இங்கொரு நூலகம்
Feb 7th, 2004 by இரா. செல்வராசு
காலையில் இங்குள்ள பொது நூலகத்திற்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றிருந்தோம். ஏதோ Dino Math என்று எனக்கொன்றும் சுவாரசியமாய் இல்லாத நிகழ்ச்சி. ஆனால் என்ன ? குளிர்காலப் பனிக்குள் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதை விட இது மேல் தான். தவிர நேரடியாய் எனக்கொன்றும் பிடிப்பில்லை என்றாலும், அங்கு தாள்களில் டைனசோர் அச்சில் வரைந்து வர்ணங்கள் பூசுவதும், வெட்டுவதும் ஒட்டுவதும், பல புதிர்கள் போடுவதும், இன்னும் அங்கிருந்த பல குழந்தைகளோடு விளையாட முடிந்த அந்தச் சூழலில் இருந்த நேரத்தைப் பெரிதும் விரும்பினார்கள் என் சிறுமிகள் இருவரும். (என்னை இவர்களுடன் விட்டு விட்டு மனைவி மட்டும் விவரமாய் புத்தகங்கள் பார்க்கச் சென்று விட்டாள் !).
வருடம் முழுதும் அவ்வப்போது இது போல் சில நிகழ்ச்சிகளை இந்த இலவசப் பொது நூலகம் ஏற்பாடு செய்வதுண்டு. இன்று போலில்லாமல் அவற்றுள் பல மிகவும் நன்றாகத் தான் இருக்கும். சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் இந்த நூலகத்தின் ஐந்தாவது பிறந்த நாள் விழா – கேக், மிட்டாய், இசை, ஆட்டம், என்று கொண்டாட்டம் தான். அதற்கு அடுத்த மாதம் தனக்கும் ஐந்து வயதாகிறது என்று நிவேதிதா அதனோடு ஒன்றிப் போய் விட்டாள். அந்த இசைக்குத் தக்கவாறு அவள் ஆடியபடி இருக்க, படம் பிடித்து உள்ளூர் வாரச் செய்தித்தாளில் போட்டு விட்டார்கள். அதனால், அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷம் கூடியது. ஒரு நூலகத்திற்குள், உதடு மீது விரல் வைத்து ஷ்ஷ்ஷ் என்கிற சத்தம் மட்டும் என்றில்லாமல், அத்தனை சத்தமும், சாப்பாடும், கொண்டாட்டமும் வித்தியாசமாகத் தான் இருந்தது. (ஒரு நாள் தான் என்றாலும்).

குழந்தைகளுக்கான “கதை நேரம்” ஒன்றும் ஒவ்வொரு பருவத்திலும் வாரம் ஒருமுறை இங்கு இருக்கும். பல நாட்கள் நாங்களும் சென்றுவிடுவது உண்டு. சுமார் அரை மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் ஒரே வடிவத்தில் தான் இருக்கும். கதை சொல்பவர் ஒரு இரண்டோ மூன்றோ குழந்தைகள் புத்தகம் தேர்ந்தெடுத்து வைத்திருப்பார். அதை அப்படியே சற்று ஏற்ற இறக்கங்களோடும் புத்தகத்திற்கேற்ற சத்தங்களோடும் படிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் குழந்தைகள். அதிலும் சில துடுக்குத் தனமாகக் கேள்விகள் எல்லாம் கேட்கும். அந்தப் புத்தகத்திற்கு இடையில் ஓரிரு நிமிடங்கள் சிறிது பாட்டும் நடனமும் (அவர்களைத் தூங்க விடாமல் இருப்பதற்காக என்று நினைக்கிறேன் !!). முடிவில் அந்தக் கதையை ஒட்டிச் செய்த கைவினைப் பொருள் ஏதேனும். (இப்படியாய் என் பெண்கள் வீட்டில் சேர்த்த குப்பைகள் நிறைய ! அவர்களுக்குத் தெரியாமல் வேறு கழிக்க வேண்டுமே !!)
இவை தவிர இந்த நூலகங்களில் இலவசமாகத் திரைப்படங்கள் கூட எடுத்துப் பார்க்க முடிவது ஒரு வசதி. திருமணமாகி இங்கு வந்த புதிதில், ஆஷ்லாண்டு, ஹன்டிங்டன் என்னும் கென்டக்கி/மேற்கு வர்ஜீனியா மாநிலங்களின் குக்கிராமங்களில்(!) நாங்கள் இருந்த போது, இந்த நூலகங்களும், அங்கு கிடைக்கும் திரைப்படங்களும் தான் பெரும் பொழுதுபோக்காக இருந்தது எங்களுக்கு. இப்போதெல்லாம் இந்த நூலகத்தில் DVDக்கள் கூடக் கிடைக்கின்றன. இன்று தேடிக் கொண்டிருந்த போது மூன்று இந்திப் படங்களும் (நமக்குத் தான் இந்தி தெரியாதே!), ஒரு தமிழ்ப் படமும் (பாபா தான் பார்த்து விட்டோமே!) கூடக் கண்டேன். ஆனால் ஒன்றும் எடுத்து வரவில்லை. இந்தியத் திரைப் படங்கள் கூட வைத்திருக்கிறார்களே என்பது சுவாரசியமாய் இருந்தது.
சந்தேகம் வேண்டாம். இவையெல்லாம் இன்றி நூலகங்களுக்கே உரித்தான புத்தகங்களும் இங்கும் உண்டு தான். ஆனால் நான் தான் எதையும் எடுப்பதில்லை. எடுத்தாலும் இரண்டு மூன்று வாரங்கள் சும்மா வைத்திருந்து விட்டு திருப்பிக் கொடுத்துவிடுவது வழக்கம் !! அதற்கு எடுக்காமலேயே இருந்து கொள்ளலாம் அல்லவா.
அமெரிக்காவில் இப்படி ஒவ்வொரு ஊரிலும் அது எவ்வளவு சிறிதாய் இருந்தாலும் அங்கு நூலகங்கள் இருப்பது நன்றாக இருக்கிறது. மக்களுடைய வீட்டு வரிப் பணத்தில் ஒரு சிறு பங்கைப் பெற்றுக் கொண்டு இலவசமாக எல்லோருக்கும் பொதுவான சேவையைச் செய்கிறார்கள். எங்களூரில் வீட்டு வரியில் சுமார் 4% நூலகத்திற்கும், 65% பொதுப் பள்ளிகளுக்கும் செல்கின்றன. அந்த வரிப்பணம் கூடச் சரியாய் எதற்குச் செலவிடப் படுகிறது என்று தெரிவதும் மிக நன்று.
ஈரோட்டிலும் ஒரு பொது நூலகம் இருந்தது. நடுநிலை/உயர்நிலைப் பள்ளியில் படிக்கிற காலத்தில் நானும் அங்கு உறுப்பினராகச் சேர்ந்திருந்தேன். மரப்பாலத்திற்கு அருகே மண்டபம் வீதியில் ஒரு மாவரைக்கும் இயந்திரம் இருந்த கடைக்கு மேலே தான் இருந்தது அந்த நூலகம். அருகே செல்லும் போது அரைக்கப் படும் பொடிகளுக்குத் தக்கவாறு (“மொளகுபொடி”, கொத்தமல்லிப் பொடி, அரிசி, இராகி, கோதுமை மாவு, இத்யாதி) மசாலா வாசம் ஆளைத் தூக்கும். அதில் அப்படியே மிதந்து போய், ஓரத்தில் இருக்கிற சுழல் படிக்கட்டு வழியாய் மேலே சென்றால் அந்த நூலகம். அது மிகப் புராதன கட்டிடமாய் இருக்க வேண்டும். அது போன்ற சுழல் படிக்கட்டுக்களை அந்தப் பகுதியில் அதிக இடங்களில் நான் பார்த்ததில்லை. பல புத்தகங்களை அங்கு எடுத்துப் படித்திருக்கிறேன்.
இம்முறை பயணத்தின் போது, வீட்டில் சும்மா இருந்த ஒரு வார இறுதியின் மதியம் கடைவீதி வரை சென்றவனுக்கு அந்த நூலகம் இன்னும் இருக்கிறதா என்று பார்க்க ஆசை வந்து விட்டது. செல்லும் வழி எனக்கு மறக்கவில்லை. அந்த மாவரைக்கும் கடையும் அங்கிருந்து வரும் மணமும் கூட மாறவில்லை. அட… அந்த நூலகம் கூட இன்னும் இருக்கிறது. புதிதாய்ப் பெயர்ப் பலகையும் அருகே ஆயிரம் ரூபாய் கொடுத்த புரவலர்கள் பட்டியலும். அப்படி ஒன்றும் அந்தப் பட்டியல் நீளமாய் இல்லை. ஒரு ஐந்தாறு பேர் தான் இருந்திருக்கும். நானும் கூடப் புரவலனாகி விடலாம் என்று தான் எண்ணினேன். ஆனால் நூலகம் திறந்திருக்கவில்லை. திரும்பச் செல்ல எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.
நிச்சயம் அடுத்த முறை என்று எண்ணிக் கொண்டேன். உள்ளே சென்று வர முடியவில்லையே என்ற ஏக்கம் மிதமாய் ஏற்பட்டாலும் பல நிகழ்வுகளுக்கிடையே அது தொலைந்தே தான் போனது.
இங்கெ நூலகங்களப் பாக்றப்போ பொறாமையா இருக்கும்.
எங்க ஊர்க்குப் பக்கத்துல இருக்க நூலகத்துக்கு லொங்கு லொங்குன்னு நடந்து போனா பாதி நாள் பூட்டிக்கெடக்கும்