தொடரும் கிறுக்கல்கள்
Jan 25th, 2004 by இரா. செல்வராசு
இந்தியாவில் இருந்து இந்த வாரத்தில் தான் வந்து சேர்ந்தோம். அங்கே எண்பது டிகிரி வெப்ப நிலையும், தினம் குடித்த இளநீரும் இதமளித்துக்கொண்டிருந்தது. இன்று இங்கு குருதியை இறுக வைக்கும் இந்த எட்டு டிகிரிக் குளிரின் இடையில் இல்லத்தில் சிறை. குவிந்து கிடக்கிற வெண்பனித் தூவல்களின் அளவும் உயரமும் அதிகரித்துக் கொண்டே அச்சமுறுத்திக் கொண்டு இருக்கிறது. ஆனால், “அடக் கஷ்டமே” என்றில்லாமல், “அட, என்ன அழகாய் இருக்கிறது” என்று கண்களை விரித்துக் கொண்டு சற்று வித்தியாசமாகப் பார்த்தால் அந்தச் சன்னலின் வழியே தூவும் பனியும், அதை மொட்டைக் கிளைகளில் தாங்கிச் சூரிய ஒளியில் மிளிரும் மரங்களும் தனி அழகு தான். எதையும் எதிர்மறைச் சோர்வோடு இன்றி இப்படி ஒரு நேர்மறையாய் எடுத்துக் கொள்வது தான் மனதுக்கும் நல்லது.
என்ன ? ஒரு மாதமாய் எடுக்கப்படாத வண்டியின் பாட்டரி கீழிறங்கிப் படுத்துவிட்டது. அதனால் என்ன ? நாளை பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு வலைக்குறிப்புக்கள் படிக்கலாம் என்று நேற்று முழுதும் கணிணி முன் அமர்ந்து விட்டேன். இந்த ஆறு வார காலத்தில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன. பல புதியவர்கள் தமிழ்க் குறிப்புக்களுக்கு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. பதிவுகள் அதிகமாக அதிகமாக் அவற்றைக் கவனித்துப் படிப்பது என்பது பெரும் வேலையாய் இருக்கிறது. எல்லோருமே RSS செய்தியோடை பற்றி இப்போது யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். Blogger-ல் கூட Atom முறைப்படி செய்தியோடையை இப்போது ஏற்படுத்திக் கொள்ளலாம் போலிருக்கிறது. இந்த வசதி இல்லாத போது வழித்தெடுத்தல் (scraping) முறைப்படி PHP கொண்டு நான் சில முயற்சிகள் செய்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முடித்துவிட்ட நிலையில் ஊர் சென்றுவிட்டதால் முழுமை பெறவில்லை. இனி அது அவசியமும் இல்லை. ஆனாலும் அந்த முயற்சியின் போது சில புது நுட்பங்கள் கற்றுக் கொள்ள முடிந்தது நல்ல விஷயம். இனி ஒரு நல்ல செய்தியோடைத் திரட்டியாகப் பார்த்து அமைத்துக் கொள்ள வேண்டும்.
வரும் சில நாட்களுக்கு இந்தியப் பயணத்தை/நினைவுகளை ஒட்டிய குறிப்புக்களாய்ச் சில எழுதலாம் என்றிருக்கிறேன்.
welcome back sir
வாங்க செல்வராஜ். இந்த Atom XML, newsmonsterஇல் வேலை செய்யும் என்று bloggerஇல் கரடி விடுகிறார்கள். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இது நடந்தால் என்னால் பல blogspot.com இலவச வலைப்பதிவுகளைப் பின்தொடர முடியும். மேலும் எதாவது இதுபற்றி அறிந்தால் எழுதவும்
ஆமாம் பத்ரி. இன்னொரு செய்தித் திரட்டியிலும் (BottomFeeder)சரியாய் வேலை செய்யவில்லை. UTF-8இன் மூன்று பைட்டுகள் ஒன்றொன்றாய்க் குதறப்படுவதன் விளைவு. இது செய்தியோடைப் பிரச்சினையா திரட்டியில் பிரச்சினையா என்று பார்க்க வேண்டும்.
வாங்க வாங்க, சவுக்கியங்களா
phpயிலெ கில்லாடி ஒருத்தர் இருக்கீங்க, இனி அப்பப்ப உங்களைத் தொந்தரவு பண்ணுவேன்!
வாங்க வாங்க!
வந்ததுமே எளநி குடிச்சேன்னு சொல்லி பொக வுட வக்கிறீங்களே!
நீங்க வேற… இப்போ மலையளவு பனிக்குள்ளே விறைத்துப் போயிக் கிடக்கிறேன். (இன்னிக்கு -15 F)