Feed on
Posts
Comments

காட்டு வேலியில மொளச்ச
கொவ்வாப் பழமும் – வெல்லம்
போட்டு இடிச்சுத் தின்ன
புளியங் கொழுந்தும்

மாட்டு வண்டி லாரியில
உருவுன சக்கரக்கரும்பும்
உலுக்குன மரத்துக் கடியில
பொறுக்குன கோணப் புளியங்காவும்

கன்னம் பூராஇலுக்கிக் கிட்டு
ஈச்ச பனம் பழமும்
இன்னும் பெருவெரலு உட்டு
உறுஞ்சுன எளநொங்கும்

எதுவுமே தெரியாம
எம்புள்ளைக வளருது
எல்லாமுங் கெடைக்குற
அமெரிக்கத் தேசத்துல.

* * * *

செய்தியோடைகள் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழிலேயே விரிவான கட்டுரைகள் பல உண்டு. உதாரணத்திற்கு இ-சங்கமத்தில் உமர் எழுதிய கட்டுரை. வளர்ந்து வருகின்ற வலைப்பதிவுலகிற்குச் செய்தியோடைகள் முக்கியமான ஒரு நுட்பம். நூறு நாட்களைத் தாண்டி சுகந்தமாய் வீசிக் கொண்டிருக்கிற தமிழ்மணம் கூட செய்தியோடைகளை அடிப்படையாய் வைத்துக் கட்டப்பட்டது தான்.

அடிப்படையில் செய்தியோடை என்பது ஒரு XML கோப்புத் தான். பலவிதக் குறியீட்டு அடையாளங்களோடு அதனைப் பார்ப்பதற்குக் கூட அவ்வளவு எளிமையாகவோ எழிலாகவோ இராது. காரணம், அது மனிதர்கள் படிக்க உருவாக்கப் பட்டதல்ல. தானாக நிரலிகளால் படிக்கவும் செலுத்தவும் உருவாக்கப் பட்ட ஒரு முறை.
Continue Reading »

மொடா அண்டாத் தண்ணி காச்சி
மொழங் கால்மேல குப்புறப் போட்டு
முதுகுல எண்ண வச்சுச்
சூடான தண்ணியூத்தி
நீவிக் குளிச்சுட்டப்போ
சலதாரையில்
வழுக்கி உழுந்து – நான்
வீல்வீல்னு கத்துனதச்
சொல்லிச் சொல்லிச் சிரிப்பீங்க.

மங்கிலியம் கோத்திருந்த
மஞ்சக்கயிறு
மக்கிப்போயி அந்தும்போக
புதுக்கயிறு கோத்துத்தான்னு
நீங்களே சொல்லீட்டு,
சலதாரையில் கிடந்த பையன்
தாலிகட்ட வந்துட்டான்னு
கிண்டல் வேற செஞ்சீங்க.
பொக்கைவாய்க் கன்னம்
குழி உழுகச் சிரிச்சுக்கிட்டு
என் வளர்ச்சிய வியந்தீங்க.

Continue Reading »

ஏதோ வேலையாகக் கீழ்த்தளத்திற்குச் சென்றபோது, என் வீட்டுக் கண்மணிகள் ஒரு செந்நிற நூல்கண்டை உருவி விளையாடிச் சிக்குப் போட்டு வைத்திருந்தது கண்ணில் பட்டது. அதைப் பார்த்துவிட்டு தலையை ஆட்டிவிட்டு அகன்றிருக்கலாம். இன்னும் கொஞ்சம் உருவிச் சிக்கிய பாகத்தை வெட்டி எறிந்துவிட்டு எஞ்சியதைச் சேர்த்து வைத்திருக்கலாம். ஆனால் இன்றைய தேதியில் மனம் வேறு வழியில் சிந்தித்து விட்டது. அந்தச் சிக்குகளை எல்லாம் நீக்கி மீண்டும் சுற்றி வைக்கலாம் வா என்று என்னை அணைத்துக் கொண்டது. அழைத்துச் சென்றது.

சட்டைப் பொத்தான் தைக்க உதவும் சிறு நூல் அல்ல. அதுவாக இருந்தால் அத்தனை சிக்கை நீக்க வெட்டி எறிவதைத் தவிர வேறு வழியில்லை. இது கொஞ்சம் பருமனான நூல். (“ட்வைன் நூல்” என்று சொல்வதைப் போல). ஏதாவது கைவினைக் கலையில் பயன்படுத்த என்று மனைவி வாங்கி வைத்திருந்தார் என்று நினைக்கிறேன். “சரி வா” என்று (பெரிய) மகளையும் அழைத்து இருவருமாகச் சிக்குப் பிரிக்க இறங்கினோம். இந்த நடவடிக்கையில் வெளிப்படையாய்த் தெரியாத பலன்கள் இருக்கக் கூடும் என்று நியாயப் படுத்திக் கொண்டேன். அவசரமாய் அங்கும் இங்கும் இழுத்து மேலும் சிக்குச் சேர்க்காமல், பொறுமையும் நளினமும் பயிற்சி கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். தந்தை-மகள் சேர்ந்து செய்யும் ஒரு வேலை என்று ஒரு குழுவுணர்ச்சி எழும்பலாம். “நானும் தான் உதவுவேன்” என்று போட்டி போட்டுக் கொண்டு வந்த சின்னவளின் அன்பு கலந்த பொறாமையுணர்ச்சியை வெளிக்காட்டியதாய் இருக்கலாம். இந்தப் பொருட்களில் விளையாடக் கூடாது என்று மக்களுக்கு எல்லை வகுப்பதாய் அமையலாம். எந்தப் பொருளும் உதாசீனப் படுத்தக் கூடாது என்று எளிமையைப் போதிப்பதாய்க் கூட இருக்கலாம்.

Continue Reading »

தீவாளியும் துளசியும் ஆரம்பித்து வைத்துக் கடந்த சில நாட்களாகச் சுந்தரும் வெங்கட்டும் ஈடுபட்டிருக்கும் விவாதம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. துளசியைத் தெய்வமாக்கும் கலாச்சார ஆதிக்கம் மேற்குடியில் இருந்து பரவுகிறது. அர்த்தம் புரியாமலே அறியாமையின் காரணத்தால் பிற குடிகள் அவற்றை ஏற்றுக் கொள்கின்றன. அதனால் தமக்கென ஒரு கலாச்சார அடையாளமின்றித் தொலைந்து போகின்றன என்கிறார் சுந்தர். இதையே மேற்குடியாக்கம், சமஸ்கிருதமயமாக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்று தங்கமணி கருத்துச் சொல்லி இருக்கிறார்.

இவற்றில் எல்லாம் உண்மை இல்லாமல் இல்லை. மேற்குடி ஆதிக்கம் சரி, சமஸ்கிருதம் எங்கிருந்து வருகிறது என்று வெங்கட் கேட்கிறார். என்னால் அதற்குச் சரியான ஒரு உதாரணம் காட்ட முடியும். காணித் தெய்வமும் கருப்பணசாமியும் இருக்கிற எங்கள் கோயில் குடமுழுக்கு விழாவில் கூடச் சமஸ்கிருதம் தனது வீச்சை அதிகரிக்கப் பார்க்கிறது. இந்தக் கோயிலில் என்றுமே வெறும் மேலும் இடுப்பில் துண்டும் கட்டிய, கருத்த மேனிப் பூசாரியின் பூசை தான். என்னவோ வேண்டுதலாகத் தமிழில் முணுமுணுத்த மந்திரம் சொல்லித் தான் நான் கேட்டிருக்கிறேன். ஆனால், திருப்பணி, குடமுழுக்கு, கும்பாபிஷேகம் என்று வந்த போது அவர் ஓரம் கட்டப் பட்டிருப்பார். ஏதோ ஒரு சுவாமிகளும், அடிகளாரும், ஆதீனமும் எல்லோரும் வந்து வேதபாராயணமும், பூர்ணாகுதிம், மிருத்சங்கிரகணமும், இன்னும் புரியாத என்னவெல்லாமோ பண்ணிச் சென்றிருக்கின்றனர். தமிழ் மட்டுமே தெரிந்த சந்திரசேகர பிடாரி அம்மனும், கருப்பணசாமியும் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன விழாவில் வெலவெலத்துத் தான் போயிருப்பார்கள்!
rkInvit1.jpg
Continue Reading »

« Newer Posts - Older Posts »