வணக்கத்துடன் விடைபெறுகிறேன்
Mar 21st, 2004 by இரா. செல்வராசு
இந்த வாரம் தினமும் ஒரு பதிவேனும் செய்துவிட வேண்டும் என்று வைத்திருந்த திட்டமும் உறுதியும் கடைசி இரண்டு நாட்களாகச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை.
முதலில் பொது விஷயங்கள் பற்றிப் பேசினாலும், சென்ற பதிவில் எனது சொந்த விஷயம், என்னைச் சுற்றிய ஒரு நிகழ்வு பற்றி எழுதி இருந்தேன். இது போன்றவை வலைப்பதிவுகளில் இடம் பெறலாமா எனில், என்னைப் பொருத்தவரை இது போன்றவற்றிற்குத் தான் பதிவுகளில் முதன்மையான் இடம் என்பேன். நமது பதிவுகளில் கதாநாயகர்கள் நாமே. நாம் பார்த்த படித்த கேட்ட சங்கதிகள், நம் உணர்வில் தாக்கம் உண்டாக்கிய விஷயங்கள், நமது படைப்பு, ஆர்வம், ஈடுபாடு பற்றிய தகவல்கள் இப்படி “ஒரு அந்தரங்கத் தொனி” வலைப்பதிவுகளுக்கு அவசியம்.
சகலராலும் சுட்டிக் காட்டப்படும் வெங்கட், பத்ரி போன்றோரின் பதிவுகளில் கூட இந்தத் தொனி இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். முதலாமவர் பொதுவாய்த் தொழில்நுட்பம், கணினியியல், இயற்பியல்/அறிவியல் சமாச்சாரங்கள் தான் எழுதுகிறார் என்பது போல் தோன்றினாலும், அதனூடே அவருடைய ஈடுபாடு/பங்களிப்பு என்ன என்று ஒரு ஓட்டமிருக்கும். இரண்டாமவர் பொதுவாய் செய்திகளை, நாட்டு நடப்பை அலசுவது போல் இருந்தாலும், கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அவற்றிலும் தனது அலசல்கள் கலந்திருப்பதைக் கவனிக்கலாம். செய்திகளைப் பற்றித் தான் நினைப்பது என்ன ? தான் கலந்து கொள்ளும் கூட்டங்கள் பற்றிய பதிவுகளில் தனக்குப் பிடித்த பிடிக்காத விஷயங்கள் என்னென்ன ? இப்படி.
“அந்தரங்கத் தொனி வேண்டும்” என்று இதையே தான் சென்ற வாரம் மாலனும் கூறியிருந்தார். இதை ஏன் பலர் காய்ச்சி இருந்தார்கள் என்று தெரியவில்லை. அந்தரங்கத் துணியை (our dirty laundry) அம்பலத்தில் போட வேண்டும் என்று அவர் கூறவில்லையே ! எது வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அந்த எதுவையும் தன் விருப்பு வெறுப்புக்களோடு தன் சுய கருத்துக்கள் மற்றும் விமரிசனங்களோடு எழுத வேண்டும் என்று தானே கூறினார்.
வலைப்பதிவுகளோடு வலைத்தளங்கள், மடற்குழுக்கள் என்று சகல விஷயமும் பற்றி எழுதி இருந்ததில் அவர் கூற வந்தது சற்றே கலங்கி இருக்கலாம்.
அடிப்படையில் வலைப்பதிவுகள் எல்லாமே ஏதாவது வலைத்தளங்களில் இருக்கும் வலைப்பக்கங்கள் தான். ஆயினும் அவற்றிற்கு என்று சில இலக்கணங்கள் இருக்கின்றன என்னும் கருத்தில் மாலனோடு நானும் சிறிது ஒத்துப் போகிறேன்.அந்த இலக்கணங்கள் சாதாரண வலைத்தளத்தில் இருந்து வலைப்பதிவுகளை வித்தியாசப் படுத்திக் காட்டுகின்றன.
சட்ட திட்டங்கள் பற்றிச் சொல்லவில்லை. வரைமுறைகள் என்பது பற்றியும் நான் கூறவில்லை. வலைத்தளத்தையோ வலைப்பதிவையோ யாரும் எப்படி வேண்டுமானாலும் பாவிக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அதிகம் மாறாத ஒருவரின் படைப்புக்களைக் கொண்ட தளத்தை ஏன் வலைப்பதிவு என்று வகைப்படுத்த வேண்டும் ? பதிவு என்பதே கால ஓட்டத்தை ஒட்டியது தானே.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மாலனோடு வரிந்துகட்டிக் கொண்டு சண்டைக்கு வந்த பெரும்பாலானோரின் வலைப்பதிவுகள் அந்த இலக்கணத்துக்கு உட்பட்டுத் தான் இருக்கின்றன் என்பது தான் !
தனது இரண்டாவது மடலில் உணர்ச்சிவயப்பட்டு நிறைய உவமைகள் கொடுத்திருந்தார் மாலன். ஆனால் அவற்றினூடே அவர் சொல்ல வந்த கருத்துக்கள் சரியானதாகவே இருந்தது என்பது என் அபிப்பிராயம்.
உணர்ச்சிவயப்பட்டு மரத்தடியிலும் காப்பிக்கடையிலும் நடக்கிற சண்டைகள் பற்றிச் சுட்டிக் காட்டி இருக்கிறார் மூக்கு சுந்தரராஜன். அதில் நுழைந்து கொஞ்சம் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை. குழுக்கள் இரண்டோ இத்தனையோ எதற்கு என்று மட்டும் இனிமேல் நான் கேட்கவே மாட்டேன்! சுந்தரராஜனின் பதிவுகள் சமீபத்தில் என்னைக் கவர்ந்த இன்னொன்று.
டுபுக்கு என்று புனை பெயர் வைத்துக் கொண்டவர் மிகவும் வேடிக்கையான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரராய் இருக்கிறார். மிகவும் சுவாரசியமாய்க் கதை சொல்லும் திறன் இவரிடம் இருக்கிறது. ஒரு கதை எழுதிப் பரிசு வாங்கியதனால் இனிக் கதை எழுதுவதில்லை என்று முடிவெடுத்ததை ஒரு கதை வடிவில் அழகாகச் சொல்லி இருக்கும் இவர் பிறகு நிறையக் கதை எழுதி இருக்கிறாரா, இல்லை இனி எழுதுவாரா, இல்லை இந்தக் கதை வடிவப் பதிவுகளே போதும் என்று விட்டுவிடுவாரா – தெரியவில்லை. வந்து ஒரு கதை சொல்லுங்கள் டுபுக்கு (என்னய்யா பேர் இது ?).
தனது இங்கிலாந்துப் பயணத்தைக் கதை வடிவில் பதிவு செய்கிறார் கண்ணன் பார்த்தசாரதி. இவர் எப்போது இந்தியாவில் இருக்கிறார் எப்போது இங்கிலாந்தில் இருக்கிறார் என்று தான் தெரியவில்லை.
சமீபத்தில் தான் எழுத வந்திருக்கும் ஹரி தொடர்ந்து எழுத வேண்டும். ஆரம்பத்தில் சில சமயம் வெறும் தகவல் மட்டுமே பதிந்தார். பங்கு விற்ற விலை என்பதில் விஷயம் ஒன்றும் இல்லை. இதை நான் அடிமாட்டு விலைக்கு வாங்கி இன்று இவ்வளவு விலைக்கு விற்றதனால் மூன்று நான்கு மடங்கு லாபம் கண்டேன் (!) என்று எழுதினால் அது விஷயம். அல்லது அந்த நிறுவனம் பற்றி ஒரு சிறு அலசல், இவ்வளவு நல்ல நிறுவனம் ஏன் இவ்வளவு குறைந்த பங்கு விலையில் விற்கிறது என்று தெரியவில்லை என்பது போல் ஒரு கருத்தோட்டம். இப்படி. ஆனால், இதைத் தவிர இவரது மற்ற பதிவுகளில் இப்படியான அலசல்கள் நன்றாக இருக்கிறது.
பல இலக்கிய விஷயங்களுக்கும், இரவல் சரக்குகளுக்கும், அளவில்லாச் சுட்டிகளுக்கும் பாஸ்டன் பாலாஜி பக்கம் செல்லுங்கள். பல விதமான விஷயங்களையும் தரும் இவர் கூடவே இத்தனை சுட்டிகளில் ஓரிரண்டைத் தான் நீங்கள் பார்க்க முடியும் என்றால் இங்கு செல்லுங்கள் என்று வழிகாட்டும் சிறு குறிப்புக்களும் எழுதினாரென்றால் இன்னும் கொஞ்சம் பயனுள்ளதாய் இருக்கும் என்பது என் கருத்து. இருக்கிற RSS/Atom செய்தியோடைகளை எல்லாம் திரட்டிக் கொடுத்து ஒரு சேவை செய்திருக்கிறார் இவர். கூடவே அவற்றை அவ்வப்போது இற்றைப் படுத்தும் வேலையையும் செய்வாரா ?
இன்னும் பலரது பதிவுகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இரண்டு நாள் இந்தப் பக்கம் வரமுடியாததால் முடியவில்லை. சிலர் தமது பக்கங்களைச் சமீபத்தில் இற்றைப் படுத்தவில்லை. எனினும் நன்றாக எழுதுகிற அவர்களும் இனி வரும் புதியவர்களும் ஒரு சுய ஊக்கத்துடன் தொடர்ந்து எழுத முயல வேண்டும். தமிழ்ப் பதிவுகளின் உண்மையான எண்ணிக்கை நூறைத் தோடும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்.
வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.