Feed on
Posts
Comments

ராக்சுபரி தத்துவம் (தமிழில்: செல்வராஜ்)

  • ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமாகவும், தம் திறமைகளில், ஆர்வங்களில், அனுபவத்தில் ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபட்டவர்களாகவும் இருக்கலாம்.
  • குழந்தைகளின் தொடர் வளர்ச்சிக்கு அவர்களுக்கென்று தேவைகள் இருக்கின்றன என்பது இனங்கண்டு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இத்தேவைகளுள் உடல் நலத்திற்கானதும், அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை, வெற்றி, சக வகுப்பினரினதும் ஆசிரியர்களினதுமான கவனிப்பு எல்லாம் அடக்கம்.

D2 Medal

  • குழந்தைகளின் நல் மனநலத்திற்கும், அவர்களுக்கு ஒரு சாதனையுணர்ச்சியை உண்டாக்குவதற்கும் சாதகமான ஒரு கட்டமைப்பு அவசியம்.
  • பல குழந்தைகளுள் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான குறிக்கோள்களை எய்துவதற்கு வெவ்வேறு காலகட்டம் ஆகலாம்.
  • குழந்தைகள் பாராட்டுரைக்கும் ஊக்குவிப்புக்கும் சரியான முறையில் தூண்டப் பெறுவர்.

D2 Cartwheel

  • ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொதிவான கற்கும் சூழலில் சுயவளர்ச்சியனுபவம் பெறவேண்டும். அச்சூழல் கலை, இசை, இலக்கியம், விளையாட்டு, உடல்நலக் கல்வி இவற்றின் வெளிப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு குழந்தைக்கும் மக்களாட்சியில் தனது குடியுரிமைக்கான பொறுப்புணர்ச்சியும், உரிமைகளும், தனது குமுகாயம், தேயம், உலகம் பற்றிய பெரும் புரிந்துணர்வும் தேவை.

N2 Art

  • குழந்தைகள் தம்மைத் தாமே நன்கு புரிந்து கொள்ளவும், பிற குழந்தைகளுடனும் பெரியவர்களுடனுமான தமது உறவையும் நன்கு புரிந்து கொள்ளவும் ஊக்குவிக்கப் பட வேண்டும்.

* * * *
இது எங்கள் புறநகர்ப் பகுதியின் நான்கு ஆரம்பப் பள்ளிகளில் ஒன்றான ‘ராக்சுபரி’யின் மாணவர் கையேட்டில் (Roxbury Philosophy என்று) இருக்கும் ஒரு பக்கத்தின் தமிழாக்கம்.

தலைவாரிப் புதுத்துணி அணிந்து, தோட்பை சுமந்து, புன்னகையோடு தன் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்ற வாரம் முதல் செல்ல ஆரம்பித்திருக்கிறார் என் சின்ன மகள்.

Bus to School

முதல்நாள் வழியனுப்பச் சென்ற என்னிடம் கையசைத்து ஏறும் முன் அவர் சொன்னது:
“‘I am so excited, I am not even scared appaa!”

Story of Vegenie வெஜினி அங்க்கிள் -நிவேதிதா
(தமிழில்: செல்வராஜ்)

முன்ன ஒரு காலத்தில ஒரு குட்டிபூதம் இருந்துச்சாம். அது எப்பப் பாத்தாலும் காய்கறில்லாம் சாப்பிட மாட்டேன்னு அடம் புடிச்சுட்டே இருக்குமாம்.

அவுங்கம்மா அதுக்கிட்ட, “சாப்பிடுரா செல்லம். காய்கறில்லாம் உன் உடம்புக்கு ரொம்ப நல்லது” ன்னு சொன்னாங்களாம்.

அறிவுக்குறும்பு பண்றதுக்கு ரொம்பப் புடிச்ச குட்டிபூதம் ஒரு ‘ஜீபூம்பா’ போட்டுத் தன்னயே மொத்தமா காய்கறிகளா மாத்திக்கிச்சாம்.

“ஆமாம்மா! காய்கறில்லாம் என் உடம்புக்கு நல்லாத் தான் இருக்கு” 🙂 🙂

ஒரு குட்டிபூதம் (ஜீனி) காய்கறிபூதம் (வெஜினி) ஆன கதை இது தான்!

Vegenie

பி.கு.:

1. எங்களின் புறநகர்ப்பகுதியின் வேனிற்திருவிழாவில் ‘வெஜ்ஜி மான்ஸ்டர்’ போட்டியில் முதல் பரிசு பெற்ற படைப்பு. ஆக்கம்: நிவேதிதா (உதவி: நந்திதா)

Vegenie

2. பயன்படுத்தப் பட்டவை:

  • முடி: ஒருவகை அவரை, ‘Indian Store’ Beans
  • தலை: பாகற்காய், Bitter Gourd
  • முகம்: முட்டைக் கோசு, Cabbage
  • கண்: வெள்ளரிக்காய், Cucumber
  • கருவிழி: ப்ளூபெர்ரீ, Blueberry
  • காது/கொம்பு: ப்ராக்களி, Broccoli
  • மூக்கு: ??, Tindora
  • வாய்: சிகப்பு வெங்காயம், Red Onion
  • கால்கள்: ப்ராக்களித் தண்டு, Broccoli (Stem)

Vegenie

3. பல காய்கறிகளும், அவற்றின் தமிழ்-ஆங்கிலப் பெயர்களும், அவை குறித்த ‘சுவை’யான ( 🙂 ) உரையாடலுக்கும் இராம.கியின் காய்கறிகளும் கலப்பு வழக்கமும் பார்க்க.

4. காலிஃபிளவருக்குப் பூக்கோசு என்றால் ப்ராக்களிக்கு என்ன? பச்சைப்பூக்கோசு? :-). Berry=? Tindora=வாய்ப்பே இல்லை!

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வாசம் உண்டு. அது, வாழுகின்ற மண்ணின் வாசமா, கண்ணிற்படுகிற காட்சிகளின் தொகுப்பா, காட்சிமாந்தர் எழுப்பும் ஒலிக்கோவையா, நாவூறக்கிட்டும் தனிப்பட்ட சுவையா, அல்லது இவையெல்லாம் கலந்த ஏதோ ஒரு உணர்வா? திருநெல்வேலியின் பாளையங்கோட்டையாக இருந்தாலும் சரி, ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் என்று நகரம் பேரூர் சிற்றூர் கிராமம் எதுவானாலும் சரி, சிறு பொழுதேனும் தன்நிலை மறந்து திளைக்க வைக்கிற வாசம் எல்லா ஊருக்கும் உண்டு. குடிக்கிற தண்ணீருக்கு அலைந்தவனாகவோ கொளுத்துகிற வெய்யலின் சூடு தாங்காமல் வாளிநீரினுள் காலை வைத்து ஆற்றிக் கொண்டவனாகவோ இருந்தாலும் அந்த வாசத்தை நுகர்ந்தவனிடத்திற்போய் ‘மோசமான ஊர்’ என்று சொல்லி ஒப்புக்கொள்ள வைப்பதென்பது இயலாத ஒன்று.

ஓய்வாய் ஒரு பொழுது கண்களை மூடியமர்ந்து நீள்மூச்சை உள்ளே இழுக்கையில், காற்றோடு உள்நுழையும் நினைவலைகள் சில உங்கள் நெஞ்சம் விரித்து நிறைவை ஊட்டுகின்றவெனில் அப்படி ஏதோ ஒரு ஊர் உங்கள் மனதையும் தைத்திருக்கிறது என்று பொருள். அந்த ஊரின் வாசத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள், சுவாசித்திருக்கிறீர்கள் என்று பொருள். அது உங்களின் நாளங்களிலும் படிந்திருக்கக்கூடும்.

Anna University, 1991

Continue Reading »

கூறு கூறாய் வெட்டி வைத்திருந்த சாக்லெட்-ஜுக்கினி-கேக்கை முன்வைத்துக் கூட்டம் ஆரம்பித்தது. கலந்து கொண்டது என்னவோ நான்கு பேர் தான். சிறு கையை மேலே தூக்கிப் பெரியவர், “நான் இந்தக் கூட்டம் தொடங்கியது என்று அறிவிக்கிறேன்” என்று ஒரு பூரிப்போடு தொடங்கி வைத்தார். அதற்குள் ஆளுக்கு மூன்று துண்டு கேக் உள்ளே போயிருந்தது. இது மாதிரி கேக் சாப்பிடக் காப்பியும் வேண்டுமே என்று என்றுமில்லாத திருநாளாய் அரைக் கோப்பைக் காப்பியும் கையுமாக நானும் உட்கார்ந்திருந்தேன்.

பெரிதாய் ஒன்றுமில்லை. வேனிற்கால விடுப்பு முடிந்து அடுத்த வாரம் ஆரம்பிக்க இருக்கிற பள்ளியும் அதனையொட்டிய வாழ்வியல் மாறுபாடுகளும் குறித்து விவாதிக்கக் கூட்டப்பட்ட குடும்பக் கூட்டம் தான். இது போன்ற குடும்பக் கூட்டங்கள் அவசியம் என்று பலகாலமாய் மனைவி சொல்லி வந்தாலும், இதுவரை மசிந்து கொடுக்காதவர்கள் இன்று செவி சாய்த்து விட்டோம்.

கூட்டியவர் ஆரம்பிக்கட்டும் என்று நான் மனைவியை நோக்க, நேரடியாக நிகழ்ப்பிற்குள் (agenda) சென்றார். “ஒரு நிமிடம்… ஒரு முன்னுரையாற்றாமல் எப்படி?”, என்று நான் கேட்க, “ஏன் நீங்களே ஆற்றுங்களேன்!” என்று சொன்னதை ஏற்றுக் கொண்டேன். 🙂

“வணக்கம். இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்தமைக்கு எல்லோர்க்கும் நன்றி. இவ்வருட வேனிற்காலத்தை இனிதே கழித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது…”
Continue Reading »

சுருக்கமாகச் சொல்கிறேன். அண்மையில் வலைப்பதிவுகளில் வெளிவரும் பதிவுகள் சிலவும், பின்னூட்டங்கள் சிலவும், அவற்றோடு இணைத்து விமர்சிக்கப்படும் தமிழ்மண நிர்வாகமும், அயர்வைத் தந்தாலும், எனது முடிவிற்குக் முழுமையான காரணங்கள் அவையல்ல.

காசியின் வேண்டுகோளின் பேரில் தமிழ்மணம் ஆரம்பம் முதல் இணை நிர்வாகப் பொறுப்பில் முடிந்த உதவிகள் செய்து வந்திருக்கிறேன். அவரின் அண்மைய முடிவு காரணமாய் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் முழுமை பெறும் வரை பொறுப்பில் இருக்க முதலில் இசைந்திருந்தாலும், தற்போது அது இயலாததாக ஆகியிருக்கிறது.

எனது வாழ்விலும் சில சிறிய/பெரிய மாற்றங்களினூடாகப் பயணிக்க வேண்டியிருப்பதால் அவற்றில் முழுக் கவனம் செலுத்த வேண்டியும் இந்த முடிவை எடுக்கிறேன். அதனால் இங்கு நிகழும் சில்லரைச் சண்டைகளுக்குச் சமரசம் செய்யவோ, காவல் இருக்கவோ தமிழ்மணத்திற்கென்று வேறு நிச்சயமான வகைகளில் பங்களிக்கவோ எனக்கு நேரமில்லை. வலைப்பதிவுகளில் எழுதுகிற நேரமும் குறையும் என்றாலும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.

இதுவரை தமிழ்மணத்தின் பங்களிப்பைப் புரிந்து கொண்டவர்களுக்கும், காசிக்கும் பிற நிர்வாகக் குழுவினருக்கும் ஆதரவாய் இருந்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்மணத்தின் அடுத்த பரிமாண வளர்ச்சி இன்னும் சிறப்பானதாகவே இருக்கும் என்று நம்புகிறேன். அதற்கான எனது வாழ்த்துக்கள் என்றும் உண்டு.

« Newer Posts - Older Posts »