Feed on
Posts
Comments

ஒரு வாரமாய்ப் பதிவுகளின் பக்கம்வரமுடியவில்லை. “இப்படி ஒரு காரணம்”என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குத் தனியான ஒரு காரணம் இல்லை. ஆனால் பல காரணங்களின் சேர்க்கையால் இந்த நிலை. அலுவலக வேலை எடுத்துக்கொண்ட அதிக நேரம், அழுத்தம் இவற்றுடன் பெண்கள், மனைவி வழியாய் இறுதியில் என்னையும் பிடித்து வாட்டியஒரு வாரச் சளி இருமல். தொலைதூரத்தில் இருந்து வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள் உடன் கழித்தமூன்று நாட்கள். இப்படி…

இவற்றோடு இன்னும் தாக்கல்செய்து முடிக்க வேண்டிய வருமான வரி அறிக்கை இன்னும் பாக்கி இருக்கிறது. இதுபோல் இன்னும் சில தேங்கிய வேலைகள். அதனால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வரவேண்டாமா என்று தான் பார்த்தேன். ஆனாலும், உடல் உள்ளச் சோர்வுகள் நீங்கிய ஒரு தருணத்தில் வலைப்பக்கங்களுக்குச் சென்று மேய்ந்து வந்ததில் மீண்டும் ஒரு தெம்பு. சில நண்பர்கள் இங்கேயே வந்து”என்னப்பா காணோம்” என்றும் கேட்டு விட, ஒரு உற்சாகம். அது தான் இப்படி ஒரு சாக்குப் பதிவு செய்து விட்டு வந்துவிடலாம் என்று வந்துவிட்டேன்.

Continue Reading »

இந்த வாரம் தினமும் ஒரு பதிவேனும் செய்துவிட வேண்டும் என்று வைத்திருந்த திட்டமும் உறுதியும் கடைசி இரண்டு நாட்களாகச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை.

March14-RS-self1.png

முதலில் பொது விஷயங்கள் பற்றிப் பேசினாலும், சென்ற பதிவில் எனது சொந்த விஷயம், என்னைச் சுற்றிய ஒரு நிகழ்வு பற்றி எழுதி இருந்தேன். இது போன்றவை வலைப்பதிவுகளில் இடம் பெறலாமா எனில், என்னைப் பொருத்தவரை இது போன்றவற்றிற்குத் தான் பதிவுகளில் முதன்மையான் இடம் என்பேன். நமது பதிவுகளில் கதாநாயகர்கள் நாமே. நாம் பார்த்த படித்த கேட்ட சங்கதிகள், நம் உணர்வில் தாக்கம் உண்டாக்கிய விஷயங்கள், நமது படைப்பு, ஆர்வம், ஈடுபாடு பற்றிய தகவல்கள் இப்படி “ஒரு அந்தரங்கத் தொனி” வலைப்பதிவுகளுக்கு அவசியம்.

சகலராலும் சுட்டிக் காட்டப்படும் வெங்கட், பத்ரி போன்றோரின் பதிவுகளில் கூட இந்தத் தொனி இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். முதலாமவர் பொதுவாய்த் தொழில்நுட்பம், கணினியியல், இயற்பியல்/அறிவியல் சமாச்சாரங்கள் தான் எழுதுகிறார் என்பது போல் தோன்றினாலும், அதனூடே அவருடைய ஈடுபாடு/பங்களிப்பு என்ன என்று ஒரு ஓட்டமிருக்கும். இரண்டாமவர் பொதுவாய் செய்திகளை, நாட்டு நடப்பை அலசுவது போல் இருந்தாலும், கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அவற்றிலும் தனது அலசல்கள் கலந்திருப்பதைக் கவனிக்கலாம். செய்திகளைப் பற்றித் தான் நினைப்பது என்ன ? தான் கலந்து கொள்ளும் கூட்டங்கள் பற்றிய பதிவுகளில் தனக்குப் பிடித்த பிடிக்காத விஷயங்கள் என்னென்ன ? இப்படி.

“அந்தரங்கத் தொனி வேண்டும்” என்று இதையே தான் சென்ற வாரம் மாலனும் கூறியிருந்தார். இதை ஏன் பலர் காய்ச்சி இருந்தார்கள் என்று தெரியவில்லை. அந்தரங்கத் துணியை (our dirty laundry) அம்பலத்தில் போட வேண்டும் என்று அவர் கூறவில்லையே ! எது வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அந்த எதுவையும் தன் விருப்பு வெறுப்புக்களோடு தன் சுய கருத்துக்கள் மற்றும் விமரிசனங்களோடு எழுத வேண்டும் என்று தானே கூறினார்.

வலைப்பதிவுகளோடு வலைத்தளங்கள், மடற்குழுக்கள் என்று சகல விஷயமும் பற்றி எழுதி இருந்ததில் அவர் கூற வந்தது சற்றே கலங்கி இருக்கலாம்.

அடிப்படையில் வலைப்பதிவுகள் எல்லாமே ஏதாவது வலைத்தளங்களில் இருக்கும் வலைப்பக்கங்கள் தான். ஆயினும் அவற்றிற்கு என்று சில இலக்கணங்கள் இருக்கின்றன என்னும் கருத்தில் மாலனோடு நானும் சிறிது ஒத்துப் போகிறேன்.அந்த இலக்கணங்கள் சாதாரண வலைத்தளத்தில் இருந்து வலைப்பதிவுகளை வித்தியாசப் படுத்திக் காட்டுகின்றன.

சட்ட திட்டங்கள் பற்றிச் சொல்லவில்லை. வரைமுறைகள் என்பது பற்றியும் நான் கூறவில்லை. வலைத்தளத்தையோ வலைப்பதிவையோ யாரும் எப்படி வேண்டுமானாலும் பாவிக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அதிகம் மாறாத ஒருவரின் படைப்புக்களைக் கொண்ட தளத்தை ஏன் வலைப்பதிவு என்று வகைப்படுத்த வேண்டும் ? பதிவு என்பதே கால ஓட்டத்தை ஒட்டியது தானே.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மாலனோடு வரிந்துகட்டிக் கொண்டு சண்டைக்கு வந்த பெரும்பாலானோரின் வலைப்பதிவுகள் அந்த இலக்கணத்துக்கு உட்பட்டுத் தான் இருக்கின்றன் என்பது தான் !

தனது இரண்டாவது மடலில் உணர்ச்சிவயப்பட்டு நிறைய உவமைகள் கொடுத்திருந்தார் மாலன். ஆனால் அவற்றினூடே அவர் சொல்ல வந்த கருத்துக்கள் சரியானதாகவே இருந்தது என்பது என் அபிப்பிராயம்.

உணர்ச்சிவயப்பட்டு மரத்தடியிலும் காப்பிக்கடையிலும் நடக்கிற சண்டைகள் பற்றிச் சுட்டிக் காட்டி இருக்கிறார் மூக்கு சுந்தரராஜன். அதில் நுழைந்து கொஞ்சம் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை. குழுக்கள் இரண்டோ இத்தனையோ எதற்கு என்று மட்டும் இனிமேல் நான் கேட்கவே மாட்டேன்! சுந்தரராஜனின் பதிவுகள் சமீபத்தில் என்னைக் கவர்ந்த இன்னொன்று.

டுபுக்கு என்று புனை பெயர் வைத்துக் கொண்டவர் மிகவும் வேடிக்கையான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரராய் இருக்கிறார். மிகவும் சுவாரசியமாய்க் கதை சொல்லும் திறன் இவரிடம் இருக்கிறது. ஒரு கதை எழுதிப் பரிசு வாங்கியதனால் இனிக் கதை எழுதுவதில்லை என்று முடிவெடுத்ததை ஒரு கதை வடிவில் அழகாகச் சொல்லி இருக்கும் இவர் பிறகு நிறையக் கதை எழுதி இருக்கிறாரா, இல்லை இனி எழுதுவாரா, இல்லை இந்தக் கதை வடிவப் பதிவுகளே போதும் என்று விட்டுவிடுவாரா – தெரியவில்லை. வந்து ஒரு கதை சொல்லுங்கள் டுபுக்கு (என்னய்யா பேர் இது ?).

தனது இங்கிலாந்துப் பயணத்தைக் கதை வடிவில் பதிவு செய்கிறார் கண்ணன் பார்த்தசாரதி. இவர் எப்போது இந்தியாவில் இருக்கிறார் எப்போது இங்கிலாந்தில் இருக்கிறார் என்று தான் தெரியவில்லை.

சமீபத்தில் தான் எழுத வந்திருக்கும் ஹரி தொடர்ந்து எழுத வேண்டும். ஆரம்பத்தில் சில சமயம் வெறும் தகவல் மட்டுமே பதிந்தார். பங்கு விற்ற விலை என்பதில் விஷயம் ஒன்றும் இல்லை. இதை நான் அடிமாட்டு விலைக்கு வாங்கி இன்று இவ்வளவு விலைக்கு விற்றதனால் மூன்று நான்கு மடங்கு லாபம் கண்டேன் (!) என்று எழுதினால் அது விஷயம். அல்லது அந்த நிறுவனம் பற்றி ஒரு சிறு அலசல், இவ்வளவு நல்ல நிறுவனம் ஏன் இவ்வளவு குறைந்த பங்கு விலையில் விற்கிறது என்று தெரியவில்லை என்பது போல் ஒரு கருத்தோட்டம். இப்படி. ஆனால், இதைத் தவிர இவரது மற்ற பதிவுகளில் இப்படியான அலசல்கள் நன்றாக இருக்கிறது.

பல இலக்கிய விஷயங்களுக்கும், இரவல் சரக்குகளுக்கும், அளவில்லாச் சுட்டிகளுக்கும் பாஸ்டன் பாலாஜி பக்கம் செல்லுங்கள். பல விதமான விஷயங்களையும் தரும் இவர் கூடவே இத்தனை சுட்டிகளில் ஓரிரண்டைத் தான் நீங்கள் பார்க்க முடியும் என்றால் இங்கு செல்லுங்கள் என்று வழிகாட்டும் சிறு குறிப்புக்களும் எழுதினாரென்றால் இன்னும் கொஞ்சம் பயனுள்ளதாய் இருக்கும் என்பது என் கருத்து. இருக்கிற RSS/Atom செய்தியோடைகளை எல்லாம் திரட்டிக் கொடுத்து ஒரு சேவை செய்திருக்கிறார் இவர். கூடவே அவற்றை அவ்வப்போது இற்றைப் படுத்தும் வேலையையும் செய்வாரா ?

இன்னும் பலரது பதிவுகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இரண்டு நாள் இந்தப் பக்கம் வரமுடியாததால் முடியவில்லை. சிலர் தமது பக்கங்களைச் சமீபத்தில் இற்றைப் படுத்தவில்லை. எனினும் நன்றாக எழுதுகிற அவர்களும் இனி வரும் புதியவர்களும் ஒரு சுய ஊக்கத்துடன் தொடர்ந்து எழுத முயல வேண்டும். தமிழ்ப் பதிவுகளின் உண்மையான எண்ணிக்கை நூறைத் தோடும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்.

வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.

ஒரு படங் கூடப் போடலேன்னா எப்புடின்னு குரல் கேட்டுதுங்க்ளா, சரி இன்னிக்கு ஒரு படம் போட்டுர வேண்டீது தான்னு நெனச்சேன்.

எங்க ஊருல இன்னும் குளுரடிக்குதுங்க. ரெண்டு நாளக்கி முன்னால பனிக்கொட்டல் ஒரு ஆறேலு இன்ச்சு இருக்குமுங்க. (“ழ” எல்லாம் கொங்கு நாட்டில கொஞ்சம் தகராறுங்க – நாங்க பலந்தான் சாப்பிடுவோம். வால எலயுல தயிர் சாதம் சாப்பிட்டா ஒரு கூடுதல் சுவை வந்துருமுங்க!) மார்ச்சு பாதியாச்சு இன்னும் இப்படிக் கொட்டுது பனி! சீக்கிரமா வருமா வெய்யக்காலமுன்னு காத்துக்கிட்டு இருக்கோம்.

போன வருசம் வசந்த காலத்தில எங்கூரு ஏரிக்கரைக்கு ஒருநா போயிருந்தோ(ம்). அப்போ எம்பொண்ணுங்க மண்ணுல தண்ணி ஊத்தி கல்லு பொருக்கி ஊடு கட்டி என்னமோல்லாம் வெளயாடிச் சந்தோசமா இருந்தாங்க. அதுக சந்தோசமா இருக்கறதப் பாக்குறதுக்கு நமக்கும் சந்தோசந்தேன். அடிக்கடி இப்படி எதாச்சும் பண்ணினா நல்லாருக்குமுன்னு இன்னிக்குத் தான் எங்க ஊட்டுக்காரியும் நானும் பேசிக்கிட்டிருந்தோம்.

March14-RS-kids.jpg

சும்மா ஓடிக்கிட்டு மேனேஜர் பன்ற அரசியலுக்கு நடுவ மாட்டிக்கிட்டு ராத்திரி ஏலு மணிக்கு ஊட்டுக்கு வந்துகிட்டு, அதிகமா நண்பர்கள் யாரயும் பாக்க முடியாம பேச முடியாம வாழ்க்க கொஞ்சம் பழய வண்டி மாதிரி ஓடிக்கிட்டு இருக்கறப்போ இப்படி ஒருநா போயி ஏரிக்கரையில மண்ணுல கல்லுல வெளயாடினா நல்லாத்தான் இருக்கும். மொத்தமா நம்ம ஊருக்குக் குடி போயிரலாமான்னும் தோணுது சில சமயம் அந்த மனசு தவிக்கிற வேலையிலே…

இந்த வாரம் எனக்கு வலைப்பூ என்கிற வலைப்பதிவிதழின் ஆசிரியர் வேலை. தினமும் ஒரு பதிவாவது செய்து விட வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறேன். பாதிக் கிணறு தாண்டியாகிவிட்டது. முன்னரே இங்கு வந்து இந்தச் செய்தியைச் சொல்லாமல் போய் விட்டேன்.

வலைப்பூ ஒரு நல்ல முயற்சி. ஆரம்பித்து வைத்தமதிக்கும் இப்போது உதவிக்குச் சேர்ந்திருக்கும் காசிக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றம் தருவதாகவும், சக பதிவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கிறது.அதிலும் இந்த வாரம் முதன் முதலில் மூவபிள் டைப்பிற்குச் செல்கிறது. ஆரம்பித்து இருபத்தைந்து வாரங்கள் ஆகி விட்டது என்று என்னை வெள்ளிவிழா ஆசிரியராக்கி இருக்கிறார்கள். “சில்வராசிரியராசு” என்று என் பெயரை இணைத்துப் பகிடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!


எனக்கு அளிக்கப்பட்ட அறிமுகத்தையும் எனதுபதிவுகளையும் இவ்வாரம் வலைப்பூவில் படியுங்கள்.  இங்கு மீண்டும் அடுத்த வாரத்தில் சந்திப்போம்.

கவிதைகள் மட்டுமே இடம்பெறும் கவிதைப் பதிவுகள் பற்றி நான் எழுதப் போவதில்லை என நினைத்திருந்தேன். அவற்றைப் படிக்கத் தேவையான அமைதியான சூழலும், மனமும், அவசரகதி வாழ்க்கையில் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அதனால் அந்தப் பக்கமெல்லாம் நான் அதிகம் போவதில்லை என்பதும் ஒரு காரணம். அதோடு இவற்றின் மீது எனக்கு இன்னும் ஒரு குறைபாடும் உண்டு. வலைப்பதிவுகளாய், அவ்வப்போது எழுதப்படும் கவிதைகளைப் பதிவதாய் இல்லாமல், பலர், தங்கள் கவிதைத் தொகுப்பைத் தொகுத்து வைக்கும் ஒரு வலைத்தளமாகத் தான் வைத்திருக்கிறார்கள். மொத்தமாய் ஒரு நாள் பதிவு செய்துவிட்டுப் பின் காணாமல் போய் விடுகிறார்களா ? இல்லை, ஒரே பதிவில் புதிய கவிதைகளைச் சேர்த்து வைக்கிறார்களா ? இரண்டு ரகமும் உண்டென்று எண்ணுகிறேன். முதலாவதாயின் என்னவோ சடத்துவமாய் இருப்பது போல் உணர்வு. கவிதைகளுக்கும் சரி, வலைப்பதிவுகளுக்கும் சரி, ஒரு உயிர் வேண்டுமே ! அதனால் காணாமல் போனவர்கள் சற்று உயிர் கொடுங்கள். இரண்டாவதாயின் RSS போன்ற வலைப்பதிவு நுட்பங்களின் பயன்களை முற்றிலும் இழந்து யார் என்று இற்றைப் படுத்தினார்கள் என்ற அறிவு இல்லாமல் போய் விடுகிறது.

இப்படியாக இருக்கும் வலைப்பதிவுகளை, இப்படியே வைத்திருக்கும் உரிமையும் சுதந்திரமும் இவர்களுக்கு இருக்கிறது என்று நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இவை வலைப்பதிவுகளுக்கான இலக்கணங்களுக்கு (“அய்யய்யோ அடிக்க வராங்க!”) உட்படாத, வலைப்பதிவுப் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் வலைத்தளங்கள் தானே தவிர வேறில்லை. இந்தக் கருத்தில் மாலன் சென்ற வாரம் கூறிய சிலவற்றோடு நான் ஒத்துப் போகிறேன். தவிர ஒரு கவிதைத் தொகுப்பைப் படிக்கும் முன்னர் சில குறிப்புக்கள் இருந்தால் நன்றாக இருக்கும். புத்தக வடிவில் வெளி வருவதில் கூட ஆசிரியரைப் பற்றிய ஒரு குறிப்பு இருக்கும். கவிஞரின் முன்னுரை, சில கவிதைகளுக்கான குறிப்புக்கள் என்று அவர்களின் எழுத்தோடு இனம் கண்டு கொள்ளக் கூடிய விஷயங்கள் இருக்கும். அவை எதுவும் இல்லாத இந்த வலைத் தளங்கள் என்னைப் பெரிதும் ஈர்ப்பதில்லை.

இந்தக் குறைபாடுகள் இல்லாத சில கவிதைப் பதிவுகளும் இருக்கின்றன. குறிப்பாய் மீனாக்ஸ். பெரும்பாலும் கவிதைகள் தான் எழுதினாலும் இவர் அடிக்கடி இற்றைப்படுத்துகிறார். அதோடு, கவிதைகளுக்கு முன் ஒரு சிறு குறிப்பும் தருகிறார். தனது பதிவுகளுக்குக் கிடைக்கும் கருத்துக்களையும் மற்றும் பதிவுலக நிகழ்வுகளையும் மறுபடியும் எழுதக் கருப் பொருளாய் எடுத்துக் கொள்கிறார். யாரேனும் விமர்சித்து விட்டாலும் சிலசமயம் கோபித்து அதற்கும் கவிதை எழுதித் தள்ளி விடுகிறார். பெரும்பாலும் காதல் கவிதைகள் எழுதுவதால் ஒரு இளமையான கூட்டம் இவர் பதிவுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

எல்லோரும் கவிதைகளுக்குக் குறிப்பு எழுத வேண்டும் என்பதில்லை. ஆனால் (“கோனார்” உரை போல 🙂 ) சில கவிதைகளின் விளக்கங்கள் படிக்கும் போது (தான்) (இன்னும்) அருமையாகப் புரிகிறது. கால் மிதித்து உருளும் சானைக்கல்லில் கத்தியைத் தீட்டுகையில் எழும் தீப்பொறி – அப்பா என்ன ஒரு சக்தி வாய்ந்த உவமை. நமது கண் முன்னே அந்தக் காட்சியைக் கொண்டு வந்து நிறுத்தும் திறமை சுந்தரவடிவேலுவிற்கு இருக்கிறது.

கவிதைகளில் மட்டுமல்ல. சிலர் தமது உரைகளிலேயே அருமையான உவமைகளைத் தேக்கி வைக்கின்றனர். கப்பல்லே பொண்ணு வருதுன்னா எனக்கொண்ணு, எங்கப்பனுக்கு ஒண்ணு’ன்னு சொல்ற மாதிரி என்று படிக்கையிலேயே அட என்ன அருமை என்று ஒரு உற்சாகம். இப்படி வேடிக்கையான எழுத்துக்களுக்குப் பெயர் போன ஓசியிலே மீன் பிடிக்கிற காசி ஒரு கவிதை எழுதினால் எப்படி இருக்கும் ? (எல்லோரும் ஒரு ஓ போடுங்க!)

குறிப்பிடத்தக்க இன்னொரு கவிதைப் பதிவு – புதிதாய் இந்தப் பதிவுலகில் பிரவேசித்திருக்கிற பிரேம் நிமல். ஆச்சரியத்தக்க வகையில் நான் கேட்கும் சில இலக்கணங்கள் இவரின் அம்மா அப்பா பதிவில் இல்லை எனினும் இவரது பதிவில் இருக்கிறது ! அங்கங்கே இவரின் வண்ணப் படங்களுடனே இருக்கும் கவிதைப் பதிவுகள் எழுத்துலகில் இவரது பயணத்திற்கு நல்ல தொடக்கமாய் அமையும். அடுத்த தலைமுறை தயாராகிக் கொண்டு இருக்கிறது என்று மகிழ்ந்து கொள்ளலாம். மூளை எங்கே என்று இவர் எழுதி இருப்பதைப் படித்துப் பாருங்கள். எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிவதில் எதையோ சொல்லாமல் சொல்வது போலில்லை? (ஒரு வேளை “உன் மூளை எங்க போச்சு?” என்று இவரது அம்மா ஏதேனும் திட்டியதற்கு இப்படி இடக்காக பதில் தந்திருப்பாரோ? :-)) இவருக்கு ஒரு சின்ன அறிவுரை. நிறையப் படியுங்கள். நிறைய எழுதுங்கள். முயற்சியும் பயிற்சியும் எல்லாவற்றிற்கும் முக்கியம். வாழ்த்துக்கள். இவருக்கு என்ன வயது இருக்கும் என்று யூகிக்கிறீர்களா பார்க்கலாம். ஆனால் நிச்சயம் இனிமேல் நான் தான் சின்னப் பையன் என்று சுவடுகள் சங்கர் சொல்லிக் கொள்ள முடியாது. சங்கர், கிட்டத்தட்ட எனக்கும் உங்களுக்கும் இருக்கும் வயது வித்தியாசம் உங்களுக்கும் இவருக்கும் இருக்கிறது.

சங்கரின் பதிவுகளும் இனிமை. அருமை. சிறு வயது தான் என்றாலும் எழுத்திலே உரம் அதிகம். செய்வது தவறு எனில் அது சங்கராச்சிரியராய் இருந்தால் தான் எனக்கென்ன ? என்று கேள்வி கேட்கும் துணிவான எழுத்து. (சங்கர், உங்கள் பக்கம் வேறு வகையான மதம்பிடித்தவர்களால் அடிக்கடி கடத்தப்படுகிறது – Aaron’s Bible). அது சரி, இன்னும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் உறுப்பினர் ஆகவில்லையா ?

இந்த வயதில் நானெல்லாம் என்ன எழுதுவது என்று தெரியாமல் கிறுக்கிக் கொண்டிருக்க, சங்கர் குவாண்டம் இயற்பியல் பற்றி விரைவில் எழுதப் போகிறார். (சங்கர், இனிமே நீங்க எழுதித் தான் ஆகணும், தப்பிக்க முடியாது!). ஆமாம், அப்படியே ஒரு கவிதையும் எடுத்து விடுங்க பார்ப்போம்.

கவிதை பற்றி எழுதப் போவதில்லை என்று சொல்லிவிட்டு இவ்வளவு எழுதியதற்காக எனது பிராயச்சித்தம் – பழங்காலத்தில் நான் எழுதிய ஒரு நாலு வரிக் கவிதை (?) – இங்கே.

« Newer Posts - Older Posts »