ஃபோர்ட்ரான் உருவாக்கிய ஜான் பேக்கஸ்
Mar 29th, 2007 by இரா. செல்வராசு
நவீன கணிமைக்கும் அதில் குறிப்பாக மென்பொருள் வளர்ச்சிக்கும் ஒரு பெரிய மைல்கல்லாக இருந்த ஃபோர்ட்ரான் (Fortran) என்னும் கணிமொழியை உருவாக்கிய குழுவின் தலைவர் ஜான் பேக்கஸ் (John Backus), தனது 82ஆவது வயதில் சென்ற வாரத்தில் (மார்ச் 17) மறைந்து போனார்.
ஜாவாவும், சி++உம், சி-ஷார்ப்பும் இன்ன பிற இக்காலக் கணிமொழிகளில் விளையாடும் நிறையப் பேருக்குப் ஃபோர்ட்ரான் என்னும் ஒரு மொழியைத் தெரியாமலே இருக்கலாம். அல்லது பெயரளவில் மட்டும் ‘எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே’ என்னும் தூரத்துச் சொந்தம் மட்டும் இருக்கக் கூடும். ஆனால், 1957ல் ஐ.பி.எம். நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஜான் பேக்கஸின் குழுவினரால் உருவாக்கப் பட்ட ஃபோர்ட்ரான் அந்தக் காலகட்டத்தில் ஒரு அரிய சாதனையாக இருந்திருக்கிறது. இன்றைய கணித்துறையின் மென்பொருள் வளர்ச்சிக்கும், உருவுக்கும் ஒரு வழியும் வடிவும் அமைத்துக் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
அசெம்பிளி மற்றும் இயந்திரமொழிகளிலே நிரல்கள் எழுதிக் கொண்டிருந்த நிரலாளர்கள் தனிக்குழுவாக ஒரு பீடத்தினை உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளனும் அந்தப் பீடாதிபதிகளின் துணை தேவையின்றித் தங்கள் புலனத்தின் நிரல்களைத் தாங்களாகவே எழுதிக் கொள்ளும் இயலுமையைக் கொடுத்தது Formula Translator என்பதன் சுருக்கமான ஃபோர்ட்ரான் மொழி. மனிதனுக்கும் கணினிக்கும் இடையிலான ஒரு பாலமாகச் செயல்பட்ட முதல் உயர்மட்ட மொழியாக (High Level languages) உருவெடுத்தது ஃபோர்ட்ரான்.
தனிப்பட்ட முறையில், எனது கணிமை அனுபவங்கள் உயர்நிலைப்பள்ளி நாட்களில் BASIC என்னும் இன்னொரு எளிய மொழி வழியே ஆரம்பித்தாலும், தீவிரமான பணிகளுக்கும், திறனுக்குமாக அடுத்ததாகப் ஃபோர்ட்ரானில் வந்தே நின்றது. முனைவர் பட்ட ஆய்வுக்காலத்திலும் வேதிச் செலுத்தக் கட்டுறுத்தலுக்கு (chemical process control) செயற்கை நரம்பு வலைகள் (artificial neural networks)(அல்லது செய்யிழைப்பிணையம்?) என்னும் ஆய்வில் நிரல்கள் எழுத முழுக்க முழுக்க இந்த ஃபோர்டிரான் மொழியையே பாவித்திருந்தேன். IMSL போன்ற அதிகணித நிரல்கட்டுக்கள் (numerical routines) ஃபோர்டிரான் மொழியிலேயே தயாராகக் கிடைத்தன.
ஃபோர்ட்ரானும் பல மொழிகளைப் போலவே காலப்போக்கில் வளர்ந்தும் வேறு உருவெடுத்தும் இன்னும் இருந்து வருகிறது. பணியிற்சேர்ந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஃபோர்டிரானில் இருந்து விலகிச் சென்றுவிட்டாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எனது அலுவப்பணி ஒன்றிற்காகச் சிறிது நாட்களுக்கு முன்னர் தான் மீண்டும் ஃபோர்ட்ரானை எடுத்துக் குப்பை தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
வி.எம்.எஸ் (VMS) இயங்குதளமும் வேக்ஸ் (VAX) என்னும் கணினியும் இதனைப் பெரிதும் பயன்படுத்தி வந்தன (டிஜிட்டல் ஃபோர்ட்ரான்). காலப்போக்கில் டிஜிட்டல் நிறுவனம் (Digital Equipment Corporation) காம்ப்பேக்கிடம் (Compaq) விலை போய், காம்பேக் எச்.பி (Hewlett Packard) இடம் விலை போய், நிறுவனங்களே உருத்தெரியாமல் மாறிக் கொண்டிருக்க, அதில் ஒரு சிறு அங்கமான மொழியும் (கம்பைளரும்) என்ன பாடு பட்டிருக்கும்! இருந்தும் இன்றும் ஃபோர்ட்ரான் மொழியும் கம்பைளரும் தனியொரு வடிவத்தில் இண்டெல் (Intel) நிறுவனத்தாரால் வளர்த்தெடுக்கப்படுகிறது. இன்றும் பல பணியிடங்களில் ஃபோர்ட்ரானில் எழுதிய நிரல்கள் தமது சீரிய பணியைச் செய்து கொண்டிருக்கின்றன. பல விண்வெளி ஆய்வாளர்களும், வெதண (weather predictions) ஆய்வாளர்களும் இன்னும் முக்கியமான பணிகளுக்கு இதனைப் பாவித்து வருகின்றனர்.
1969ல் யூனிக்ஸ் மற்றும் C இவற்றின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமான கென் தாம்ப்சனைக் கணித்துறையில் பயின்ற பலரும் அறிந்திருக்கலாம். ஃபோர்ட்ரானைப் பற்றி ஒரு நேர்முகத்தில் கூறும்போது, ‘நிரல் எழுதி வளர்ந்தவர்களில் சுமார் 95 விழுக்காடு ஃபோர்ட்ரானைப் பாவிக்காமல் இருந்திருக்க முடியாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அது கணிமை வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு படி என்று அவரே கூறுவது குறிப்பிடத்தகுந்தது.
இன்றைய VB, C++, .Net போன்ற மொழிகளிலும் நுட்பங்களிலும் இருந்து ஃபோர்ட்ரானைப் பார்ப்பது சற்றுக் கடினமானது தான். இருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் இம்மொழி ஏற்படுத்தித் தந்த வசதிகள் ஏராளம். அதன் முன்பிருந்த அசெம்பிளி நிரல்களை அமைப்பதைக் காட்டிலும் பத்து மடங்காவது முன்னேற்றத்தை இது ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் என்கின்றனர். இன்று வரையான அடுத்தடுத்த வளர்ச்சிகளும் மொழிகளும் சிறிது சிறிது செயல்திறனை அதிகரித்தாலும், ஃபோர்ட்ரான் அளவிற்கு வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை என்றும் சிலர் கருதுகின்றனர்.
இன்றைய வளர்ச்சிகளுக்கெலாம் அடித்தளம் அமைத்துக் கொடுத்த இன்றியமையாத பண்பிற்காக ஃபோர்டிரான் மொழியை அதன் நிறைகுறைகளோடு ஏற்றுக் கொள்ளலாம். அதனை ஏற்படுத்திக் கொடுத்து, தற்காலக் கணிமையின் வளர்ச்சிக்கு உறுதியான பாதை ஏற்படுத்திக் கொடுத்த ஜான் பேக்கஸையும் நினைவு கூர்ந்து ஒரு வணக்கம் சொல்லலாம்.
பதினோராம் வகுப்பு சிலபஸ்ஸில் இருந்தது. 60 பேர் கொண்ட வகுப்புக்கு, மூன்றே கணிணி என்பதால், செயல்முறை விளக்கம் எல்லாம் இல்லாமல், Schaum Series, மற்றும் ஈ.பாலகுருசாமி எழுதிய புஸ்தகத்தில் இருந்து ப்ரோக்ராம் எல்லாம் டப்பா அடித்து, பரீட்சையில் வாந்தி எடுத்தது நினைவுக்கு வருகிறது.
ரொம்ப நாளா ஆளைக் காணோமேன்னு நினைச்சுட்டு இருந்தேன்…
Thanks for coming back to blogworld:))
[…] முதன் முதலாகக் கற்றுக் கொண்ட கணிமொழியின் தந்தை காலமானார். செல்வராஜின் அஞ்சலி. […]
Engineering படித்துக்கொண்டிருந்த போது முதல் முதலாக FORTRAN மொழியில்தான் Program எழுதினேன்.:-)ஆனால் இன்றுவரை இந்த மொழியை உருவாக்கியவரை அறிந்திருக்கவில்லை.
நினைவாஞ்சலிப் பதிவுக்கு மிக்க நன்றி. அன்னாருக்கு என் அஞ்சலிகள்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு
எனும் தமிழ் வேதம் போல், அன்னாரின் உதவியால்தான் இன்று என் வாழ்க்கை ஓடுகிறது. இதை மறக்கவோ மறைக்கவோ முடியாது.
இதையும் கொஞ்ச நாள் படித்தேன்.
நானும் கல்லூரியில் போர்ட்ரான் படித்திருக்கேன்.. மொழியை உருவாக்கியவர் இவர் தான் என்று தெரியாது..
ஃபோர்ட்ரான் முதன்முதலில் கற்றுக் கொள்ள சுலபமான மொழி… ஜான் பேக்கஸுக்காக என் ஆழ்ந்த அனுதாபங்கள்..