இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

‘யாரோ’ மினுச்சின்

June 3rd, 2008 · 7 Comments

சால்வடோர் மினுச்சின்னைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? காரணமில்லாமல் எனக்கு அவரை மினுச்சுக்கின் என்று கூப்பிடவேண்டும் போலிருக்கிறது. அரைகுறையாய்ப் படித்த வாரயிறுதி நூலகப் புத்தகம் ஒன்றில் அவர் சொன்னதாய் ஒன்றைப் படித்தேன். யார் அவரென்று பெரிதாய் விவரம் இல்லை என்பதால் அவரை ‘யாரோ’ என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அல்லது, விக்கிப்பீடியா கூகுள் என்று தேடி அலையலாம். இப்போதைக்கு அது முக்கியமில்லை. அவர் சொன்னதாய்ப் படித்தது இது தான்:

man+woman

“எல்லாத் திருமணங்களுமே தவறானவை தான். பிறகு அந்தத் தவற்றைச் சரி செய்து கொள்ளும் முயற்சியில் காலம் பூராவும் ஈடுபடுகிறோம். என்ன? அந்த முயற்சியில் ஒரு சிலர் மற்றவர்களை விட அதிக வெற்றி பெறுகிறோம்!”

பத்துப் பன்னிரு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று உங்கள் நல்லியல்/கருத்தியல்/ideal நிலையினரைக் கேட்டுப் பார்த்தீர்களென்றால், “சே சே” என்று இதனை ஒத்துக்கொள்ளாது சென்று விடுவீர்கள். இப்போது தான் திருமணம் செய்துகொண்டு வசந்த வனத்தில் மிதந்து கொண்டிருப்போர்க்கும், இன்னும் மணமாகாது கண்களில் நெஞ்சினில் கனவுகளும் கனல்களுமாய் இருப்பவர்களுக்கும் கூட இது வேறு உலகமாயிருக்கும்.

காலச் சக்கரம் மெல்ல உருண்டு ஆண்டுகளை நகர்த்தும் போது, நீள்வார இறுதிகளில் சந்தித்துக் கொள்ளும் நண்பர் உறவினர்களிடத்தே எழும் பேச்சில், “எல்லார் வீட்டிலும் இதே சண்டை தாங்க” என்று எல்லாச் சண்டைகளுக்கும் துணை தேடும்போது மினுச்சின் கூற்று யாரோவானாலும் ஒரு ஆறுதலைத் தரத் தான் செய்யும். இந்தக் காட்டில் நாம் மட்டும் தனியில்லை என்பது சுகமான உணர்வு.

உறவுநிலை அறிவியல் என்று எந்தப் பள்ளி, கல்லூரியிலும் சொல்லித் தரப் படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, அப்படி ஒரு அறிவை அனுபவப் பள்ளியன்றி வேறு எங்கேனும் சொல்லித் தந்துவிடவும் தான் முடியுமா என்று மறுபுறம் எதிர்ப்பு எழுகிறது.

இந்த வகையில் ஒரு கூற்றும் அதன் எதிர்கூற்றும் எல்லா விசயங்களிலும் சமநிலைக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை, “நான் சொல்றதுக்கு எப்பவுமே ஏட்டிக்குப் போட்டியாத் தான் சொல்லுவா(ரு)” என்று குறைபட்டுக் கொள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் சொல்வதை மறுவர் (மற்றவர்) எந்தக் கேள்வியும் இன்றி எதிர்ப்பும் இன்றி எல்லாச் சமயத்திலும் ஏற்றுக் கொள்வாராயின் அந்த உறவு வெகுகாலம் ஆரோக்கியமாய் இருக்க முடியாது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் என்பது எல்லாச் சமயங்களிலும் ஒற்றைத் திசையினதாக இருந்தால் அது ஒருவர் விட்டுக்கொடுத்தல் என்பதாகும். அச்சமயத்திற்குச் சண்டையின்றிப் போகும் என்றாலும், அங்கு ஒருவருக்கொருவர் என்பதின்றி ஒருவர் என்பது மட்டுமே நிற்கும். ஒருவருமே விட்டுக்கொடுக்காமல் முறுக்கிக் கொண்டு கிடந்தாலும் உள்ளங்கள் முறிந்து தான் போகும். சுட்ட முறுக்கு வளையாது. உடையத் தான் செய்யும்.

7 best things happy couples do “சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டைங்க”, என்று சலிப்படையாதீர்கள். அந்தச் சின்னச் சின்ன விசயங்கள் வழியே தான் அன்பு பரவும். சண்டை மட்டும் தான் வாழ்க்கையெனில் நல்லதில்லை தான். எல்லோருமே எல்லா விசயங்களிலும் ஒன்றேபோல் யோசிப்பதில்லை. ஒற்றுமையாய் இருக்கும் விசயங்கள் ஆச்சரியத்தையும் மகிழ்வையும் தந்தாலும், வேற்றுமைகளும் முக்கியமே. ஆட்களை வெறுக்காமல் வேற்றுமைகளை ஆள முடிவதில் தான் மினுச்சின் சொன்ன வெற்றிபெற்றோர் பட்டியலில் இடம் பெறும் இயலுமை இருக்கிறது.

முழுச்சார்பும் இன்றி முழுச்சார்பற்ற நிலையும் இன்றி இடைச்சார்பு உடையோராய் இருத்தல் நலம் என்று சுயமுன்னேற்றப் புத்தகக்காரர்கள் எல்லோரும் சொல்கிறார்கள். சார்பும் சார்பறு நிலையும் அளக்கும் மானி கிடைத்தால் பரவாயில்லை. அளந்து கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். எந்தவொரு தீவிர நிலைப்பாட்டையும் எடுக்காமல், விவேகத்துடன் அணுகி இடைநிலையில் இருக்க முடிந்தால் வாழ்வில் சமநிலை கிட்டலாம். சில சமயம்.

“மதிய உணவிற்குச் சந்திப்போமா” என்று ஆரம்பித்த பேச்சு, மதியம், மாலை என்று மாறி, இந்தக் கடை எந்தக் கடை என்று பேசிக் கடைசியில் “எங்கயும் வேண்டாம்போ” என்று பழையதைச் சாப்பிடப் போனது குறித்துப் பிறகு, எல்லாம் உன்னால, இல்ல என்னால என்று வாதித்துக் கொண்டிருக்கையில் சின்னப் பொண்ணுகள் ரெண்டு எட்டிப் பார்த்து,

“அம்மா… அப்பா… ஒரு நிமிசம். இன்னிக்கு இல்லாட்டிப் பரவாயில்ல. எல்லாரும் நாளைக்குப் போயிக்கலாம். இதுக்குப் போயி ஏன் சண்டை போடுறீங்க?” என்று அறிவு கூறுவதில் முடிந்தது. மறுபேச்சுப் பேச முடியவில்லை.

சரி. இன்றில்லையெனில் நாளை. விடியத்தானே வேண்டும். இடையில் சால்வடோர் மினுச்சின் பற்றித் தேட வேண்டும்.

Tags: வாழ்க்கை

7 responses so far ↓

  • 1 முத்துலெட்சுமி // Jun 4, 2008 at 12:36 am

    🙂 நடப்பது தாங்க.. ( பக்கத்துவீட்டுலயும் கரெண்ட் இல்லன்னா அப்பாடான்னு உக்காரமாட்டமா நாம ஊரில் அது மாதிரி தான்)
    வாக்குவாதம் நீளூம்போது ( சண்டையில்லையாம் அது ) முகம் சுருங்கும் குழந்தைக்கு .. இங்க பாரு நீயும் உன் ப்ரண்டும் வீடு விளையாடும் போது சண்டை வரதில்லையா.. ஒரு மணி நேரம் விளையாடும் உங்களூக்கே சண்டைன்னா.. அது மாதிரி தான்.. நான் வந்து உன் சண்டையை சமாதனப்படுத்தறதில்லையா. அப்படி எதாவது சொல்லேன்னு சொல்லி வச்சு .. இப்ப.. அவ தான் ஜட்ஜ்… 🙂

  • 2 கலை // Jun 4, 2008 at 5:48 am

    நல்ல, பயனுள்ள கட்டுரை.
    //இங்க பாரு நீயும் உன் ப்ரண்டும் வீடு விளையாடும் போது சண்டை வரதில்லையா.. ஒரு மணி நேரம் விளையாடும் உங்களூக்கே சண்டைன்னா.. அது மாதிரி தான்.. நான் வந்து உன் சண்டையை சமாதனப்படுத்தறதில்லையா. அப்படி எதாவது சொல்லேன்னு சொல்லி வச்சு .. இப்ப.. அவ தான் ஜட்ஜ்… //
    இதுதான் ரொம்ப நல்லா இருக்கு. 🙂

  • 3 Nithya // Jun 4, 2008 at 9:30 am

    Congratulations! I was thinking about you and yours yesterday.

  • 4 செல்வராஜ் // Jun 4, 2008 at 8:44 pm

    முத்துலெட்சுமி, கலை, நித்யா, நன்றி.

    உங்க வீட்டுக் கதையும் ரொம்ப நல்லா இருக்கு முத்துலெட்சுமி 🙂

  • 5 Ag // Jun 5, 2008 at 7:23 am

    மண நாள் வாழ்த்துக்கள் !
    ..Ag

  • 6 ராஜ நடராஜன் // Jun 5, 2008 at 8:17 am

    இப்பத்தான் ஒரு டிப்ஸ் என்ற பதிவின் உளவியல் பின்னூட்டம் சண்டை பார்த்து இங்கே வந்தேன். சல்வடோர் மினுச்சின் புதிய தகவல் எனக்குப் புதிது.ஆனால் வீட்டுக்காரியின் குட்டிச் சண்டைகள் பழையதும் பழக்கப்பட்டு போனதும்.

  • 7 செல்வராஜ் // Jun 7, 2008 at 9:56 am

    Ag, ராஜ நடராஜன், இருவருக்கும் நன்றி.