எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
Sep 13th, 2006 by இரா. செல்வராசு
குவிவிளக்கின் ஒளிப்பாய்வில் பளபளக்கும் பட்டுடுத்தி, மையிட்ட கண்ணுள்ளே கருவிழிகள் மிளிர்ந்தாட, கருங்கூந்தல் பெருஞ்சடையில் ஞெகிழ்கனகு மல்லியொளிர, அபிநயக்கும் செங்கரங்கள் பேசுமொரு பொன்மொழியால்,
“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு”
என்றே நம் தமிழ்ச் சிறுமியர் சிலர் ஆடிய நல்லாட்டத்தில் எனை மறந்திருந்தேன் ஒருநாள். சென்ற மாதத்துச் சுதந்திர விழவின் அமெரிக்க நிகழ்வொன்றில்.
“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு”
என்று தொடர்ந்த வரிகளை, கூடியிருந்த ‘இந்திய’ மக்களின் வெவ்வேறு பின்புலத்தை வைத்து, ஏற்றுக் கொள்ள எண்ணினாலும், ஒன்றான தேசத்தில், சுதந்திரத் திருநாட்டில் ‘நாம் எல்லோரும் சமம்’ என்பது உறுதியான ஒன்றுதானா என்று கேள்விகளை எழுப்பி மனம் வேறு திக்கில் பாய்ந்தது. பல கேள்விகளை எழுப்பியது.
‘நான் இந்நாட்டினன்’ என்னும் தேசப்பற்று என்பது வேறு. கண்மூடித்தனமான தேசபக்தி என்பது வேறு. கடவுள்களின் புனிதங்களையே ஆய்வுக்கு உள்ளாக்கும் போது, தேசம் தேசபக்தி இவற்றின் புனிதம் மட்டும் போற்றிக் காக்கப்படவேண்டியதன் தேவை என்ன என்று கேள்வி எழுகிறது. புனிதம் என்று போற்றப்படுபவை எல்லாம் ஏதோ ஒரு வகையில் சமமற்ற ஏற்றத் தாழ்வுகளைப் பேணிக் காக்கவே ஆக்கிவைக்கப் பட்டிருக்கலாம் என்று எண்ணம் எழுகிறது. ஓர்ந்து பார்த்தால் புனிதங்களின் போர்வையில் ஒரு சாராரின் தன்னலத்திற்கு வழிவகுப்பதான அரசியல் ஒளிந்திருப்பதை ஏராளம் காணலாம்.
9/11இன் போர்வையிலே மக்களின் மதியையும் கண்களையும் மறைத்து, தேசப்பற்று தேசபக்தி என்ற கட்டுவித்தை காட்டி, தான் நினைத்த அரசியல் நிலைப்பாட்டை இலகுவில் எடுத்துக் கொள்ளும் அமெரிக்க அரசுக்கும் இது பொருந்தும். இடிந்துவிட்ட இரட்டைக் கோபுரங்களை விட, தன் தன்னிச்சைச் செயல்பாட்டைக் கேள்வி கேட்டும் எதிர்த்தும் கருத்து வைப்பவர்கள் தேசத் துரோகிகள் என்றொரு மயக்கத்தை உலகின் தொன்மையான மக்களாட்சிக் குமுகத்திலேயே இவர்கள் ஏற்படுத்தி இருப்பது தான் சோகமான ஒன்று. தேசத்தைக் காக்கும் புனிதப் பணியென்று சாற்றி நாட்டின் உட்புறச் சிற்றூர்களின் பதினெட்டு இருபது வயதுப் பாலகர்களை அநியாயமாகக் காவு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மோசடிக்கு ஆளாவது தான் ஒரு புனிதத்தை வாழ்விக்க இம்மக்கள் கொடுக்கும் விலை!
* * * *
‘நான் ஒரு இந்தியன்’ என்பதும் ஒரு அடையாளம் தான். ஒரு வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட செயற்கைத்தனம் நிறைந்த ஒரு அடையாளம். தவறேதுமில்லை. ஆனாலும் அதற்கொரு புனித முலாம் பூசி அதற்காகப் பெருமைப்படச் சொன்ன புரியாத மொழிப் பாடல்களும் நடன நிகழ்வுகளும், ‘தேசியத்தின் பெருமைகளென்ன?’ என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பவரையும் கொஞ்சம் மாற்றவல்லன. இருந்தாலும் அங்கும் தேசப்பற்றுப் பரவசத்தை ஊட்டப் ‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ என்று பாரதி வரவேண்டியிருந்த போது, மொழியின் ஈர்ப்பு நாட்டின் ஈர்ப்பை விட வலுவானது என்றே எனக்குக் காட்டியது. என் நாட்டினன் அல்லாதவனாய் இருந்தாலும் ஈழம், சிங்கை என்று இன்னும் பல நாட்டினரோடு ஒன்றவைப்பதும், ஒரே நாட்டினன் ஆனாலும் பிற சில மாநிலங்களில் இருந்து வருபவரோடு கணுக்கம் இல்லாதிருத்தலும் நாட்டை விட மொழி அடையாளத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கின்றன.
சிறுவயதில் பள்ளியேட்டில் முன்னட்டையில் ஒட்டும் பெயர்ப்பட்டியில் வகுப்பு, பிரிவு, பள்ளி, ஊர், மாவட்டம், மண்டலம், மாநிலம், நாடு, கண்டம், கோள், என்று விளையாட்டாய்த் தொடர்ந்து எழுதி, ஒரு நிலைக்குப் பின் அண்டத்தோடு சேர்ந்துவிடுவதுண்டு. என் சின்ன வயது மகளும் இந்நாளில் சில சமயம் அதைச் செய்வதைக் கண்டு மாறிய காலத்திலும் சில வட்டங்களுக்குள் நம்மை அடையாளப் படுத்திக் கொள்ளல் இயல்பென்பது புரிகிறது. தனியாய் இருக்கப் பயப்படும் மனிதன் ஏதோவொரு காரணத்தால் பிறரோடு தன்னை இணைத்துக் கொள்கிறான். அல்லது, தன்னையொத்தவரோடு கூடியிருக்க இருக்கும் இயல்பான விருப்பம் என்றும் இதைக் கூறலாம். இன்றைய என் சார்புகள் தமிழ் தமிழர் என்று மொழி இனம் வரை வருகிறது. பிறகு நாட்டைத் தாண்டி மனிதம் உலகம் என்று பொதுமைப்பட்டுப் போகிறது. வாழ்ந்த வாழும் இடங்களை ஒட்டி இந்தியன் எனவும் அமெரிக்கன் எனவும் கூட அடையாளங்களை அவசியமானபோது ஏற்கலாம். காலப்போக்கில் இதுவும் மாறலாம்.
* * * *
விழாமேடையில் வடநாட்டு மொழியின் பாடல் ஒன்றுக்கு நடனமாடியவர் வெறும் மேலில் பூணூல் அணிந்திருந்தார். இதுவும் கூட ஒரு சாராரோடு தன்னை இணைத்துக் கொள்ளும் அடையாளம் தான். எந்த அடையாளமும் அடுத்தவர் உரிமைகளில் தலையிடாதபோது தவறென்று சொல்லிவிட முடியாது. மேல் கீழ் தட்டுக்களும், ஆண்டவன் அடிமை தீண்டத் தகாதவன் என்று பேதங்களையும் வளர்ப்பதாய் இல்லாத போது ‘சாதி’ என்னும் அடையாளம் கூட இப்படித் தன்னைச் சுற்றிய ஒரு கூட்டத்தோடு சேர்ந்திருக்கும் விருப்பமே என்னும் அளவில் தவறில்லை என்று ஏற்றுக் கொள்ளலாம். உண்மையில், அப்படி இல்லாமல் ஏற்ற இறக்கங்களை உருவாக்கச் சட்டதிட்டங்கள் வகுத்ததோடு அவற்றைக் காலத்தில் நீட்டித்திருக்கவென்று சாத்திரங்களும் மந்திரங்களும் இடுகதைகளும் கொண்டு ஒரு புனித முலாம் பூசி வைப்பதாலுமே சாதீயமோ பார்ப்பனீயமோ ஒரு குமுகாயக் கேடு என்றாகிறது. இந்தக் கேட்டை வளர்க்கச் சிலவற்றிற்குத் தேவமொழி என்று சிறப்பு அடைகள் சேர்ப்பதன் மூலம் என் மொழி அடையாளத்தின் மீதும் ஒரு புனிதம் மூர்க்கமாய் ஏறும் போது இன்னும் அதிகரித்த கொந்தளிப்பு ஏற்படுகிறது.
பிறரது உரிமைகளை மதிக்கும் வரையில்; இருத்தல்களை அச்சுறுத்தாத வரையில், வட்டங்களுக்குள் சேர்வதும், அடையாளங்கள் ஏற்பதும் தவறில்லை. இயல்பென்றே கொள்ளலாம். அதிகரித்த கல்வியும், விழிப்புணர்வும், விரிவடையும் தொடர்புகளும், விசாலமாகும் மனங்களும் சில நொசிவு அடையாளங்களைத் தாமாகக் களைந்து விடும். எல்லா அடையாளங்களின் பின்னிருக்கும் மனிதம் என்னும் குணம்/இயல்பு மேலோங்கி இருக்க முடியும். தனிப்பட்ட அடையாளங்களோ, அவற்றின் முக்கியத்துவமோ குறைய ஆரம்பிக்கும். அப்படி இயல்பான மனிதமனம் சாரும் தீங்கில்லா அடையாளங்களன்றிப் புனிதங்களால் போர்த்தப்பட்டுப் பேதங்களையும் வளர்க்கும் அடையாளங்கள் ஒழியும் நாள் எதுவோ அன்று ‘எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு’ என்று கொண்டாடலாம் ஆனந்த சுதந்திரத்தை. என் முன்னோன் பாரதியும் அதையே தான் கனவு கண்டிருப்பான்.
அருமையான பதிவு!!! தனக்குள் இது போல பேசுவதை பல் நாட்கள் கழித்து படிக்கும்போது நம்மையே நாம் பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது
அதிகரித்த கல்வியும், விழிப்புணர்வும், விரிவடையும் தொடர்புகளும், விசாலமாகும் மனங்களும் சில நொசிவு அடையாளங்களைத் தாமாகக் களைந்து விடும். எல்லா அடையாளங்களின் பின்னிருக்கும் மனிதம் என்னும் குணம்/இயல்பு மேலோங்கி இருக்க முடியும். தனிப்பட்ட அடையாளங்களோ, அவற்றின் முக்கியத்துவமோ குறைய ஆரம்பிக்கும். அப்படி இயல்பான மனிதமனம் சாரும் தீங்கில்லா அடையாளங்களன்றிப் புனிதங்களால் போர்த்தப்பட்டுப் பேதங்களையும் வளர்க்கும் அடையாளங்கள் ஒழியும் நாள் எதுவோ அன்று ‘எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு’ என்று கொண்டாடலாம் — நானே பேசிக்கொள்வதுபோல இக்கட்டுரை பிரதிபலிக்கிறது. இந்தியா என்றில்லை எல்லா நாட்டிலும் இதுவே நிலை. அந்த நாள் வருமா என்றால் எப்போது தட்டுப்பாடில்லாமல் வாழ்க்கை எளிதாகிறதோ அன்றுதான் முடியும். Struggle for existance இருக்கும் வரை survival of the fittest என்ற கோட்பாடும் இருக்கும், எளியோரை வலியோர் அடக்க முற்படுவதும் நடக்கும்.
ஆமாம் செல்வராஜ் அவர்களே
மொழியின் ஈர்ப்பு நாட்டின் ஈர்ப்பை விட வலுவானது என்றே எனக்குக் காட்டியது. என் நாட்டினன் அல்லாதவனாய் இருந்தாலும் ஈழம், சிங்கை என்று இன்னும் பல நாட்டினரோடு ஒன்றவைப்பதும், ஒரே நாட்டினன் ஆனாலும் பிற சில மாநிலங்களில் இருந்து வருபவரோடு கணுக்கம் இல்லாதிருத்தலும் நாட்டை விட மொழி அடையாளத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கின்றன.
நாடு என்பது ஒரு அடையாளம் அல்லது முகவரி.
மொழியோ நம் சிந்தனையோடு சம்பந்தப்பட்டது.
இங்குதான் நீங்கள் சொல்லும்…
தனியாய் இருக்கப் பயப்படும் மனிதன் ஏதோவொரு காரணத்தால் பிறரோடு தன்னை இணைத்துக் கொள்கிறான். அல்லது, தன்னையொத்தவரோடு கூடியிருக்க இருக்கும் இயல்பான விருப்பம் என்றும் இதைக் கூறலாம்.
அவனுக்கு மொழி இங்குதான் அத்தியாவசியமாகிறது!
சிறுவயதில் பள்ளியேட்டில் முன்னட்டையில் ஒட்டும் பெயர்ப்பட்டியில் வகுப்பு, பிரிவு, பள்ளி, ஊர், மாவட்டம், மண்டலம், மாநிலம், நாடு, கண்டம், கோள், என்று விளையாட்டாய்த் தொடர்ந்து எழுதி, ஒரு நிலைக்குப் பின் அண்டத்தோடு சேர்ந்துவிடுவதுண்டு. என் சின்ன வயது மகளும் இந்நாளில் சில சமயம் அதைச் செய்வதைக் கண்டு மாறிய காலத்திலும் சில வட்டங்களுக்குள் நம்மை அடையாளப் படுத்திக் கொள்ளல் இயல்பென்பது புரிகிறது.
என் மகன் நிமலின் பதிவொன்றை நியாபகப் படுத்துகிறது!
தனிப்பட்ட அடையாளங்களோ, அவற்றின் முக்கியத்துவமோ குறைய ஆரம்பிக்கும். அப்படி இயல்பான மனிதமனம் சாரும் தீங்கில்லா அடையாளங்களன்றிப் புனிதங்களால் போர்த்தப்பட்டுப் பேதங்களையும் வளர்க்கும் அடையாளங்கள் ஒழியும் நாள் எதுவோ அன்று எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு என்று கொண்டாடலாம்.
அந்த நாளுக்காய் காத்திருப்போம்!
நேர்மையான, அவசியமான சிந்தனை! வாழ்த்துக்கள் நண்பரே!
அருமையான பதிவு. ஆழ்ந்த கருத்துக்கள்.
//நான் இந்நாட்டினன்’ என்னும் தேசப்பற்று என்பது வேறு. கண்மூடித்தனமான தேசபக்தி என்பது வேறு…
நான் ஒரு இந்தியன்’ என்பதும் ஒரு அடையாளம் தான். ஒரு வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட செயற்கைத்தனம் நிறைந்த ஒரு அடையாளம். தவறேதுமில்லை…மொழியின் ஈர்ப்பு நாட்டின் ஈர்ப்பை விட வலுவானது என்றே எனக்குக் காட்டியது. என் நாட்டினன் அல்லாதவனாய் இருந்தாலும் ஈழம், சிங்கை என்று இன்னும் பல நாட்டினரோடு ஒன்றவைப்பதும்,//
மிகவும் சரியாகச் சொன்னீர்கள். தேசியம் என்பது marriage of convenience. நீங்கள் சொன்னது போல் தேசியம் என்பது “வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட செயற்கைத்தனம் நிறைந்த ஒரு அடையாளம்”. ஆனால் மொழி என்பது மூச்சு போன்றது. தேசிய அடையாளம் காலத்திற்குக் காலம் மாறலாம். இன்றைய இந்தியா எனும் நாடு ஐரோப்பியர்கள் வர முன்பு இருக்கவில்லை. இதே இந்தியா சில காலங்களில் பல நாடுகளாகச் சிதறுண்டும் போகலாம். ஆனால் நாம் தமிழர்கள் எனும் அடையாளம்தான் நிரந்தரமானது.
Excellent post. Keep write more.
செல்வராஜ்
ரொம்ப நாளாக் காணேல்ல. அடிக்கடி வாங்க. எழுதுங்க.