Feed on
Posts
Comments

“நீங்க கேக்கற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நான் அமெரிக்க மக்கள்கிட்ட நேராவே பேசிக்கிறேன்”ன்னு துணைத்தலைவர் போட்டியாளர் சேரா பேலின் விவாதத்துல சொன்ன மாதிரி, பாஸ்டன் பாலாகிட்ட அவர் கேட்ட கேள்விக்குப் பதில் ஒண்ணும் சொல்லாம இருந்தேன். அப்படியே இருந்திருந்தா சத்தமில்லாம இருந்திருக்கும். ஆனாலும், அமெரிக்க அதிபர் தேர்தலப் பத்தி (கூட்டுப் பதிவுன்னாலும்) பா.பாலா தனியாளா நல்லா பதிவிட்டுக்கிட்டு இருக்கிறார். (அதுக்கு ஒரு பாராட்டச் சொல்லிக்கிறேன்). அப்படியான சுவாரசியமான இடுகைகள விடாமப் படிச்சுக்கிட்டு, ஒரு பின்னூட்டத்தையும் ஒரு நாள் நான் போட, “கேள்விக்கு விடையெங்கேப்பா?”ன்னு இன்னொரு மடல் அனுப்பிச்சுட்டாரு. அந்தக் கேள்விகளுக்கு விடையச் சொல்லாம, வலைப்பதிவுச் சமூகத்துக்கிட்ட நேராவே பேசிக்கிறேன் (பேலின் தாக்கம் 🙂 ).

இன்னிக்கு மூஸ்_ஹண்டர்னு ஒருத்தர் பதில் சொல்லி இருக்காரு. யாருன்னு தெரியல்ல. ஆனா, அச்சு அசலா எனக்குப் பொருந்துர மாதிரியே இருக்கு. பதினேழு வருசம். சமீபத்தில் குடியுரிமை. முதல் தேர்தல், ஓட்டு. இருவரையும் பிடிக்கவில்லை. இருவரில் ஒபாமா பரவாயில்லை. இருந்தாலும் நேடர் இருந்தா அவருக்கு ஓட்டு. (ஆரம்பத்தில் ஹில்லரி பக்கம் கொஞ்சம் சாய்வு). எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. இந்தப் பேர டிவிட்டரிலோ எங்கியோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். கொஞ்சம் நேரம் தேடுனேன். தெரியல. (யாரப்பா அது? எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!).

கொஞ்ச நாள் முன்னால தான் ட்விட்டர் வழியா, மெக்கெயின் ஒபாமா தவிர இன்னும் நாலு பேரு போட்டியிடுராங்கன்னு தெரிஞ்சுது. ரான் பால் நடத்துன கூட்டத்துல எல்லோரும் பேசுனதப் பாத்தேன். ஜெயிக்கிற கட்சிக்குப் போடாம மூணாவது ஆளுக்கு ஓட்டுப் போட்டா உங்க ஓட்டு வீண் அப்படின்னு சொன்னா நம்பாதீங்க; ஜெயிப்பாங்கங்கறதுக்காக உங்களுக்கு வேண்டாத ஆளுக்கு ஓட்டுப் போட்டாத் தான் அது வீண் அப்படின்னு அந்தக் கூட்டத்துல பேச்சக் கேட்டது சட்டுனு எனக்குப் பிடிச்சுக்கிச்சு. மொத மொதல்ல போடற ஓட்ட வீணாப் போடாம ஒரு மாற்றத்துக்கான ஓட்டா போடலாம்னு அன்னிக்கு நெனச்சுக்கிட்டேன். இருந்தாலும் பெருசா முடிவு பண்ணாம மெக்கெயின் ஒபாமான்னே யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.
Continue Reading »

Thiruporurஅன்புள்ள அம்பரா,

திருப்போரூர்க் கந்தசாமிக் கோயிலின் உட்சுற்றுச் சுவரில் தள வரலாறு படித்து நின்றிருந்த போது, ‘நீ நல்லவனா? கெட்டவனா?’ என்றாற்போல என்னிடம் நீ திடுதிப்பென்று கேட்டாய் – ‘நீ ஆத்திகனா, நாத்திகனா?’ என்று.

கேள்வி எளிதானதாக இருக்கலாம். ஆனால், என்னிடம் அதற்கான பதில் இல்லை, அம்பரா. அல்லது எளிதான பதில் இல்லை. எல்லாக் கேள்விகளுக்குமே பதில்கள் இருக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை நான் எதிர்க்கிறேன். ஒன்றற்கொன்று தொடர்புடையனவாய், பலக்கியதாய் இருக்கும் வினை, எதிர்வினைச் செயலாக்கங்களுக்கெல்லாம் ஆதார ஆரம்பப்புள்ளியைத் தேடிச் செல்வது கொஞ்சம் நாட்களுக்குச் சுவாரசியமாய் இருக்கலாம். ஆனால், அது முடிவில்லாத சுழல்பயணமன்றி வேறென்னவாய் இருக்க முடியும்?

ஆராய்ச்சியும் வாழ்க்கையின் ஒரு அங்கமெனினும், வெறும் ஆராய்ச்சியில் வாழ்க்கையைத் தொலைப்பதை விட, வாழ்க்கையில் ஆராய்ச்சிக்கான வித்துக்களை விட்டுச் செல்வதை விரும்ப ஆரம்பித்திருக்கிறேன். அதனால், ஒரே சமயத்தில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும் இருக்கிறேன். சிலசமயம் நான் என்னவாய் இருக்கிறேன் என்பதை விட, என்னவாய் இல்லை என்பதைச் சொல்ல எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். அதன் அடிப்படையில் சொன்னால், ஒரே சமயத்தில் நான் ஆத்திகனாகவும் நாத்திகனாகவும் இல்லாதிருக்கிறேன். பொதுமையில், நான் இருக்கிறேன் என்று மட்டும் சொன்னாலே போதும் என்று நினைக்கிறேன். ‘நான்’ என்பது வெறும் சுயச்செறுக்கு தானே என்றால், அந்தச் சுயச்செறுக்கு ஒன்றே தான் எனக்கு உறுதியாகப் படுவதால், உண்மையாகத் தெரிவதால், அதனைப் பற்றிக் கொள்கிறேன்.
Continue Reading »

‘வந்துருங்க’ன்னாங்க கொஞ்சம் பேரு. இன்னும் கொஞ்சப் பேரு ‘இனிமே எங்க வரப்போறீங்க’ன்னாங்க. ‘அந்தக் காலத்துல நாம கிராமத்துல இருந்து நகரத்துக்குப் பக்கமா வந்தோமில்ல. திரும்பிப் போனோமா? அப்புடித் தான். என்ன? இவுங்க இருக்கறது கொஞ்சம் தூரமா இருக்குது. அவ்வளவு தான்…’ அப்படீன்னாரு ஒருத்தரு. எப்பவும் போல எல்லாத்துக்கும் ‘பாக்கலாங்க’ன்னு பதில் சொல்லி வச்சேன்.

ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முன்னாடி பாத்த ஊரு பெருசா மாறி இருக்காதுன்னு நெனச்சா ஆச்சரியந் தான் மிஞ்சும் போங்க. எங்க போனாலும் சதுரடிக் கணக்குப் பேசுறாங்க. வேளச்சேரியில இருந்து வீரப்பன்சத்திரம் வரைக்கும் ‘கம்முன்னு அன்னிக்கே நெலத்த கிலத்த வாங்கிப் போட்டிருந்தா…’ன்னு ஏமாத்தத்தப் பேசி ஆத்திக்கிறாங்க. காடாக் கிடந்துது. இன்னிக்கு ஊருக்கு மத்தியில வந்துருச்சு. பெருந்துறை வரைக்கும் வளந்துருச்சு ஊருன்னு பேசுறப்போ நமக்கே அப்படித் தான் தோணுது. அன்னிக்கே திண்டல் பக்கத்துல எதாவது வாங்கிப் போட்டிருந்தா…

‘வந்தீங்கன்னா கல்லூரி ஆசிரியர் வேலை நிச்சயமா கெடைக்கும்’னாங்க. இருக்குற காலேஜுக்கெல்லாம் பாடம் நடத்த ஆளே கெடைக்கறதில்லையாம். தமிழ்நாட்டுல இன்னித் தேதிக்கு முன்னூத்தியம்பது பொறியியல் கல்லூரி இருக்கு. பொறியியல் கல்லூரி மட்டும். இப்போல்லாம் யாரும் தனியா ஒரு காலேஜு ஆரம்பிக்கறதில்லையாம். அப்படியே ஒரு பல்கலைக்கழகமா ஆரம்பிச்சு, வகைக்கொண்ணா எல்லாத்துலயும் ஒரு காலேஜு கட்டிடறாங்களாம்!

பெருந்துறை ரோட்டுல ராணா கல்யாண மண்டபம்னு ஒரு பெரிய மண்டபம் இருந்துச்சு. அத இப்போ வித்துத் தரைமட்டமா இடிச்சு வச்சுருக்காங்க. வால்-மார்ட் வருதாம்னாங்க. இல்லை, ரிலையன்சுக்காரன் வாங்கிப் போட்டிருக்கான்னாங்க இன்னொருத்தரு. அவ்வளவு பெரிய மண்டபத்த இடிச்சு வச்சுருக்கறதப் பாத்தா எடத்துக்கு எவ்வளவு டிமாண்டு இருக்குதுன்னு தெரியும். அடுத்த தடவ போறதுக்குள்ள அந்த எடமும் அடையாளம் தெரியாம மாறிப் போயிருக்கும்.

‘எனக்குத் தெரியாத ஈரோடா’ன்னு ஈசுவரன் கோயில் சந்து பொந்துக்குள்ளயெல்லாம் பூந்துட்டு வந்தேன். ஊருலயே இருக்கற நண்பர், ‘நானும் அப்படித் தான் நெனச்சேன். ஆனா ஊரு எங்கியோ போயிருச்சு’ன்னார். அது முழுசும் நெசந்தான்னு நானும் தெரிஞ்சுக்கிட்டேன்.

Continue Reading »

தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் நானும் ஒருவன் என்கிற முறையில் தமிழ்மணத்தின் மீதும் அதன் நிர்வாகக் குழு மீதும் அவற்றின் செயல்பாடுகள் மீதும் வைக்கப்படும் அவதூறுகளும் அபாண்டங்களும் என்னையும் எரிச்சலடையவும் வேதனைப்படவும் வைக்கின்றன. இவற்றின் மூலகர்த்தாக்கள் சில உட்காரணங்களுக்காக வேண்டுமென்றே இவ்வாறு செயல்படலாம். ஆனால் வேறு பலரோ அவர்களுடன் கொண்ட நெருக்கம் காரணமாகவோ, வேறு ஏதும் புரியாததாலோ, குழப்பத்தாலோ கூடத் தாங்களும் சேர்ந்துகொண்டு கும்மிக்கொண்டிருக்கின்றனர். எரிச்சலை அடக்கிக் கொண்டு, வேதனையை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். எல்லோருக்குமே நேர அழுத்தங்கள் இருக்கும் என்றாலும், எத்தகைய பணி, குடும்ப, பிற அழுத்தச் சூழலில் தமிழ்மண நிர்வாகிகள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிப் புரிய வைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. சொல்லாமலே புரிந்து கொள்ளும் நல்ல ஜீவன்களுக்கு நன்றி.

அண்மைய முடிவான சில வார்த்தைகளை வடிகட்டுதல் என்பது தனிப்பட்ட ஒருவரைக் குறி வைத்து எடுக்கப் பட்டதல்ல. தான் பாதிக்கப் பட்டதாகச் சொல்லும் நண்பரின் பதிவும் இடுகைகளும் இன்னபிறவும் இன்னும் தமிழ்மணத்தில் இருந்தே வருகிறது. தனிப்பட்ட ஒருவரை விலக்க வேண்டும் என்றால் தான் இரண்டு மூன்று முறை முன்னறிவிப்பு மடலும் அவகாசமும் தந்து அதன்பிறகு விலக்குவது தமிழ்மணத்தின் வழக்கம். இம்முறை எடுக்கப்பட்டது ஒரு நுட்பமுடிவு/மாற்றம். எவ்வாறு மறுமொழிப் பட்டியல் 40க்குக் குறைக்கப் பட்டதோ, சூடான இடுகைகள் கொண்டுவரப்பட்டதோ, பிறகு விலக்கப் பட்டதோ, அதைப் போன்ற வடிகட்டு நுட்பம் இது.

இவ்வாறான மாற்றங்களையும் பொதுவில் அறிவித்தே செய்து வருகிறோம் என்றாலும், சில சமயம் மாற்றம் முதலிலும் அறிவிப்புப் பின்னரும் வருவதும் வழக்கம். அதற்குப் பல காரணங்கள். முதலில் நுட்ப வேலைகள் செய்ய வேண்டும். அது சரியாய் வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும். சில சமயங்களில் அவசரமாய்ச் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கும். செய்த மாற்றம் சரியாக இல்லையென்றாலோ திருப்தியாக இல்லையென்றாலோ மீண்டும் வேலை செய்து சரி செய்ய வேண்டும். இத்தனைக்கும் பிறகும் அறிவிப்பு எழுதி வேறு இடத்தில் சென்று வெளியிட வேண்டும். எங்கள் அனைவருக்கும் முழு நேரப் பணி இது இல்லையென்பதால் இயன்ற போது தான் இவற்றைச் செய்ய முடிகிறது. நள்ளிரவு தாண்டியும் செய்யும் வேலைகளுக்குப் பிறகு அறிவிப்பு வெளியிடும் முன் சற்றே தூங்கிக் கொள்ளலாம் என்பதற்கு முன்னுரிமை தருவது முற்றிலும் நியாயம். சில சமயம் வேலை செய்பவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டுக் குழுவில் வேறு நபர் அறிவிப்பை எழுதி, ஆனால் அதை நுட்பக் குழுவிடம் சரிபார்க்கக் கொடுத்து, அதன்பிறகே வெளியிட முடியும். இதனாலும் கால தாமதம் ஆவது இயல்பு. இதற்கு முன்னரும், முதலில் நுட்ப மாற்றங்கள் வெளியிட்ட பின் அதற்கான அறிவிப்புக்கள் ஓரிரு நாட்கள் கழித்து வெளியிடப்பட்டு இருக்கிறது என்பதை யாரும் சரிபார்த்துக் கொள்ள முடியும். ஏன் முன்னறிவிக்கவில்லை என்பதற்கான விளக்கம் மட்டுமே இது.
Continue Reading »

‘டிரேடர் ஜோ’வில் இருந்து ரெண்டேகால் டாலருக்கு வாங்கிய ‘பஞ்சாபிச் சோலே’வும், வேறு கடையொன்றின் ‘நேச்சுர் வேளி’ ‘டொர்ட்டியா’வில் ரெண்டும் நுண்ணலை அடுப்பில் சூடுபடுத்திக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னமர்ந்து ‘நெட்பிலிக்சில்’ இருந்து வந்திருந்த ‘அன்பே சிவம்’ படத்தைப் போட்டுக் கொண்டு ஆற அமர்ந்திருந்தேன். மனைவி மக்கள் தூர தேசத்தில். தொடர்ந்த ஓட்டத்தின் இடையே இன்று சிறு ஓய்வு.

பாரடைம் (Paradigm) என்னும் சொல்லைச் சில ஆண்டுகள் முன்னர் சிடீவன் கோவியின் பேச்சு ஒன்றின் மூலம் அறிந்து கொண்டேன். அது ஒரு சிந்திக்க வைத்த சொல்லும் பொருளுமாய் இருந்தது. தமிழில் அகரமுதலி ஒன்று அதனை ‘அடுக்குமுறை’ என்று சொன்னது பொருத்தமாகத் தெரியவில்லை. ஒரு பொருளை, நிகழ்வை, இயல்பை, இருத்தலைப் பார்க்கும் எண்ண முறை அல்லது எண்ணப் படிமம் என்று சொல்லலாம். எளிதாய் இதனை உருவகம் என்றே சொல்லலாமோ? இலக்கண உருவகத்தில் இருந்து வேறுபடுத்த எண்ண உருவகம் என்று இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன். பலக்கிய ஒன்றைக் காட்டித் தர எளிதான ஒன்றைக் காட்டிச் சொல்வது வெகு இயல்பாய் மனிதனுக்கு அமைந்து போயிருக்கிறது. பிறர் காட்டுவது தவிர அவரவர் பார்வையுமே அப்படித் தெரிந்த ஒன்றின் மேல் ஏற்றித் தெரியாத ஒன்றைப் புரிந்து கொள்ள முயல்கிறது. வண்ணக் காகிதம் வழியே தோன்றும் காட்சி காகித நிறத்தைப் பொருத்து மாறுவது போலவே ஏற்கும் உருவகத்தைப் பொருத்துச் சிந்தனைகளும் சித்தாந்தங்களும் கூட மாறுபடுகின்றன.

உருவகத்தின் ஊடாக ஒன்றை நாம் பார்க்கும் பார்வை அந்த ஒன்றை வேறுபடுத்திக் காட்டும் என்றால், மெய்யானது என்பது தான் என்ன? உருவகத்திற்கு இந்த ஆற்றல் எங்கிருந்து வந்தது? ‘உருவகத்திற்கு இந்த ஆற்றல்’ என்று நாம் எண்ணும் போதே அந்த உருவகத்திற்கும் ஒரு உருவகத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். உருவகம் என்பது நம் மனதின் பார்வை என்று சொன்னாலும் அதுவும் உருவகம் தானே!
Continue Reading »

« Newer Posts - Older Posts »