இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

வாஷிங்டன் முருகனுக்கு அரோகரா

April 14th, 2007 · 14 Comments

Lanhem Murugan Newsletter Velவள்ளி தேவசேனா சமேதனாகிய ஸ்ரீ சுப்பிரமணியனுக்குப் பல மூலைகளில் இருந்தும் மணியடித்துக் கொண்டிருந்தார்கள். மின்கலம் பொருத்திய முரசொன்று மூலையில் டம்ட டம்ட டம் கொட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்கத் தலைநகரத் தமிழர் கூட்டம் சிறிதாகப் புத்தாண்டை வரவேற்கப் பட்டோடும் பிறவோடும் குழுமியிருந்தது.

மணியொலியும் முரசொலியும் நாசிகளில் ஏறிய நறுமணமும் ஒருபுறம் புற அறிவைச் சீண்டிக்கொண்டிருக்க, அவற்றினூடாக ஒரு அமைதியை நாடி மனம் மிதந்து கொண்டிருந்தது. தங்க விசிறியும் சாமரமும் வீச, அலங்கரிக்கப்பட்ட முருகக் கடவுள் இன்று பிறமொழி மந்திரத்தோடு தன் தமிழையும் அவ்வப்போது கேட்டதனால், தம்பதியர் சகிதம் சந்தோஷமாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

எல்லாப் பொழுதுகளையும் போன்று தான், இதுவும் ஒரு தெய்வீக நிமிடம்; நானும் அங்கே ஒரு சாட்சி என நிலைத்திருந்த என்னை அசைத்துப் பார்த்தும் முடியாமல், “சரி நாங்கள் போய் மத்த சாமியெல்லாம் கும்பிட்டுட்டு வர்றோம்”, என்று என்னுடைய சமேதகியும் வாண்டுகளும் நகர்ந்து சென்றனர்.

அப்பன் சுந்தரேசனும், அம்மா மீனாட்சியும் புறங்களில் இருந்தார்கள். பரவாயில்லை. அப்புறம் பார்க்கலாம் என்று இருந்துகொண்டேன். பார்க்காமல் விட்டால் தான் என்ன? காலையில் அப்பாவோடு தொலைப்பேசியபோது அனுப்பி வைத்த புத்தாண்டு வாழ்த்துக் கிடைத்ததா என்று கேட்டிருந்தார். எதைப் பற்றியும் கவலையற்றிருக்க முயல்வதாய்க் கூறினார்.

எதைப் பற்றியும் கவலையற்றுத் தாய் தந்தையர் தோளில் வகைக்கொன்றாய்க் கட்டிக் கொண்டு வாண்டுகள் பலவும் கோயிலில் மலர்ந்திருந்தன. வளர்ந்திருந்த சிலவோ, “இன்னும் நேரமாகுமா?” என்று கேட்டு மந்திரத்தில் மயங்காது முகத்தைத் தொங்க வைத்திருந்தன. மதிய நேரத்துப் பசி என் மகளிடம் கூடக் காட்சிப் பட்டிருந்தது.

ஆரத்தியின் போது அனைவரின் கரங்களும் தன்னிச்சையாகக் கூப்பிக் கொள்ள அதனையும் மீறிக் கட்டிய கைகளுடனேயே நின்று கொண்டிருந்தேன். கூட்டம் செய்வதையே எப்போதும் நான் செய்வதில்லை. என் முருகன். என் கடவுள். என் இஷ்டம்.

“காயத்ரீ… ஆரத்தி… வந்து ஒத்திக்கோ” என்று ஒருவர் தன் மனைவியையோ மகளையோ அழைத்துக் கொண்டிருந்தார். வழிவிட்டு ஒதுங்கி என் ‘வீட்டைத்’ தேடினேன். எங்கோ பின்புறம் தீர்த்தத்துக்குக் கை காட்டிக் கொண்டிருந்தார்கள். இது தீர்த்தமா, பிரசாதமா,… தெரியவில்லை. நீட்டிய கையில் ஒரு நெற்றிக்கு மட்டும் போதுமான அளவு திருநீறு கொடுத்தவரின் திறமையைப் பாராட்டத் தான் வேண்டும்.

“வாசிங்டன் முருகனுக்கு அரோகரா” வென்னும் கோசத்தோடு பூசை முடித்து வந்த அர்ச்சகர் தமிழிலே புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொன்னார்.

“ஆகா… அரோகரா…”.

‘அரகர அரகர அரோகரா’ வெனப் பழனி மலையடிவாரத்தில் சிறுவயதில் கிரிவலம் வந்த வேனிற்காலங்களின் எதிரொலி மனதில். மடம். சித்தனாதன். பேரீச்சை. காவடித் தீர்த்தம். பெருந்தொட்டியில் கால்மிதி பஞ்சாமிருதம். எவையுமில்லை இங்கு. ஆனால் யாரோ புண்ணியம் செய்தவர், அல்லது புண்ணியம் தேடுபவர் மதிய உணவென்று அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். ‘முருகன் கடை’யில் சாப்பாடு என்கிற எண்ணமும் இன்றைய பயணத்திற்கு ஒரு உந்துதல். சுவையாகவே இருந்தன கத்தரிக்காய்ச் சாம்பாரும், வெங்காய இரசமும், சர்க்கரைப் பொங்கலும், தயிர்சாதமும், பக்கோடாவும், பாட்டில் தண்ணீரும். யாருக்கு என்று தெரியவில்லை. மனதிற்குள்ளேயே நன்றி சொல்லிக் கொண்டேன்.

இந்துமதப் பற்றோ, இணைந்தவன் பொருட்டோ அமெரிக்கப் பெண்ணொன்றும் நீல நிறச்சேலை கட்டிக் குங்குமப் பொட்டொன்று வைத்து அழகாக வந்திருந்தது. பின்னேரம் கடையொன்றில் என் நெற்றித் திருநீறையும் என் பெண் வைத்திருந்த ஒட்டுப்பொட்டையும் ஆர்வத்தோடு பார்த்தபடி இரண்டு பேர் போனார்கள். சீனத்துக்காரர் ஒருவர் ‘என்ன இது அழகாய்… ஒட்டுப்பொட்டா?’ என்று பெண்ணிடம் கேட்டுவிட்டு வியப்புக் காட்டிவிட்டுப் போனார்.

பல நாட்டவரும் பல்லாண்டாய் இங்கிருந்து அமெரிக்கராய் உருகிச் சட்டியிலே கலந்து விட்ட போதும் அடிப்படையில் தாய்நாட்டு, தாய்க்கலாச்சாரத்தோடு ஒரு பற்று இருக்கத் தானே செய்யும்? அப்பற்று இருப்பதாலேயே இவர்கள் இந்தத் தேசியத்திற்கு எதிரானவர் என்று கொள்ள முடியுமா?

பிறப்பாலேயே இந்நாட்டினராய் இருந்தாலும், இவ்வரசின் எல்லா முடிவுகளுடனும் மூடராய் ஒத்துப் போகத் தான் வேண்டுமா? “Out of Iraq” என்று ஏந்திய தட்டிகளுடன் சாலைகளின் மூலைகளில் இவர்கள் இன்னும் கொஞ்சம் முன்னரே விழித்திருந்தால் தம் மக்களைப் போருக்குக் காவு கொடுத்திருக்க வேண்டியிராது. அரச முடிவை எதிர்ப்பது தேசத் துரோகம் என்னும் பொய்ப்பிரச்சாரம் இங்கும் தான் நடந்தது. சிலகாலம் வெற்றியும் கூடப் பெற்றது.

அரசையோ, அதிகார வர்க்கத்தையோ, கேள்வி கேட்பதோ, எதிர்த்துக் கருத்துக்கள் வைப்பதோ துரோகம், தீவிரவாதத்தனம், பாவம், என்ற புரட்டுரைகள் மதியை மயக்க வரும்போது அவ்வூர் இவ்வூர் எவ்வூராயினும் எம்மக்களுக்கு இந்த முருகன் ஒரு தெளிவைக் கொடுக்கட்டும்.

நல்லது நிலைக்கட்டும். புத்தாண்டு இன்னும் துணிவும் தெளிவும் நம்பிக்கையும் கொண்டு வரட்டும்.

வாசிங்டன் முருகனுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் எங்களுக்கும் எல்லோருக்கும் அரோகரா!

* * * *

Tags: பயணங்கள் · வாழ்க்கை

14 responses so far ↓

 • 1 வெற்றி // Apr 16, 2007 at 8:46 pm

  செல்வராஜ் அண்ணா,
  முதலில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  இரண்டாவதாக, தமிழ்மணத்தில் உங்களின் பதிவின் தலைப்பில் கிளிக் செய்தால், “ERROR-url not available” எனும் தகவல்தான் வருகிறது. உங்களின் பதிவைக் கிளிக் செய்யாமல் உங்கள் பெயரில் கிளிக் செய்துதான் இப் பதிவுக்கு வந்தேன்.

  இனிப் பதிவு பற்றி.
  நல்ல சுவாரசியமாக, சிந்திக்க வேண்டிய பல கருத்துக்களைச் சொல்லியுள்ளீர்கள்.

  /* கூட்டம் செய்வதையே எப்போதும் நான் செய்வதில்லை. என் முருகன். என் கடவுள். என் இஷ்டம். */

  அட, நானும் அப்படித்தான்.

  /* அமெரிக்கப் பெண்ணொன்றும் நீல நிறச்சேலை கட்டிக் குங்குமப் பொட்டொன்று வைத்து அழகாக வந்திருந்தது */

  Rochester ல் உள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்குச் சென்றீர்கள் என்றால், அங்கே வெள்ளைப் பெண்மணி பூசை எல்லாம் செய்வதைப் பார்ப்பீர்கள். இவ் ஆலயத்தில் சாதி, மத பேதம் இன்றி யாரும் சுவாமிக்கு பால் அபிசேகம், பூசை செய்யலாம். நல்ல அமைதியான இடத்தில் இருக்கிறது.
  வசதி ஏற்படும் போது செல்லுங்கள்.

  /* முருகக் கடவுள் இன்று பிறமொழி மந்திரத்தோடு தன் தமிழையும் அவ்வப்போது கேட்டதனால், தம்பதியர் சகிதம் சந்தோஷமாகத் தான் இருந்திருக்க வேண்டும். */

  :-)))

  /* அரசையோ, அதிகார வர்க்கத்தையோ, கேள்வி கேட்பதோ, எதிர்த்துக் கருத்துக்கள் வைப்பதோ துரோகம், தீவிரவாதத்தனம், பாவம், என்ற புரட்டுரைகள் மதியை மயக்க வரும்போது அவ்வூர் இவ்வூர் எவ்வூராயினும் எம்மக்களுக்கு இந்த முருகன் ஒரு தெளிவைக் கொடுக்கட்டும். */

  சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். எம்மில் அந்த அறிவு முதிர்ச்சியை முருகப் பெருமான் தான் தர வேண்டும்.:))

 • 2 Kannabiran Ravi Shankar (KRS) // Apr 16, 2007 at 9:21 pm

  நல்ல ஆலயக் கட்டுரை, செல்வராஜ் அவர்களே!
  ஆன்மா வயப்படும் இடம் ஆலயம் என்பார்கள்! ஆனால் அது வயப்படுகிறதோ இல்லையோ, சில பல உந்தும் சிந்தனைகள் மனத்துக்குள் எழ, ஆலயம் செல்லலும் ஒரு காரணமாகிறது.

  //என் முருகன். என் கடவுள். என் இஷ்டம்//
  🙂
  நானும் உங்களைப் போலத் தான். ஆனா கொஞ்சம் மாற்றிச் சொல்வேன்!
  என் முருகன். என் கடவுள். உன் இஷ்டம் :-))

 • 3 Kannabiran Ravi Shankar (KRS) // Apr 16, 2007 at 9:24 pm

  சீர்காழி சிவசிதம்பரம் ஒரு முறை வாஷிங்டன் ஆலயம் வந்த போது, ஆங்கிலத்தில் மிக அழகாய் ஒரு முருகன் துதி பாடினார். அதுவும் நம்மிசை தாளக் கட்டோடு.
  வெல்டன் வெல்டன் வாஷிங்டன் என்று துவங்கும்!
  இணையத்தில் தேடினால் கிடைக்கும் என நினைக்கிறேன்.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்! அரகரோகரா!!!

 • 4 ஆண்டியும்_மயிலும் // Apr 16, 2007 at 9:54 pm

  அரோகரா.. அப்படியே இன்னொரு 30 நிமிடம் அழுத்தினா நம்ம ஊரு அரோகரா. அடுத்த‌ முறையாவ‌து அழுத்துங்க‌ அரோகரா..

  இனிய‌ புத்தாண்டு வாழ்த்து..

 • 5 வெற்றி // Apr 16, 2007 at 11:22 pm

  ரவிசங்கர் கண்ணபிரான்,

  /* வெல்டன் வெல்டன் வாஷிங்டன் என்று துவங்கும்!
  இணையத்தில் தேடினால் கிடைக்கும் என நினைக்கிறேன்.*/

  மியூசிக் இந்தியா ஒன்லைனில் அப்பாடல் இருக்கிறதே!.
  பாடலைக் கேட்க
  இங்கே கிளிக் செய்யுங்கள்

 • 6 செல்வராஜ் // Apr 17, 2007 at 8:14 pm

  வெற்றி, அந்த இராச்செஸ்டர் பெண்மணியைப் பதினைந்து வருடங்கள் முன்பு ஒருமுறை பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பஜனைப் பாடல்கள் எல்லாம் கூட அருமையாகப் பாடுவார்.

  கண்ணபிரான், ஆண்டிமயில் நன்றி.

  லார்டு முருகா, லண்டன் முருகா – என்றும் கூட ஒரு பாட்டைக் கேட்டிருக்கிறேன்…

 • 7 shylaja // Apr 17, 2007 at 8:21 pm

  முருகன் கோயிலை இன்னும்நான்பார்க்காமலேயெ4மாதமாக வர்ஜீனியாவில் இருக்கிறேனேஎனத் தோன்ற வைத்துவிட்டது உங்கள்கட்டுரை..இந்த வீக் எண்ட் கண்டிப்பா போயிட்றேன் …நன்றி செல்வராஜ்.
  ஷைலஜா

 • 8 Thangamani // Apr 17, 2007 at 9:58 pm

  செல்வராஜ், உங்கள் எல்லாப் பதிவுகளைப் போல இப்பதிவும் அழகாக, உங்கள் சொந்த அனுபவத்தையும், பார்வையும் குழைத்துத் தருகிறது. நன்றி!

 • 9 Vassan // Apr 18, 2007 at 2:19 pm

  /* வெல்டன் வெல்டன் வாஷிங்டன் என்று துவங்கும்!
  இணையத்தில் தேடினால் கிடைக்கும் என நினைக்கிறேன்.*/

  Music India Online சுட்டி வழி பாடலை கேட்க இயலவிட்டால் http://sirkali.org/ சென்று கம்பீர கானம் எனும் தலைப்பின் கீழ் பாடலை தெரிவு செய்து கேட்டு மகிழலாம் !

 • 10 Natkeeran // Apr 19, 2007 at 7:03 pm

  மீண்டும் வலைப்பதிவுகளின் உங்கள் முகத்தைக் காணமுடிகின்றது. மகிழ்ச்சி. அப்படியே தமிழ் விக்கிபீடியாவிலும் வேதியியல் பொறியியல், வேதியியல் துறையைப் பற்றி எழுதினால் நன்று. நீங்கள் ஆரம்பித்து விட்டு பின்னர் நேரமின்மையால் விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன். சிறுக சிறுக சேர்த்தாலே நன்று. 10000 கட்டுரை என்ற இலக்கை நோக்கி செல்கையில் வேதியியல் துறை பலமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

 • 11 செல்வராஜ் // Apr 20, 2007 at 11:32 am

  ஷைலஜா, மரத்தடிக்காரர் தானே நீங்கள். வருகைக்கு நன்றி. வர்ஜினியாவில் தான் இருக்கிறீர்கள் என்பது செய்தி.

  தங்கமணி, வாசன் நன்றி. நட்கீரன், விக்கிப்பீடியாவில் சேர்ந்தபின்னும் உருப்படியாக ஒன்றும் எழுதவில்லை என்பதற்கு நாணுகிறேன். நேரம் கிட்டும்போது முயல்கிறேன். ஆனால் எந்த வாக்கும் கொடுப்பதாயில்லை 🙂

 • 12 இலவசக்கொத்தனார் // Apr 25, 2007 at 11:41 am

  செல்வராஜ்,

  வரும் சனியன்று நியூ ஜெர்ஸியில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடக்கிறது. தங்களால் கலந்து கொள்ள இயலுமா?

  http://elavasam.blogspot.com/2007/04/floralia-2007_25.html

 • 13 செல்வராஜ் // Apr 26, 2007 at 9:30 pm

  இலவசக் கொத்தனார், அழைப்பிற்கு நன்றி. ஆனால், என்னால் இச்சமயம் வர இயலாது. பிறிதொரு சமயம் முயல்கிறேன்.

  உங்கள் சந்திப்பு இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்.

 • 14 இரா. செல்வராசு » Blog Archive » அறியவொணாமை => அறியொணாமை // Jan 16, 2013 at 6:04 pm

  […] முருகனே ஒரே இறைவன் என்று சில சமயம் வைத்துக் […]