இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

அறியவொணாமை => அறியொணாமை

January 15th, 2013 · 4 Comments

IMG_1213அனைவருக்கு இனிய பொங்கல்/புத்தாண்டு வாழ்த்துகள். வெண் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் வடை பாயசமுமாகக் கொண்டாடியதில் Smile நேற்றே வாழ்த்தினைச் சொல்ல ஒணாமல் (!) போய்விட்டது. வாழ்க என் மனைவியார்.  (வயிற்றுக்கு நல் உணவுண்டு என்றால் மரியாதை மட்டற்று வருகிறது!).

எல்லா ஆண்டுகளும் இப்படியாக இருப்பதில்லை. இரண்டாண்டுகளுக்கு முந்தைய இதே பொங்கல் நாளில் பொங்கலை நான் வைக்கிறேன் என்று இறங்கி நானும் என் பெரிய மகளும் சர்க்கரைப் பொங்கலுக்கான செய்முறைக் குறிப்பைத் தேடி இணையத்தில் அலைந்தோம். பெரியவளுக்குத் தான் சர்க்கரைச் சங்கதிகள் அதிகம் பிடிக்கும் என்பதால் சின்னவள் அங்கிருக்கவில்லை.

மகாநந்தியின் இனிப்புப் பொங்கலுக்கான செய்முறைக் குறிப்புகளைச் சார்ந்து செய்ய முடிவு செய்தோம். குறிப்பினில் படிப்படியாகக் கொடுத்திருந்த முறைகளைக் கடந்து வருகையில், ‘பொங்கல் ஆனதும் முதலில் இறைவனுக்குப் படைத்துவிட்டுப் பிறகு பரிமாறவும்’ என்னும் குறிப்பைக் கண்டு விளையாட்டாய் நான், “நமக்குச் சாப்பாடு கெடச்சாப் போதும்; சாமியெல்லாம் தேவையில்லை” என்றேன்.

இதைக் கேட்டுக் கலகலவென்று முத்துதிரச் சிரித்த பன்னிரண்டு அகவையாள் அந்நாளை என் நினைவகத்தில் ஏற்றி வைத்தாள். பள்ளி நிகழ்வொன்று நினைவுக்கு வந்தவளாய் என்னைப் பார்த்து,

“அப்பா! இப்போதெல்லாம் நீ என்ன மதம் என்று யாரேனும் என்னைக் கேட்டால், நான் பாதி இந்து, பாதி நாத்திகர் என்றே சொல்கிறேன்”, என்றாள்.

இன்னும் நான் வெளியூர்ப் பயணம் போகிறேன் என்று தொலைபேசியில் சொன்னாலும், “பாத்துப்பா… பத்திரமாப் போய்ட்டு வா… எப்பவும் நம்ம சாமிய நெனச்சுக்கோ… இராசாவையன எப்பவும் மனசுல வச்சுக்கோ” என்று தொலைபேசியிலேயே இறைவனை என்னோடு அனுப்பி வைக்கும் என் அம்மா, இவளின் ஆத்தாள், இதனைக் கேட்டால் என்ன நினைத்துக் கொள்வார்களோ தெரியவில்லை! ஆனாலும் இவளுடைய ஆன்மிகப் பாதை சரியாகத் தான் இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

அறியவொணாமைக் அறியொணாமைக் கொள்கை (Agnosticism) பற்றிச் சொல்லுங்கள் என்று நண்பர் வாசன் துவிட்டரில் கீச்சிட்டார்.

Agnosticism is the view that humanity does not currently possess the requisite knowledge and/or reason to provide sufficient rational grounds to justify the belief that deities either do or do not exist.

அது பற்றிச் சொன்னபோது, நிவேதிதா கணக்கைச் சரியாகப் பிரித்தாள்.

“சரி அப்பா… இனி அதையும் சேர்த்து மூன்றிலும் ஒவ்வொரு பங்கு என வைத்துக் கொள்கிறேன்”

அறியவொணாமைக் அறியொணாமைக் கொள்கையின் பால் என்னுடைய நாட்டம் சிறு வயது முதலே இருந்திருக்க வேண்டும். அதனால் தான் கோயிலுக்கும் சென்று கொண்டே இறைமறுப்புக் கருத்துக்களையும் கருத முடிகிறது. அல்லது வடிவம் ஏதாயின் என்ன, இயற்கையே தெய்வம் என்று நினைக்க வைக்கிறது.

முன்பெல்லாம் முருகனே ஒரே இறைவன் என்று சில சமயம் வைத்துக் கொள்வதுண்டு. ஒரு பத்தாண்டுகளுக்கு முன் அவரை விட்டுவிட்டுத் தந்தையப்பன் ஈசனை வேண்டியதுண்டு. அப்போது தான் இரண்டு அருமைப் பெண்களுக்குத் தகப்பன் ஆகியிருந்தது காரணமாய் இருக்கலாம்.

2013-01-15 20.26.48

நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் என்று ஐம்பூதங்களைத் தெய்வமாகக் கொண்டிருந்த முன்னோர் இயற்கையே தெய்வம் என்று தான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணியதுண்டு.

…Pantheisஅக் கொள்கைகளைக் கொண்டிருக்கும் எனக்கு இறைவன் ஒரு வடிவமே. அதனால் மனது சார்கின்ற வடிவமே பிரிய தெய்வம் என்று கொள்ளப் போகிறேன்…

அகண்டு வேகமாக விரிகின்ற அண்டத்தை ஆக்கவும் காக்கவும் ஒரு இறைவன் தேவையில்லை என்று எண்ணும்போதே இவ்வண்டமும், துகள்களும், நானும், என் சிந்தையும் ஏன் எப்படி எதற்கு என்னும் இருத்தலியற் கேள்விகளுக்கு அறிவியலும் பதிலிறுக்க ஆற்றலின்றி இருக்க, அறியவொணாமை அறியொணாமை ஒன்றே மிஞ்சுகிறது.

இந்தப் பக்கமாக வந்த மகளைப் பார்த்து, “உன்னைப் பற்றித் தான் எழுதுகிறேன்” என்றேன்.

Agnosticism என்றிருப்பதைப் பார்த்தவள், “என்னைப் பற்றிய பொய் எல்லாம் இணையத்தில் எழுதாதீர்கள். நான் ஒன்றும் agnostic அல்லள். வாழ்க்கையில் என்னுடைய பாதையைக் கண்டுகொள்ள இன்னும் நான் முயன்று கொண்டிருக்கிறேன்”, என்கிறாள்! மகமாயி!

ஈசனுக்கு இணையாகத் தாண்டவமாடும் இந்த உமா மகேசுவரியைக் காணின் இனி என் இறையை மாற்றித் தேவி பதம் சரணடையலாம் எனத் தோன்றுகிறது.

உமா மகேசுவரத் தாண்டவம்

* * * *

Tags: கண்மணிகள் · வாழ்க்கை

4 responses so far ↓

  • 1 நாகு // Jan 15, 2013 at 10:28 pm

    பொங்கல் வாழ்த்துக்கள், செல்வராஜ்.

    உங்கள் மகளுக்கு இருக்கும் தெளிவு நமக்கெல்லாம் எப்போது வரப்போகுதோ? 🙂

  • 2 இராம.கி. // Jan 15, 2013 at 11:20 pm

    அறியவொணாமை என்று நீட்டவேண்டாம். அறியொணாமை என்று சுருங்கச் சொல்லிவிடலாம். அறிதல் +ஒ(ண்) ணாமை என்று அது வினைத்தொகையாய் அமைந்துவிடும்.

    ஒள்> ஒண்ணு> ஒண்ணுதல் = இயலுதல். (ஒண்ணுமோ அவர்தம் செயலோதவே என்பது கந்தபுராணப் பாயிரம். தக்கதாதல், பொருந்துதல் என்ற பொருட்பாடுகளும் ஒண்ணுதலுக்குண்டு. இங்கு இயலுதலே சரியாகப் பொருந்தும்.

    ஒண்ணாமை = இயலாமை.
    அறிவதற்கு இயலாமையை அறியொணாமை என்று சொல்லுகிறோம். agnosticism என்ற ஆங்கிலச்சொல்லிற்கு இணையானது.

    பால் பொங்கிற்றா? பொங்கலோ, பொங்கல்!
    அன்புடன்,
    இராம.கி.

  • 3 இரா. செல்வராசு // Jan 16, 2013 at 6:02 pm

    நன்றி நாகு. நமது தெளிவு நமக்கு. அவர்கள் தெளிவு அவர்களுக்கு 🙂

    இராம.கி ஐயா, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்து. பால் பொங்கும் படம் பழையது. 2004ல் ஊரில் இருந்த போது அம்மா வாசற்பொங்கல் வைத்தபோது எடுத்தது. பொங்கல் படம் வேண்டுமானால் எப்போதும் அங்கே தான் செல்கிறேன்.

    அறியொணாமை என்னும் சொல் குறித்த உங்கள் கருத்துக்கு நன்றி. Agnosticism என்பதற்கான தமிழ்ச்சொல் குறித்துப் பல இடங்களில் தேடியும் இப்படி சுருக்கமாக அழகாக எங்கும் காணப்படவில்லை. விக்கிப்பீடியா, விக்சனரி முதல் பல இணைய அகர முதலிகளிலும் தேடிப்பார்த்து இருப்பதிலேயே சிறியதாகப் பார்த்தேன். ஆனால் அதை இன்னும் இப்படி நானே (அறியொணாமை என்று) சுருக்கி இருக்க வேண்டும். இனி இதனையே பாவிக்கிறேன். நன்றி.

  • 4 இரா. செல்வராசு » Blog Archive » அப்பாவின் கதை. // Aug 23, 2013 at 10:23 pm

    […] கிட்டவில்லை. மெய்யெதுவென்ற அறியொணாமை மட்டுமே […]