கஷ்டமர்
Mar 13th, 2004 by இரா. செல்வராசு
இன்று சனிக்கிழமை. ஒரு வார மும்முர நிகழ்வுகளுக்குப் பின் ஓய்வான ஒருநாள். பல நாட்களாகத்தேங்கிக் கிடக்கும் பல வேலைகளுள் சிலவற்றைச் செய்யலாமே என்று எண்ணம். ஆனால் எதையும் செய்யும் முன், உறங்கி எழுந்து வந்த பெண்களைச் சற்றே கவனிக்க வேண்டியிருந்தது. தினமும் நான் தானே செய்கிறேன் இன்று உன் முறை என்று அவர்களைக் குளித்துக் கிளப்பும் வேலையை மனைவி என்னிடம் தள்ளிவிட்டாள் ! சரி போனால் போகிறது என்று அவர்களோடு சில நேரம் மல்லுக் கட்டிவிட்டு வந்தேன்.
இரண்டு வருடங்களுக்கு முன் சர்க்யூட் சிட்டியில் வாங்கிய ஒரு பொருளுக்கு வட்டியில்லாக் கடனாக ஒரு வருடம் கிடைக்கிறதே என்று கடன் வாங்கிய ஒரு வங்கிக்கணக்கில் சிறு பிரச்சினை. பணமெல்லாம் கட்டி முடித்து ஒரு வருடமாயிற்று. ஆனாலும் கணக்கில் சிறு கோளாறு. சரி செய்ய அவர்களின் நுகர்வோர் சேவையை (Customer Service) நாட வேண்டும்.
தொலைபேசியை எடுத்து எண்களைச் சுழற்றினேன்.
எல்லாப் பக்கமும் வருவது போல் எடுத்தவுடன் ஒரு இயந்திரக் குரல். “ஆங்கிலத்தில் தொடர எண் ஒன்றை அழுத்துங்கள்”, என்று சொல்லி விட்டு ஸ்பானிய மொழியில் தத்தக்கா புத்தக்கா என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தது. சரி இந்த உளரலை நீண்ட நேரம் கேட்க வேண்டாம் என்று ஒன்றை அழுத்தி ஸ்பானிஷ்காரியின் குரல் வளையை முறித்தேன்.
“உங்கள் வசதிக்காக இருபத்திநாலு மணி நேரமும் எங்கள் இணைய தளத்தில் சேவை அளிக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் அங்கு சென்று பாருங்கள்”
அட அது தெரியாதா எனக்கு ? தொலைபேசியை எடுத்து, இத்தனை எண்களை அழுத்தி, இத்தனை நேரம் காத்திருந்து, என்னுடைய சனிக்கிழமைக் காலையின் சில மணித்துளி நேரத்தை இவர்களோடு கழிக்க வேண்டும் என்று ஆசையா என்ன எனக்கு ? இதை விட பற்பசையைப் பிதுக்கி எடுக்கவும் முடியாமல், ஆனாலும் தான் தான் எடுப்பேன் என்று அடம் பிடிக்கும் என் மூன்று வயதினளோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பேனே ! என்ன செய்வது ? என் பிரச்சினை தீர உயிருள்ள ஒருவரிடம் நான் பேசித் தானே ஆக வேண்டும்.
“இங்கே கணக்கு வைத்திருப்பவரின் ஒன்பது இலக்கச் சமூகப் பாதுகாப்பு எண்ணை (Social Security Number) உள்ளிடுங்கள். அல்லது உங்கள் கணக்கு எண்ணை உள்ளிட…”
வேறு ஏதோ ஒரு எண்ணை அழுத்துங்கள் என்பதற்குக் காத்திராமல் மனப்பாடம் ஆகியிருந்த ச.பா.எண் இலக்கங்களை அநாயசமாகத் தட்டி விட்டேன். ச.பா. எண் பற்றி இன்னொரு நாள் எழுத வேண்டும். ஆனால் சகல இடங்களிலும் வியாபித்திருக்கும் சர்வேஸ்வரெண் அது. பிறந்த குழந்தைக்கும் முதல் வேலையாய் அந்த எண் வாங்கி விட வேண்டும் – வரிச் சலுகை கிடைக்குமே!
இயந்திரக் குரல் மிகவும் பொறுமையாய் இருந்தது. வேகமாய் நான் எண்களை அழுத்தினாலும் அது சராசரியாய் ஒருவருக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று நிர்ணயித்திருந்த காலம் வரை காத்திருந்தது. பிறகு,
“நீங்கள் உள்ளிட்டது நான்கு – பூஜ்ஜியம் – ஆறு – …” ஒன்பது இலக்கங்களையும் மெதுவாக மீண்டும் எனக்கே சொல்லிக் கொடுத்தது. அப்புறம் மனப்பாடம் ஆகாமல் என்ன செய்யும் ?
“இது சரியெனில், எண் ஒன்றை அழுத்துங்கள். தவறு எனில் இரண்டு”. ஆஆஆ… இங்கு பொறுமை இழந்து பயனில்லை என்று அதில் பாதியை மட்டும் இழந்து அழுத்தினேன் – ஒன்று.
“உங்கள் கணக்கு இருப்பு – பூஜ்ஜிய டாலர். நீங்கள் இம்மாதம் கட்ட வேண்டிய தவணை ஒன்றுமில்லை. நீங்கள் பயன்படுத்த இருக்கும் அளவு இவ்வளவு”
விலாவாரியாகப் புள்ளி விவரம் துள்ளி வந்து வெளியே விழுந்தது. அதோடு விட்டதா ?
“நீங்கள் இந்த விவரத்தைத் திரும்பக் கேட்க வேண்டுமெனில் மீண்டும் எண் ஒன்றை அழுத்துங்கள் !”
ஐயா… பூஜ்ஜிய டாலர் விவரம் ஒரு முறை கேட்டால் நினைவிருக்காதா ? எனக்கு யாரிடமாவது பேச வேண்டும். இன்னும் எத்தனை எண்கள் தாண்ட வேண்டுமோ தெரியவில்லையே. ஹ்ம்ம்.. பல சமயம் பூஜ்ஜியத்தை அழுத்தினால் எல்லாவற்றையும் தாண்டி நேரே யாரிடமாவது பேசும் வழி கிடைத்துவிடும் என்று எனக்குத் தெரிந்த குறுக்கு வழியைப் பாவித்தேன். பாவிகள் அதனையும் கண்டு பிடித்து அடைத்து விட்டார்கள்.
“மன்னிக்கவும். உங்கள் தேர்வு சரியானதல்ல. எனக்குப் புரியவில்லை. மீண்டும் முதன்மைப் பட்டிக்குச் செல்ல எண் ஒன்று. இதே பட்டிவிவரம் கேட்க எண் இரண்டு. இந்தப் பேச்சைத் துண்டிக்க எண் ஒன்பது”.
சரி சரி, பேச்சைத் துண்டிக்கவா இவ்வளவு நேரம் போராடிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் பொறுமையாய் முதன்மைப் பட்டியையும் இன்னும் மூன்று பட்டிகளையும் தாண்டிச் சென்றால் அப்பாடா கிடைத்தது எனக்கு வேண்டிய பட்டித் தேர்வு – “உங்கள் (இ)ரசீது பற்றிய கேள்வியாயின் அழுத்துக எண் இரண்டு”.
நன்றாக ஓங்கியே அழுத்தினேன்.
இரண்டொரு விநாடிகள் கழிந்த பின் இன்னும் ஒரு தொலைபேசி அழைப்பொலி கேட்டது. எந்த ஊரில் இருந்து வேறு எந்த ஊருக்குப் போகிறதோ தெரியவில்லை. ஒருவேளை இந்தச் சேவையை இந்தியாவிற்கு அனுப்பி இருப்பார்களோ? அவ்வளவு ஒன்றும் பெரிய வங்கி இல்லையே இது? எப்படியோ ஒரு ஆளோடு இனிப் பேசி விடலாம். பரவாயில்லை. இது என் பொறுமைக்குக் கிடைத்த பரிசு. இன்றைக்கு இந்த வேலையை முடித்து விடலாம் என்று நான் சற்றே பெருமூச்சு விட எண்ணுகையில் அழைப்பு மணி நின்று ஒரு குரலொலி கேட்டது.
“எங்களை நீங்கள் இன்று அழைத்ததற்கு நன்றி. ஆனால் எங்களுடைய அலுவலகம் இப்போது மூடப்பட்டுள்ளது. தயவு செய்து மீண்டும் எங்கள் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளுங்கள். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை – கிழக்குப் பகுதி நேரம். சென்று வருக. வணக்கம்”
அடக் கஷ்டமே! இந்த அபூர்வச் செய்தியைக் கேட்க இத்தனை கடவுகளை நான் தாண்டியிருக்க வேண்டுமா ? முதல் செய்தியாய் இதனைச் சொல்லி இருக்கலாமே !
ஒரு கஷ்டமராகித் தொலைபேசியைத் தொங்கப் போட்டுவிட்டு எழுந்தேன்.
I dont usually call the Kashtomer “service” in the evenings and weekends. i think the best time is very early in the morning. It works!!
:-))
இதுமாதிரி கேவலமான IVRS பல பாத்தாச்சு. இதுல ‘I’ மட்டும் எப்பவும் மிஸ்ஸிங் 🙁
இந்தா பாருங்க பரி. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லிடுங்களேன் 🙂 IVRS ?
இப்பிடி தான் ஒரு நாள் ஊருக்கு போன் போடறதுக்கு முன்னாடி இங்கிருக்கிற(லண்டன்) வங்கிக்கு போட்டேன். ரொம்ப நேரம் பொறுமையை சோதிச்சுட்டு ஒருத்தர் பேசினார். ஏதோ பொறி தட்ட எங்கேர்ந்து பேசுரீங்கனு கேட்டேன் …
“சென்னை”னார் …ஆடி போய்டேன்.
IVRS- Interactive Voice Reponse System
கஷ்டமர் சர்வீஸ்
ரெண்டு வாரத்துக்கு முன் ஒருநாள் ஆபீஸ் ஃபோனுக்கு ஒரு கால். எடுத்துக் கேக்ம.
—