Mar 16th, 2004 by இரா. செல்வராசு
ஒரு சுற்று வலைப்பதிவர் பட்டியலில் இருக்கிற பெரும்பாலான பதிவுகளுக்குச் சென்று வந்தேன். நூறு பதிவுகளுக்கு மேல் இருக்கிறது என்று நாமே பெருமையடித்துக் கொண்டதைச் சில நாட்களுக்கு முன் பார்த்தேன். எங்கு என்று சரியாய் நினைவில்லை. ஆனால், இன்று அந்தப் பெருமையில் நான் பங்கு கொள்ளவில்லை. காரணம், கணிசமான பதிவுகள் ஓரிரண்டு நாட்களைத் தாண்டவில்லை. தொடர்ந்து எழுதுவது என்பது சிரமமான காரியம் என்று நானும் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், ஒரு நல்ல எழுத்தாளராய் உருவாவதற்குத் தொடர்ந்து எழுதும் முயற்சியும், பயிற்சியும், ஒழுக்கமும் வேண்டும். சித்திரமும் கைப்பழக்கம். எழுதுவது எல்லாம் பரிபூரணமாய் இருக்க வேண்டும் என்பதில்லை. அது தானே இந்தப் பதிவுகளின் சிறப்பு. இது நன்றாக இல்லை என்று யாரும் திருப்பி அனுப்ப முடியாதே!
ஒரு சிலர் தமது ஒரே பதிவை இரு பிரதிகளாய் வைத்திருக்கிறார்கள். அதை ஒன்று என்று தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். டிஸ்கி, யூனிகோடு என்று இரு முறைகளிலும் வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் கண்ணன் போன்றவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால், அந்தப் பரிசோதனை முயற்சி இன்னும் எதற்கு? யூனிகோட்டிற்கு மாறி விடலாமே. இன்னும் சிலர் (சந்திரவதனா, மதி, மீனாக்ஸ், முத்து) ஒருவரே பல பதிவுகள் வைத்திருக்கிறார்கள். வெவ்வேறு வகையான எழுத்துக்களுக்கு வெவ்வேறு பதிவுகள் இருப்பது வசதி தான். ஆனால் அது ப்ளாக்கர் போன்ற பதிவு நிரலிகளின் “பகுதிகள்” வசதி இல்லாத குறைபாடே. அதை விரும்புவோர் நியூக்ளியஸ், மூவபிள்-டைப் (சுரதாவின் யாழ்.நெட்) போன்ற நிரலிகளுக்கும் பதிவு வசதிகளுக்கும் சென்று விடுவது நல்லது. ஒருவரே பல பதிவுகள் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் நான் சொல்லவில்லை. எழுதுகிற நாட்கள் அதிகமில்லை என்கிற போது அவற்றைத் தனித்தனியே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே என்று தான் எண்ணுகிறேன்.
எழுதுவதற்கு உந்துதலாய் ஒரு வாசகர் வட்டம் வேண்டும். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்களும் சரி, பிற வாசகர்களும் சரி, இந்த வலைப்பதிவுகளுக்கு அப்படி ஒரு வாசகர் வட்டத்தைத் தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மதி, காசி நிர்வகித்துக் கொண்டிருக்கும் இந்த வலைப்பூ அப்படியொரு வாசகர் வட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொடுக்கிறது. பின்னூட்டங்களில் மக்கள் அடிக்கிற ரகளை புன்முறுவலை வரவழைக்கிறது. (செவுத்துல முட்டிக்கிற படம், நாக்கை நீட்டிக் கள்ளச் சிரிப்புப் படம், தோளைக் குலுக்கி முழிக்கும் படம் என்று இவை போன்றவை புது வீட்டில் இல்லையே என்று ஏங்கித் தவிக்கிறது ஒரு கூட்டம்! 🙂 ). இப்படியான பின்னூட்டங்கள் பதிவர்களுக்கு ஒரு இன்றியமையாத சமூக ஊட்டத்தையும் ஒரு தொடர்பு உரத்தையும் கொடுக்கின்றன. யாஹூ மின்குழுமங்கள் இந்த வட்டத்திற்கு இன்னொரு ஊற்றாய் அமைகின்றன.
ஆனாலும் இத்தனை யாஹூ குழுமங்கள் தேவையா என்று கேள்வி எழுப்புகிறார் கார்த்திக்ராமாஸ். இதே கேள்வி என்னுள்ளும் எழுந்தது உண்டு. சில மாதங்கள் முன்பு ஓரிரு வாரங்கள் மரத்தடி, ராகாகி குழுக்களில் நடக்கிற விவாதங்களை கவனித்து வந்தேன். இரண்டிற்கும் பெரும் வித்தியாசம் எனக்குத் தெரியவில்லை. இரண்டும் தமிழ் இலக்கியங்களும் தனிக் கலாய்ச்சல்களுமாகத் தான் இருக்கின்றன. இரண்டு எதற்கு ? இன்னும் இது போன்றே சில குழுக்கள் இருக்கின்றன என்று எண்ணுகிறேன். எனக்கு முழு விவரங்கள் தெரியவில்லை. அதிக நாட்கள் இங்கே இருப்பவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்.
Posted in பொது | Comments Off on எத்தனை பதிவுகள் எண்ணிக்கையில் ?
Mar 15th, 2004 by இரா. செல்வராசு
சில தினங்களுக்கு முன்னர் காரில் சென்று கொண்டிருக்கும் போது வலைப்பதிவு மற்றும் இந்த வலைப்பூ இவை பற்றி யோசித்தபடியே செல்ல, எடுக்கவேண்டிய இறக்கத்தைக் (Exit) கோட்டை விட்டு விட்டு இரண்டு மைல் தள்ளிப் போய் இறங்க வேண்டியதாகப் போய் விட்டது. இறங்கியவன் மரியாதையாகத் திரும்ப அந்தத் துரித சாலையில் ஏறித் திரும்பி வந்து சரியான இறக்கத்தில் இறங்கிச் சென்றிருக்கலாம். ஆனால் இந்த ஊர் சுற்றி மனம் சொன்னால் கேட்டால் தானே. பொதுவான ஒரு திசையை வைத்துக் கொண்டு இப்படியே வழி கண்டுபிடித்துக் கொண்டு சென்று விடலாம் என்று முன்னர் சென்றறியாத சாலைகள் வழியாய் இருட்டில் ஒரு பயணத்திற்கு வழி வகுத்து விட்டது.
இப்படிப் புதுசு புதுசான பாதைகளில் போவது எனக்குப் பிடித்த விஷயம். ஆனால் இந்தப் புதிய பாதைப் பயணங்களின் முடிவில் இலக்கை அடைந்த நாட்களும் உண்டு. அடையாமல் திரும்ப வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது உண்டு.
எழுதுகிற அனுபவமும் இப்படிப் பட்டது தான்.
ஒன்றை எழுத எண்ணிடும் போது மனம் என்னும் இந்தக் குதிரை தன் பயணத்தைத் தொடங்கிவிடுகிறது. அந்த நொடிப் பொழுதில் நாமும் அதன் மீது தாவி ஏறி அதன் போக்கில் விட்டுவிட்டு அது செல்லும் பாதைகளில் எல்லாம் இரசித்தபடி பயணம் செல்லலாம். சீராகச் செல்கையில் மிக மெலிதாகச் செல்லும் திசையை நாம் கட்டுப் படுத்தவும் செய்யலாம். சரியான தருணத்தில் ஏறாமல் தவற விட்டோமெனில் குதிரை போயே போய் விட்டிருக்கும். ஆக, பொங்கி வருவதை எழுத முடிகிற நாட்களும் உண்டு. முடியாமல் தவித்த நாட்களும் உண்டு.
இதையே இன்னும் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார் ஒரு மேயப் போன மாடு !
இல்லடா, அது நேத்தைய வெயில், நீ காயலன்னா மறுபடியும் வராது
சுந்தரவடிவேலுவின் எழுத்துக்களில் இருக்கும் சிக்கனம் எனக்குப் பிடிக்கும். என்னைப் போன்ற ஆட்கள் வார்த்தைகளை விரையம் செய்பவர்கள். ஒரு பத்தியை நீக்கி விட்டால் கூடப் பெரிதாய் எதையும் இழந்து விட்டது போல் தெரியாது. ஆனால் இவர் எழுதுவதில் சில வார்த்தைகளை நீக்கி விட்டாலே அவர் சொல்ல வந்ததை இழந்து விடுவோமோ என்று பல முறை எண்ணியிருக்கிறேன். அந்த அளவிற்கு அளவான வார்த்தைப் பிரயோகம். இவரும் இவருடைய நண்பர் தங்கமணியும் திறமையான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள். குறிப்பாய் இவர்களுடைய கவிதைகள் வித்தியாசமானதாய் மனதை என்னவோ செய்யும். என்ன, சிலசமயம் இவர்களின் சொற்சித்து விளையாட்டைப் புரிந்து கொள்வது என் போன்ற சாமானியர்களுக்குச் சற்றுக் கடினமாய் இருக்கும். தங்கமணியின் வாழ்வெனும் ஆறு படித்துப் பாருங்கள். நல்ல கவிதை எழுத ஆசைப்படுபவர்கள் இவர்களுடைய எழுத்துக்களை நிச்சயம் படிக்க வேண்டும்.
புரியாதவற்றிற்குச் சொந்தக்காரராய் இருந்தார் இன்னொருவர். பெரும்பகுதி புரியக் கூடாது என்று எண்ணியே எழுதின மாதிரி ஒரு நடை. மேலோட்டமாக மட்டுமே படித்தாலும் ஒரு சுவை இருந்தது இவர் எழுத்துக்களில். சுமார் இரண்டரை மாதங்களாய் வலைப்பதிவுகள் / மடற்குழுக்கள் இவற்றில் எழுதியவர்களை விமர்சித்துப் பகடி விளையாடிக் காட்டினார். பினாத்துவதற்கும் பிடித்த கவிதையில் புளு விடுவதற்கும் கூடத் திறமை வேண்டும் என்று காட்டிய பெயரிலி சென்ற வாரத்தில் சத்தமில்லாமல் முகத்திரை களைந்து வெளி வந்திருக்கிறார். இவரைப் பற்றி இன்னும் புரியாத சில விஷயங்கள் எனக்குண்டு. எங்கெல்லாம் பதிவுகள் வைத்திருக்கிறார் ? எந்தப் பெயரில் எல்லாம் எழுதுகிறார் ? முகமூடிப் பெயர்களைச் சொல்லவில்லை. வேறு முகமூடிகள் இல்லை என்று கூறுகிற இவர் வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன். இனியிலி பெயரிலி, உங்கள் முயற்சிக்கு ஒரு வணக்கம். சொல்லுங்கள், இப்படி ஒரு பகடிக்கு (இந்த வார்த்தையும் எனக்குப் பிடித்திருக்கிறது) எப்படி உந்துதல் ஏற்பட்டது ?
Posted in பொது | Comments Off on எழுத்து அனுபவம்
Mar 14th, 2004 by இரா. செல்வராசு
பல திசைகளாய் இருந்து மூன்று கோடுகளாகி இன்று தமிழ்க் கணினியுலகம் யூனிகோடு என்னும் ஒரே முறையை நோக்கி வெகு விரைவாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. பல ஆர்வலர்கள் அந்தத் திசையை நோக்கிச் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். உஷாவும் அருணாவும் எளிமையாய் கணினித் தமிழ் பாவிக்கும் நாள் எந்த நாளோ என்று ஆதங்கப் பட்டிருந்தார்கள். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. சிறு சிறு குறைகள் இருந்தாலும், மற்ற பல வசதிகள் மற்றும் ஆதாயங்கள் காரணமாக எல்லோரும் இனி யூனிகோடையே பாவிக்க வேண்டும். இன்னும் பழைய முறைகளில் இருப்பவர்கள் கூடிய விரைவில் மாறி விடுங்கள். ஐயம் இருப்பவர்கள் விக்கிப்பக்கம் சென்று கற்றுக் கொள்ளுங்கள்.
வருகிற தமிழ்ப் புத்தாண்டில் இருந்து மடலாடற்குழுக்களில் இனி யூனிகோடைப் பாவிக்க ஒட்டு மொத்த முடிவு செய்வோம் என்று முகுந்தராஜ் அழைப்பு விடுத்திருக்கிறார். முடிந்தவர்கள் இப்போதே மாறி விடுங்கள். மதுரை மின்தொகுப்புத் திட்டத்தையும் டஸ்கியில் இருந்து யூனிகோடுக்கு மாற்றிவிட நடக்கும் முயற்சிகளுக்கு உதவ வேண்டி வெங்கட் அழைப்பு விடுத்திருக்கிறார். யூனிகோட்டுப் பயன்பாடு இயல்பாகப் பெருக வேண்டும் என்னும் கருத்தில் அவற்றின் தானியங்கி எழுத்துருக்களைக் கூடத் தான் பாவிக்கப் போவதில்லை என்று அது வரையில் தனது தளத்தைச் சிலர் பார்க்க முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை என்று இருக்கிறார் அவர்.
இன்றைய சிறு நுட்பக் குறிப்பு அவ்வளவு தான். இதற்கு மேலும் எழுதினால், இங்கு வந்தும் இந்த நுட்ப விஷயங்களா என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள்.
மீண்டும் சந்திப்போம்.
Posted in பொது, யூனிகோடு | Comments Off on யூனிகோடு
Mar 14th, 2004 by இரா. செல்வராசு
வலைப்பூ ஆசிரியர் வாரப் பதவிக்கு அழைப்பு வருகிறது என்று தெரிந்ததில் இருந்து ஒரு பக்கம் தயக்கம். மறு பக்கம் உற்சாகம். இது எழுத்துலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் பலரும் வந்த இடம், வந்து போகும் இடம். சில சமயம் ஒரு வம்பு மடம். “நானும் இலக்கிய உலகில் எனது மூலையும்” என்று ஏதோ நான் பாட்டுக்கு ஒரு ஓரமாய் விளையாடிக் கொண்டிருக்க, இப்போது “மேடைக்கு வா மகனே” என்று கூட்டம் சேர்ந்து வேடிக்கை பார்ப்பது மாதிரி இருக்கிறது. மெல்லத் தயக்கத்தை உதறிவிட்டு என் முயற்சிகளை முன் வைக்கிறேன். பருந்துகள் நிறைந்த இடம் என்றாலும் உயர உயரப் பறக்க முயற்சி செய்யும் ஒரு ஊர்க்குருவி இது. முதலில் எல்லோருக்கும் என் வணக்கம்.
நிறையச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் காசி. இப்போது எனக்கு மலைப்பாய் இருக்கிறது. காசியின் அறிமுகம் ஒரு பக்கம் மகிழ்வையும் மறுபக்கம் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் இருக்க முடியுமா என்னும் பயத்தையும் தருகிறது. (“உங்களத்தானா, இல்ல வேற யாராச்சியும் பத்தியா ?” என்று என் மனைவி கிண்டலடித்துவிட்டுப் போகிறாள்!).
பழங்காலத்தில் இருந்து கணினியுலகில் தமிழார்வமும் தனி முயற்சிகளும் எனக்கு நிறைய இருந்தது உண்மை தான். ஆனால் எனது சாதனைகள் எல்லாம் அவ்வளவு தான். ஒரு பயனர் என்னும் வரையில் தான். வளர்பாதையில் அதுவும் ஒரு முக்கியமான அம்சம் தான். ஆனால், அதைவிட அல்லும் பகலுமாய் உழைப்பைத் தந்து ஆரம்ப கால நிரலிகளையும், எழுத்துருக்களையும், விசைப்பலகைகளையும், இன்ன பிற வித்தைகளையும் உருவாக்கி அத்தனையையும் தமிழ் உலகிற்குத் தானமாய்த் தாரை வார்த்த அந்த அன்பு நெஞ்சங்களின் முக்கியத்துவம் மிகவும் பெரிது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்படி உருவாகிய சில வளர்ச்சிகளை வைத்துப் பார்த்த போது பல சமயம் “ஆஹா… அடுத்த நூற்றாண்டின் சவால்களைச் சந்திக்கவும் அவற்றைத் தாண்டி வளரவும் என் தமிழ் தயாராகவே இருக்கிறது”, என்று ஒரு புறம் எனக்குள் மகிழ்ச்சி கொப்பளிக்கும். (2000க்கு முன்பு). அந்தப் பாதையில் இன்னும் நாம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கு இன்று விரிந்திருக்கும் இந்த வலைப் பதிவு உலகமே ஓர் சான்று.
இந்த வளர்ச்சி இனி வரும் நாட்களில் இன்னும் பெருகும். நுட்ப வளர்ச்சியில் ஒரு முதிர் நிலையை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம் என்று தோன்றுகிறது. இனிக் கணினியுலகில் வரப் போகும் நுட்பங்கள் எல்லாவற்றிலும் உடனுக்குடன் தமிழ்ப் பிரதிகளும் கிடைக்கும். நுட்பங்கள் மட்டுமல்ல எழுத்துக்களும் தொடர்ந்து தழைத்தோங்கி வருவதைக் கண் கூடாகப் பார்க்க முடிகிறது. ஒரு சிறுவனாய் இருந்த போது பெரியவர்களின் எழுத்தைப் படித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். இன்று என் வயதொத்த பலர் எழுதும் நடையில் மயங்குகிறேன். தலைமுறைகள் மாறினாலும் தமிழுக்குப் புதல்வர்கள் தோன்றியவண்ணம் இருப்பார்கள். “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்கிற ஆரூடங்கள் எதையும் நம்பாதீர்கள். “என்றும் தமிழ் இனிது வளரும்” என்று நேர்மறைச் சிந்தனைகள் கொண்டு செயல்படுவோம். அடுத்த தலைமுறைக்குத் தீனி போடவும் எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி உருவாவதற்கு இந்த வலைப் பதிவுகளும் ஒரு பயிற்சிக் களமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Posted in தமிழ், பொது | Comments Off on என்றும் தமிழ் இனிது வளரும்
Mar 13th, 2004 by இரா. செல்வராசு
இன்று சனிக்கிழமை. ஒரு வார மும்முர நிகழ்வுகளுக்குப் பின் ஓய்வான ஒருநாள். பல நாட்களாகத்தேங்கிக் கிடக்கும் பல வேலைகளுள் சிலவற்றைச் செய்யலாமே என்று எண்ணம். ஆனால் எதையும் செய்யும் முன், உறங்கி எழுந்து வந்த பெண்களைச் சற்றே கவனிக்க வேண்டியிருந்தது. தினமும் நான் தானே செய்கிறேன் இன்று உன் முறை என்று அவர்களைக் குளித்துக் கிளப்பும் வேலையை மனைவி என்னிடம் தள்ளிவிட்டாள் ! சரி போனால் போகிறது என்று அவர்களோடு சில நேரம் மல்லுக் கட்டிவிட்டு வந்தேன்.
இரண்டு வருடங்களுக்கு முன் சர்க்யூட் சிட்டியில் வாங்கிய ஒரு பொருளுக்கு வட்டியில்லாக் கடனாக ஒரு வருடம் கிடைக்கிறதே என்று கடன் வாங்கிய ஒரு வங்கிக்கணக்கில் சிறு பிரச்சினை. பணமெல்லாம் கட்டி முடித்து ஒரு வருடமாயிற்று. ஆனாலும் கணக்கில் சிறு கோளாறு. சரி செய்ய அவர்களின் நுகர்வோர் சேவையை (Customer Service) நாட வேண்டும்.
Continue Reading »
Posted in பொது | 6 Comments »