Feed on
Posts
Comments

இரண்டு வார மும்முரமான வேலைகளுக்குப் பிறகு ஓய்வான ஒரு வெள்ளி மாலை. கிடைத்த சில மணி நேரத்தில் பொது நூலகத்தில் கொஞ்சம் தமிழ்மணம் பிடித்துக் கொண்டேன். அவசரமாய்ப் படித்த சிலவற்றில் பிடித்தது பெயரிலியின் புனைவு ஒன்று. கழியும் பழையது புதினத்தை ரசித்துப் படித்தேன். இன்னும் 3 நிமிடத்தில் இந்த நூலகக் கணிணி துரத்தி விட்டுவிடும்.

நாளை காலை கிளம்பி ஊர் நோக்கிப் பயணம். bmi என்கிற விமான நிறுவனம் bmi-baby என்றும் சில குறும்பயண விமானங்களை ஓட்டுகிறது பற்றி எங்கோ படித்தேன்.

மர்பியின் சட்டம் என்று சொல்வது போல இங்கு வந்த பின் என் கணிணி வன் தகடில் சில பக்கங்கள் கெட்டுப் போய்ப் பெரிதாய் உபயோகிக்க முடியவில்லை. நல்ல வேளை ஒரு வாரத்திற்குத் தாக்குப் பிடித்தது. எழுத நினைத்து முடியாமற் போனவையும், தாளில் எழுதித் தட்டச்ச முடியாதவையும் இருக்கின்றன. ஊர் வந்த பிறகு பார்ப்போம்.

தொலைபேசியில் பேசினேன். வரவேற்புப் பரிசொன்று வைத்திருப்பதாய் அருமை மகள் சொல்லி இருக்கிறாள். ஆனந்தம்.

தார்ச்சாலைகளும், அதிவேகம் செல்லும் கார்களும், ஊர்மத்தியில் பல வங்கிகளும் கடைகளும் இருப்பதால் ஃப்ரொட்ஷம்மைச் சிறு நகர் என்று சொல்லிவிட்டேன். ஆனால் இங்கிருப்போர் இதனை ஒரு கிராமம் என்று தான் வழங்குகிறார்கள். கிராமம் என்பதன் இலக்கணத்தை ஒரு இந்தியக் கிராமத்தை வைத்துப் பார்ப்பதால் உண்டாகும் விளைவு இது. நகர்ப்புறத்தில் இருக்கும் வசதிகள் பெரும்பாலும் கிடைக்கும், ஆனால் அளவில் சிறியதாய் ஒரு ஊர் – இது தான் இங்கே கிராமம். நகர்ப்புறத்து வசதிகளை கிராமப்புறங்களில் வழங்கும் புறத்திட்டு ஒன்றை (PURA?) இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் செயல்படுத்தத் திட்டம் வைத்திருப்பதாய் எப்போதோ எங்கோ படித்த நினைவு வருகிறது. ஒருவேளை அந்தத் திட்டம் முதிர்ச்சி பெற்று வெற்றியடைந்தால் இது போன்றதொரு நிலை இந்தியாவிலும் வரலாம்.

ஃப்ரொட்ஷம் போன்று ரன்கார்ன், டார்ஸ்பரி என்று இன்னும் சில ‘கிராமங்கள்’ அருகருகே இருக்கின்றன. எனது தங்குமிடம் ஒன்றில்; அலுவலகம் மற்றொன்றில்; பணி விடயமாய்ச் சென்ற தொழிற்சாலை இன்னொன்றில் என்று அமைந்திருந்தது. எல்லாமே மான்செஸ்டரை அடுத்து இருந்தாலும் இவையெல்லாம் மான்செஸ்டரின் புறநகர்ப் பகுதிகள் என்று சொல்லிவிட முடியாது என்றனர். இவையெல்லாம் செஷயர் (Chesire) என்ற மாவட்டத்தின் கீழ் வருகின்றன. மாநிலங்கள் என்ற பிரிவு இங்கிலாந்தில் இல்லையாம். எல்லாம் இந்த மாவட்டங்கள் தாம்.

“ஒரு காலத்தில் ஐம்பத்தியிரண்டு மாவட்டங்கள் இருந்தன. இப்போது எவ்வளவு என்று தெரியவில்லை”, என்றார் உடன் வந்த இங்கிலாந்துக்காரர். எனக்கும் கூட இந்தியாவில் இப்போது எத்தனை மாநிலங்கள் என்று சரியாகத் தெரியவில்லை. கடைசியாய் இருபத்தியைந்து இருந்த ஞாபகம். இப்போது உத்தரகாண்டம், ஜார்க்காண்டம் (?) போன்றவற்றையெல்லாம் சேர்த்து எவ்வளவு இருக்கும்?

Continue Reading »

விமான நிலையத்தில் எங்கள் நிறுவனப் பெயர்ப்பலகை தாங்கிய ஒருவரைச் சந்தித்து அவருடன் அங்கிருந்து வெளியேறியதைத் தவிர மான்செஸ்டரில் வேறு எங்கும் செல்லவில்லை, எதையும் பார்க்கவில்லை என்பதால் இதை மான்செஸ்டர் பயணம் என்று சொல்வது பொருத்தம் இல்லை தான். இருந்தாலும் இங்கிலாந்து நாட்டில் முதன் முறையாக உள்நுழைவது இந்த நகரின் வழியாகவே என்பதாலும், வந்திருக்கும் இடத்திற்கு அருகிருக்கும் பெருநகரம் இதுவே என்பதாலும் இது மான்செஸ்டர்ப் பயணமாகிறது.

லேசாக மழை துளிர்த்துக் கிடந்தது. ஞாயிறு காலை என்பதாலாக இருக்க வேண்டும் – ஒருவித சோம்பல் அப்பிக் கிடந்தது. கதிரவன் ஒளி பிரகாசமாய் இருந்தாலும், பலமான காற்று முகத்தில் அறைந்து குளிரை அதிகரித்தது. வலதுபுற ஓட்டியோடு சாலையில் இடது புறம் சென்ற வாகனங்களைத் தவிர பெரு வித்தியாசங்கள் தென்படவில்லை. அமெரிக்காவைப் போலவே நெடுஞ்சாலைகள். அதன் இரு புறமும் இலையுதிர்ந்து கிடந்த குளிர்கால மரங்களில் பாசி படர்ந்தாற்போல் கீழே இருந்து கிளைகள் வரை பச்சையாக இருந்தது. குளிர்காலம் முடிந்து வசந்தம் வந்து கொண்டிருக்கும் அறிகுறியாய்ப் புல்வெளிகள் பசுமையை வெளிக் காட்டிக் கொண்டிருந்தன.

மான்செஸ்டரில் இருந்து இருபது இருபத்தைந்து நிமிடப் பயணத்தில் ஃப்ரொட்ஷம் என்னும் சிறு நகரை அடைந்தோம். ‘நல்ல வசதியான தங்குமிடம் ஏற்பாடு செய்திருக்கிறோம்’ என்றார்கள். அறைக்குள் வந்து பார்த்தால் மொத்தம் பத்துக்குப் பத்து என்னும் அளவில் தான் இருந்தது. அதனுள்ளேயே ஒரு மெத்தை, மேசை, சோபா என்று நிறைத்து மிச்சம் ஒரு கால்வாசி இடம் தான் நிற்க நடக்கவென்று கிடைத்தது. துணி தேய்க்கிற ‘பொட்டி’ கூட வேண்டுமென்று கேட்டால் கொடுத்தனுப்புகிறார்கள்!

Old Hall, Frodshom, Chesire

அறையைப் போலவே குளியலறையிலும் பெரிய படுத்துக்குளிப்பான் (bathtub 🙂 !) இருந்தது போக நிற்பதற்குச் சில சதுர அடிகள் இருந்தன. பெரியதாய் ஒன்றும் சிறியதாய் ஒன்றும் இரண்டு துண்டுகள்!

Continue Reading »

‘கரும்பொன்’ என்று சொல்வார்கள். தங்கத்தைப் போல நிலத்தடி எண்ணெய் அவ்வளவு விலைமதிப்பு மிக்கதாய் அமைந்து விட்டது. உலகின் சக்தித் தேவைகளில் சுமார் 40 சதவீதத்தைக் கச்சா எண்ணெயே தீர்த்து வைக்கிறது. இன்றைய உலகப் பொருளாதாரத்தின் ஆணிவேராய் அமைந்திருப்பதும் இந்த எண்ணெய் வளமே என்றாலும் மிகையாகாது. சுமார் 90 சதவீதப் போக்குவரத்துக்குக் கச்சா எண்ணெயே ஏதோ ஒரு வகையில் காரணமாய் இருக்கிறது. பல பொருட்களுக்கும் வளங்களுக்கும் அடிப்படையாய் அமைந்திருப்பது கச்சா எண்ணெய் தான். ஏன், இன்றைய மத்தியக் கிழக்குப் பிரச்சினைகளுக்கும் ஈராக் போருக்கும் கூட அரசியலாய் இருப்பது இந்த எண்ணெய் வளம் தான் என்பது ஓரளவு கூர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரிந்தது தான்.

Oil Well (GFDL Pollinator Oil_well3419.jpg)கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று விரிவாய்ப் பார்க்காமல், சுருக்கமாய்ச் சொல்லவேண்டுமென்றால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரிகள் மரித்துப் போன பின், கடல் மடியில் மண்ணுள் புதையுண்டு, அங்கு ஏற்பட்ட அழுத்தத்திலும் வெப்பத்திலும் அழுகி, பாக்டீரியாக்களால் சில மாற்றங்கள் அடைந்து, சுற்றி இருந்த மண்ணோடும், உப்புக்களோடும் சில வேதிவினைகளின்பாற்பட்டும் இப்படிக் கச்சா எண்ணெயாகவும் நிலத்தடி வாயுவாகவும் மாறுகின்றன. பிறகு உயர் அழுத்தங்களால் பூமிப் பாறை வெடிப்புக்களுக்குள் செலுத்தப்பட்டு எண்ணெய் வளங்களாக மாறின. இன்றும் பல எண்ணெய்க் கிணறுகள் கடல்களின் மீது இருப்பதையும் கவனித்தால் இது புலப்படும்.

Continue Reading »

Airplane: Copyright (C), Yoko Katagiri & NihongoWebஇந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான விமானப் போக்குவரத்தை நிர்ணயிக்கும் ஒப்பந்தம் ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. இந்தத் தளையிலாவெளி (Open Skies) ஒப்பந்தத்தை இந்திய உள்நாட்டு விமானத்துறை அமைச்சர் பிரஃபுள் பட்டேலுடன் மூன்றே நாள் பேச்சு வார்த்தைக்குப் பின் முடிவு செய்து அறிவித்திருக்கிறார் அமெரிக்கப் போக்குவரத்துச் செயலர் நார்மன் மினட்டா.

இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து அதிகரிக்கவும், பயணச்செலவு குறையவும் நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதற்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த ஒப்பந்தம் 1956ல் ஏற்படுத்தப் பட்டது. அதில் இக்காலத்திற்கு ஒத்துவராத பல கட்டுப்பாடுகள் இருந்தன. குறிப்பாய் எந்த ஊருக்கு விமானங்கள் வர முடியும் என்பதிலும், வாரத்திற்கு எத்தனை முறை வரமுடியும் என்பதிலும் கட்டுப்பாடுகள் இருந்தன. போக்குவரத்தை அனுசரித்து விமானங்களைக் கூட்டவோ குறைக்கவோ வேறு ஊருக்கு மாற்றவோ அதிக சுதந்திரங்கள் இரு நாடுகளுக்கும் இருக்கவில்லை. இந்தச் சிக்கல்களையெல்லாம் இந்தத் தளையிலாவெளி ஒப்பந்தம் நீக்குகிறது என்பது வரவேற்கத்தக்கது.

Continue Reading »

« Newer Posts - Older Posts »