ஆத்தாவும் தொலைபேசியும்
Nov 30th, 2003 by இரா. செல்வராசு
சிறு வயதில் அம்மாயி என்று அழைத்த ஞாபகம் இருக்கிறது. மழை பொய்த்து விவசாயத்திற்குப் பெரு வரவேற்பில்லாத புதுப்பாளையம் கிராமத்தை விட்டு வேறு பிழைப்புத் தேடி அம்மா/அப்பா, மாமா எல்லோரும் ஈரோட்டிற்குக் குடி பெயர்ந்து விட்ட சமயம். அம்மாயி அவ்வப்போது ஊரில் இருந்து பலகாரங்களுடன் வந்து போன நாட்கள் புகைப்படலமாய் நினைவில். எனக்கு வயது நான்கோ, ஐந்தோ இருக்கலாம். காலப்போக்கில் அம்மாயி/அப்பச்சியும் ஊர்ப்பிடிப்பைத் தளர்த்திக் கொண்டு ஈரோட்டிற்கு வந்து விட்டனர். அம்மாயியாத்தா சுருங்கி ஆத்தா என்று ஆகிவிட்டது. எதுகையாய்க் கூடவே அப்பச்சியும் (அம்மாவிற்கு அய்யன்) தாத்தா ஆகிவிட்டார்.
அமெரிக்கா வந்த பிறகு ஆறு மாதத்தில் தாத்தா காலமாகி விட, அதன்பிறகு ஊர் சென்ற போதெல்லாம், தாத்தா இல்லாது தனித்திருக்கும் ஆத்தாவிடம் அது ஒரு மனக்குறையை, வெறுமையைத் தந்திருப்பதை உணர முடிந்தது. சமீப காலத்தில் ஆத்தாவுக்கும் உடல்நிலையில் சற்றுத் தளர்வு. பல ஆண்டுகளாய் இருக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொலைபேசியில் பேசக் கூட எல்லா நேரங்களிலும் அவர்களால் முடிவதில்லை.
எப்போதுமே ஆத்தாவுடன் தொலைபேசியில் பேசும் அனுபவம் சுவாரசியமானது. அதிக பட்சம் பேச்சு மூன்று நான்கு நிமிடங்கள் தான் இருக்கும். வாரம் ஒருமுறையானாலும் சரி, மாதம் ஒருமுறையானாலும் சரி பெரும்பாலும் பேசும் விஷயங்கள் ஒன்றாகவே இருக்கும். முக்கியமாய், எப்போது ஊருக்கு வருகிறேன் என்கிற கேள்வி மட்டும் அவர்களிடம் எப்போதும் இருக்கும்…
“ஹலோ ஆத்தா, எப்படி இருக்கீங்க ?”
“ஹலோ…ஹலோ…”
மறுமுனைக்கு என் பேச்சொலி சென்றிருந்தாலும் ஆத்தாவின் காதினில் இன்றிக் காற்றினில் கரைந்து விட்டிருக்கும். தொலைபேசியின் வாய்ப்பகுதியைச் சுற்றிக் கையைக் குவித்துக் கொண்டால் ஒலி சிதறாது என்று மீண்டும் சத்தமாய்,
“ஹலோ, ஆத்தா எப்படி இருக்கீங்க… நான் செல்வராஜ் பேசறேன்…”
“செல்வராசா ? நல்லாத்தான் இருக்கறனாயா. நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க ?”
பின்னணியில் “ஃபோனக் காதுல வச்சுப் பேசுமா” என்று அம்மாவின் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.
“…”
“இப்போ அங்க மணி எத்தன ?
“காலையில மணி 10 ஆச்சுங்க ஆத்தா”
“காலையிலயா ? இப்பத் தான் இங்க ராத்திரி…”
ஒவ்வொரு முறை பேசும் போதும் ஆத்தாவுக்கு இது தீராத வியப்பு. அமெரிக்காவிற்கு என்னை வழியனுப்பச் சென்னைக்கு வந்ததைத் தவிர, தான் பிறந்து, வளர்ந்து, புகுந்த ஊர்களை விட்டு அதிக பட்சம் சுமார் 100 மைல் சுற்றளவைத் தாண்டிப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. பூமியின் வடிவமும் சுழற்சியும், இரவு பகல் மாறி மாறி வரும் தன்மைகளும் சற்றுப் புரியாத பரிமாணங்களாய் இருந்திருக்கலாம். ஆத்தா என்றில்லை இன்னும் பல பேர் “இப்போ அங்க மணி எத்தன?” கேள்வியைக் கேட்டு வியந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
தனது (கொள்ளுப்) பேத்திகளைப் பற்றிப் பேச்சுத் திரும்பும். “பொண்ணுங்க நல்லா இருக்காங்களா ? வளந்துருக்காங்களா ?”
இரண்டரை வருடங்களுக்கு முன் குழந்தைகளைப் பார்த்ததற்கும் இப்போதைக்கும் நல்ல வித்தியாசம் தெரியும். நேரில் செல்லத் தான் தாமதம் ஆகிக் கொண்டே இருக்கிறது. ஒரு தொடர் படம் (விடியோ) செய்து அனுப்பினால் பார்த்து மகிழ்வார்களே என்று எனக்குள் பல நாட்களாய் எண்ணம். இரு வருடங்களாய் எடுத்த படங்களை வெட்டி ஒட்டி வேலை செய்து கொண்டும் இருந்தேன். இன்னும் பட நாடாவில் கொஞ்சம் இடம் இருக்கிறது. பெண்களின் முறையே ஐந்து, மூன்று வயதுக் கொண்டாட்டங்களையும் பதிவு செய்து மொத்தமாய் அனுப்பிவிடலாம் என்றோ வேறு காரணங்களாலோ இது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
ஆத்தாவிற்கு என்ன வயது இருக்கும் ? யாருக்கும் சரியாய்த் தெரியாது. பிறந்த நாள், தேதி, கிழமை – ம்ஹும் வாய்ப்பே இல்லை. என் அம்மாவிற்கே வயது என்ன என்பதற்கு, என் வயதையும், அம்மா-அப்பா திருமணத்தின் போது அவர்களுக்கு என்ன வயது என்பதையும், அதன் பிறகு எத்தனை ஆண்டுகள் கழித்து நான் பிறந்தேன் என்பதையும் வைத்துத் தான் கணிக்க முடியும். குத்துமதிப்பாக, இந்த முறையினை இன்னும் கொஞ்சம் வளர்த்தால், ஆத்தாவின் வயதைச் சுமார் 75, 80 என்று சொல்லலாம்.
கிராமத்தை விட்டு நகரத்தின் பக்கம் வந்த போது தனது வயதில் பாதிக்கும் மேல் ஆகியிருக்க வேண்டும். உடல் வலுக் குறையாத வயதில் ஆத்தா எல்லா வேலைகளையும் தானே எடுத்துப் போட்டுக் கொண்டு செய்ததாகக் கூறக் கேட்டிருக்கிறேன். எனது பள்ளிக் காலங்களில் அதனைக் கண் கூடாகப் பார்த்தும் இருக்கிறேன். உடல் முடியாத போதும் மனம் அயராமல் எதையாவது செய்ய முற்பட, அம்மா முதலானோர் “நாங்க பாத்துக்கறோம். நீ கம்முனு இரும்மா” என்று கூறவும் கேட்டிருக்கிறேன். உடலை வருத்திய சர்க்கரை நோய் நிலை பற்றியும் பேச்சுத் தவறாமல் இருக்கும்.
“உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு ? டாக்டர் கிட்டப் போனீங்களா ?”
“எதோ இந்த எட்டுக்குக் கொஞ்சம் தேவுலைப்பா. சக்கரைக்கு மாத்திரை கேக்க மாட்டீங்குதுன்னு டாக்டரு தெனமும் ஒரு ஊசி போடச் சொல்லிட்டாரு. அத்தை தான் போடறா. அதனால இப்பக் கொஞ்சம் பரவாயில்ல”
“…”
“சரி… எப்ப ஊருக்கு வர்றீங்க ?”
“அ…அது… இன்னொரு நாலஞ்சு மாசமாவது ஆகுங்காத்தா ”
இந்த வருடக் கடைசி வரை வர இயலாது என்று கூற எனக்கு மனம் வராது. சென்ற வருடம் செல்ல முடியாமல் இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்று தெரிந்த போதும் “குறைந்தது நாலு மாதம்” என்பது தான் என் பதிலாய் இருக்கும். அதற்கே அவர்களின் பதில்,
“இன்னும் நாலு மாசமா ?” என்று ஏமாற்றமாகத் தான் இருக்கும்.
சமீபத்தில் ஊர்ப்பயணத் திட்டங்கள் உறுதியாகி விட்டன. நான்கு வருடங்களுக்குப் பிறகு டிசம்பர் முதல் வார இறுதியில் ஊர்ப் பயணம். தொலைபேசியில் இம்முறை கேள்விக்குக் காத்திருக்கப் போவதில்லை.
“ஆத்தா, டிசம்பர் மாசம் ஊருக்கு வரோம். இன்னும் ரெண்டே மாசம் தான். டிக்கட் எல்லாம் கூட வாங்கிட்டோம்”
சுருங்கிய தோலும், குழி விழுந்த கண்களும், நரை கலந்த தலையுமாக இருந்தாலும், அவற்றின் ஊடே பார்வையில் பாசமும், முகத்தில் வாஞ்சையுமாய் இருக்கும் ஆத்தாவைப் பார்த்த உடனே போய்க் கட்டிக் கொள்ள வேண்டும். கூட்டத்தில் அவர்களால் இரயில் நிலையம் வர முடியாதோ ? இயலாது எனில் வீட்டிற்குச் சென்றவுடன் முதல் வேலை அது தான். எனது முகத்தைப் பிடித்துப் பார்த்துப் பரவசப்படும் அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று மனம் பரபரக்கிறது. எப்போதும் நேராக நீளாமல் நடு முழியில் மடங்கிக் கிடக்கும் (இடது?) கைச்சுண்டு விரல் இன்னும் அப்படியே தான் இருக்கிறதா என்று தடவிப் பார்க்க வேண்டும்.
அது தான் இன்னொரு மாதத்தில் ஊருக்குப் போகப் போகிறோமே, அதனால், அந்தத் தொடர்படத்தைக் கூட நேரில் போகும் போது எடுத்துக் கொண்டு போய் விடலாம். “இது என்ன, அது இந்த இடம்” என்று வர்ணனையோடு உடன் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று அதை இன்னும் நான் அனுப்பவில்லை. அன்றாட வாழ்க்கை இரைச்சல்களில் மூழ்கிச் சில நாள் அதை நான் மறந்தும் போனேன் என்பதும் உண்மை.
ஆத்தாவுக்கு உடன்பிறந்தவர்கள் பல பேர். சிதறித் தொடர்பற்றுக் கிடப்பவர்கள், சின்ன வயதில் இறந்து போனவர்கள், தான் வளர்த்த தமக்கையின் வாரிசுகள், என்று உறவு மரம் விரிவானது. எனக்குத் தான் சொந்தங்கள் எதுவும் சரியாய்த் தெரியாது. சென்ற முறை சென்றிருந்த போது விரிவாய் ஒரு சிலேட்டும் கையுமாக ஆத்தாவிடம் கேட்டுப் படம் போட்டுத் தெரிந்து கொண்டது நினைவில் இருக்கிறது. ஒழுங்காய் எழுதி வைக்காதது நான்கு வருட இடைவெளியில் எல்லாம் மறந்து விட்டது. இம்முறை எல்லாவற்றையும் நன்கு ஆவணப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். உறவுகள்/குடும்ப மரம் ஒன்று வரைந்து கொள்ள வேண்டும். தனது கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பது அவர்களுக்கும் ஒரு சந்தோஷத்தைத் தரும் விஷயமாய் இருக்கலாம் என்பதாலும் இந்த முனைப்பில் எனக்கு ஆர்வம்.
ஆயிற்று… இன்னும் ஒரே வாரம் தான். அடுத்த சனிக்கிழமை கிளம்பி ஊர் சென்று விடலாம். இவ்வளவு நாள் தாமதமானால் என்ன ? ஆறு வார விடுப்பில் செல்வது அனைவருக்கும் நன்றாய் இருக்கும். இடையில் இந்த வாரத்தில் நான்கு நாட்கள் விடுப்பு இருக்க, வெளியூர் சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிய போது தொலைபேசியில் ஒரு செய்தி சேர்ந்து இரண்டு நாட்களாகக் காத்திருந்தது.
“உடல்நலக் குறைவு அதிகரித்து ஆத்தா நேற்றிரவு 11.50 க்குக் காலமாகி விட்டார்கள்”
அதிர்வாய் இருந்தது. கண்களில் நீர் வரவில்லை. மெலிதான ஒரு சோகம் மரத்துப் போன உணர்வுகளில் கலந்தது. இன்னும் பத்து நாட்களில் சென்றிருப்போமே… நான்காண்டுகள் பொறுமையாய் இருந்த இயற்கைக்கு இப்போது அப்படி என்ன அவசரம் ? தெரியவில்லை. காரணம் புரியவில்லை என்றாலும் இயற்கையின் நியதிகளை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை…
அன்புள்ள என் ஆத்தாவிற்கு எங்களின் இதயம் நிறைந்த அஞ்சலி.
சுவாரசியமாக மலரும் நினைவுகளை உங்களுடன் அசைபோட்டுக் கொண்டே வந்தேன். இறுதியில் வந்ததை எதிர்பார்க்கவில்லை
அடுத்த வாரம் இவர் போனால் எப்படி இருக்கும் என்று மனக் கண்ணில் படம் ஒடிக் கொண்டிருந்ததபோதே, அவரின் இழப்பைப் படித்தேன். கைக்கெட்டிடியது வாய்க்கெட்டவில்லை என்பது இத
பல நினைவுகளை கிளறி விட்டீர்கள். அம்மா அப்பா பிறந்த தினம் கணக்குப் போடுவது உட்பட.
¬ò¾¡ ±ù§Ç¡ ºó§¾¡„ôÀÎÅ¡í¸ýÛ ¿¢¨ÉîÍ츢𧼠ÀÊîÍðÎ Å󾡅 ¸¨¼º¢Ä
படிச்சிட்டு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு செல்வா…அழகான உங்க எண்ணங்களைப் படிச்சிகிட்டே வந்த போது திடீர்னு இப்படி ஆகும்னு நெனச்சுப் பாக்கல…ரொம்ப தாமதமா தான் இந்த பதிவைப்படிச்சேன். ஊருக்குப் போய்ட்டு வந்து நீங்க எழுதப் போறதை எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்…ப்ரியமுடன் ஷங்கர்
Dear Selva,
Kadaisiyil naan melithaaga athirnthen…..
Write about your experiences at your hometown…
anbudan
balaji
ஒரு சிறுகதை போல வேடிக்கையாக ஆரம்பித்து…எதிர்பாராத முடிவு. இவ்வாறு நீங்கள் பதிந்தது ஒரு சிறந்த அஞ்சலியாக இருக்கும்!
¯½ÃìÜÊÂÅÄ¢