நல்லவனா கெட்டவனா?
Sep 23rd, 2008 by இரா. செல்வராசு
அன்புள்ள அம்பரா,
திருப்போரூர்க் கந்தசாமிக் கோயிலின் உட்சுற்றுச் சுவரில் தள வரலாறு படித்து நின்றிருந்த போது, ‘நீ நல்லவனா? கெட்டவனா?’ என்றாற்போல என்னிடம் நீ திடுதிப்பென்று கேட்டாய் – ‘நீ ஆத்திகனா, நாத்திகனா?’ என்று.
கேள்வி எளிதானதாக இருக்கலாம். ஆனால், என்னிடம் அதற்கான பதில் இல்லை, அம்பரா. அல்லது எளிதான பதில் இல்லை. எல்லாக் கேள்விகளுக்குமே பதில்கள் இருக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை நான் எதிர்க்கிறேன். ஒன்றற்கொன்று தொடர்புடையனவாய், பலக்கியதாய் இருக்கும் வினை, எதிர்வினைச் செயலாக்கங்களுக்கெல்லாம் ஆதார ஆரம்பப்புள்ளியைத் தேடிச் செல்வது கொஞ்சம் நாட்களுக்குச் சுவாரசியமாய் இருக்கலாம். ஆனால், அது முடிவில்லாத சுழல்பயணமன்றி வேறென்னவாய் இருக்க முடியும்?
ஆராய்ச்சியும் வாழ்க்கையின் ஒரு அங்கமெனினும், வெறும் ஆராய்ச்சியில் வாழ்க்கையைத் தொலைப்பதை விட, வாழ்க்கையில் ஆராய்ச்சிக்கான வித்துக்களை விட்டுச் செல்வதை விரும்ப ஆரம்பித்திருக்கிறேன். அதனால், ஒரே சமயத்தில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும் இருக்கிறேன். சிலசமயம் நான் என்னவாய் இருக்கிறேன் என்பதை விட, என்னவாய் இல்லை என்பதைச் சொல்ல எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். அதன் அடிப்படையில் சொன்னால், ஒரே சமயத்தில் நான் ஆத்திகனாகவும் நாத்திகனாகவும் இல்லாதிருக்கிறேன். பொதுமையில், நான் இருக்கிறேன் என்று மட்டும் சொன்னாலே போதும் என்று நினைக்கிறேன். ‘நான்’ என்பது வெறும் சுயச்செறுக்கு தானே என்றால், அந்தச் சுயச்செறுக்கு ஒன்றே தான் எனக்கு உறுதியாகப் படுவதால், உண்மையாகத் தெரிவதால், அதனைப் பற்றிக் கொள்கிறேன்.
‘இந்த உலகமே என்னைச் சுற்றித் தான் இருக்கிறது’ என்பது மேலாகப் பார்க்கையில் செறுக்காகத் தோன்றலாம். ஆனால், அது ஒரு பலவீனமான நிலை. ‘பூஃப்’ என்று ஒரு நாள் நான் மறைந்து போகும்போது, என் உலகமும் அதே கணமே காணாமற் போகும் என்பதும் சர்வ நிச்சயமான ஒன்று. ஆனால், உன் உலகம் வேறு அம்பரா. செல்லும் இடமெல்லாம் உனக்கான பல்லாயிரம் கோடி அணுக்களை நீ இழுத்துச் சென்று உனக்கான உலகத்தைப் படைக்கிறாய். என் உலகத்தின் சேதாரத்தினால் உன் உலகத்தின் இருப்புக்கு எந்த வித இக்கும், அபாயமும், அச்சுருத்தலும் இல்லை. ஆனால், என்னுலகில் உன்னுலகும் உண்டு. உன்னுலகில் என்னுலகும் உண்டு. என் உலகத்திற்கு நானும், உன் உலகத்திற்கு நீயும் தலைவரென்னும் சிந்தனை கொண்டால் அது நாத்திகமா? நம் உலகங்களுக்கும், அவற்றின் இருப்புக்கும், அவற்றின் இடையாடலுக்கும் எது காரணம் என்று நம்மை மீறியதொரு சக்தியைத் தேடினால் அது ஆத்திகமா? பார்… மீண்டும் சுழல்பயண வாயிலிலேயே வந்து நிற்கிறோம். சரி, விடு. பயணமே வாழ்க்கை என்றும் கொள்ளலாம். அல்லது வாழ்க்கையே பயணம் என்றும் கொள்ளலாம்.
முன்னொரு காலத்திலே விண்ணிலே சமர் புரிந்த போரூர்க் கந்தசாமியிடம் எனக்கென்று கேட்க ஒன்றும் தோன்றவில்லை அன்று. விண்ணிலே வென்றவனுக்கு மண்ணிலே எதற்கு மணிமண்டபம் என்னும் கிளைக் கேள்வியை இன்னொரு நாளுக்கென்று வைத்துக் கொள்வோம்.
நான் கேட்டுக் கேட்டுத் தான் இந்தச் சாமியப்பன் எனக்குச் சவுகரியத்தைக் கொடுக்க வேண்டும் என்றால், என்ன பண்ணாட்டுக்கு இவன் என்னை முதலில் படைக்க வேண்டும்? வேறு வேலை இல்லையா இவனுக்கு? சரி, அப்படி முதலிலேயே, படைக்கும்போதே எல்லாவற்றையும் தந்து இவன் என்னை அனுப்பிவிட்டான் என்றால், அப்புறம் இப்போது போய் இவனிடம் என்னத்தையென்று கேட்பது? ஆக, எனக்குக் கேட்க ஒன்றுமில்லாத கந்தசாமியை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? ‘நீயும் நல்லா இருப்பா’ என்று வாழ்த்திவிட்டுச் செல்லத்தான் முடிகிறது, சிலசமயம்.
நான் கேட்பதை அவன் செய்யவேண்டும் என்று விரும்பினால் நான் ஆத்திகனாவேன் என்றால், ஒரு சில விசயங்களுக்காக நான் ஆத்திகனாக இருக்கலாம். அவனை உறுதியாக நம்பி உருகும் உன்னோடு அவன் சந்நிதிக்கு வர எனக்குப் பிடிக்கிறது. நீ கேட்பதை அவன் உனக்குத் தர வேண்டும் என்று உனக்காகச் சில சமயம் அவனைக் கேட்பதில் எனக்கு யாதொரு தயக்கமும் இல்லை. பல்லாண்டுகளாகவும் நான் இதைச் செய்திருக்கிறேன். என் சிபாரிசுக்கு அவனிடத்தே என்ன மதிப்பு இருந்தது என்று எனக்குத் தெரிந்ததில்லை. நீ என்ன கேட்டாய், கேட்பாய், அது கிடைத்ததா என்றும் எனக்குத் தெரியாதே. ஒரு வேளை நீயும் உடன்வரும் எனக்குத் தேவையானவற்றைக் கொடு என்று கேட்டிருந்தாயானால் பாவம், அவனும் ஒரு சுழல்பாதையில் சென்றிருக்கக்கூடும்.
முன்பெல்லாம் ‘எல்லாரும் நல்லா இருக்கணும்பா’ என்றும் கூட இவனிடம் கேட்டிருக்கிறேன். பாவம், எல்லோரையும் பார்த்துக் கொள்கிற பாரம் எளிதானதா என்ன? ‘போய்யா, போ… இதென்ன அற்ப சூரன் வதைச் சமரா? இந்தக் கரணம் எல்லாம் நம்மால் ஆகாது ராசா’, என்று மலையேறிப் போய்விட்டான் போலும். நன்றாக வைத்துக் கொள்ள நான் கேட்டுக்கொண்டவர்களில் சிலபேர் சுமாராகத் தான் இருக்கிறார்கள். அவன் கஷ்டம் எனக்குப் புரியத்தான் செய்கிறது.
அம்பரா, இதையே உன்னிடம் சொன்னால் அதை நீ எதிர்கொள்ளும் விதம் வேறாய் இருக்கலாம். ஒரு வேளை இன்னும் கொஞ்சம் நம்பிக்கையோடும், இறைஞ்சுதலும் வேண்டுதலுமாய் நான் கேட்டிருக்க வேண்டும் என்று நீ கூறலாம். அது பற்றியும் நான் மறுப்பேதும் சொல்லப் போவதில்லை. உன்னுலகில் அவ்வாறு தான் செயலாற்ற வேண்டும் என்று நீ எண்ணி அமைத்திருக்கலாம். அதைத் தான் நானும் சொல்கிறேன். உன்னுலகை நீயும் என்னுலகை நானும் தான் இயக்கிவர வேண்டும். அவன் உலகை அவனும்.
சதா அழிந்தும் ஆகியும் வருகின்ற உலகங்களுக்கு இடையே உன்னுலகும், என்னுலகும், அவன் உலகும் சந்திக்கின்ற ஒரு உன்னத கணப்பொழுதில் எழும் உணர்விற்கும் நிறைவிற்கும் காரணப்பெயர் ஆத்திகமாய் இருந்தால் என்ன? நாத்திகமாய் இருந்தால் என்ன?
சொல், அம்பரா… இப்போது சொல். நான் நல்லவனா, கெட்டவனா?
ஆனால், எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் இருக்க வேண்டும் என்று நான் இப்போதெல்லாம் எதிர்பார்ப்பதில்லை.
* * * *
கொஞ்சம் ஹை-டெக் இடுகைதாங்க.
அம்பரா யாரு?
//ஒரே சமயத்தில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும் இருக்கிறேன். //
ஆமாம். கையில் உள்ள செல்போனில் ‘விஷமக்காரக் கண்ணா’ பாட்டு ரிங்டோனாகவும், பெரியார் புத்தகத்தைக் கையிலும் வைத்திருப்பவன் வேறு என்ன சொல்லமுடியும்!
சுயத்தைத் தேடும் பயணமா ஆன்மீகம்? ஏன் அது வேறு இது வேறாக இருக்கக் கூடாதா? நல்லவனா கேட்டவனா என்பது எப்போது ஆத்திகனா நாத்திகனா என்று மறுவியது? மனதின் ஏதோ ஒரு அடுக்கில் இந்த இரண்டுங்கும் உள்ள தொடர்போ அல்லது நீங்கள் அப்படி நினைக்கும் ஒரு இழையோ ஆழாமாய் சம்மணமிட்டு உக்கார்ந்துவிட்டதா?
விடையே இல்லாமல் இருக்குமானால் கேள்விகள் ஏன் கேட்கப்படுகின்றன? தண்ணீரில் கல் எரிந்தால் சலனம் உண்டாவதுதானே நியதி? வேண்டுமானால் நம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் கல் விழுந்திருக்கலாமோ? அல்லது கண் இமைக்கும் நுண்நொடியில் சலனங்கள் மறைந்திருக்குமோ? விடைகளும் அதைப்போலத்தான். விடையே இல்லாதபோது கேள்விகள் அர்த்தமற்றவையாகின்றன… இருக்க முடியாது. கேள்விகளே விடைகள் ஆகிவிடுகின்றன, அல்லது விடையையே கேள்வியாக நாம் தப்பர்த்தம் செய்திருக்கலாம். கல்லைக்கொண்டு சலனம் உண்டாக்கலாம், ஆனால் சலனம் உண்டாக்கிய கல்லை கண்டறிய முடியுமா?
அவரவர் உலகில் அவரவர் சஞ்சரிப்பதில் எந்த பிரச்சனைகளும் உருவாவதில்லை. ஆனால் இரு உலகங்கள் கலந்துரையாடும் சமயங்களில் அந்த சமன்பாடு கலைந்து விடுகிறதோ? இவ்வாறு மேலும் உலகங்கள் அதிகரிக்கவும் அதை சமநிலைக்கு கொண்டு வர பாகீரதப்போரட்டம் நிகழ்த்திவிடுவதிலேயே கலைந்துவிடுவதுதானே வாழ்க்கை? அல்லது சமநிலையில் இருக்கும் உலகங்களில் யாரோ கல்லெறிவதினால் சமநிலையற்ற சமுத்திரமாய் திரிவதுதான் வாழ்க்கையா?
இந்தக் கேள்விகளுக்கு உங்களிடமோ என்னிடமோ பதிலில்லை ஆனால் இது கேள்விகளா அல்லது பதில்களா அல்லது இரண்டுக்கும் அப்பாற்பட்ட நம் சிந்தனைக்கு எட்டாதா வேறு ஏதாவதா வடிவமா என்று தெரியவில்லை!
காசி, நண்பர் ஒருத்தர் கதை எழுதச் சொன்னார். வேணும்னாக் கடிதம் எழுதறேன்னு சொல்லிட்டேன். அம்பரா ஒரு புனைவுப் பெயர்னு வச்சுக்குங்க. கடிதம் எழுதுனா யாருக்காச்சும் அனுப்பனும்ல? 🙂
டைனோ, ஆழமான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறீர்கள். நிறைய ஆமோதிக்கிறேன். நன்றி.
ஆன்மீகம் என்பது சுயத்தைத் தேடும் பயணமல்லாது வேறு என்னவாய் இருக்க முடியும் என்று அண்மையில் தான் நினைக்க ஆரம்பித்திருக்கிறேன். இல்லை, வேறாகவும் இருக்கலாமே என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி அது வேறாயின், அது என்ன என்பது எனக்குப் புரிபடவில்லை. மேலும் கேள்விகள் எழுப்பிக் கொள்ளலாம்!
நல்லவன்/கெட்டவன் என்பதையும் ஆத்திகன்/நாத்திகனோடு நேரடித் தொடர்புக்காகச் சொல்லவில்லை. நல்லவனா கெட்டவனா என்றும் கூட ஒருவரை (என்னை) நேரடியாக வகைப்படுத்தி விட முடியுமா என்னும் கேள்வியோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறேன். அவையிரண்டும் கலந்த கலவையாய் இருக்க முடிவதுபோல் என் ஆன்மீகப் பயணத்திலும் ஆத்திகம் நாத்திகம் கலவையாய் இருக்க வாய்ப்புண்டா என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கும் மேலே போய் ஆத்திகம் நாத்திகம் என்பது எதைக்குறிக்கின்றன என்றாய முற்பட்டு அவையெல்லாம் ஒரே இலக்கை நோக்கித் தான் செல்கின்றனவா என்று, அது தான் ஆன்மிகமா என்று கேட்டுக் கொள்கிறேன்.
கேள்விகளுக்கு விடைகள் இல்லாது போகலாம் என்பதாலேயே பதில்கள் தெரியவேண்டியதில்லை என்று நான் சொன்னாலும், சில சமயம் தெரியும் பதில்களுக்குச் சரியான கேள்விகள் என்ன என்று நாம் கேள்விகளையும் கூடத் தேட வேண்டியிருப்பதை நீங்கள் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். சலனத்தை உண்டாக்கிய குளத்துக் கல் எது என்று நீங்கள் கேட்டிருப்பது அழகான உவமை. தெளிவான கேள்வி. ஆக, இறுதியில் நீங்கள் சொன்னது போல எவை கேள்விகள், எவை பதில்கள், அல்லது இரண்டுமல்லாத வேறெதோ வடிவம்தானோ இவை என்று யோசிக்க வைக்கிறது. வார்த்தைகள் எதுவாய் இருந்தாலும் இந்தப் பயணத்தை, எண்ண ஓட்டத்தை என்னவென்பது என்று யோசித்தால், இது தான் ஆன்மிகம் என்றும் கூடச் சொல்லிவிடலாம். அது கடவுள் என்ற ஒற்றை இலக்காகத் தான் இருக்கவேண்டுமென்பதில்லை தானே.
பதிவு முதலில் புரிவது போல் இருந்தது, பின் இருவரின் கேள்வி-பதில் பற்றிய comments-ஐ பார்த்து அது கலைந்து விட்டத்தோ எனத்தோன்றுகிறது.
என்னை பொருத்தவரை கேள்விகள் ஒரு எல்லைவரை நாம் வளர்வதற்கு துணைசெய்கிறது. விஷயம் ஓரளவு புரிந்தபின் அதை வாழ்வில் நடைமுறைபடுத்தும்போது மாயை தானே சிறிது சிறிதாக விலகிவிடும். அப்படியின்றி கேள்வி கேட்டுக்கொண்டே இருந்து புத்தக ஞானமும், வார்த்தைகளையுமே நம்பியிருந்தால் அந்த ஞானம் ஒரு சுமையே தவிர விடுதலைக்கு பயன்பட்டாது.
நித்யானந்தரின் “Guarenteed solutions” ஒரு நல்ல புத்தகம். நேரம் கிடைப்பின் படித்துப் பாருங்கள்.
நல்ல பதிவு. செல்வராஜ் அவ்ர்களே, தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.
நன்றி kKarma. சுவாரசியமான கருத்துக்கள். என்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவன் நித்யானந்தா பற்றி நிறையச் சொல்லி இருக்கிறான். முற்றிலும் வேறான ஒரு வாழ்க்கைப் பாதையில் ‘எல்லே’-வில் ஈடுபட்டிருக்கிறான். தொடர்பில்லாத இரண்டாவதாய் ஒருவராக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அது சற்று ஆர்வத்தை உண்டாக்குகிறது (curiosity). பார்க்கலாம், எப்போதாவது நேரம் இருக்கும்போது நீங்கள் சொன்ன புத்தகத்தைப் படிக்க முயல்கிறேன்.
//”முற்றிலும் வேறான ஒரு வாழ்க்கைப் பாதையில் ‘எல்லே’-வில் ஈடுபட்டிருக்கிறான்.”//
இது சற்றே வியப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. spirituality சம்மந்தமான விஷயமாக இருப்பின் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளது.
Good vedios from nidhyananda.
Be Unclutched Vol 1
http://www.youtube.com/watch?v=r1oSyAOXirM
Be Unclutched Vol 2
http://www.youtube.com/watch?v=99UTNcwO7Lc
You can view all other vedios at the following link
http://nithyatube.blogspot.com/
Just to browse his other Q&A
http://nithyaevents.blogspot.com/search/label/Ask%20The%20Master
KARMA, உங்கள் இணைப்புக்களுக்கு நன்றி. பொறுமையாய்க் கேட்டுப் பார்த்தேன். பல விசயங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. சில என் சிந்தனைகளோடு ஒத்துப் போகின்றன. நன்றி.
எனது நண்பன் இவரைப் பற்றியும் கூறியிருந்தாலும் (மூன்று நான்கு ஆண்டுகள் முன்பு), அப்போது இதுபோன்ற யூடியூப் இணைப்புக்கள் இல்லை என நினைக்கிறேன்.
மாறுபட்ட வாழ்க்கை முறை என்பது அவன் தனது வேலை இருப்பிடத்தை விரும்பி மாற்றிக் கொண்டு சேன் பிரான்சிஸ்கோவில் இருந்து எல்.ஏ சென்று அதே சிந்தனை ஒத்த பலரோடு (நித்யானந்தா followers?) ஒரு கூட்டு வாழ்க்கை போல் (community living) ஒரு apartment complex முழுக்க வாடகைக்கு எடுத்து இருப்பதைப் பற்றியது. கூட்டுச் சமையல், பூசை, துப்புரவு வேலைகள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது கூடக் கூட்டாக என்பதால், தாய் தந்தையர் பணி நிமித்தம் வெளியூர் செல்ல நேரிட்டால் கூடக் கவலை இல்லாதது, etc. சில ஆண்டுகள் கழித்து வேறு ஊரில் தனி கிராமம்/ஊர் அமைத்துச் செல்வதும் திட்டத்தில் இருப்பதாய்ச் சொல்லி இருந்தான். அண்மையில் பேசவில்லை என்பதால் பிற விவரங்கள் இல்லை.
[…] பயபக்தியை ஊட்டுவது? அவர்களது ஆன்மீகத் தேடலை அவர்களிடமே விட்டுவிடவேண்டியது […]
http://nouralislam.org/tamil/islamkalvi/religions/index.htm
நீங்கள் தொலைநோக்கு பார்வை உடையவரா நிதானமாக படியுங்கள்
கருத்தை எனக்கு அனுப்புங்கள்.
alquran54.17@gmail.com
[…] […]