வராத வாரம்
Mar 28th, 2004 by இரா. செல்வராசு
ஒரு வாரமாய்ப் பதிவுகளின் பக்கம்வரமுடியவில்லை. “இப்படி ஒரு காரணம்”என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குத் தனியான ஒரு காரணம் இல்லை. ஆனால் பல காரணங்களின் சேர்க்கையால் இந்த நிலை. அலுவலக வேலை எடுத்துக்கொண்ட அதிக நேரம், அழுத்தம் இவற்றுடன் பெண்கள், மனைவி வழியாய் இறுதியில் என்னையும் பிடித்து வாட்டியஒரு வாரச் சளி இருமல். தொலைதூரத்தில் இருந்து வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள் உடன் கழித்தமூன்று நாட்கள். இப்படி…
இவற்றோடு இன்னும் தாக்கல்செய்து முடிக்க வேண்டிய வருமான வரி அறிக்கை இன்னும் பாக்கி இருக்கிறது. இதுபோல் இன்னும் சில தேங்கிய வேலைகள். அதனால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வரவேண்டாமா என்று தான் பார்த்தேன். ஆனாலும், உடல் உள்ளச் சோர்வுகள் நீங்கிய ஒரு தருணத்தில் வலைப்பக்கங்களுக்குச் சென்று மேய்ந்து வந்ததில் மீண்டும் ஒரு தெம்பு. சில நண்பர்கள் இங்கேயே வந்து”என்னப்பா காணோம்” என்றும் கேட்டு விட, ஒரு உற்சாகம். அது தான் இப்படி ஒரு சாக்குப் பதிவு செய்து விட்டு வந்துவிடலாம் என்று வந்துவிட்டேன்.
நீண்ட குளிர்கால முடங்கலுக்குப் பிறகு இன்று தான் குளிர்ப்பேருடை ஏதும் அணியாமல் வெளியே செல்ல முடிகிற நிலை. இரண்டு பெண்களையும் அழைத்துக் கொண்டு விளையாட்டுப் பூங்காவிற்குச் சென்று வந்தேன். இரண்டு மணி நேரம் ஆட்டம் இருந்தும் திரும்பி வரத் தயக்கம். அந்த ஊஞ்சலில் வைத்து ஆட்ட, அட அப்படி ஒரு சந்தோஷமா ? திரும்புகையில் சிறுமிகள் இருவருக்கும் சற்றுச் சோர்வு தான். கணினியில் விளையாடுகிறேன் என்று அவர்கள் உட்காருவதை விட இது பரவாயில்லை தான். அதனால் அடிக்கடி இப்படி வெளியே கூட்டிச் சென்று ஓடி விளையாட விட வேண்டும்.
இரவு உறங்க வைக்கச் செல்கையில் பெரியவள் கூறினாள். “appaa, ammaa said if you are in your blogs, then you are playing. Only if you are doing something else, then you are working”.
அதைக் கேட்டுச் சிரித்தபடியே நான் சொன்னேன். “இல்லம்மா, விளையாடுவதற்கும், வேலை செய்வதற்கும் நடுவே இன்னொன்று இருக்கிறது. அதுக்குப் பெயர் தான் hobby என்னுடைய blogs எனக்கு ஒரு hobby மாதிரி” .
“Hobby அப்பா ?”
“வேலை என்பது நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ கண்டிப்பாகச் செய்ய வேண்டியது. விளையாட்டு என்பது நாம் விரும்பும் போது செய்து கொள்வது – அது ஒரு ஜாலி. ஈடுபட முடியவில்லை என்றாலும் அதில் இழப்பு ஒன்றும் இல்லை. ஆனால் hobby என்பது சுவாரசியமாகவும் இருப்பது. நாம் விரும்பும் போது செய்து கொள்வது. ஆனாலும் ஒரு ஒழுக்கத்துடன் செய்வது. அது நமது படைத்தல் திறனை வளர்த்துக் கொள்ளும் ஒரு வழிமுறை. உதாரணத்திற்கு ஒரு ஓவியம் வரைவது, கவிதை எழுதுவது இதெல்லாம்”
“அப்பா, நான் கூடத்தான் ஒரு hobby வைத்திருக்கிறேன். நான் நிறைய வரைவேனே”
ஓ! வரைவேன், வெட்டுவேன், ஒட்டுவேன் என்று ஒரு அறை பூராவும் குப்பை போட்டு வைத்திருப்பாளே ! அதையும் போய் சுத்தம் செய்ய வேண்டும். வந்திருந்த நண்பர் மகனோடு ஆட்டம் போட்டுக் கொண்டு இரண்டு நாட்களாய்க் கொட்டி வைத்த விளையாட்டுப் பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க வேண்டும்.
“இல்லம்மா, அது வந்து, நீ இப்போ தான் கற்றுக் கொண்டு வருகிறாய். இன்னும் கொஞ்சம் வளர்ந்து, நன்றாகக் கற்றுக் கொண்டு, நிறைய நன்றாக வரைந்து ஒரு ஒழுக்கமாக அவற்றைச் சேகரித்து அமைத்து வைத்தாயெனில் அதற்குப் பிறகு தான் அது ஒரு படைத்திறன் (creativity) நிறைந்த ஒரு hobby”
“சரி, விடுங்கப்பா, நான் நாளைக்கு அம்மாகிட்டயே கேட்டுக்கறேன் !!”
உங்க வீட்டிலும் இதே கூத்து தானா ? 🙂
—abcdef
TITLE: காந்திக்குப் பக்கம்
STATUS: publish
CATEGORY: பொது
BODY:
பாஸ்டன் பாலாஜி பக்கத்தில் முதலில் பார்த்தபோது நானும் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். வேலைப் பளுவில் மறந்து விட்டேன். காலை நாலு மணிக்குத் தூக்கம் விட்டுப் போன இன்று இளவரசி பவித்ராவின் பக்கத்திலும் இதைப் பார்த்த போது அந்த ஆவல் வெளிப்பட்டு அந்தக் கேள்வி பதில் பகுதிக்குச் சென்று வந்தேன்.
முடிவுகள் என்னைக் காந்திக்குப் பக்கம் காட்டியது. 🙂 பவித்ராவின் பக்கத்தில் பாலாஜியின் பின்னூட்டத்தில் “மனசுக்குப் பட்டதைச் சொல்வது, (அ) மனசுக்குச் சரியெனப் பட்டதைச் சொல்வது” இதைப் பொருத்துத் தான் சரியான கணிப்பு அமைகிறது என்கிறார். ஹ்ம்ம்… நான் என்ன சொன்னேன் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், காந்திக்குப் பக்கமோ இல்லையோ, முடிவுகள் நான் எங்கு இருப்பேன் என்று நான் கணித்திருந்ததற்கு மிகவும் ஒத்தே வந்திருந்தது. (சில கேள்விகளுக்குப் புரியாமலே பதில் சொல்லி இருந்தாலும்).
இங்கு சென்றதன் இன்னொரு பயன். நீண்ட நாட்களாய் இந்த இடது (கம்யூனிசம்) வலது(கேப்பிட்டலிசம்) என்பது எங்கிருந்து வந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமே என்ற அரிப்பு இருந்து வந்தது. கம்யூனிச/கேப்பிட்டலிசக் கொள்கை விளக்கங்கள் வித்தியாசங்கள் இவை பற்றிய கேள்வி இல்லை. இவற்றிற்கு முறையே இடது வலது என்று ஏன் உலகம் முழுதும் பாவிக்கப் படுகிறது என்று அறிந்து கொள்ள ஒரு ஆவல்.
அந்தக் கேள்விக்கு விடையாக இங்கு ஒரு குறிப்பு இருந்தது. பிரதிநிதிகளின் சார்பு நிலையை ஒட்டி 1789ஆம் ஆண்டு பிரெஞ்சு மக்களவையில் இடது வலது பிரிவு என்று இருக்கைகளை வகைப்படுத்தி இருந்ததில் இருந்து வந்த வழக்கமாக இருக்கக் கூடும்.
மேலும் கொஞ்சம் தேடியதில் இடது வலது சார்ந்த அரசியல் பற்றி இன்னும் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. விரிவாய்ப் படிக்க இங்கு செல்லவும். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால் ஒவ்வொரு நாட்டையும் கலாச்சாரத்தையும் பிரச்சினைகளையும் பொருத்தும் அமைகிறது இந்த இட-வல வேறுபாடுகள். ஒவ்வொரு தேர்தலுக்கும் இடம் மாறும் எல்லாக் கட்சிகளையும் போலத் தாங்களும் இடம் மாறும் இந்திய இடது சாரிக் கட்சிகளின் உண்மையான கொள்கைகள் தாம் என்ன ?
அட நீங்களும் நம்ம கேஸ்தானா? (இடது, வலது பற்றி)
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் சோத்தாங்கை, பீச்சாங்கை வித்தியாசத்த தெரிஞ்சிகிட்டேன்(னு நெனச்சிக்கிட்டிருக்கேன்).
adede…neengalum namma side-aa? :-))