சால்வடோர் மினுச்சின்னைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? காரணமில்லாமல் எனக்கு அவரை மினுச்சுக்கின் என்று கூப்பிடவேண்டும் போலிருக்கிறது. அரைகுறையாய்ப் படித்த வாரயிறுதி நூலகப் புத்தகம் ஒன்றில் அவர் சொன்னதாய் ஒன்றைப் படித்தேன். யார் அவரென்று பெரிதாய் விவரம் இல்லை என்பதால் அவரை ‘யாரோ’ என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அல்லது, விக்கிப்பீடியா கூகுள் என்று தேடி அலையலாம். இப்போதைக்கு அது முக்கியமில்லை. அவர் சொன்னதாய்ப் படித்தது இது தான்:
“எல்லாத் திருமணங்களுமே தவறானவை தான். பிறகு அந்தத் தவற்றைச் சரி செய்து கொள்ளும் முயற்சியில் காலம் பூராவும் ஈடுபடுகிறோம். என்ன? அந்த முயற்சியில் ஒரு சிலர் மற்றவர்களை விட அதிக வெற்றி பெறுகிறோம்!”
பத்துப் பன்னிரு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று உங்கள் நல்லியல்/கருத்தியல்/ideal நிலையினரைக் கேட்டுப் பார்த்தீர்களென்றால், “சே சே” என்று இதனை ஒத்துக்கொள்ளாது சென்று விடுவீர்கள். இப்போது தான் திருமணம் செய்துகொண்டு வசந்த வனத்தில் மிதந்து கொண்டிருப்போர்க்கும், இன்னும் மணமாகாது கண்களில் நெஞ்சினில் கனவுகளும் கனல்களுமாய் இருப்பவர்களுக்கும் கூட இது வேறு உலகமாயிருக்கும்.
காலச் சக்கரம் மெல்ல உருண்டு ஆண்டுகளை நகர்த்தும் போது, நீள்வார இறுதிகளில் சந்தித்துக் கொள்ளும் நண்பர் உறவினர்களிடத்தே எழும் பேச்சில், “எல்லார் வீட்டிலும் இதே சண்டை தாங்க” என்று எல்லாச் சண்டைகளுக்கும் துணை தேடும்போது மினுச்சின் கூற்று யாரோவானாலும் ஒரு ஆறுதலைத் தரத் தான் செய்யும். இந்தக் காட்டில் நாம் மட்டும் தனியில்லை என்பது சுகமான உணர்வு.
டுபுக்கார் கதவு பார்த்த பிறகு, இதனைக் குறும்படம் என்று சொல்லத் தயக்கமாகத் தான் இருக்கிறது. நான் குறும்படம் எடுக்கலாம் என்று கதை சொன்னால், என் வீட்டுக் கண்மணிகள் கதை cheesy ஆக இருக்கிறது என்று கிண்டல் தான் அடிக்கிறார்கள். ஆக, என்னால் முடிந்தது இந்த வெட்டி ஒட்டல் படம் தான். வேண்டுமானால், குறும் ஆவணப் படம் என்று சொல்லிக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன்.
எடுத்துக்கொண்ட பணி இது தான். மூன்று நிமிடங்களில் இந்திய நடனங்களைப் பற்றிச் சொல்லவேண்டும், அதுவும் அமெரிக்க ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு. சென்ற வருடம் இந்தியாவைப் பற்றிய பொதுவான தகவல்கள் கொண்ட ஒரு படம் ஆறு நிமிடத்தில் எடுத்திருந்தோம். அந்த அனுபவத்தில் களத்தில் இறங்கினாலும், சென்ற வருடம் போல் இந்தத் தயாரிப்பில் ஈடுபட அவ்வளவு நேரம் ஒதுக்கமுடியவில்லை.
“அம்மா, அப்பா, உங்க கிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விசயம் சொல்லணும்”, உறங்கச் செல்லும் முன் மகள் வந்து தீவிர முகத்துடன் சொன்னாள்.
நிமிர்ந்து பார்த்தோம். ஒரு பெருமிதமும் பொறுப்புணர்ச்சியும் அவள் முகத்தில் பொங்கி வழியக் கண்டு ஆர்வம் பொங்க, “என்னடா?” என்றோம்.
“எனக்குத் தெரியும், நீங்க மேலறையில் இருந்து வந்து அஞ்சு நிமிசம் தான் ஆச்சுன்னு. இருந்தாலும், நீங்க உபயோகிக்காதப்போ கொஞ்சம் விளக்கை எல்லாம் அணைச்சுட்டு வந்தீங்கன்னா மின்சாரம் எல்லாம் வீணாகாது பாருங்க!” என்று சற்று மிரட்டலாய்த் தான் வந்தது குரல்.
“இல்லை, அது வந்து… ” என்று கொஞ்சம் சாக்குப்போக்கு சொல்ல முயன்றாலும், தோல்வி தான் என்பதை ஒப்புக் கொண்டு, மரியாதையாய், “சரிம்மா” என்று பயந்தபடி சொல்லிவிட்டோம்.
* * * *
மின்சக்தியும், எரிவளியும் வீணாகச் செலவழிக்கக் கூடாது என்பது பற்றி நிறையச் சொல்லி இருக்கிறோம். உருண்டோடும் காலத்தில் உலக சக்தித் தேவைகள் அதிகமாகிக் கொண்டும், நுகர்வு படுவேகமாய் அதிகரித்தபடியும் இருக்கும் பொழுதில், ஒவ்வொருவரும் வீணாக விரயமாகும் சக்தியைச் சேமிப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். புவி வெப்பம் முதலான இக்குகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதால் இதில் முக்கிய கவனம் தேவை. அதிலும், அடுத்த தலைமுறையினரிடமும் இந்தக் கரிசனையையும் முக்கியத்துவத்தையும் ஊட்டிவைத்தல் இன்றியமையாதது.
முதலில் ‘பரத்தீடு’ சொல்விளக்கம் தந்துவிடலாம். சிலசமயம் சாதாரணமாகப் பாவிக்கும் ஆங்கிலச் சொற்களுக்குக் கூட ஈடான தமிழ்ச்சொற்கள் தெரியாமல் உறுத்தும். Presentation என்னும் சொல்லை அன்றாடம் பலமுறை பயன்படுத்தினாலும் அதற்கு நிகரான தமிழ்ச்சொல் என்ன என்று தெரியாமல் இருந்தது. தெரியாத சொற்களுக்கு முதல் முயற்சியாக இராம.கி அவர்களின் பெயரைச் சேர்த்துக் கூகுளில் தேடுவது என் வழக்கம். காட்டாக இன்று தேடியது presentation இராம.கி என்னும் சொற்றொடர். 🙂
வேறு யார் என்ன முன்வைக்கிறார்கள் என்றும் அதன் பிறகு சில அகரமுதலிகளிலும் எப்போதாவது பார்ப்பது உண்டு. Presentationக்குப் பரத்தீடு என்று இராம.கி முன்வைக்கிறார். கிரியாவின் தற்காலத் தமிழகராதியில் பார்த்தபோது ‘பரத்து, பரப்பு’ என்பவற்றிற்கு spread, disseminate போன்ற பொருள் தந்திருந்தார்கள். ஏதோ ஒரு செய்தி, விளக்கம், உள்ளுருமம் பலரையும் சென்று அடையச் செய்யப்படும் பிரசண்டேசன் என்பதற்கு, ‘பரத்து’ என்னும் வினையை வைத்துக் கட்டப்பட்ட பரத்தீடு என்னும் சொல் மிகவும் பொருத்தமானதாகவே பட்டது.
இதனை இங்கு விரிவாகச் சொல்வதன் மூலம் Presentation = பரத்தீடு என்பதை நானும் பரத்துகிறேன். 🙂
* * * *
ராசா வேசம் கலைஞ்சு போச்சு என்னும் இடுகையில் அமெரிக்க மக்கள் தலைக்கு மேலே வீட்டுக்கடன் வாங்கிய காரணத்தால் சிக்கல் உண்டானது பற்றி எழுதியிருந்தேன். டைனோவும் இன்னும் சிலரும் கடன்கொடுத்தவர்களின் பித்தலாட்டங்கள் பற்றியும் சொல்லச் சொல்லி இருந்தார்கள். வாங்கியவர்களை விடவும் இந்தக் கடன் முறைகளை ஒரு தீர்க்கமான யோசனையின்றி உருவாக்கியவர்கள் செய்தது பெருந்தவறு. இந்தப் பித்தலாட்டங்கள் எப்படிப் பல நிலைகளைத் தாண்டி பெரும் வலையாகப் பின்னிக்கிடக்கின்றன என்பதும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று. Continue Reading »
பட்டக்காரர் தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற முட்டக்கடையில ஒடஞ்ச முட்டையப் பாதி வெலைக்கு வாங்கிச் சாப்பிட்ட கதையப் போன மாசம் ஒருநா எம்பொண்ணுங்க கிட்டச் சொல்லிக்கிட்டிருந்தேன். ரொம்ப ஒடைஞ்ச முட்டைன்னா ஒரு தூக்குப் போசில ஒடச்சு ஊத்துவாங்க. அதுக்கு இன்னும் கொஞ்சம் வெல கம்மி. இந்த ஒடஞ்ச முட்டை வாங்குற சொகுசும் எப்பவாச்சியுந்தான் கெடைக்கும். நெனச்சப்பவெல்லாம் பிரிஜ்ஜத் தொறந்து ரெவ்வெண்டு முட்டை ஒடச்சு, சுட்டோ வறுத்தோ சாப்பிட முடியற இந்தக் காலத்துல எதுக்கு அந்தப் பழங்கதை எல்லாம் சொல்லோணும்னு தோணுனாலும், காசு பணத்துல சூதானமா இருக்கக் கத்துக்கணும்னு அவங்களுக்கு யாரு சொல்லித் தர்றது?
அவங்க வளர்ற இந்த அமெரிக்க மண்ணோட அரசாங்கம் நிச்சயமா அதுக்கு உதவப் போறதில்ல. போன வாரஞ் செய்தி கேட்டுருப்பீங்க. என்னமோ நூத்தியம்பது பில்லியன் கணக்குல மக்களுக்கு வரிப்பணத்தத் திருப்பித் தரப்போறாங்களாம். எதுக்குன்னு கேக்கறீங்களா? பொருளாதாரஞ் சரியில்ல. போயி செலவு பண்ணுங்க அய்யா/அம்மான்னு கொஞ்சம் போட்டுக் குடுக்குறாங்க! வரவுக்குள்ள செலவு பண்ணு, முடிஞ்சதச் சேத்து வைய்யுன்னு அறிவு சொல்றத விட்டுப்புட்டு வரவப் பத்தி எதும் பேசாம, கவலப் படாம, சும்மா செலவு பண்ணு செலவு பண்ணுன்னு அவங்கதான் சொல்றாங்கன்னா, இந்த மக்களுக்கும் புத்தி எந்தூருக்குப் போச்சுன்னு தெரியல்ல!
நான் வளந்த காலத்துல எங்காத்தாவும் (அம்மாயி) எனக்கு இப்படிக் கொஞ்சம் கதைங்க சொன்னதுண்டு. கிராமத்துல வெவசாயம் பாத்துக்கிட்டிருந்தவங்க மழையே இல்லைன்னு வெவசாயம் படுத்துக்குட்டப்போ, சில நாளு மூணு வேள சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமக் கஷ்டப்பட்ட கதையையும், நெல்லஞ்சோத்துக்கெல்லாம் வழியில்லைன்னு களி கம்மஞ்சோறு சோளச்சோறுன்னும் சாப்பிட்ட கதையும் சொல்லி இருக்காங்க. அவங்களும் இப்போ என்னை மாதிரி தான் – எதுக்குப் பழங்கதைன்னு அடிக்கடி சொன்னதில்லை. ஆனாலும் பச்ச மண்ணு பாருங்க, மனசுல நல்லா ஒட்டிக்குச்சு.
எனக்குக் கெடச்ச அந்தப் பாடத்த நான் எம்பொண்ணுங்களுக்கும் சொல்லணும்னு ஆசை. வேற ஒண்ணுமில்லீங்க. இன்னிக்கு வசதியா இருக்க முடியுதுன்னாலும், நாம வந்த வழிய மறக்கக்கூடாதுங்கறது ஒண்ணு. நம்மளப் போல இல்லாம இன்னும் வசதிக்குறைவா எத்தனையோ பேர் இருக்காங்கங்கறத ஞாபகத்துல வச்சுக்கரது ஒண்ணு. நேரடியா அதுக்கெல்லாம் முழுசா உதவ முடியாட்டியும், கொறஞ்சபட்சம் அந்த நெலைய எல்லாம் மனசுக்குள்ளயாவது நெனச்சுப் பாக்கணும்னு நான் நெனைக்கிறேன். Continue Reading »