Feed on
Posts
Comments

பொருள் தேடி வேற்றூர் சென்ற தலைவன் கார்காலம் கழித்து வருவதாய்ச் சொன்னானே, இன்னும் வரவில்லையே என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த தமிழ்ப்பெண்ணைத் தலைவியாய் வைத்துப் பாடிய சங்கப் பாடல்கள் ஆயிரங்காலத்துக்கும் முன்புண்டு தமிழ் மரபில்.

இன்னும் ஏன் அவன் வரவில்லை, வரும் வழியில் அவனை ஏதேனும் கொடிய மிருகம் கொன்றிருக்குமோ, காட்டில் தொலைந்தானோ, மேகத்துள் மறைந்த கதிரவனால் இரவு என்று நினைத்திருப்பானோ, வேறு பெண்ணைச் சந்தித்திருப்பானோ, இன்னும் ஏதேதோ கற்பனைகள் அவளை வாட்டும். தோழியரும் செவிலித் தாயாரும் ஆறுதல் சொல்லியும் பயனின்றி அவள் மேனி இளைக்கும். படர்கின்ற பசலையின் காரணமாய்த் துவண்டு இளைக்கும் அவளின் இடையை அழகு செய்யும் அணிகள் கழண்டு விழுந்து சிதறும்…

தற்காலிகமாய் வெளியூரில் இருக்கிற என்னைப் பார்த்துக் கூடச் சிலர் இளைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்! அது பசலையாய்த் தான் இருக்க வேண்டும். நல்ல சாப்பாட்டுக்குத் திண்டாட்டத்தினால் என்று நீங்கள் தவறாக எண்ணிவிடக் கூடாது. பசலை இன்னும் கொஞ்சம் பரவினால் கூடத் தேவலை. வஞ்சனையின்றி உண்டுகொழுத்த வயிற்றுத் தொப்பையாவது சுருங்கும்!
Continue Reading »

என் அம்மாவிடமும் அப்பாவிடமும் இருக்கிறது. அப்பச்சியிடமும் அம்மாயியிடமும் இருந்தது. நான் சிறுவனாய் இருந்த போதே இறந்து போன அப்பத்தாவிடமும், தான் சிறுவனாய் இருந்த போது இறந்து போன தன் தந்தை, என் தாத்தனிடமும் கூட இருந்திருக்கும், யார் கண்டது? குடும்ப வரலாற்றில் அதற்கு முன்னர் வேர் பிடித்துச் சென்று பார்க்கத் தரவுகள் இல்லை.

வழி வழியாய் என் மூதாதையருக்குக் கிடைத்த தலைமுறைச் சீதனம் – அது எனக்கும் கிடைத்திருக்கக் கூடிய அலுக்கம் ஓரிரு முறை இருந்த போதும் இன்னும் கிட்டவில்லை. ஒவ்வொரு வருடமும் கணக்குப் பார்க்கும் போது எனக்கும் ஒரு நாள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாய் ஆரூடம் சொல்கிறார்கள். ஆனால், எப்போது வரும் அந்நாள் என்று ஏங்கி இருக்கும் ஒன்றல்ல இது. எதுவரை தள்ளிப் போட முடியும்; எப்படியும் பெறாமல் இருக்க முடியுமா என்பதற்காக அதி முயற்சிகள் மேற்கொள்ள வைக்கிற இந்தச் சொத்திற்குச் “சர்க்கரை” என்றொரு செல்லப் பெயர் கூட உண்டு. “நீரிழிவு” (Diabetes) என்பது இதன் பெயர்.

(c) nutriweb.org.myசர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு. (இதை நோய் என்பதை விட ஒருவித உடல்நிலை என்றும் கூறலாம்). இரண்டு வகையும் ‘இன்சுலின்’ என்னும் ஒரு சுரப்பியைச் சம்பந்தப்பட்டதே. நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் சர்க்கரையை (குளுக்கோஸ்) உடைத்து உடலின் ‘செல்’களுக்குச் சக்தியாக மாற்றித் தரும் வேலையைச் செய்வது இந்த இன்சுலின் என்னும் சுரப்பி தான். எல்லோருக்கும் உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் இன்சுலின் சிலருடைய உடம்பில் உற்பத்தியாகாமல் நின்றுபோவது முதல் வகை. சிலருக்கு மட்டுமே இது காரணமாய் இருக்கும்.

பரவலாக, எண்பது சதவீதத்தினருக்கு மேலாக அமைவது இரண்டாவது வகைச் சர்க்கரை நோயே. உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தியாகாததாலோ, உண்டான இன்சுலின் வீரியமின்றிச் சரியாக வேலை செய்யாததாலோ இது ஏற்படலாம். இதன் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவு குறையாமல் அதிக அளவிலேயே இருக்குமென்பதால், உடலுக்குப் போதுமான சக்தி கிடைக்காத அயர்வு உண்டாவதோடு, கண்கள், நரம்புகள், சிறுநீரகம், இதயம் போன்ற உடலின் பிற பகுதிகள் பழுதுபடும் சாத்தியங்களும் அதிகம்.

சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலமும் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். பின்னாளில் இன்சுலின் ஊசி தேவைப்படலாம் என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் மாத்திரைகள் மட்டுமே கூடப் போதும்.

* * * *

“சிந்தாமணில போயி இந்த மாத்திர வாங்கீட்டு வாப்பா. அங்க தான் வெல கொறவா இருக்கும்” என்னும் வேண்டுகோளை ஏற்றுக் குருமூர்த்தி டாக்டர் எழுதிக் கொடுத்த சீட்டை எடுத்துக் கொண்டு ‘கடவீதி’யில் இருக்கும் சிறப்பு அங்காடிக்குச் செல்வேன். அரசுசார் நிறுவனம் என்பதால் அங்கு விற்பனை வரி இருக்காது. சில சமயம் சிந்தாமணியில் பற்றாக்குறை என்றால் அடுத்த தெருவின் ‘காவேரி மெடிக்கல்ஸ்’ பாய் கண்டிப்பாக வைத்திருப்பார்.
Continue Reading »

D2 Practising Cartoons

‘புதையல் வேட்டை’ என்று சில சமயம் நிவேதிதா எங்களுக்கு சவால் விடுப்பதுண்டு. இன்னும் சிலசமயம் சங்கேத மொழியில் ஏதேனும் எழுதிக் கண்டுபிடிக்கச் சொல்வதுண்டு. சுவாரசியமாகவும் சிலசமயம் சவாலாகவும் சிலசமயம் வியப்பாகவும் இருக்கிறது.

“எங்கிருந்துடா இதெல்லாம் கத்துக்கற?”

“நான் நிறைய மிஸ்டரி புக்ஸ் படிப்பேன் அப்பா!”

பலசமயம் சில துப்புக்கள் கொடுத்து வேலையை இலகுவாக்குவாள். கீழிருப்பது என்னவோ கிழக்கு ஐரோப்பிய மொழி போன்று என்னை நன்கு விழிக்க (முழிக்க 🙂 ) வைத்துவிட்டது.

D2 Cryptic Code

ஊஹும் தலைகீழாக நின்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவள் கொடுத்த துப்பு ஒன்றை வைத்துக் கொண்டு தலைகீழாக நின்று கண்டுபிடித்தேன். ஒருவேளை ‘ஐஸ் கிரீம்’ கொடுக்கிறேன் என்று ‘நைஸ்’ பிடித்தால் நேரடியாகச் சொல்லி விடுவாளாய் இருக்கும்.

Nandhitha, June 2006“ஏனோ எந்தக் காரணமும் இன்றி நான் இன்று மகிழ்வாக உணர்கிறேன் அப்பா”, என்றாள் நந்திதா, ஆங்கிலத்தில். (Somehow, for no reason, I feel very happy today appaa!). சின்னவளின் இந்தச் சந்தோஷத்திற்கு என்ன காரணம் என்று எனக்கும் புரியவில்லை. பெரியவள் நிவேதிதா இதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் தன்பாட்டுக்குப் பல்துலக்கிக் கொண்டிருந்தாள். ஆறு மணிக்குக் கடிகாரச் சத்தம் வைத்துத் தாமாக எழுந்து ஆர்வத்துடன் அவர்கள் நாளைத் தொடங்குவதே ஒரு நிறைவான விஷயம்.

பின்னிரவின் இணைய உலா முடிந்து சற்று நேரங்கழித்தே உறங்கச் செல்லும் நான் பெரும்பாலும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் அது 🙂 !

“நான் நந்துவா, தித்துவா, சொல்லுங்க பார்ப்போம்?”

கண் விழிக்காது படுக்கையில் இருந்த என்னிடம் விளையாடிக் கொண்டிருந்தாள் நந்திதா. பெரியவளுக்குத் தன் பெயரை ‘நிவேதிதா’ என்று சொல்லிக் கொடுத்த ஒன்று ஒன்றரை வயதில் அவள் ‘நிவே’வை விட்டுவிட்டு ‘திதா’ என்று மட்டும் சொல்ல முடிந்ததை வைத்து, அவளுடைய வீட்டுப் பெயர் செல்லமாய் ‘தித்து’ என்றாகி விட்டது. அது புரிந்தும் புரியாமலும் ‘நித்து’, ‘நீத்தா’ என்றும் அழைப்பவர்கள் உண்டு. ‘நிவி’ என்றும் சிலர் அழைக்க, இந்த வம்பே வேண்டாம் என்று பள்ளியில் ‘நிலா’ என்று இன்னுமொரு பட்டப்பெயர் சூட்டிக் கொண்ட இவளுக்குப் பின்னாளில் பெயரின் பின்னணிக் கதையென்று சொல்ல நிறைய இருக்கும்.

‘நிலா’ என்பது பிறக்கும் முன் இவளுக்கு வைக்க நாங்கள் பரிசீலித்திருந்த ஒரு பெயர் தான். முதற்பெண் பெயர் வைக்கும் நிகழ்வுகளை மட்டும் வைத்துத் தனியாக ஒரு கதை எழுதலாம். என்ன பெயர் இருந்தால் என்ன? இவள் இவளாகத் தான் இருந்திருப்பாள். பெயரில் என்ன அதே ரோஜா ஷேக்ஸ்பியர்.

தம் புல்வெளியில் களைபிடுங்கிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு மேரி-ஆன் இடம் ஒரு நாள் ‘இனியும் பொறுப்பதில்லை’ என்றாற்போல் வேகமாகச் சென்ற நந்திதா, “என் அக்கா பெயர் நீத்தா இல்லை, அவளை நிலா என்று கூப்பிடுங்கள்”, என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வந்து விட்டாள்.

“நீ நந்து… இல்லையில்லை… ம்ம்… தித்து… சரியா?”

கண்விழிக்காமல் பதில் சொல்லியபடி நானும் விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். உறக்கம் கலைந்திருந்தாலும் சிலசமயம் நான் இன்னும் உறங்குவதாகப் பாவனை செய்வதுண்டு. குறிப்பாகச் சின்னவளிடம்! வீட்டிலேயே சிறியவளாய் இருப்பதாலா என்னவோ, எதிலும் தான் கடைசி என்றால் இவளுக்குப் பிடிப்பதில்லை. கடைசி ஆளாகத் தான் எழுந்தாளென்றால் சுமார் இரண்டு மணி நேரமாவது விசும்பிக் கொண்டிருப்பாள் என்பது உறுதி. இவளது இன்றைய மகிழ்விற்கு அவள் முதலில் எழுந்து கொண்டது கூடக் காரணமாய் இருக்கலாம். தெரியவில்லை. எழுந்து கொள்ளும் நேரம் எதுவானாலும் நந்துவிற்கு என்னைக் கட்டிக் கொண்டு ஓரிரு நிமிடமாவது இருக்க வேண்டும்.
Continue Reading »

குவிவிளக்கின் ஒளிப்பாய்வில் பளபளக்கும் பட்டுடுத்தி, மையிட்ட கண்ணுள்ளே கருவிழிகள் மிளிர்ந்தாட, கருங்கூந்தல் பெருஞ்சடையில் ஞெகிழ்கனகு மல்லியொளிர, அபிநயக்கும் செங்கரங்கள் பேசுமொரு பொன்மொழியால்,

“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு”

என்றே நம் தமிழ்ச் சிறுமியர் சிலர் ஆடிய நல்லாட்டத்தில் எனை மறந்திருந்தேன் ஒருநாள். சென்ற மாதத்துச் சுதந்திர விழவின் அமெரிக்க நிகழ்வொன்றில்.

“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு”

என்று தொடர்ந்த வரிகளை, கூடியிருந்த ‘இந்திய’ மக்களின் வெவ்வேறு பின்புலத்தை வைத்து, ஏற்றுக் கொள்ள எண்ணினாலும், ஒன்றான தேசத்தில், சுதந்திரத் திருநாட்டில் ‘நாம் எல்லோரும் சமம்’ என்பது உறுதியான ஒன்றுதானா என்று கேள்விகளை எழுப்பி மனம் வேறு திக்கில் பாய்ந்தது. பல கேள்விகளை எழுப்பியது.

‘நான் இந்நாட்டினன்’ என்னும் தேசப்பற்று என்பது வேறு. கண்மூடித்தனமான தேசபக்தி என்பது வேறு. கடவுள்களின் புனிதங்களையே ஆய்வுக்கு உள்ளாக்கும் போது, தேசம் தேசபக்தி இவற்றின் புனிதம் மட்டும் போற்றிக் காக்கப்படவேண்டியதன் தேவை என்ன என்று கேள்வி எழுகிறது. புனிதம் என்று போற்றப்படுபவை எல்லாம் ஏதோ ஒரு வகையில் சமமற்ற ஏற்றத் தாழ்வுகளைப் பேணிக் காக்கவே ஆக்கிவைக்கப் பட்டிருக்கலாம் என்று எண்ணம் எழுகிறது. ஓர்ந்து பார்த்தால் புனிதங்களின் போர்வையில் ஒரு சாராரின் தன்னலத்திற்கு வழிவகுப்பதான அரசியல் ஒளிந்திருப்பதை ஏராளம் காணலாம்.
Continue Reading »

« Newer Posts - Older Posts »