செம்பருத்தியும் செவ்வந்தியும்
Feb 4th, 2004 by இரா. செல்வராசு
பூக்கள், செடி கொடிகள், மரங்கள், இவற்றைப் பற்றிய அறிவு பெரிதாய் இல்லாத சிறுநகரவாசி ஆக வளர்ந்தவன் நான். ஒரு முறை ஒரு கிராமத்திற்குச் சென்ற போது சோளத்தட்டைப் பார்த்து, “இது என்ன அரிசிச் செடியா ?” என்று நான் கேட்டதாகப் பல நாள் என்னைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். இன்னும் கூட எனக்கு வயலில் நெல்லுக்கும் சோளத்திற்கும் வித்தியாசம் எல்லாம் தெரியும் என்று நான் நம்பவில்லை.
இம்முறை ஊர் சென்றிருந்தபோது ஒருநாள் மூன்றும் ஐந்துமான மக்களிடம் கதை விட்டுக் கொண்டிருந்தேன். “குட்டி இது என்ன பூ தெரியுமா ? வெள்ளையாய் இருக்கில்லையா – அதனால் இது வெள்ளைப்பூ” !!
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதெல்லாம் கேட்டறியாத அமெரிக்க மகள் சற்றே சந்தேகமாக என்னைப் பார்த்தாள். “பறிச்சு மேலிருந்து போட்டால், Fan மாதிரி சுத்துது பார், அதனால் இது White Fan பூ”, என்று மேலதிக விளக்கங்கள் வேறு! “வெள்ளக் காத்தாடிப் பூ” என்று (கொங்குத்) தமிழில் சொல்லியிருந்தால் புரியாமல் போயிருக்கும். இப்போதும், என்னவோ வேடிக்கையாய் இருந்தது என்று மட்டும் புரிந்துகொண்டு பெரியவள் சிரித்துவிட்டுப் போனாள். குத்திய காது வழியை மறக்கடிக்க நான் விரித்த இந்தப் பூக்கதை வலையில் மெல்ல விழுந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் புதிதாய்த் தோடணிந்த என் சிறியவள்.
என்னவோ தெரியவில்லை. இந்தச் செம்பருத்திப் பூவின் மீது மட்டும் எனக்கு ஒரு தனிப் பிரியம். அதற்குக் காரணம் ஒருவேளை அத்தனை கடும் பச்சை இலைகளுக்கு ஊடே தனியாகத் தெளிவாகத் தெரியும் கெட்டிச் சிவப்பு நிறமோ ? என்னவோ மற்ற பரவலான பூக்களை விட அசல் தமிழ்ப்பெயர் கொண்ட பூ இது என்பதாய் எனக்கு எண்ணம். கூடவே தாவரவியல் பாடத்தில் Hibiscus Indica (?) என்கிற கவர்ச்சியான(!) அறிவியற் பெயரும். செம்பருத்தி என்றாலே மனசுக்குள் மிருதுவான ஒரு உணர்வு.

என்னுடைய முதல் மகளுக்குக் கூட முதலில் செம்பருத்தி என்று பெயரிடலாம் என்று கொஞ்ச நாள் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அதை Semparuththi என்று எழுதி அதனால் இந்த ஊர்க்காரர்கள் படப் போகும் அவஸ்தையை எண்ணி அவ்வெண்ணத்தைக் கை விட்டு விட்டேன். (இப்படியொரு பெயரை நான் மனதுக்குள் யோசித்த போதே இல்லத்தரசி வெட்டி விட்டாள் என்பது வேறு விஷயம் !)
முதன் முதலில் ஈரோட்டில் ஒரு பள்ளி நண்பன் வீட்டில் தான் செம்பருத்திப் பூவை நான் அறிமுகம் செய்து கொண்டதாய் ஞாபகம். முதல் மாடி வாடகை வீட்டில் இருந்த எங்களுக்குப் பூ என்றால் சட்டியில் வைத்த மேஜை ரோஜாவும், வயலட் நிற டிசம்பர் பூவும் தான். ஆனால் நண்பன் வீட்டைச் சுற்றி மதில் சுவருக்கு உட்புறம் முழுவதுமாய் செடி கொடிகள். முன்வாசலுக்கு வலது புறம் அருகருகே இட்லிப்பூவும் என் இதயம் கவர்ந்த செம்பருத்தியும்.
செம்பருத்திப் பூ வரவேற்கும் எந்த வீடும் எனக்குப் பிடித்திருக்கிறது.
காரணம் தெரியாமல் எனக்குப் பிடித்த இன்னொரு பூ – செவ்வந்திப் பூ. அதற்குக் காரணம் தெரியவில்லை என்பது மட்டுமல்ல. அதை நான் பார்த்ததாகவும் நினைவில்லை. ஏதாவது பாட்டில் கேட்டிருப்பேனோ ? கதையில் படித்திருப்பேனோ ? இருக்கலாம். இரண்டு வருடத்திற்கு முன்னர், சரி நாமும் இனிக் கவிதைகள் என்று மீண்டும் ஏதேனும் எழுதலாம் என்று எண்ணியபோது முதல் தகுதியாய் ஒரு புனைப் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் (!!!) என்று எண்ணினேன். அதற்கு நான் தேர்ந்தெடுத்த பெயர் – “செவ்வந்தி”. மீண்டும், ஏன் என்று யாரும் காரணம் கேட்காதீர்கள்! எனக்கும் தெரியாது.
ஓ ! செவ்வந்தி எத்தனை கவிதை எழுதினார் என்றும் யாரும் கேட்டு வைக்காதீர்கள். பூஜ்யப்பூ தான்.
பூக்கள் பற்றி அதிகம் தெரியாது என்று இருந்தாலும், எழுத ஆரம்பித்ததும் இன்னும் கொஞ்சம் பூவிவரங்கள் எனக்கும் கூட எட்டுகின்றது என்பது ஆச்சரியமான விஷயம் தான். பட்டியலில் அடுத்ததாகப் பிடித்த பெயர்களாய் செண்பகப்பூவும் செந்தூரப்பூவும் எட்டிப் பார்க்கின்றன. “செ”வில் ஆரம்பிப்பதால் தான் இவை எல்லாம் எப்படி இருக்கும் என்று தெரியாமலே பிடிக்கிறதோ ?
புதுப்பாளையத்துப் பொடக்காலியில் (புழக்கடை) சலதாரைத் தண்ணீர் பாய்ந்து வளர்ந்த மல்லிகைச் செடி கூட நினைவுக்கு வருகிறது. உதிரியாய் மல்லியும் முல்லையும் நூலில் சரமாய்க் கட்ட நான் கூடச் சில சமயம் முயன்றிருக்கிறேன். ஆனால், ஊசி வைத்துக் கோர்ப்பது தான் எனக்குச் சுலபமாய் இருந்திருக்கிறது. திருமணமான புதிதில் எனக்குப் பிடித்தவை மல்லியும் முல்லையும் என்றிருந்தேன் மனைவியிடம். அவள் வீட்டுச் செடிகளில் இம்முறை மந்தாரையும் சிவனுக்கு உகந்த மஞ்சள் சங்குப் பூவும் கண்டேன்.
செயற்கையாய்த் தலையில் எதையேனும் மாட்டிக் கொண்டிருக்கும் இங்கிருந்து ஊர் சென்ற என் பெண்கள் ஆசையாய்ப் பல பூக்களைத் தலையில் சூடிக் கொண்டார்கள். அவற்றுள் கனகாம்பரமும் ஒன்று. பூச்சூடிப் பொட்டும் வைத்துப் பூரித்த முகத்தோடிருந்த பெண்களின் அழகைக் கண்டு மனம் மகிழவே அடிக்கடி ஊருக்குப் போக வேண்டும் போலிருக்கிறது.
“ஐய, இது நல்லாவே இல்ல”, என்று தன் அம்மா சொன்னதையும் கேட்காமல், காருக்கு முன்விளக்குகள் போலே காதுக்கு மேலே இரண்டு பக்கங்களிலும் ரோஜாவை அணிந்துகொள்வேன் என்று அடம் பிடித்தபடி பெண் முக மலர்ச்சியோடு தானே காராக மாறிப் போன நேரங்களும் இனிமையானவை.
“அட, விடு. அதனால என்ன ? அவ ஆசப்படற மாதிரி வச்சுக்கட்டுமே…”
குழந்தைகளிடம் கிறுக்குத்தனமான செய்கைகளுக்கும், கோணங்கித் தனங்களுக்கும், வேடிக்கை காட்டுவதற்கும் என்றும் தயக்கமில்லாத ஒரு அப்பன் நான். எனது சிறு வயதுப் படம் ஒன்றில் எனக்கும் கூட ரிப்பன் கட்டிக் குடுமி போட்டு… ஹ்ம்ம்… பூ வைத்திருந்தார்களா நினைவிலில்லை. முதல் மொட்டைக்கு முன் எடுத்த படம் கண்ணாடிச் சட்டம் போட்டு வீட்டில் எங்கோ உட்கார்ந்திருக்கிறது.
டிசம்பரில் இரண்டு நாள்ப் பயணமாய் ஈரோட்டில் இருந்து இரயிலில் பெங்களூருக்குக் கிளம்பினோம். ஆறேழு பேராய் அதிகாலையில் அவசரமாய் கிளம்பிச் சென்று பெட்டியில் அமர்ந்த பின் வண்டி கிளம்பியது. சிறிது நேரம் கழித்துத் தான் கவனித்தேன். எனது பெண்களின் தலையில் அவ்வளவு அழகாகப், புதிதாக, வெள்ளையாக, அருமையாக ஒரு பூ. அவர்கள் அருகில் வந்த போது, ம்ம்ம்ம் என்னே ஒரு இனிய வாசம்! அடர்த்தியாக இருந்து அழகைக் கூட்டிய அது என்னவாய் இருக்கும்? என்னவோ சாமந்தி என்பார்களே… ஒருவேளை அதுவோ என்று எண்ணியபடி கேட்டேன். “இல்லை செல்வா, இது செவ்வந்திப் பூ” என்ற பதில் கிடைத்தது.
“ஓ, இதுதான் செவ்வந்தியா ?”
எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே எனக்குப் பிடித்திருந்த ஒரு பூவை, பெயர் தெரியாத போதே எனக்குப் பிடித்திருந்தது என்பதும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது.
வலைப்பூவில் ஒரு கதைப்பூ லகர, ளகர, ழகரக் குழப்பம் இருக்கு அப்பூ! பரி வந்து பாக்குறதுக்குள்ளே சரி பண்ணிட்டா, இனிப்பூ, இல்லேன்னாத் தப்பூ. படைப்பூவில் நடுப்பூ ஒண்ணும் தெரியலேன்னு வேற கடுப்பூ. அட, இது என்ன குறைகாணும் பொழப்பூ
‘கவி’ காசி ))
ஆரபிச்சிட்டான்யா 😀
>மல்லியும் முள்ளையும்
பச்சைக்கிளி முத்துச்சர
முல்லைக்கொடி யாரோ
(முல்லைக்குத் தேர் தந்த பாரி)
செம்பருத்தி = ஹைபிஸ்கஸ் ரோசாசைனென்சிஸ்
செந்தூரப்பூ – இப்டி ஒரு பூ கெடையாதுங்கோவ்(னு நெனைக்கிறேன்). எளையராசா உண்டாக்கின பூ!
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
-ஆஹா, என்னே மணம். பர்ஃபுயூமாவது மண்ணாங்கட்டியாவது!
ஒரே பூ பாட்டா வந்து முட்டுது. இந்தப் பொட்டி பத்தாது, ‘செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா(பெரியய்யா)’ :p
ஆஹா… எப்படி நடந்துச்சு இந்தத் தவறு? உண்மையில் எனக்கு முள்ளை தவறென்று முதலில் தெரியவில்லை. எப்பவுமே இப்படித்தானே நினைச்சுக்கிட்டு இருந்தேன். இத்தனைக்கும் எங்க வீட்டுக்காரம்மா கூட படிச்சுப்பார்த்தாங்களே…ஒரு மயக்கத்திலே தப்பு தெரியாமல் போயிருக்கும் நன்றி பூக்காரர்களே…
அட, வீடுக்காரம்மா கிட்டே ‘ஓக்கே’ வாங்கின தைரியத்திலே போட்டீங்களா
வீடுக்காரம்மா டீச்சர்தானே, எப்படி என் கணிப்பூ
இளம்பூ இரண்டும் தரும் சிரிப்பூ!
(போதுமய்யா அறுப்பூ, கெளம்பூ)
அட எப்படீங்க கண்டு பிடிச்சீங்க ? ஒரு வருடம் கோயமுத்தூர்ல டீச்சரா தான் இருந்தாங்க (திருமணத்திற்கு முன்பு). இப்போ என்ன மெரட்டீட்டு இருக்காங்க
எனது வலைப்பதிவுல் தாங்கள் எழுதியுருந்ததை என்னால் படிக்க முடியவில்லை. விரைவில் கற்றுக் கொள்வேன் என்றாலும்…அதை எனக்கு மெயில் செய்ய முடியுமா?
‘செவ்வந்தி பூ முடித்தேன்.. அதில் உன் முகம் பார்த்திருந்தேன்’ பானுப்ரியா ‘கோகுல’த்தில் உருகுவார்களே?
செல்வராஜ்:
செம்பருத்தி பூ தேநீர் முடிந்தால் குடித்து பாருங்கள்,புத்துணர்ச்சியாய் இருக்கும்.
உங்கள் செல்வங்களின் படம் அழகு.
(பரிக்கு) : நம்ம ஊர் பக்கம் சுடுகாய் மரம் என ஒன்றைச் சொல்வார்களே,,,காயை தரையில் தேய்த்து,கையில் வைத்தால் சுரீர் என்றிருக்கும்.இம்மரத்தின் பூக்கள்தான் செவ்வந்தி பூவோ..
செவ்வந்தி என்பது செந்தூர பூ என்றிருக்க வேண்டும்
உங்கள் குடிலில் ‘உங்கள் கருத்துக்கள்’ மூலம் கருத்து தெரிவிப்பது போல் என் குடிலிலும் நான் ஒரு லிங்க் கொடுக்க விரும்புகிறேன். எப்படிச்செய்வது என்று தெரியவில்லை. தயவு செய்து உதவ முடியுமா? என் முகவரி harilama@yahoo.com
ஹரி, உங்களுக்கு ஒரு மின்மடல் அனுப்பி உள்ளேன். http://CommentsFaq.blogspot.com பக்கம் சென்று பாருங்கள்.
செந்தூரப்பூ என்பது ஊசி மல்லி என்று சிலராலும், எங்கள் ஊர்ப்பக்கம் துலுக்கமல்லி என்றும் அழைக்கப்படுவதாக இருக்கும் என்பது என் எண்ணம்.