கதைகள் மட்டும் மிஞ்சும்
Dec 3rd, 2004 by இரா. செல்வராசு
மொடா அண்டாத் தண்ணி காச்சி
மொழங் கால்மேல குப்புறப் போட்டு
முதுகுல எண்ண வச்சுச்
சூடான தண்ணியூத்தி
நீவிக் குளிச்சுட்டப்போ
சலதாரையில்
வழுக்கி உழுந்து – நான்
வீல்வீல்னு கத்துனதச்
சொல்லிச் சொல்லிச் சிரிப்பீங்க.
மங்கிலியம் கோத்திருந்த
மஞ்சக்கயிறு
மக்கிப்போயி அந்தும்போக
புதுக்கயிறு கோத்துத்தான்னு
நீங்களே சொல்லீட்டு,
சலதாரையில் கிடந்த பையன்
தாலிகட்ட வந்துட்டான்னு
கிண்டல் வேற செஞ்சீங்க.
பொக்கைவாய்க் கன்னம்
குழி உழுகச் சிரிச்சுக்கிட்டு
என் வளர்ச்சிய வியந்தீங்க.
நீங்க
படுத்திருந்த இடத்துல
பாய் சுருட்டி வச்சாச்சு
நாலு செங்கல் வச்சுச்
சூடமும் வச்சுக்
கும்பிட்டு வருசமாச்சு
இந்தக்
கதைங்க மட்டும் நெஞ்சுக்குள்ள
அங்கொண்ணும் இங்கொண்ணுமா
அமுந்து கிடக்குதுங்க
ஆத்தா.
சக்கையை எறிஞ்சுட்டுச்
சாறு மட்டும் எடுத்த மாதிரி
ஆள் மறஞ்சாலும்
கதைகள் மட்டும் மிஞ்சும்
வாழ்க்கையின் இந்த
அதிசயத்த என்
பேரப் புள்ளைங்களுக்கும்
முடிஞ்சா அவங்க
பேரப் புள்ளைங்களுக்கும்
நான் சொல்லோணும்.
நெலத்து மேல
புளுவுக்குத்
தீனியா மாறும் முன்னே
நெனச்சுப் பாத்துச்
சிரிக்கறதுக்கு
நானும் தினம்
நாலு கதை பண்ணோணும்.
* * * *
பிற்சேர்க்கை:
1. தொடர்புடைய எனது சென்ற வருடத்துப் பதிவு ஆத்தாவும் தொலைபேசியும்
2. இரா.முருகன் மொழிபெயர்த்த அருண் கொலட்கரின் கவிதை – பெரியாத்தா
செல்வராஜ், கவிதையும் எழுதுவீர்களா?!
ஆத்தாவின் கதை சொல்லி நெகிழ வைத்து விட்டீர்கள்
தொடருங்கள்
அன்புடன்
மீனா.
(மரத்தடியில் பார்த்து வந்தேன்)
மனம் நிறைய ஆட்கொண்டது; இயல்பான சொல்லோடை; இசை கொஞ்சம் கூட்டி யிருக்கலாம். நாட்டுப்புறத்தில் எல்லாமே இசை தானே? நாட்டுப் பாடல்களைக் கொஞ்சம் சொல்லிப் பழகுங்கள்.
அன்புடன்,
இராம.கி
மிகவும் ரசித்துப் படித்தேன். இத்துனை ஆழமான உணர்ச்சிகளை சில வார்த்தைகளில் சிறைபிடித்து வீட்டீர்கள். பாராட்டுக்கள்.
-டைனோ
அழகா, இயல்பா எழுதி என்னன்னவோ ஞாபகப்படுத்திட்டீங்க…
செல்வராஜ்,
ஆழ்ந்த விஷயத்தை சாதாரணமாக சொல்லிட்டீங்க.
யோசித்துப் பார்த்தால் எளிய வாழ்க்கையை
நாம் அதிக சிக்கலாக மாற்றுகிறோமோ என்று தோன்றுகிறது.
super pari!!
My comments about this kavithai is at http://pksivakumar.blogspot.com/2004/12/blog-post.html
பெரியவங்க எல்லாம் வந்துட்டுபோகட்டும் அப்புறமா வரலாம்னு இருந்துட்டேன்.
செல்வா, ஆத்தாவைப்ப்த்தி அன்னிக்கே எழுதிக் கலங்கவெச்சீங்க, இன்னிக்கு கலங்க மட்டுமில்லாமல் கவியும் எழுதிட்டீங்க. அருமை.
இராம.கி. அவர்கள் சொன்னமாதிரி கொஞ்சம் இசைகூட்டுங்க. வலைப்ப்திவில் ஒரு குறையே இதுதான் கொஞ்சம் அவரப்பட்டுவிடுகிறோம். சில சமயம் எழுதிப் பதிப்பித்த பின்னர் , ‘அடடா, இதை இப்படி செய்திருக்கலாமே’ என்று யோசனை எனக்கும் வந்திருக்குது. இப்பவும் ஒண்ணும் கெடுப்போகலையே இன்னொரு பதிப்பு விடுங்களேன்.
அப்படி செய்வதானால் என்கிட்ட இன்னும் கொஞ்சம் ஆலோசனை இருக்கு, காதோடு சொல்றேன்…
அன்புடன்,
-காசி
Nalla irukku kavithai…
Annaikku aaththaavai pathi padichittu innaikku intha kavithaiya patikaiyila romba niraivaa irunthuchchu. thanks.
காசி, மறுபதிப்பு பற்றித் தெரியல்லே. ஆனால் உங்க ஆலோசனை என்னன்னு சொல்லுங்க. அடுத்த முறை பயன்படும். இதுவே இரண்டு முறை அடித்துத் திருத்தி எழுதி மூன்றாம் முறை தான் உள்ளிட்டேன். (காலையில் நாலு மணிக்கு எழுதியது காரணமாகக் கூட இருக்கலாம்). கொஞ்சம் அசை, சீர், தளைன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டா நல்லாத் தான் இருக்கும்னு யோசிக்கிறேன்.
பாரி-பாலாஜி, உங்க கருத்துக்கும் நன்றி.
செல்வராஜ்,
http://groups.yahoo.com/group/Maraththadi/message/22205
http://groups.yahoo.com/group/Maraththadi/message/22209
நீங்க என் கட்சியா, ஆசிப் கட்சியான்னு எனக்கு இப்பவே
தெரிஞ்சாகணும். X-(
arputham.
அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி.
பிற்சேர்க்கை:யாக இரு சுட்டிகளைச் சேர்த்திருக்கிறேன்.
1. தொடர்புடைய எனது சென்ற வருடத்துப் பதிவு ஆத்தாவும் தொலைபேசியும்
2. இரா.முருகன் மொழிபெயர்த்த அருண் கொலட்கரின் கவிதை – பெரியாத்தா
மீனா, உங்களுக்காக ஒன்று: இங்கே ஆத்தா என்பது அம்மாவைக் குறிப்பதல்ல. குறிப்பாக இங்கே எனது அம்மா(யி)யாத்தா. சுட்டியிருக்கும் பழைய பதிவைப் பார்த்தால் தெரியும்.
இராம.கி ஐயா. உங்கள் கருத்து சரியே. இன்னும் கொஞ்சம் ஓசை நயம் கூடும்படி எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மீண்டும் படிக்கும் போது இன்னும் சில சொற்களை மாற்றிப் போட்டிருக்கலாம் என்று தோன்றியது.
இதுவே, நீண்ட நாட்கள் கழித்துக் கவிதைப் பக்கம் வந்திருக்கிறேன். இனிமேல் மெருகூட்டிக் கொள்ள முயல்வேன்.
டைனோ, பரி, பாலமுருகன், கார்த்திக் ராமாஸ், பிகேஎஸ் உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்களுக்கும் நன்றி. மகிழ்ச்சி.