவிற்கு நயன்மைப் படுத்திக் கொள்ள முடியும். இருப்பினும், இது தப்பித்துக் கொள்ளும் ஒரு உத்தியன்றோ என்று மனது இடித்துச் சொல்லும். உண்மை தான், அதே கணம், ஊதிப்பெருகும் அழுத்தங்கள் பட்டென்று வெடிப்பதால் நீங்காமல், கட்டுற்று மெல்ல அழுத்தம் குறைய இஃது வழியென்னும் சமதானத்தை மனம் புரிந்து கொள்ளும். இருந்தும், கிடக்கட்டும் மனம், அப்படியாய்ச் சக்தியற்றவனா நான் (மனிதன்) என்று சுயம் உதைக்கும். ‘விட்டேனா பார்!’ என்று ஓட்டத்திற்கிடையே சொற்களையும் செயல்களையும் மீண்டும் கட்டி இழுத்துக் கொண்டு செல்ல வைக்கும். மீண்டும் அவற்றின் கனம் இழுக்கும்; ஓட்டத்திற்கு எதிர்த்தடையை உருவாக்கும். சுழல் தொடரும்.

முன்முடிபுகள் கொண்ட உலகம் பலசமயம் ஆயாசம் தரும். அவரவர் நிலைகளில் இறுகி ஒன்றி ஒரு தவறைத் தவறென உணர்ந்தும் ஒத்துக் கொள்ள இடம் தராமல் முரண்டு பிடிக்கும் பிடிவாதம் எதனால் உருவாகிறது? என்னை விட நீ பெரியவனா என்னும் சுயவீம்பா? நீ மட்டம் நான் மேல் என்னும் திணிப்பா? திணிப்பிற்கான எதிர்ப்பா? அண்டம் பேரண்ட அலகில் நீயும் நானும் சிறு துகள் அளவில் கூட இல்லை என்பதை உணரும் போதும் இதே வீம்பும், பிடிவாதமும், சுயப்பெருக்கமும் உணர்வோமா? சுழன்றோடும் காலத்தில் சில பத்தாண்டுகளையும் சில புத்தாண்டுகளையும் தவிர நமக்கிங்கே வேலை இல்லை எனில் சொல்லும் வெட்டும் குத்தும் எதற்காக? முடிவாய்த் தெரிவது என்னவெனில் சொன்னவையும் சரி, சொல்லாதவையும் சரி ஒரு தொடர்புப் பாலத்தை ஏற்படுத்த முடிவதில்லை என்பதே.

ஆயாசங்கள் நிறைகையில் சற்றைக்கேனும் எழுத்தும் இலக்கியமும் சாமரம் வீசி ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவும். ஆற்றங்கரையோரத்திலே முகத்தில் அள்ளியறைந்து கொண்ட நீரைப் படபடவென்று அடிக்கும் காற்று வந்து காயவைத்துச் சோர்வை நீக்கிச் செல்வதைப் போல இதம் கிடைக்கும். சிலசமயம். தூரத்தில் எவரோ சுட்டெரிக்கும் சுள்ளிகளில் இருந்து கிளம்பும் புகைமணமும் முன் நெற்றியில் கீற்றிட்ட திருநீற்றின் மணமும் கலந்து நாசிகளின் வழியாய் மனதை நிறைக்கும். ஒரு சில கணங்களாயினும் இலகுவாய் மனம் மிதக்கும். ஆன்ம விடுப்பின் அந்தக் கணங்களை ஓட்டத்திற்கிடையே தேட மறந்து விடாதீர்கள். வருகிறேன். அல்லது வந்து கொண்டிருக்கிறேன்.

Ottam

ilankumaranar-tn.jpg“அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்வதே தவம்” என்று தனது எண்பத்தொரு வயதிலும் தமிழுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் இளங்குமரனாரின் செவ்வி தமிழின்பால் ஆர்வமுள்ளவர்கள் தவற விடக்கூடாத ஒன்று. வட அமெரிக்காவின் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவரை நேர்கண்டு அந்த உரையாடலைக் கடந்த வார ‘பூங்கா’ இதழ் வெளியிட்டிருக்கிறது.

பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றபின்னும் தனது ஓய்வூதியத்தை வைத்துத் திருச்சிக்கருகே திருவள்ளுவர் தவச்சாலை என்று அமைத்துத் தமிழாய்வுக்குத் தொண்டாகவும் பல வசதிகளும் செய்துகொண்டிருக்கும் இளங்குமரனார் சுமார் நானூறு புத்தகங்களை வெளியிட்டிருப்பதாகவும் கூறுகிறார். அதில் பெரும்பான்மையான நூல்கள் வள்ளுவத்தைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்.

தமிழ்வழிக் கல்விக்கூடங்கள் ஆங்காங்கே ஆரம்பிக்கப் படுவதாய்க் கூறுபவர், செம்மொழியாக அறிவித்த பின்னணியில் பெரும் ஆதாயம் ஒன்றும் ஏற்படவில்லை என்று வருந்துகிறார். ஆனால், ஒரு பக்கம் தமிழ்ப்பற்றும் தமிழ்த்தொண்டும் குறைவது போலத் தோன்றினாலும் இன்னொரு பக்கம் துடிப்புள்ள இளையவர் ஆர்வம் கொண்டும் பற்றுக் கொண்டும் தமிழ் கற்கவும் ஆய்வுசெய்யவும் முன்வருவதைப் பார்க்க முடிகிறது என்று பொதிவான (positive) கருத்தை அவர் முன்வைப்பது மிகவும் உவப்புக்குரியது.
Continue Reading »

« Newer Posts - Older Posts »