எழில்மிகு செய்தியோடை
Dec 8th, 2004 by இரா. செல்வராசு
செய்தியோடைகள் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழிலேயே விரிவான கட்டுரைகள் பல உண்டு. உதாரணத்திற்கு இ-சங்கமத்தில் உமர் எழுதிய கட்டுரை. வளர்ந்து வருகின்ற வலைப்பதிவுலகிற்குச் செய்தியோடைகள் முக்கியமான ஒரு நுட்பம். நூறு நாட்களைத் தாண்டி சுகந்தமாய் வீசிக் கொண்டிருக்கிற தமிழ்மணம் கூட செய்தியோடைகளை அடிப்படையாய் வைத்துக் கட்டப்பட்டது தான்.
அடிப்படையில் செய்தியோடை என்பது ஒரு XML கோப்புத் தான். பலவிதக் குறியீட்டு அடையாளங்களோடு அதனைப் பார்ப்பதற்குக் கூட அவ்வளவு எளிமையாகவோ எழிலாகவோ இராது. காரணம், அது மனிதர்கள் படிக்க உருவாக்கப் பட்டதல்ல. தானாக நிரலிகளால் படிக்கவும் செலுத்தவும் உருவாக்கப் பட்ட ஒரு முறை.
உதாரணத்திற்கு, வலைப்பதிவுகளில் RSS என்றோ (அதிலும் 0.92, 1.0, 2.0 என்று பலவகை உண்டு) Atom என்றோ அமைந்திருக்கிற செய்தியோடைச் சுட்டிகளைச் சுட்டிப் பாருங்கள். அது கீழ்க்கண்டவாறு தான் இருக்கும்.
பெரும்பாலும் செய்தியோடைப் படிப்பான்களுக்குக் கொடுக்க இந்த இணைப்புச் சுட்டியை நகலெடுத்துக் கொண்டு நகர்ந்து போய் விடுவோம். ஆனால், அப்படி உதாசீனப் படுத்தி விட்டுச் சென்று விடவேண்டியதில்லை. XSL நுட்பங்கள் கொண்டு இந்த ஓடையைத் தூறெடுத்து எழில் கூட்ட முடியும். சின்னதாய்ச் செய்த ஒரு திருத்தம் மேலே கண்ட தரவு மூட்டையை எப்படி அழகாகக் காட்டுகிறது என்பதைப் பாருங்கள்.
(இதை வலது பக்கம் இருக்கிற RSS2.0 செய்தியோடைச் சுட்டியைச் சுட்டியும் பார்க்கலாம்).
இதன் மூலம் வேறு என்ன பயன்? தமிழ்மணத்தின் பாட்டை நெரிசலைத் தவிர்க்க இது ஒரு (சிறு)வழியாக அமையக் கூடும். தமிழ்மணத்திற்குப் புதிதாய் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அந்தப் பாட்டையில் போக்குவரத்தும் அதிகரிக்கிறது. செய்தியோடை ஒன்று இருந்தாலும், அதனைப் பயன்படுத்துவோர் குறைவு. காரணம் எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் செய்தியோடைப் படிப்பான்களை நிறுவ முடிவதில்லை. வெறும் எலும்பும் நரம்புமாய்க் கிடக்கும் செய்தியோடையை உலாவியில் பார்க்கவும் இயலுவதில்லை. அதற்குத் தான் இப்படி ஒரு எளிய XSL அலங்காரம் செய்துவிட்டால், பிறகு தமிழ்மணத்திற்கு வந்து “பழி கிடக்கும்” மக்கள் அதன் எடை அதிகமான பிரதான பக்கத்தை இறக்காமல் இந்த எழில்மிகு செய்தியோடைப் பக்கத்தை இறக்கிப் பார்த்துக் கொள்ளலாம். அப்படிச் செய்தால் போக்குவரத்து பத்தில் ஒரு பங்காய்க் குறையும்.
அட, இது அப்படி ஒன்றும் பெரும் பயனைத் தராது போனாலும், குறைந்த பட்சம் இந்த பொம்மையைச் சுட்டுகிறவர்களுக்கு ஒரு தரவுக் குழம்பைக் காட்டாமல், ஒரு கதம்ப மாலையைக் கொண்டு தரும். அது கண்டு கண் குளிரலாம்.
தமிழ்மணம் மட்டுமல்ல, RSS 2.0 பாவிப்பவர்கள் யாராயிருந்தாலும், அவரவர் RSS கோப்பில் இரண்டாவது வரியாகக் கீழ்வரும் ஒரு வரியைச் சேர்த்துப் பாருங்கள்.
< ?xml-stylesheet type="text/xsl" href="https://blog.selvaraj.us/rss2html.xsl" media="screen"?>
வேறு அலங்காரங்கள் வேண்டுமென்றால் rss2html.xsl கோப்பை இறக்கி உங்கள் விருப்பத்திற்குத் தக்கவாறு மாற்றிக் கொள்ளுங்கள்.
* * * *
செல்வா,
எனக்கு இந்த யோசனை முதலில் தோன்றவில்லை. சொல்லிக்கொடுத்ததற்கு நன்றி.
உங்கள் ஸ்டைல்ஷீட்டில் சில மாற்றங்கள் செய்து தமிழ்மணம் செய்தியோடையில் குறிப்பும் கொடுத்திருக்கிறேன். இப்போது IE-இல் நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் ஃபயர்ஃபாக்ஸில் இன்னும் கொஞ்சம் சிக்கல். பிறகு சரிசெய்யலாம் என்று விட்டுவிட்டேன். ஏனென்றால் ஃபயர்ஃபாக்ஸ் பாவிப்பவர்கள் எளிதில் sage-panel கொண்டு வாசிக்க்லாம்.
இதன்மூலம் அடிக்கடி பார்க்கும் பலருக்கு சீக்கிரம் பக்கம் தெரியும், தளத்துக்கு போக்குவரத்து குறையும் என்று நம்புகிறேன். மீண்டும் நன்றி.
ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே 🙁
கவலப் படாதீங்க மீனா. RSS 2.0 ங்கற சுட்டிக்குப் போய்ப் பாருங்க. இப்போ அழகாத் தெரியும். இதுவே தமிழ்மணத்திலும் இருக்கும். வேற யாராவது பக்கம் போய்ப் பாருங்க. உதாரணத்துக்குக் காசி பக்கம் (சித்தூர்க்காரனின்…) போய் அங்க இருக்கிற RSS 2.0 சுட்டிப் பாருங்க. தமிழ்மணத்துல செஞ்ச மனுஷன் இன்னும் சொந்தப் பக்கத்துல மாத்தல்ல.
ஆபத்பாந்தவர் = செல்வராஜ்
என்னங்க உமர் ஐ தட்டினா தமிழ் சதைகளை காட்டும் படத்துக்கு போகுது.
யாரோ மாத்திட்டாங்க போல.
பாருங்க!!!!
குமார், சுட்டிக் காட்டியதற்கு நன்றி. உமர் அந்தக் கட்டுரைகளை வேறு குழுமங்களிலும் எழுதி இருந்தார். இ-சங்கமம் நின்றுபோய்விட்டது போலிருக்கிறது.
எழில்நிலாவில் இருக்கும் கட்டுரைக்குச் சுட்டியை மாற்றியிருக்கிறேன். இது அதே கட்டுரை தான் என்று நினைக்கிறேன்.