Feed on
Posts
Comments

அமெரிக்க வடபகுதியின் குளிரும் பனியும் இவ்வளவு ஆண்டுகளில் பழகிப் போனவையாகவே இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இயற்கையின் பிரம்மாண்டத்தை உணர வைப்பதாகவே இருக்கின்றன. மக்களின் அன்றாட இயக்கங்களுக்குச் சில இடையூறுகளை விளைவித்தாலும் பனிக்காலம் ஒரு வகையில் பார்த்தால் மிகவும் அழகானது. புதிதாய்க் கொட்டிக் கிடக்கிற பனியின் யாரும் கால்பதியாத வெண்மைப் பின்னணியில், அவற்றைத் தம்மில் தாங்கி இலையில்லா மரங்கள் சிறப்பொளி பொருந்தி நிற்பது கண்கொள்ளாக் காட்சி.

Snow Img 1948

கனடிய நகரங்கள் மற்றும் கடற்கரையோரங்கள் போலில்லை என்றாலும் க்ளீவ்லாண்டும் பனிக் குவியலுக்குப் பெயர் பெற்றது தான். குளிர்காலப் பனிப் புயலின் காரணமாக மட்டுமின்றி, பேரேரிகள் ஐந்தின் கரையோரம் அமைந்திருக்கிற நகரங்களுக்கு ஏரி விளைவுப் பனியின் (Lake Effect Snow) தனிச்சிறப்புக் கவனிப்புக் கிட்டும். வடமேற்குப் பகுதியில் இருந்து வரும் ஆர்க்டிக் பிரதேசக் குளிர்காற்று, ஏரிகளின் மீதேறி அங்குள்ள வெப்பத்தினால் ஈரப்பசையை உள்வாங்கிக் கொண்டு அப்படியே கரைக்கு வந்து அவற்றைப் பனியாகக் கொட்டுவதே ஏரி விளைவுப் பனி. இந்த விளைவால் சில மணி நேரத்திலேயே ஒரு அடிக்குக் குறையாமல் பனி விழும் சாத்தியங்கள் இருக்கின்றன. இதனைக் குறிப்பாகப் பேரேரிகளின் கரையோரம் அமைந்திருக்கிற சிகாகோ, க்ளீவ்லாண்டு, பஃப்ஃபலோ, சிரக்யூஸ், ரோச்செஸ்டர், நியூயார்க் நகரங்களில் அதிகம் காணலாம்.

Continue Reading »

Quesadillasஏதேனும் மெக்ஸிக்கோ வகை உணவகத்துக்குப் போயிருக்கிறீர்களென்றால் கேஸடியா (Quesadillas) என்று ஒன்று சாப்பிட்டிருப்பீர்கள். இரு புறமும் சுட்ட சப்பாத்திக்கு இடையே உதிர் பாலாடைக்கட்டியும்(?) (சீஸ்), தக்காளிக் கார சல்சாவும், கொஞ்சமாய் வெங்காயமும், இன்னும் சில இலைதழைகளும், வேண்டுமானால் வறுத்த/பொரித்த கோழித் துண்டுகளும் சேர்ந்து ஒரு தனிச்சுவையாய் இருக்கும். அதையும் சிறு சிறு முக்கோணத் துண்டுகளாக்கி சவர் க்ரீம் (Sour Cream) என்னும் செயற்கைத் தயிர் வகையறா ஒன்றில் தொட்டுச் சாப்பிடுவது பற்றி இங்கே எழுதும்போது எனக்கே உண்டாவதைப் போல படிக்கும் எவருக்கும் நாநீர் ஊறினால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லன் 🙂 !

சரி, இதற்காக மெக்ஸிக்கோ உணவகத்திற்கெல்லாம் சென்று சிரமப்படாமல் வீட்டிலேயே செய்யலாம் வாருங்கள். உதவிக்கு இரண்டு வாண்டுகள் இருந்துவிட்டால் இன்னும் சிறப்பு. என்ன, இடையிடையே திருட்டுத் தனமாய் வாயினுள் போகும் சீஸைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

Continue Reading »

Nandhu Cardஅப்படி ஒன்றும் பெரிய உடல் நலக் கேடில்லை. வருடம் இருமுறை பருவத்திற்கொன்றாய் வந்து போகிற சாதாரணச் சளி மற்றும் மூக்கொழுகல் தான். இருந்தாலும் சற்றே மிதமான தலைவலியும் இருக்க, அலுவலுக்கு விடுப்புச் சொல்லி விட்டு இன்று வீட்டிலேயே இருந்துவிட்டேன். ஒரு நாள் ஓய்வு நலம் பயக்கும் என்று.

மகள்கள் பள்ளிக்குச் சென்று வரவும், மனைவி அவர்களை அழைத்துக் கொண்டு சில வகுப்புக்களுக்குக் கொட்டும் பனியில் சென்று வரவுமாய் இருக்க, நான் மட்டும் வீட்டில் சுகமாக அமர்ந்து கொண்டு வேளாவேளைக்கு வந்த சூடான தேநீர் பருகிக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தேன். இதைத் தான் அரச வாழ்வு என்பார்களோ ?

பல சமயங்களில் வாழ்க்கையில் நடக்கிற சின்னச் சின்ன விஷயங்களில் பெருஞ்சுவை கிட்டும். அவற்றை நிதானமாய்க் கவனித்துப் பார்க்கத் தவறிவிடக் கூடாது. ஒரு சிறு நிகழ்வு தான். இருந்தாலும், அப்படி ஒரு சுவையை நினைவை இன்று எனக்கு ஏற்படுத்தித் தந்தனர் என் மக்கள்.

“அப்பா கொஞ்ச நேரம் நீங்க கோடியரைக்கு கோடியறைக்கு வரக்கூடாது”

“சரிம்மா” – எனக்கு இவள் என்ன செய்கிறாள் என்று உத்தேசமாகத் தெரிந்துவிட்டது.

“உங்களுக்காக ஒரு ஆச்சரியம் வைத்திருக்கிறேன்”

Continue Reading »

சிக்கல் மாண்ட்ரீஸர் கையெழுத்துத் தமிழ் பற்றி முக்கியமான கேள்விகளையும் கருத்துக்களையும் எழுப்பி இருக்கிறார். ஆங்கில ஒலியியல் வழியாய்த் தமிழில் தட்டச்சு செய்வது (புதிதாகத் தமிழ் கற்றுக் கொள்பவர்களது) மொழிவளத்தைக் குறைக்குமா? கையெழுத்துத் தமிழே கற்றுக் கொள்வது அவசியந்தானா? தமிழ்நாட்டிலேயே வளரும் இந்தத் தலைமுறையினர் கணினி வழியாகவேனும் தமிழ் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பதா?

புதிதாய் எழுதப் பழகுபவர்கள் ஆங்கில ஒலிவடிவத்தின்படி எ-கலப்பை மூலம் எழுதுவது குறையாகவே இருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகிறது. அப்படிப் பழகும் போது ஒலிவடிவிலேயே அமைந்திருக்கிற தமிழ் எழுத்துக்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புப் பற்றியும் அறிவின்றி, மனதில் ஆங்கில எழுத்து வடிவம் மூலமே தமிழைக் காண்கிற முறை பதிந்து போய் மொழிக் கல்விக்கும் மொழி வளத்திற்கும் அது ஊறாகத் தடையாக அமைந்து போகும் என்பது என் கருத்து.

எ-கலப்பை கொண்டு அந்த ஆங்கில ஒலியியல் முறையிலேயே நானும் தட்டச்சினாலும், முறையாய் ஆங்கிலத் தட்டச்சுக் கற்றிருப்பதால் திரையில் தமிழ் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டே தட்டச்ச முடிகிறது. அதனால் விரல்கள் ஆங்கில விசைப்பலகையைத் தட்டுகின்றன என்று கவனம் சிதறுவதில்லை. கவனத்திலும் பார்வையிலும் தமிழ் எழுத்துக்கள் தான் இருக்கின்றன. (உயர்நிலைப்பள்ளி ஆண்டிறுதியில் ஒருமுறை தட்டச்சு வகுப்பிற்குப் பல மாதங்கள் சென்று வந்ததில் இதுவும் ஒரு பெரும் பயன். வேறு என்ன பயன் என்று கேட்காதீர்கள் 🙂 ).

Continue Reading »

வெள்ளிக் கெழம வெளக்கு வச்சு
எல்ல மாரிக் கெண்ண ஊத்தி
சனிக் கெழம வாரா வாரம்
சனீசு வரனுக் கொம்போது சுத்து.

முக்குச் சந்துப் புள்ளை யார்க்கு
மறக்கா மப்பாலு ஊத்தி – ஊரச்
சுத்தி இருக்கும் மலை எல்லாம்
சூடம் வச்சேன் முருக னுக்கு.

கொல தெய்வங் கோயி லுக்கு
கொடுமுடித் தீத்தம் வருசம் ஒருக்கா
பழனி மலைச் சாமிக்கு நெத்திப்
பட்டை யோடே பூசை.

தொண்டத் தண்ணி வத்திப் போகக்
கத்தி வச்சேன் அரோ கரா
கண்டம் ஒண்ணு வெலகுச் சுன்னு
கருப்ப ணுக்கும் ரெண்டு கடா

ஏழ்ர நாட்டுச் சனி என்னப்
புடிச்சிக் கிட்டு ஆட்டு துன்னு
வெளி யூருச் சோசி யரு
வெத்தல கொதப்பிச் சொன்னாரு

பரிகாரம் பண்ணச் சொல்லித் திரு
நள்ளாறும் போயி வந்தேன் – நெனவு
தெரிஞ்சும் வடை எல்லாம் தோள்
மால போட்டுக் கிட்டேன்

உள்ளுக் குள்ளார வச்சுக் கிட்டு
ஊர்முச் சூடும் தேடுனேன் – சாமி
உண்மை எதுவுஞ் சொல்லாம வெறும்
ஊமை யாவே நிக்குது !

* * * *

« Newer Posts - Older Posts »