ஃப்ரொட்ஷம் (Frodshom)
Feb 16th, 2005 by இரா. செல்வராசு
தார்ச்சாலைகளும், அதிவேகம் செல்லும் கார்களும், ஊர்மத்தியில் பல வங்கிகளும் கடைகளும் இருப்பதால் ஃப்ரொட்ஷம்மைச் சிறு நகர் என்று சொல்லிவிட்டேன். ஆனால் இங்கிருப்போர் இதனை ஒரு கிராமம் என்று தான் வழங்குகிறார்கள். கிராமம் என்பதன் இலக்கணத்தை ஒரு இந்தியக் கிராமத்தை வைத்துப் பார்ப்பதால் உண்டாகும் விளைவு இது. நகர்ப்புறத்தில் இருக்கும் வசதிகள் பெரும்பாலும் கிடைக்கும், ஆனால் அளவில் சிறியதாய் ஒரு ஊர் – இது தான் இங்கே கிராமம். நகர்ப்புறத்து வசதிகளை கிராமப்புறங்களில் வழங்கும் புறத்திட்டு ஒன்றை (PURA?) இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் செயல்படுத்தத் திட்டம் வைத்திருப்பதாய் எப்போதோ எங்கோ படித்த நினைவு வருகிறது. ஒருவேளை அந்தத் திட்டம் முதிர்ச்சி பெற்று வெற்றியடைந்தால் இது போன்றதொரு நிலை இந்தியாவிலும் வரலாம்.
ஃப்ரொட்ஷம் போன்று ரன்கார்ன், டார்ஸ்பரி என்று இன்னும் சில ‘கிராமங்கள்’ அருகருகே இருக்கின்றன. எனது தங்குமிடம் ஒன்றில்; அலுவலகம் மற்றொன்றில்; பணி விடயமாய்ச் சென்ற தொழிற்சாலை இன்னொன்றில் என்று அமைந்திருந்தது. எல்லாமே மான்செஸ்டரை அடுத்து இருந்தாலும் இவையெல்லாம் மான்செஸ்டரின் புறநகர்ப் பகுதிகள் என்று சொல்லிவிட முடியாது என்றனர். இவையெல்லாம் செஷயர் (Chesire) என்ற மாவட்டத்தின் கீழ் வருகின்றன. மாநிலங்கள் என்ற பிரிவு இங்கிலாந்தில் இல்லையாம். எல்லாம் இந்த மாவட்டங்கள் தாம்.
“ஒரு காலத்தில் ஐம்பத்தியிரண்டு மாவட்டங்கள் இருந்தன. இப்போது எவ்வளவு என்று தெரியவில்லை”, என்றார் உடன் வந்த இங்கிலாந்துக்காரர். எனக்கும் கூட இந்தியாவில் இப்போது எத்தனை மாநிலங்கள் என்று சரியாகத் தெரியவில்லை. கடைசியாய் இருபத்தியைந்து இருந்த ஞாபகம். இப்போது உத்தரகாண்டம், ஜார்க்காண்டம் (?) போன்றவற்றையெல்லாம் சேர்த்து எவ்வளவு இருக்கும்?
“மான்செஸ்டர் என்றால் எனக்கு நினைவு வருவது அது பருத்திக்குப் புகழ் பெற்ற இடம் என்பது தான்”, என்றேன். மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் என்றும் கோவை தென்னகத்தின் மான்செஸ்டர் என்றும், மான்செஸ்டர் பற்றித் தெரியாமலே பள்ளிநாள் புவியியல் பாடத்தில் உருப்போட்டுப் படித்த நினைவு.
“ஆம். அதற்கும் மழைக்கும் பெயர் பெற்றது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்” என்றார். “பருத்திக்கு மழை மிகவும் முக்கியமான ஒன்று”. ஆனால், இப்போதெல்லாம் பஞ்சு நூற்பாலைகள் வேறிடம் சென்றுவிட்டனவாம். மான்செஸ்டருக்கும் பருத்தி பஞ்சாலைகளுக்கும் இப்போது அவ்வளவு நெருங்கிய தொடர்பு இல்லை. இன்னுமா தென்னகத்து மான்செஸ்டர் என்று கோவையைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்? உயர்நிலைப் பள்ளிப் பாடநூலைப் பார்த்தால் சரி பார்க்க வேண்டும்.
கிராமமாய் இருந்தாலும் கழுத்துப்பட்டி அணிந்து தான் அலுவலகம் செல்கிறார்கள். இது போன்ற நாட்களுக்கென்றே ஏற்கனவே சுருக்கு வைத்த கழுத்துப்பட்டியைத் தயாராக வைத்திருக்கிறேன். கழுத்தை உள்ளே நுழைத்து சுருக்கைக் கொஞ்சம் இருக்க வேண்டியது தான். கோட் அணியாமல் கழுத்துப்பட்டி மட்டும் அணிந்த என்னைப் பார்க்க மருந்து விற்பன்னர் மாதிரி இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் அலுவலகம் சென்றபோது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அப்படிப் பட்டியின்றிச் சென்றிருந்தால் ஒருவேளை நிர்வாண ஊரில் கோவனாண்டியாய் உணர்ந்திருக்கலாம்!
பணியிடத்தில், செயலர், தலைவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான திறந்தவெளி மேசை தான் இருந்தது. எல்லா அலுவலகங்களிலும் இப்படித் தானா என்று தெரியவில்லை. அதோடு க்யூப் எனப்படும் உயர்தடுப்புக் கூட இன்றி பெரிய அறையில் எல்லோரும் இருந்தது ஆச்சரியமாய் இருந்தது. இந்தியாவில் சில அலுவலகங்களில் இப்படிப் பார்த்திருக்கிறேன். ஆனால் தனிமை விரும்பும், தனிமை தரும் அமெரிக்க அலுவலகங்களுக்கு இவை வித்தியாசமாய் இருந்தன. க்யூபே ஒத்துவராமல் தனியறை இருந்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும் என்று ஒருபுறம் நான் எண்ணிக் கொண்டிருக்க இங்கோ அந்தக் கொஞ்சநஞ்சத் தனிமைக்கும் ஆபத்து. (அப்புறம் எப்படித் தான் சுதந்திரமாய் வலை மேய்வதோ தெரியவில்லை 🙂 ).
ஓசியிலே காபி, தேநீர் தரும் இயந்திரம் கேட்காமலே சர்க்கரை பால் போட்டுத் தருகிறது. சர்க்கரை வேண்டாம் என்று தெரிவு செய்தால் சர்க்கரைக்குப் பதிலாய் வேறொரு இனிப்பு சமாச்சாரம் போட்டுத் தருகிறது. மொத்தமாய் ஒன்றும் வேண்டாம் என்று தெரிவு செய்ய வாய்ப்பில்லை. மதிய உணவிற்கு சாண்ட்விச்களுடன் குச்சியில் சொருகிய சில்லிச் சிக்கன்களும், உருளைக்கிழங்கு போண்டாவும் வந்தன. இந்திய உணவு வகைகள் இங்கு நன்றாகவே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்று புரிந்தது.
இன்றிரவும் ஒரு இந்திய உணவகம் சென்றேன். ‘ஃப்ரொட்ஷம் தந்தூர்’ இல் தனியாய் நுழைந்தவனைக் கேள்விக்குறியோடும் தயக்கத்தோடும் பார்த்தார்கள். ஏன் என்று புரியவில்லை. உடனே இந்திக்குத் தாவாமல் நீங்கள் இந்தியரா, இந்தியாவில் எங்கே என்றெல்லாம் கேட்டார் ஒருவர். தனக்குக் கேரளா தெரியும் என்றும் தண்ணீரைக் காட்டி “வள்ளம்” என்றார். கேரளா பக்கத்து ஊர் தானென்றாலும், தமிழில் அது “தண்ணீர்” என்றேன். இருந்தாலும் அதை “வெள்ளம்” என்றும் சொல்லலாம் என்றேன். விசாரித்ததில் அவர் பங்களாதேசத்தைச் சேர்ந்தவர் என்றார். அதானே பார்த்தேன். இல்லாவிட்டால் இந்நேரம் இந்தியில் பிளிறியிருப்பாரே என்று எண்ணிக் கொண்டேன்.
நேற்றைய அனுபவத்தில் இன்று உஷாராய் நல்ல காரம் போட்டு வேண்டும் என்று முன்கூட்டியே சொல்லி வைத்தேன். கொஞ்சம் கார வகையை ‘மதறாஸ்’ என்கிறார்கள் (சிக்கன் மதறாஸ்). இன்னும் கொஞ்சம் காரத்திற்கு ‘விண்டளூ’ என்று பெயர். இன்றைய நமது தெரிவு விண்டளூ ஆரம்பத்தில் பெரிதாய்த் தெரியவில்லை என்றாலும் நேற்றைக்குப் பரவாயில்லை. மெல்ல ஏறிய காரம் இறுதியில் திருப்திகரமாகவே இருந்தது. நெஞ்சுக்குள்ளிருந்து உங்கூருச்சளி எங்கூருச்சளி எல்லாம் அலறிக் கொண்டு ஓடிவந்தன. இதைவிடக் கார வகையறாவை நேற்றைய கடையில் ‘டிண்டளூ’ என்று எழுதியிருந்தார்கள். உண்மையிலேயே அப்படி ஒரு வகை இருக்கிறதா இல்லை இது ஒரு ‘புளுகளூ’வா தெரியவில்லை!
எந்த இந்திய உணவகம் போனாலும், வெட்டிவைத்த பச்சை வெங்காயமும், வெள்ளை நிறத்தில் ஒன்றும் சிவப்பு நிறத்தில் ஒன்றும் ஸாஸ் மாதிரி என்னவோ கொடுக்கிறார்கள். எல்லாமே இனிப்பு, வினிகர் எல்லாம் கலந்தது போல் இருக்கிறது. அது என்னவென்று கேட்டால் “சட்னி” என்று என்னிடம் கதைவிட்டுவிட்டுச் சென்றார் பங்களாதேசத்துக்காரர்.
இந்த உணவகத்தில் உள்ளே அமர்ந்து சாப்பிடாமல் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றால் 15 சதவீதம் தள்ளுபடி உண்டு என்று படித்தேன். ஓ, அதனால் தான் நான் உள்ளே வருகிறேனா, வாங்கிச் செல்கிறேனா என்று தெரியாமல் ஆரம்பத்தில் முழித்திருக்கிறார்கள். அது தெரியாமல் என்னடா இது இப்படி ஒரு வரவேற்பு என்று நான் நொந்துகொண்டிருக்கிறேன். அப்படி ஒன்றும் பெரும் கூட்டம் இல்லை. இருந்தாலும் எல்லோரையும் உள்ளே வந்து சாப்பிட வைக்காமல் வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஏன் உற்சாகப் படுத்துகிறார்கள்? உட்கார வைத்துச் சாப்பிட வைத்து தட்டுக்களை கழுவி, மேசைத் துணியை மாற்றி, இத்தனை வேலைகளுக்குப் பதிலாக 15% தள்ளுபடி கட்டுபடியாகும் என்று தான் தோன்றுகிறது. தவிர, டிப்ஸ் வைக்கும் பழக்கம் எல்லாம் இங்கு இல்லை போலிருக்கிறது. அதனால் உள்ளே வந்து சாப்பிட வைப்பதில் என்ன ஆதாயம் இருக்கிறது?
ஆஸ்திரேலியாவில் கூடப் பல உணவகங்களில் இப்படி ஒரு வழக்கம் இருப்பது தெரியும். குடும்பத்தோடு சென்றால் இது வசதியான விஷயம். மொத்தமாய் குறைந்த விலைக்கு வாங்கி வந்து தங்கும்விடுதியில் கீழே செய்தித்தாள் விரித்துக் குழந்தைகளை அதிகம் அதட்டாமல் சுதந்திரமாய்ச் சாப்பிட விடலாம். இப்போது தனியாள் தானே என்று உள்ளேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டேன். டெஸ்ஸர்ட் என்றெல்லாம் கொழுப்பும் சர்க்கரையும் அதிகமான இனிப்புச் சங்கதிகளை எல்லாம் சாப்பிடாமல் எனது ஆயுளில் சில மணித் துளிகளை அதிகரித்தது தான் என் மனைவிக்கு நான் வழங்கும் வேலண்டைன்ஸ்டே பரிசு ! 🙂
கிராமத்துத் தெருக்களில் ஒரு சுற்று நடை சென்று வந்தேன். காசுபணத்தை டாலரில் இருந்து பவுண்டாக மாற்ற அவசியமின்றி இன்னொரு வழி இருக்கிறது. இதே தெருவில் குறைந்தது மூன்று வங்கிகள் பார்த்தேன். மூன்றிலும் தானியங்கிப் பணம்வழங்கிகள் இருந்தன. எனது அமெரிக்க வங்கியட்டையைச் செலுத்தினால் வங்கியின் டாலர் தானாகப் பவுண்டாக வருகிறது! (PLUS Network). அனாவசியமாய் வேறிடங்களுக்குச் சென்று மாற்றுவதற்குக் கட்டணம் எல்லாம் கொடுக்க வேண்டியதில்லை. தனது வழங்கிகளில் இல்லாமல் வேறு வங்கிவழங்கிகளில் பணம் எடுத்தால் நமது வங்கி சிலசமயம் கட்டணம் வசூலிக்கலாம். ஆனால் என்னுடைய “இணைய” வங்கியில் அந்தக் கட்டணம் எல்லாம் கிடையாது என்பதும் ஒரு வசதி தான்.
இன்னும் சற்று நடந்து திரும்ப எண்ணியபோது அழகான ஒரு கட்டிடம் கண்ணில் பட்டது. உற்று நோக்கியதில் அது ஒரு பொது நூலகம் என்று தெரிந்தது. அமெரிக்கா போலவே இங்கும் இலவசப் பொது நூலகமாய் அதே போன்ற வசதிகளோடு இருந்தது. கணினி, இணைய வசதி எல்லாம் கூட இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு இலவசமாய்ப் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னும் அரை மணி நேரத்தில் மூடி விடுவார்கள். அதில் பதினைந்து நிமிடம் கணினியைப் உபயோகித்துக் கொள்ளலாம் என்றார்கள். அடுத்த இரு நாட்கள் நூலகம் வரமுடியாது. ஒரு நாள் ஐந்து மணிக்கு மூடிவிடுவார்கள். புதனன்று விடுமுறை. தானியங்கி எழுத்துரு சரியாக வேலை செய்யவே என் எண்ணக் கிறுக்கல்களின் தமிழை இங்கிலாந்தில் வழியவிட்டு செஷயர்க் கவுண்டியில் தமிழ்மணத்தையும் கொஞ்சம் பரப்பிவிட்டு வந்தேன்!
உங்கள் பயணக்குறிப்புகள் பிரமாதம். நீங்கள் செஷயரில் பரப்பிய ‘தமிழ்-மணம்’ நான் வசிக்கும் நியூகாஸில் (என்கிற) புதுக்கோட்டை (!) வரை வாடையடிக்கிறது செல்வராஜ்! இந்திய உணவகம் என்ற பேரில் ஊK முழுவதும் பங்களாதேசத்தை சார்தவர்களே பெரும்பாலும் உணவகங்களை நடத்தி வருகிறார்கள். (அவர்களுக்கு மருந்துக்கும் இந்தி தெரியாது!). எப்படியோ விண்டளூ உண்டு மருந்துச் செலவில்லாமல் சளியை அகற்றிவிட்டீர்கள் போலிருக்கிறது! தொடர்ந்து பயணக்குறிப்புகளை பதியுங்கள்.
இங்கே பஞ்சாபிக்கள் தோசை ஊத்தி, இட்லி சுட்டு, சட்னி ஒண்ணு அரைக்கிறாங்களே (இல்ல கலக்கறாங்களோ:() கொடுமையடா சாமீஸ அதுபோல அங்கே பங்ளாதேசிகள் இந்திய உணவகம் நடத்துவது இருக்கும். அனுபவி (செல்வ)ராஜா அனுபவி:-))
அப்படியே மான்செஸ்டர் கால்பந்து அணியினரின் சொந்தக்காரர்களிடம் New England Patriots-யிடம் அந்த அணியை விற்றுவிடச் சொல்லுங்கள். நான்கு வருடங்களில் மூன்று முறைக் கோப்பையை வென்றும், மான்செஸ்டர் அணியை Bob Kraft-இடம் விற்க மறுத்து விட்டனர் :).