எத்தனை பதிவுகள் எண்ணிக்கையில் ?
Mar 16th, 2004 by இரா. செல்வராசு
ஒரு சுற்று வலைப்பதிவர் பட்டியலில் இருக்கிற பெரும்பாலான பதிவுகளுக்குச் சென்று வந்தேன். நூறு பதிவுகளுக்கு மேல் இருக்கிறது என்று நாமே பெருமையடித்துக் கொண்டதைச் சில நாட்களுக்கு முன் பார்த்தேன். எங்கு என்று சரியாய் நினைவில்லை. ஆனால், இன்று அந்தப் பெருமையில் நான் பங்கு கொள்ளவில்லை. காரணம், கணிசமான பதிவுகள் ஓரிரண்டு நாட்களைத் தாண்டவில்லை. தொடர்ந்து எழுதுவது என்பது சிரமமான காரியம் என்று நானும் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், ஒரு நல்ல எழுத்தாளராய் உருவாவதற்குத் தொடர்ந்து எழுதும் முயற்சியும், பயிற்சியும், ஒழுக்கமும் வேண்டும். சித்திரமும் கைப்பழக்கம். எழுதுவது எல்லாம் பரிபூரணமாய் இருக்க வேண்டும் என்பதில்லை. அது தானே இந்தப் பதிவுகளின் சிறப்பு. இது நன்றாக இல்லை என்று யாரும் திருப்பி அனுப்ப முடியாதே!
ஒரு சிலர் தமது ஒரே பதிவை இரு பிரதிகளாய் வைத்திருக்கிறார்கள். அதை ஒன்று என்று தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். டிஸ்கி, யூனிகோடு என்று இரு முறைகளிலும் வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் கண்ணன் போன்றவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால், அந்தப் பரிசோதனை முயற்சி இன்னும் எதற்கு? யூனிகோட்டிற்கு மாறி விடலாமே. இன்னும் சிலர் (சந்திரவதனா, மதி, மீனாக்ஸ், முத்து) ஒருவரே பல பதிவுகள் வைத்திருக்கிறார்கள். வெவ்வேறு வகையான எழுத்துக்களுக்கு வெவ்வேறு பதிவுகள் இருப்பது வசதி தான். ஆனால் அது ப்ளாக்கர் போன்ற பதிவு நிரலிகளின் “பகுதிகள்” வசதி இல்லாத குறைபாடே. அதை விரும்புவோர் நியூக்ளியஸ், மூவபிள்-டைப் (சுரதாவின் யாழ்.நெட்) போன்ற நிரலிகளுக்கும் பதிவு வசதிகளுக்கும் சென்று விடுவது நல்லது. ஒருவரே பல பதிவுகள் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் நான் சொல்லவில்லை. எழுதுகிற நாட்கள் அதிகமில்லை என்கிற போது அவற்றைத் தனித்தனியே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே என்று தான் எண்ணுகிறேன்.
எழுதுவதற்கு உந்துதலாய் ஒரு வாசகர் வட்டம் வேண்டும். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்களும் சரி, பிற வாசகர்களும் சரி, இந்த வலைப்பதிவுகளுக்கு அப்படி ஒரு வாசகர் வட்டத்தைத் தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மதி, காசி நிர்வகித்துக் கொண்டிருக்கும் இந்த வலைப்பூ அப்படியொரு வாசகர் வட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொடுக்கிறது. பின்னூட்டங்களில் மக்கள் அடிக்கிற ரகளை புன்முறுவலை வரவழைக்கிறது. (செவுத்துல முட்டிக்கிற படம், நாக்கை நீட்டிக் கள்ளச் சிரிப்புப் படம், தோளைக் குலுக்கி முழிக்கும் படம் என்று இவை போன்றவை புது வீட்டில் இல்லையே என்று ஏங்கித் தவிக்கிறது ஒரு கூட்டம்! 🙂 ). இப்படியான பின்னூட்டங்கள் பதிவர்களுக்கு ஒரு இன்றியமையாத சமூக ஊட்டத்தையும் ஒரு தொடர்பு உரத்தையும் கொடுக்கின்றன. யாஹூ மின்குழுமங்கள் இந்த வட்டத்திற்கு இன்னொரு ஊற்றாய் அமைகின்றன.
ஆனாலும் இத்தனை யாஹூ குழுமங்கள் தேவையா என்று கேள்வி எழுப்புகிறார் கார்த்திக்ராமாஸ். இதே கேள்வி என்னுள்ளும் எழுந்தது உண்டு. சில மாதங்கள் முன்பு ஓரிரு வாரங்கள் மரத்தடி, ராகாகி குழுக்களில் நடக்கிற விவாதங்களை கவனித்து வந்தேன். இரண்டிற்கும் பெரும் வித்தியாசம் எனக்குத் தெரியவில்லை. இரண்டும் தமிழ் இலக்கியங்களும் தனிக் கலாய்ச்சல்களுமாகத் தான் இருக்கின்றன. இரண்டு எதற்கு ? இன்னும் இது போன்றே சில குழுக்கள் இருக்கின்றன என்று எண்ணுகிறேன். எனக்கு முழு விவரங்கள் தெரியவில்லை. அதிக நாட்கள் இங்கே இருப்பவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்.