Feed on
Posts
Comments

காலையில் இங்குள்ள பொது நூலகத்திற்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றிருந்தோம். ஏதோ Dino Math என்று எனக்கொன்றும் சுவாரசியமாய் இல்லாத நிகழ்ச்சி. ஆனால் என்ன ? குளிர்காலப் பனிக்குள் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதை விட இது மேல் தான். தவிர நேரடியாய் எனக்கொன்றும் பிடிப்பில்லை என்றாலும், அங்கு தாள்களில் டைனசோர் அச்சில் வரைந்து வர்ணங்கள் பூசுவதும், வெட்டுவதும் ஒட்டுவதும், பல புதிர்கள் போடுவதும், இன்னும் அங்கிருந்த பல குழந்தைகளோடு விளையாட முடிந்த அந்தச் சூழலில் இருந்த நேரத்தைப் பெரிதும் விரும்பினார்கள் என் சிறுமிகள் இருவரும். (என்னை இவர்களுடன் விட்டு விட்டு மனைவி மட்டும் விவரமாய் புத்தகங்கள் பார்க்கச் சென்று விட்டாள் !).

Continue Reading »

பூக்கள், செடி கொடிகள், மரங்கள், இவற்றைப் பற்றிய அறிவு பெரிதாய் இல்லாத சிறுநகரவாசி ஆக வளர்ந்தவன் நான். ஒரு முறை ஒரு கிராமத்திற்குச் சென்ற போது சோளத்தட்டைப் பார்த்து, “இது என்ன அரிசிச் செடியா ?” என்று நான் கேட்டதாகப் பல நாள் என்னைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். இன்னும் கூட எனக்கு வயலில் நெல்லுக்கும் சோளத்திற்கும் வித்தியாசம் எல்லாம் தெரியும் என்று நான் நம்பவில்லை.

இம்முறை ஊர் சென்றிருந்தபோது ஒருநாள் மூன்றும் ஐந்துமான மக்களிடம் கதை விட்டுக் கொண்டிருந்தேன். “குட்டி இது என்ன பூ தெரியுமா ? வெள்ளையாய் இருக்கில்லையா – அதனால் இது வெள்ளைப்பூ” !!

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதெல்லாம் கேட்டறியாத அமெரிக்க மகள் சற்றே சந்தேகமாக என்னைப் பார்த்தாள்.  “பறிச்சு மேலிருந்து போட்டால், Fan மாதிரி சுத்துது பார், அதனால் இது White Fan பூ”, என்று மேலதிக விளக்கங்கள் வேறு!  “வெள்ளக் காத்தாடிப் பூ” என்று (கொங்குத்) தமிழில் சொல்லியிருந்தால் புரியாமல் போயிருக்கும்.  இப்போதும், என்னவோ வேடிக்கையாய் இருந்தது என்று மட்டும்  புரிந்துகொண்டு பெரியவள் சிரித்துவிட்டுப் போனாள். குத்திய காது வழியை மறக்கடிக்க நான் விரித்த இந்தப் பூக்கதை வலையில் மெல்ல விழுந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் புதிதாய்த் தோடணிந்த என் சிறியவள்.

Continue Reading »

எனது திரட்டிப் பக்க முயற்சி.

தமிழ் வலைக்குறிப்புக்கள் அதிகமாகி வரும் இன்னாளில், புதிதாய் யார் எழுதியிருக்கிறார்கள் என்று அதிக நேரம் விரையப்படுத்தாமல் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்கு முதலில் வலைக்குறிப்பர்கள் தங்களது பக்கங்களுக்கு செய்தியோடை ஏற்பாடு செய்ய வேண்டும். Blogger-ல் இப்போது அந்த வசதி தரப்பட்டுள்ளது.

இரண்டாவது, செய்தியோடைத் திரட்டிகள் கொண்டு பிறரது தளங்களைக் கவனித்துக் கொள்ளலாம். அவரவர் தனித்தனியாக செய்தியோடைத் திரட்டிகள் வைத்துக் கொண்டு தாம் விரும்பும் பிறரின் ஓடைகளை இணைத்துக் கொள்ளலாம். அந்தத் திரட்டிகள் NewsMonster போன்று அவரவர் மேசை மீது இருக்கலாம். அல்லது Bloglines போன்று இணையச் சேவையாய் இருக்கலாம். இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், புதிதாக யாராவது எழுத ஆரம்பித்தால் அவரை நாமாகச் சேர்க்க வேண்டும். அதோடு திரட்டி வைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் இந்த வேலையைச் செய்ய வேண்டும் (அவரவர் விருப்பம் பொருத்து). இதற்கு பதிலாகத் தமிழ் வலைப்பக்கங்கள் போலே எல்லோருக்கும் பொதுவான ஒரு இணையப் பக்கமாய் திரட்டித் தளம் இருந்தால், யாராவது ஒருவரோ, நிர்வாகிகள் என்று சிலரோ, ஒரு இடத்தில் புதிய ஓடையைச் சேர்த்து விட்டால் போதும். எல்லோரும் பார்த்துக் கொள்ளலாம்.

Continue Reading »

சிறு வயது முதல் முடிந்தவரை நேர்மையாய் இருக்க நான் முயற்சி செய்து வந்தது உண்டு. கால ஓட்டத்தில் அந்த முயற்சிக்குச் சவால்கள் ஏற்பட்ட போது சில இடங்களில் வழுக்கி இருக்கலாம். ஆனாலும் இயன்றவரை இன்னும் அந்த முயற்சியில் தவறுவதில்லை. இதற்காக “idealist”,  “பொழைக்கத் தெரியாதவன்” என்று பட்டங்கள் பல கிட்டியிருக்கின்றன. “யதார்த்தமாய் இரு”, “நீ மட்டும் இப்படி இருந்து என்ன கிழிக்கப் போகிறாய்?” என்று அறிவுரைகளுக்கும் குறைவே இருந்ததில்லை.

ரேஷன் அட்டையில் வீட்டில் இருக்கிற நபர்களுக்குத் தகுந்த அளவு பொருட்கள் வழங்கப் படும் என்று இருந்த அந்தக் காலத்தில், வீட்டில் இல்லாத சில நபர்களைச் சேர்க்க என் பெற்றோர் விழைய, அதற்கு நான் முட்டுக் கட்டையாக இருந்த கதையை இன்னும் திட்டிக் கொண்டே என் அன்னை நினைவு கூர்வார். இருப்பினும் உள்ளூர அவர்களுக்குப் பெருமை தான் என்று நான் நினைத்துக் கொள்வேன். (இதைக் கேட்டால், “ஆமா..அஞ்சாறு பெரும… போடா… பொழைக்கத் தெரியாதவனே” என்பாராயிருக்கும்!)

Continue Reading »

இந்தியாவில் இருந்து இந்த வாரத்தில் தான் வந்து சேர்ந்தோம். அங்கே எண்பது டிகிரி வெப்ப நிலையும், தினம் குடித்த இளநீரும் இதமளித்துக்கொண்டிருந்தது. இன்று இங்கு குருதியை இறுக வைக்கும் இந்த எட்டு டிகிரிக் குளிரின் இடையில் இல்லத்தில் சிறை.  குவிந்து கிடக்கிற வெண்பனித் தூவல்களின் அளவும் உயரமும் அதிகரித்துக் கொண்டே அச்சமுறுத்திக் கொண்டு இருக்கிறது. ஆனால், “அடக் கஷ்டமே” என்றில்லாமல், “அட, என்ன அழகாய் இருக்கிறது” என்று கண்களை விரித்துக் கொண்டு சற்று வித்தியாசமாகப் பார்த்தால் அந்தச் சன்னலின் வழியே தூவும் பனியும், அதை மொட்டைக் கிளைகளில் தாங்கிச் சூரிய ஒளியில் மிளிரும் மரங்களும் தனி அழகு தான். எதையும் எதிர்மறைச் சோர்வோடு இன்றி இப்படி ஒரு நேர்மறையாய் எடுத்துக் கொள்வது தான் மனதுக்கும் நல்லது. 

snow covered trees

Continue Reading »

« Newer Posts - Older Posts »