இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

எழுத்து அனுபவம்

March 15th, 2004 · No Comments

சில தினங்களுக்கு முன்னர் காரில் சென்று கொண்டிருக்கும் போது வலைப்பதிவு மற்றும் இந்த வலைப்பூ இவை பற்றி யோசித்தபடியே செல்ல, எடுக்கவேண்டிய இறக்கத்தைக் (Exit) கோட்டை விட்டு விட்டு இரண்டு மைல் தள்ளிப் போய் இறங்க வேண்டியதாகப் போய் விட்டது. இறங்கியவன் மரியாதையாகத் திரும்ப அந்தத் துரித சாலையில் ஏறித் திரும்பி வந்து சரியான இறக்கத்தில் இறங்கிச் சென்றிருக்கலாம். ஆனால் இந்த ஊர் சுற்றி மனம் சொன்னால் கேட்டால் தானே. பொதுவான ஒரு திசையை வைத்துக் கொண்டு இப்படியே வழி கண்டுபிடித்துக் கொண்டு சென்று விடலாம் என்று முன்னர் சென்றறியாத சாலைகள் வழியாய் இருட்டில் ஒரு பயணத்திற்கு வழி வகுத்து விட்டது.

இப்படிப் புதுசு புதுசான பாதைகளில் போவது எனக்குப் பிடித்த விஷயம். ஆனால் இந்தப் புதிய பாதைப் பயணங்களின் முடிவில் இலக்கை அடைந்த நாட்களும் உண்டு. அடையாமல் திரும்ப வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது உண்டு.

எழுதுகிற அனுபவமும் இப்படிப் பட்டது தான்.

ஒன்றை எழுத எண்ணிடும் போது மனம் என்னும் இந்தக் குதிரை தன் பயணத்தைத் தொடங்கிவிடுகிறது. அந்த நொடிப் பொழுதில் நாமும் அதன் மீது தாவி ஏறி அதன் போக்கில் விட்டுவிட்டு அது செல்லும் பாதைகளில் எல்லாம் இரசித்தபடி பயணம் செல்லலாம். சீராகச் செல்கையில் மிக மெலிதாகச் செல்லும் திசையை நாம் கட்டுப் படுத்தவும் செய்யலாம். சரியான தருணத்தில் ஏறாமல் தவற விட்டோமெனில் குதிரை போயே போய் விட்டிருக்கும். ஆக, பொங்கி வருவதை எழுத முடிகிற நாட்களும் உண்டு. முடியாமல் தவித்த நாட்களும் உண்டு.

இதையே இன்னும் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார் ஒரு மேயப் போன மாடு !

இல்லடா, அது நேத்தைய வெயில், நீ காயலன்னா மறுபடியும் வராது

சுந்தரவடிவேலுவின் எழுத்துக்களில் இருக்கும் சிக்கனம் எனக்குப் பிடிக்கும். என்னைப் போன்ற ஆட்கள் வார்த்தைகளை விரையம் செய்பவர்கள். ஒரு பத்தியை நீக்கி விட்டால் கூடப் பெரிதாய் எதையும் இழந்து விட்டது போல் தெரியாது. ஆனால் இவர் எழுதுவதில் சில வார்த்தைகளை நீக்கி விட்டாலே அவர் சொல்ல வந்ததை இழந்து விடுவோமோ என்று பல முறை எண்ணியிருக்கிறேன். அந்த அளவிற்கு அளவான வார்த்தைப் பிரயோகம். இவரும் இவருடைய நண்பர் தங்கமணியும் திறமையான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள். குறிப்பாய் இவர்களுடைய கவிதைகள் வித்தியாசமானதாய் மனதை என்னவோ செய்யும். என்ன, சிலசமயம் இவர்களின் சொற்சித்து விளையாட்டைப் புரிந்து கொள்வது என் போன்ற சாமானியர்களுக்குச் சற்றுக் கடினமாய் இருக்கும். தங்கமணியின் வாழ்வெனும் ஆறு படித்துப் பாருங்கள். நல்ல கவிதை எழுத ஆசைப்படுபவர்கள் இவர்களுடைய எழுத்துக்களை நிச்சயம் படிக்க வேண்டும்.

புரியாதவற்றிற்குச் சொந்தக்காரராய் இருந்தார் இன்னொருவர். பெரும்பகுதி புரியக் கூடாது என்று எண்ணியே எழுதின மாதிரி ஒரு நடை. மேலோட்டமாக மட்டுமே படித்தாலும் ஒரு சுவை இருந்தது இவர் எழுத்துக்களில். சுமார் இரண்டரை மாதங்களாய் வலைப்பதிவுகள் / மடற்குழுக்கள் இவற்றில் எழுதியவர்களை விமர்சித்துப் பகடி விளையாடிக் காட்டினார். பினாத்துவதற்கும் பிடித்த கவிதையில் புளு விடுவதற்கும் கூடத் திறமை வேண்டும் என்று காட்டிய பெயரிலி சென்ற வாரத்தில் சத்தமில்லாமல் முகத்திரை களைந்து வெளி வந்திருக்கிறார். இவரைப் பற்றி இன்னும் புரியாத சில விஷயங்கள் எனக்குண்டு. எங்கெல்லாம் பதிவுகள் வைத்திருக்கிறார் ? எந்தப் பெயரில் எல்லாம் எழுதுகிறார் ? முகமூடிப் பெயர்களைச் சொல்லவில்லை. வேறு முகமூடிகள் இல்லை என்று கூறுகிற இவர் வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன். இனியிலி பெயரிலி, உங்கள் முயற்சிக்கு ஒரு வணக்கம். சொல்லுங்கள், இப்படி ஒரு பகடிக்கு (இந்த வார்த்தையும் எனக்குப் பிடித்திருக்கிறது) எப்படி உந்துதல் ஏற்பட்டது ?

Tags: பொது