Jan 20th, 2008 by இரா. செல்வராசு
‘திசைகள்’ இணைய இதழின் ஆசிரியர் அருணா கேட்டுக்கொண்டதற்காக, ஒன்றரை ஆண்டுகள் முன்பு எழுதியனுப்பிய ‘திருமணம்’ சம்பந்தப்பட்ட கட்டுரையை இங்கு எனது பதிவில் இட்டு வைக்கிறேன். இது வெளிவர இருந்த மாதத்தில் இருந்து ‘திசைகள்’ நின்றுபோனது! (காக்கை பனம்பழம் கதைங்க. மோசமான எழுத்துன்னு சொல்லிராதீங்க!).
இதற்குத் தூண்டுகோளாய் இருந்தது வாய்ஸ் ஆன் விங்ஸின் முற்போக்கு வாங்கல்லையோ, முற்போக்கும் அது தொடர்பான பதிவும் பின்னூட்டங்களும். (தாலி பத்தி நான் ஒன்னும் சொல்லலை!)

* * * *
திருமண உறவுகள் தொடரட்டுமே…
‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்று தமிழ் முதுமகள் அவ்வை அக்காலத்திற் சொல்லி வைத்ததை, ‘அமிழ்தம் என்போம்’ என்று இக்காலத்திற்கும் வலியுறுத்துகிறான் இற்றை நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் பாரதி. பிறப்பால் உயர்வு தாழ்வு சொல்லும் சாதிப்பிரிவுகள் தேவையில்லை என்னும் முதற்கருத்தின் பின்னாலே ஆண், பெண் என்று இரு சாதிகள் இவ்வுலக மாந்தரில் வேறுபட்டு அமைந்திருக்கும் உபகருத்து இங்கே உள்ளடக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது.
வெளித்தோற்றத்தால், உடலமைப்பால் மட்டுமின்றி எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் தம் ஆழ்ந்த ரசனைகளாலும் கூட ஆண்சாதியும் பெண்சாதியும் வேறுபட்டிருக்கின்றனர். மரபியல் ரீதியாகச் சக்தி வாய்ந்த தலைமுறை உருவாவதற்கு வேறுபட்ட குணநலன்கள் கொண்டவர்கள் அவசியமாயிருப்பதைப் போல, பல்லாயிரமாண்டுகளின், பல்வித சூழல்களின் எதிர்ச்சக்திகளினூடாக மனித குலத்தின் தொடர்ச்சியான இருப்பிற்கு உயிரை உருவாக்கித் தயார்ப்படுத்த, முற்றிலும் வேறுபட்ட குணநலன்கள் கொண்ட ஆணும் பெண்ணும் தேவை என்று ஆதியிலேயே இயற்கைத் தெரிவு முறை ஆக்கி வைத்திருக்கிறது.
இது உயிரியல் அடிப்படையில் பாலுறவின் ஊடாக ஒரு உயிரை உருவாக்குவது மட்டுமல்லாமல், அந்த உயிர் உரமாகி வளர்வதற்கான திறன்களை அளிக்கும் குமுகாய அடிப்படையிலும் ஆணின் அறிவும் பெண்ணின் அறிவும் தேவை என்று அமைந்திருக்கிறது. கற்காலம் தொடங்கி, காட்டு வாழ்க்கையை அடுத்து, வளர்ந்து நாகரீக வாழ்விற்குள் நுழையும் மனித வளர்ச்சி இப்படியான தேவைக்குத் திருமணம் என்று ஒரு கட்டகத்தை அமைத்துக் கொடுக்கிறது. ‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று அதன் நிலைத்த தன்மைக்கு நமது குமுகாயமும் உருவகங்கள் உருவாக்கித் தருகிறது.
இயற்கையின் தேவை என்னும் அடிப்படையில் அமைந்திருப்பதாலேயே நாடு, மொழி, மதம், இன பேதங்களின்றி அனைத்திற்கும் பொதுவானதாகத் திருமண உறவு அமைந்திருக்கிறது. இந்தத் திருமண உறவுக்கும் மணவாழ்விற்கும் அவ்வப்போது கேள்விகளும் சோதனைகளும் பலவாய் அமைந்திருக்கின்றன. கால ஓட்டத்தில் மாறும் சிந்தனைகளுக்கு ஏற்பத் திருமண ஒப்பந்தமும் மாற்றங்களை ஏற்றே வந்திருக்கின்றது. காட்டாக, முந்தைய காலங்களின் பலதார மணங்களும், பால்யவயது மணங்களும் இன்றைய குமுகாயத்தில் பெரும்பாலும் இல்லாமல் போயிருக்கின்றன. சட்டத்தாலும் விலக்கி வைக்கப் பட்டுள்ளன.
இன்னொரு பக்கம் திருமணத்தைப் புனிதவெளியில் தள்ளிவிட்டவர்களின் கண்மூடித் தனமான பற்றினாலும் இந்த உறவுநிலைக்குப் பங்கம் உண்டாகிறது. மணவாழ்வில் ஈடுபடும் ஆண்-பெண் தம்பதியினரே சட்டத்தால் அங்கீகரிக்கப்படுவர் என்றும் பல வாழ்வாதாரமான சங்கதிகள் அவர்களுக்கே உண்டு என்றும் ஆணித்தரமாய் இருப்பர். அதற்கு மாறாக ஓர்பால் உறவு வைத்துக் கொள்பவர்கள் தங்களுக்கும் அந்த வசதிகள், காப்புக்கள் தேவை என்பதற்காகத் தமக்குள்ளே திருமணம் என்னும் உறவை ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் தேடும்போது திருமணப் புனிதத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு இதனை ஏற்க முடியவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் உறவே இயற்கையானது என்று எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு ஓர்பால் உறவு பற்றிய இயற்கை நிலையை உணர்ந்து கொள்ள முடியாது என்றே படுகிறது. இது குறித்த வாத எதிர்வாதங்களில் விலகிச் சென்று விடாமல், பெரும்பாலான ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மண உறவை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
Continue Reading »
Tags: marriages
Posted in சமூகம் | 6 Comments »
Jan 13th, 2008 by இரா. செல்வராசு
“ஆவாரையச் சாப்பிட்டாச் சாவாரையா” ன்னு யாரோ சொன்னாங்கன்னு அம்மா சொன்னாங்க. தொலைபேசியில பேசுறப்போ இந்த வாரம் பொங்கலு வருதுன்னு அதுபத்தி ரெண்டு பழம பேசிக்கிட்டோம். “ஆவாரம்பூ, தல, பொடியெல்லாம் ஒடம்புக்கு ரொம்ப நல்லதாம்”.

மொதல்ல இந்த வருசம் பொங்கல் நாளான்னிக்கு (சனவரி 14) வருதுன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். எப்பவும் அப்படித்தானே வரும்? பேசறப்போ, என்னமோ ஒரு இதுல மறந்துபோயி அது நாளைக்குன்னு நெனச்சுக்கிட்டு (இந்தியாவுல இன்னிக்கு), “இன்னிக்கு உங்களுக்குப் பொங்கலு!?”ன்னு பாதிக் கேள்வியும் பாதிச் செய்தியுமாச் சொல்லி வச்சேன்.
‘பொங்கலுக்கு என்ன பண்றீங்க, தீபாவளிக்கு என்ன பண்றீங்க’ன்னு கேக்குறதுக்கு…, குறிப்பா அம்மாக்கிட்டக் கேக்குறதுக்கு எப்பவுமே கொஞ்சம் தயக்கம். “என்ன பண்றம்? ரெண்டு சீவனு எப்பவும் போல ஒரு ஒழக்குப் போட்டுக் காச்சிக் குடிச்சுக்குறோம்” அப்படீம்பாங்க. இல்லாட்டி, “மக்க மருமக்க, புள்ள குட்டில்லாம் பக்கத்திலயா இருக்கு? ஒரு நோம்பி நொடின்னு கொண்டாட?” ம்பாங்க. சங்கட்டமாத் தான் இருக்கும். அவசரமாப் பேச்ச மாத்தீருவேன். இல்லாட்டி நானும் எதாச்சுக்கும் வம்பு பேசுவேன். அதது நேரத்தப் போல – சில நாள் சரியாப் போயிரும். சில நாள் எச்சா வம்புல போயி முடியும். ஒத்த மகன பத்தாயிரம் மைல் தள்ளியிருக்குற தாயி எல்லாத்துக்கும் கஷ்டந்தான், புரியுது. இருந்தாலும்…
Continue Reading »
Tags: pongal
Posted in கொங்கு, வாழ்க்கை | 34 Comments »
Jan 4th, 2008 by இரா. செல்வராசு
காலையில் பார்த்த அந்த மீன்குட்டி என்ன காரணத்தாலோ என் நினைவில் இன்னும் நீந்திக் கொண்டிருக்கிறது. வண்ண வண்ணக் கண்ணாடிக் குண்டுகள் கீழாக நிரப்பப்பட்ட ஒரு அழகான வளைந்த குவளையில் செந்நிறத்து மீன்குட்டி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. பாருங்கள்… தவறு செய்கிறேன். மீனின் சிறுசு குட்டியன்று, மீன்குஞ்சு என்று மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள். உண்மையைச் சொல்லப் போனால் அது குட்டியா பெருசா என்று தெரியவில்லை. செந்நிறத்து மீன் என்று மட்டும் இப்போது வைத்துக் கொள்ளலாம்.

அமைதியாகத் தன்பாட்டுக்குச் சுற்றிக் கொண்டிருந்த மீன் பன்னிரண்டு மணி நேரத்துக்கும் மேலாகியும் ஏன் இன்னும் என்னைச் சுற்ற வேண்டும்? ஒருவேளை அந்த குவளையைப் பிடித்து ஒரு ஆட்டு வேகமாக ஆட்டி வைத்தால் என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் குரூரப்பட்ட என் மனம் காரணமாக இருக்கலாம். வாய்பேசாத சீவன் அப்படியொரு இடைஞ்சலுக்கு ஆளாகி (மீனாகி:-) ) இருந்தால் பெரும் மனத்தகைவை அடைந்திருக்கும் என்று தோன்றியது.
நிற்க. மீனுக்கு மனம் இருக்கிறதா; அது பற்றி உனக்குத் தெரியுமா என்றெல்லாம் நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாது. பாவம் செய்ய நினைத்த என் மனதில்… (நிற்க நிற்க… நான் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டேன்…) பாவச்செயலைப் பற்றி நினைத்த என் மனதில் அந்த விநாடி அப்படியொரு பரிதாப உணர்ச்சியும் உண்டானதென்னவோ உண்மை. கூடவே, பெருஞ்சலனப்பட்டு ஆடுகின்ற நீரில் ஒரு மருண்ட பார்வையோடு வாயை என்ன செய்வதென்று தெரியாமல் மூடி மூடித் திறந்து கொண்டு வாலைச் சிறிதாக ஆட்டி ஒன்றிரண்டு அடிகள் பின்னோக்கி நகரும் அந்த மீனைக் கற்பனை செய்து பாருங்கள். மீன்களுக்கும் மனத்தகைவு உண்டாகும் என்று எங்கோ படித்த ஆராய்ச்சிக் கட்டுரை உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை? இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பின்னொரு நாளில் அப்படி ஒரு கட்டுரை வரும்போது ‘செல்வராசு அன்னைக்கே சொன்னாரு’ என்று மட்டும் சொல்லி விடுங்கள்.
Continue Reading »
Tags: fish
Posted in பொது, வாழ்க்கை | 9 Comments »
Jan 3rd, 2008 by இரா. செல்வராசு
முதல் முறையாகக் கரட்டுநெய் (Crude Oil) விலை இன்றைய சந்தையில் ஒரு பீப்பாய்க்கு நூறு டாலர் அளவைத் தொட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் வள உச்சம் என்று நான் முன்பு எழுதிய இடுகையின் போது விலை ஐம்பது டாலர் அளவில் இருந்தது. நாள் முடிவில் சற்றே கீழிறங்கி $99.62 என்று முடிந்தாலும், சுமார் மூன்றே வருடங்களில் இதன் விலை இரட்டிப்பாகி இருக்கிறது.
பலவித எரிபொருட்களுக்கும் இயல்பொருளாய், ஆரம்ப மூலப்பொருளாய்க் கரட்டுநெய் அமைந்திருப்பதால், அதன் விலை உயர உயரப் பிற எரிபொருள்கள் யாவும் விலை ஏறிக்கொண்டிருக்கின்றன. பெட்ரோல் (கன்னெய்) விலை அமெரிக்காவில் ஒரு ^கேலனுக்கு மூன்று டாலர் அளவைத் தாண்டி நாட்கள் பலவாகிறது.
பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டினாலும், கரட்டுநெய் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிப்பதில்லை. அது பெரும்பாலும் சந்தை நிலவரங்களையும் தேவை மற்றும் உற்பத்தி நிலவரங்களையும் பொறுத்தே அமைகின்றது.
ஒரு ^கேலன் பெட்ரோல் விலையில் நூற்றுக்கு அறுபது சதவீதம் மூலப்பொருட்செலவாகக் கரட்டுநெய்யின் மதிப்புக்குப் போகிறது. அதற்கு மேல் உற்பத்திச் செலவும், பிற செலவுகளும், வரிகளும் சேர்த்துப் பார்த்தால், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு ^கேலன் பெட்ரோல் விற்றால் அவர்களுக்குக் கிடைக்கும் நிகர இலாபம் ஒரு செண்ட் அளவு தான் இருக்கும். ஒரு ^கேலனுக்கு ஒரு செண்ட்டு இலாபம் என்னும் நிலையிலும் பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்ட வேண்டுமானால் எத்தனை ^கேலன்கள் விற்க வேண்டும்! அதனால், கரட்டுநெய் விலை ஏறும்போது அவர்களுடைய வருமானத்துக்கும் அடி உண்டு. நட்டமென்பதில்லை, இலாபத்தில் குறைவு உண்டாகும்.
Continue Reading »
Tags: crude oil, energy demand, petroleum
Posted in சமூகம், வேதிப்பொறியியல் | 5 Comments »
Dec 24th, 2007 by இரா. செல்வராசு
ஒரு தகப்பனும் மகனும் பக்கத்து ஊர்ச் சந்தையில் கழுதை வாங்கிவிட்டு எப்போதுமே நிம்மதியாக ஊருக்கு வந்ததாகச் சரித்திரமே இல்லை. எங்கள் வீட்டுக் கழுதைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? பலகாலம் ஆனாலும் எங்கள் கழுதைக்கு இன்னும் கூட நிம்மதியில்லை.

“நொண்டிக் கழுதைன்னு சொல்றாங்களேப்பா…” என்றார் அப்பா.
“ஊர்ல வேலை இல்லாத வெட்டி ஆபீசர் ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்கு என்னப்பா பண்ண முடியும். நொண்டிக் கழுதைன்னாலும் ஊர்க்காரங்க பொதிய எல்லாம் சொமந்துட்டுத் தானே இருக்கு?”
“இல்ல… என்னமோ இந்தக் கழுதை நொண்டுறதால பொதி வந்து சேர்றதுல பிரச்சினைன்னு பொரளி கெளப்புராங்களே”
“அடப் போங்கப்பா! என்னவோ ஏழு மாசத்துக்கு முன்னால ஒருநாளு பொதிபாரம் தாங்காம, கழுதைக்குக் காலு மடங்கிடுச்சு. என்னவோ இந்தக் கழுதை கொண்டு வராத பட்டு வேட்டியினால தான் கல்யாணமே நின்னு போச்சுங்கற அளவுக்கு பேசுனா… கேக்கறவுங்கல்லாம் கேழ்வரகுல நெய்யு வடியுதுன்னு நெனைக்குறவங்கன்னு நெனச்சீங்களா?”
“இல்லப்பா… என்னமோ இதவிட நல்ல கழுதை இருக்காமுல்ல? சொல்றாங்களே?”
“சந்தையில ஆயிரம் கழுதை இருந்தாலும் எல்லாத்துக்கும் எங்கயாவது ஒரு பிரச்சினை இருக்கத் தான் செய்யும். அவிய சொல்றாங்கன்னு நீங்களும் கேட்டுக்கிட்டு இருக்கீங்க… எந்தப் பிரச்சினையுமே இல்லாத கழுதைன்னு ஒண்ணு கெடயவே கெடயாது. நமக்கு இருக்கற வேலையைச் செய்ய, நம்மால முடிஞ்ச காசு+நேரத்துக்கு இது சரியா இருக்கும் இது போதும்னு வச்சிக்கிட்டோம். அதுல என்ன பிரச்சினை?”
Continue Reading »
Posted in இணையம், கொங்கு | 14 Comments »