இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

எண்ண உருவகங்களும் அன்பே சிவமும்

June 22nd, 2008 · 6 Comments

‘டிரேடர் ஜோ’வில் இருந்து ரெண்டேகால் டாலருக்கு வாங்கிய ‘பஞ்சாபிச் சோலே’வும், வேறு கடையொன்றின் ‘நேச்சுர் வேளி’ ‘டொர்ட்டியா’வில் ரெண்டும் நுண்ணலை அடுப்பில் சூடுபடுத்திக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னமர்ந்து ‘நெட்பிலிக்சில்’ இருந்து வந்திருந்த ‘அன்பே சிவம்’ படத்தைப் போட்டுக் கொண்டு ஆற அமர்ந்திருந்தேன். மனைவி மக்கள் தூர தேசத்தில். தொடர்ந்த ஓட்டத்தின் இடையே இன்று சிறு ஓய்வு.

பாரடைம் (Paradigm) என்னும் சொல்லைச் சில ஆண்டுகள் முன்னர் சிடீவன் கோவியின் பேச்சு ஒன்றின் மூலம் அறிந்து கொண்டேன். அது ஒரு சிந்திக்க வைத்த சொல்லும் பொருளுமாய் இருந்தது. தமிழில் அகரமுதலி ஒன்று அதனை ‘அடுக்குமுறை’ என்று சொன்னது பொருத்தமாகத் தெரியவில்லை. ஒரு பொருளை, நிகழ்வை, இயல்பை, இருத்தலைப் பார்க்கும் எண்ண முறை அல்லது எண்ணப் படிமம் என்று சொல்லலாம். எளிதாய் இதனை உருவகம் என்றே சொல்லலாமோ? இலக்கண உருவகத்தில் இருந்து வேறுபடுத்த எண்ண உருவகம் என்று இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன். பலக்கிய ஒன்றைக் காட்டித் தர எளிதான ஒன்றைக் காட்டிச் சொல்வது வெகு இயல்பாய் மனிதனுக்கு அமைந்து போயிருக்கிறது. பிறர் காட்டுவது தவிர அவரவர் பார்வையுமே அப்படித் தெரிந்த ஒன்றின் மேல் ஏற்றித் தெரியாத ஒன்றைப் புரிந்து கொள்ள முயல்கிறது. வண்ணக் காகிதம் வழியே தோன்றும் காட்சி காகித நிறத்தைப் பொருத்து மாறுவது போலவே ஏற்கும் உருவகத்தைப் பொருத்துச் சிந்தனைகளும் சித்தாந்தங்களும் கூட மாறுபடுகின்றன.

உருவகத்தின் ஊடாக ஒன்றை நாம் பார்க்கும் பார்வை அந்த ஒன்றை வேறுபடுத்திக் காட்டும் என்றால், மெய்யானது என்பது தான் என்ன? உருவகத்திற்கு இந்த ஆற்றல் எங்கிருந்து வந்தது? ‘உருவகத்திற்கு இந்த ஆற்றல்’ என்று நாம் எண்ணும் போதே அந்த உருவகத்திற்கும் ஒரு உருவகத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். உருவகம் என்பது நம் மனதின் பார்வை என்று சொன்னாலும் அதுவும் உருவகம் தானே!

தொடர்ந்த ஓட்டத்திற்கிடையே ஓய்வு என்று நான் சொன்னதும் ஒரு உருவகம் தான். நின்று யோசிக்க வேண்டும் என்கிற தொடர்ச்சியான சிந்தனை அதனில் இருந்து எழுகிறது. அல்லது எதையும் யோசிக்காமல், ஓடாமல், சற்றே ஓய்வாய் இருக்கலாம் என்றும் எண்ண வைக்கிறது. வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் என்று தன் கோணத்தை முன்வைக்கிறது கீதை. அந்தக் கோணத்தில் பார்த்தால் வாழ்க்கையும் அதன் சிக்கல்களும் அதில் வெற்றி பெற வேண்டும் என்கிற இலக்கும், வெற்றியில் களிப்பும், தோல்வியில் வலியுமாக வாழ்க்கை நம் முன்னே விரியும். சில சமயங்களில் அவை நமக்கு உதவலாம். ஆனால் போராட்டமில்லாத வாழ்க்கையை நாம் பெற, வாழ்க்கை என்பது போராட்டம் என்னும் உருவகத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு பயணம் போன்றது என்பதும் இன்னொரு உருவகம் தான். அதன் மேடு பள்ளங்களும், இடையில் சந்திக்கும் பயணிகளும் என்று இவ்வுருவகம் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு இட்டுச் செல்லும். போராட்டம் என்பதை விடப் பயணம் என்கிற பார்வை வேறு தளங்களைக் காட்டும்.

இரு வேறு உருவகங்களுள் ஒன்றை விட ஒன்று மேம்பட்டது என்பதில்லை. அது வேறு இது வேறு. அவ்வளவு தான். இவற்றின் வழியே பார்க்கும் பார்வையும் அடுத்தடுத்து அமைந்து விடும் படிமங்களும் வேறானவை. நம்மை வேறு வகையாய் யோசிக்க வைப்பவை. அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே. ஒன்றைப் புரிந்து கொள்ள உருவகம் உதவுகிறது எனும்போது, அந்த ஒன்றின் உண்மைப் பொருளை எட்ட எல்லா உருவகங்களில் இருந்தும் விடுபட வேண்டுமோ என்பது ஒரு முரணாய்த் தெரிகிறது. ஓட்டமாக, போராட்டமாக, பயணமாக இல்லாத வாழ்க்கையை வாழ்க்கையாக மட்டும் எப்படிப் பார்ப்பது?

போராட்டமே வாழ்க்கை என்பதையும் அன்பே சிவம் தொள்ளாயிரத்துப் பத்து ரூவாய் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்களை வைத்துக் காட்டிவிட்டுச் சிறிதாகக் கம்யூனிசத்தையும் காதலோடு ஒப்பிட்டுக் காட்டிச் செல்வது சுவாரசியமானது. “கம்யூனிசமும் காதலைப் போன்றது தான், ஒரு உணர்ச்சி”.

* * * *

கணினியும், வலையும், இணையமும் ஒரு வகையில் சிறை என்னும் உருவகத்தைச் சில நாளாய் நான் யோசித்து வருகிறேன். வளரும் நுட்பங்களும், வசதிகளும், மனிதனை வசதியாக வாழ வைக்கின்றனவா, இல்லை வேறுபட்ட கட்டுகளுக்குள் சிக்க வைக்கின்றனவா என்பது யோசிக்க வேண்டிய விசயம். பல பட்டி (multiple tabs) வசதிக்குள் ஒன்று மாற்றி ஒன்றாக எழுந்து செல்ல முடியாதபடி நம்மைக் கட்டிப் போட்டு வைப்பதைச் சிறை என்றல்லாமல் எப்படிச் சொல்வது? ஒருவேளை போதை என்று சிலர் சொல்லலாம். இல்லை ‘ஹோல் புட்ஸ்’இல் ஒரு நாள் சந்தித்த வண்ணதாசனைப் படித்த நண்பர் சொன்னது போல் ‘லாகிரி’ என்று வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அந்த லாகிரி நண்பரைச் சந்திக்க வைத்ததும் இதே கணி, வலை, இணையம் என்கிற போது இவற்றை மொத்தமாகச் சிறை என்று ஒதுக்கிவிடவும் முடியவில்லை. ஆக, இங்கும் முரணே மிஞ்சுகிறது.

சிறை அல்ல இவையென்று விளக்கவும், விளங்கிக் கொள்ளவுமே கூடக் கணினியைக் கொஞ்சம் விலகினேன் இன்று. அன்பே சிவம் படத்தால் கூடக் கட்டுண்டு கிடக்க வேண்டாம் என்று இடைவேளையில் நிறுத்தி விட்டு வெளியே களை பறிக்கப் போனேன். களையை வைத்து ஆயிரம் உருவகங்கள் சொல்லலாம் என்னும் சலனத்தைத் தவிர்த்துக் கொள்கிறேன். எந்த உருவகங்களும் இல்லாமல் இரண்டு மணி நேரம் உடலைப் பயின்றுவிட்டு வந்தது நன்றாக இருந்தது. உடல் உழைப்பின் காரணமாய் நன்றாக இருந்தது மனதுக்காயின், உடல் மனம் இணையும் புள்ளி எங்கே என்பதை எப்படி எந்த உருவகத்தைக் கொண்டு பார்ப்பது?

மலைப்பாறையில் விழுந்து நொறுங்கும் பேருந்தில் இருந்து இரவுணவின் போது தொடரச் சொன்ன அன்பே சிவம் தொடர்ந்தது. தசாவதாரக் காலத்தில் அன்பே சிவம் பார்த்தது பற்றி எழுதுகிறானே என்று பார்க்காதீர்கள். சந்திரமுகி காலத்தில் அன்புள்ள ரஜினிகாந்த் பற்றி எழுதிய பெருமை கொண்டவன் நான்!

முன்பொரு காலத்தில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற உருவகத்தை நமக்குத் தந்திருந்த தமிழ்ப்பட உலகில் இன்று நீயும் கடவுள் நானும் கடவுள் நினைத்துப் பார்த்தால் எல்லாரும் கடவுள் என்னும் உருவகத்தை மாற்றிச் சொல்லித் தந்திருக்கிறது அன்பே சிவம். இரண்டு வேறுபட்ட சிந்தனைகள். கட்டின்றிச் செலுத்தப்படும் இயல்பை பொம்மைக்கு ஒத்ததாகக் காட்டி நம் கையில் என்ன இருக்கிறது எல்லாம் ஊழ்வினை தான், கவலைப்படாதே என்னும் ஆறுதலை ஒன்று சொல்லுகிறது. அந்தக் கடவுளையே கூட ஒரு பொம்மை என்று சொல்வதன் மூலம் ஒரு புறம் மேலும் சிந்திக்க வைக்கிறது.

நடப்பவை எல்லாம் அதனதன் விதிப்படியே நடக்கின்றன என்னும் ஊழ்வினையை ஒட்டிய சிந்தனைகள் தமிழ் இலக்கிய வழியே நிறையக் கிடக்கிறது.


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அறிது

என்பது பரவலாய் அறியப்பட்ட ஒரு குறளாய் இருக்கிறது. அன்பே சிவம் அதனை மாற்றி, கடவுள் என்பது வேறு ஒன்றல்ல; அது நீயும், நானும், உனக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கிற அன்பும், நல்ல உள்ளமும் தான் என்னும் வேறொரு உருவகத்தை, சிந்தனையைத் தந்து செல்வதும் நன்றாக இருக்கிறது. தானாய்ச் செலுத்தப்படும் பொம்மைகள் அல்ல, தாமாய்ச் செதுக்கத் தெரிந்த சிற்பிகள் நாம் என்பது இன்னும் கொஞ்சம் சுய சக்தியைத் தருவது போல் இருக்கிறது. எங்கள் வீட்டு நந்திதாவிடம் நீதான் கடவுள் என்று சின்ன வயதில் சொல்லியதைப் புரிந்தும் புரியாமலும் பல நாட்கள் நம்பியிருந்தாள். அல்லது அவளுக்கு என்ன புரிந்திருந்தது புரியாதிருந்தது என்பது எங்களுக்குப் புரியாதிருந்தது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்களே! ஒன்றைப் போன்றே தான் மற்றதையும் சரியாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

கடவுளைப் பற்றிய ஒரு தத்துவத்தையும், மனித நேயத்தையும் ஒரு நல்ல கதையினூடாக, காதலினூடாகச் சொல்லிவிட்டு அன்பே சிவம் ஆடியாடி நடந்தபடி ஒரு நாயுடன் சாலையில் போய்க் கொண்டிருந்தது. மனசு பொங்கிக் கண்களில் வழிந்தது. யாருமற்ற சுதந்திரத்தில் கண்களை மறைக்க வேண்டிய அவசியமின்றி இரண்டு சொட்டுக்களைக் கட்டின்றி வழியக் கூட விட்டு விட்டேன். கடைசி வரி எழுத்தும் வணக்கமும் திரையில் தோன்றும் வரை நிலையாய் இருக்க வைத்துப் ‘பொங்கும்’ மனசும் கூட ஒரு உருவகம் தான்.

யார் யார் சிவம்?
நீ நான் சிவம்!

* * * *

Tags: திரைப்படம் · வாழ்க்கை

6 responses so far ↓

 • 1 முத்துலெட்சுமி // Jun 22, 2008 at 2:02 am

  எனக்கு லேசாக புரிவதற்கே இரண்டுமுறை வாசிக்க வேண்டி வந்தது.. ஆனா நல்லா இருக்கு படிக்க…

 • 2 Sridhar Narayanan // Jun 22, 2008 at 2:14 am

  எப்பொழுதும் கண்களை நிறையச் செய்யும் ஒரு படைப்பு. மெல்லிய நகைச்சுவை இழை படம் முழுவதும் இணைந்து ஓடும்.

  paradigm – அமைப்பு அல்லது கட்டுமானம் என்று கூட கொள்ளலாம் என்று தோன்றுகிறது. பொதுவாக இதை ஒரு adjective-ஆக உபயோகித்து வந்ததால் அர்த்தம் சரியானதுதானா என்று தெரியவில்லை.

 • 3 ராஜ நடராஜன் // Jun 22, 2008 at 3:18 am

  பெரும்பாலும் திரைப்படங்களை சின்னத்திரைகளில் வரும் விளம்பரங்கள் மாதிரி குட்டி குட்டியாகவே பார்த்து பழக்கப்பட்டுப் போன நான் அன்பே சிவம் முதல் முறை காணும்போது கதையோட்டத்தோடும் கமலின் அங்க அசைவுகளோடும் வசனங்களுடனும் மூழ்கி விட்டேன்.மீண்டும் ஒரு முறை காணும்போது வார்த்தைகளின் அர்த்தங்களுக்கு கோனார் உரை தேடினேன்.மீண்டும் ஒருமுறை பார்த்தாலும் புது அர்த்தங்கள் தேடும்படியான எனது மனஓட்டத்திற்கு உகந்த படம்.அப்புறம் மறந்துபோன வார்த்தைகளுடன் புதுவார்த்தைகள் கற்றுக் கொள்ளவாவது உங்கள் எழுத்துக்களை பார்வையிட வேண்டும்.

 • 4 DJ // Jun 22, 2008 at 11:24 am

  தசாவதராக் காலத்தில் அன்பே சிவம் பார்ப்பதைக்கூட பரபரப்பாக ஓடாமல் ஆறுதலாக வாழ்க்கையை இரசிப்பவர் என்ற அர்த்தத்தில் கூட எடுத்துக்கொள்ளலாம் :-).
  ….
  /சிறை அல்ல இவையென்று விளக்கவும், விளங்கிக் கொள்ளவுமே கூடக் கணினியைக் கொஞ்சம் விலகினேன் /
  இதை எனக்கும் அவசியமானதொன்றாக பரீட்சித்துப்ப்பார்க்க விருப்பம், ஆகக்குறைந்தது இந்தக்கோடைகாலத்திலாவது.

 • 5 செல்வராஜ் // Jun 22, 2008 at 9:42 pm

  முத்துலெட்சுமி, நன்றி. இன்னும் கொஞ்சம் எளிமையாச் சொல்ல முயன்றிருக்கலாம் தான். (நானே நிறைய முறை படிக்க வேண்டியிருந்தது:-) ).
  ஸ்ரீதர் நாராயணன், பாரடைம்க்குப் பிற சொற்கள் குறித்து நன்றி. சரியானது இன்னும் பிடிபடவில்லை.
  ராஜ நடராஜன், டிசே, உங்களுக்கும் உங்கள் அன்புக்கும் நன்றி. 🙂

 • 6 tamilpaiyan // Jul 5, 2008 at 2:59 pm

  உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்