இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

கண்கள் சொல்லும் கதை – தொடர்ச்சி

February 9th, 2006 · 2 Comments

“ராஜகுமாரா, கதையில் எனக்குச் சொல்ல இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது”, என்றன கண்கள். உறங்கும் நேரம் ஆகிக் கொண்டிருந்தாலும் அவை இன்னும் விழித்துக் கொண்டிருந்தன. பூப்பூவாய் வெளியே பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. சில நிமிடங்கள் முன் வெளியே சென்று வந்தபோது ஒரு பனிப்பூ விழுந்ததில் நனைந்து குளிர்ச்சி அடைந்திருந்ததாய்க் காட்டிக் கொண்டிருந்தன.

சற்றே அவநம்பிக்கையுடன் கேட்டேன். “நீங்கள் சொல்லித் தான் ‘தொடரும்’ போட்டேன். ஆனால் இரண்டு வருடமாய் மௌனமாய் இருந்துவிட்டு… இப்போது நீங்கள் சொல்வதை நம்பச் சொல்கிறீர்களா?”

“நீ கூடத்தான் அடுத்த வாரம் முதல் உடற்பயிற்சி செய்வதாய்ப் பல வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். செய்கிறாயா?” என்று வகையாக மாட்டி விட்டன.

“…”

“இருந்தாலும், உன்னை நாங்கள் நம்புகிறோம். கடந்த காலம் எப்படி இருந்தாலும் மறந்துவிடு. இனி வருங்காலம் இனிமையாக இருக்கும்; நினைத்தது நடக்கும்; உன்னாலும் எண்ணியது செய்ய முடியும், என்றே நீயும் நம்பு”

எனக்கே அறிவுரை சொல்கின்றனவே என்று தோன்றினாலும் அந்தக் கருத்து எனக்கும் பிடித்த ஒன்றே. மென்மையானவை இந்தக் கண்கள். பனிக்குளிர் தாங்க வீட்டினுள் வெப்பக்காற்று வீச, அதனால் கொஞ்சம் ஈரப்பசை காய்ந்ததில் உறுத்தலுக்கு ஆளாகி இருந்தன. இந்தச் சிரமம் தாங்காமல் கவனத்திருப்பலுக்காக ஏதேனும் விளையாட முனைகின்றனவா என்றெண்ணிக் கேட்டேன்.

“நீங்கள் மீண்டும் தொடரத் தயாராய் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். இருந்தாலும், இதனால் யாருக்கு என்ன பயன்? யார் வந்து ‘ம்’ கொட்டிக் கொண்டு கேட்கப் போகிறார்கள்?”

“என்னப்பா, நீயா இப்படிக் கேட்கிறாய்?”

“ஏன் நானே தான்?”

“ராஜகுமாரா, என்னவோ விளையாடுகிறாய் என்று தோன்றுகிறது. சரி வா. நானும் உன்னுடன் சேர்ந்தே பயணிக்கிறேன்”

“…”

“இந்தக் கதையைச் சொல்வதும், சொல்லி முடிப்பதும் எனக்கு முக்கியம். இவ்வுலகில் எல்லாவற்றிற்கும் ஒரு பயன் இருக்கிறது. இதற்கும் நாமே அறியாத ஒரு பலன் இருக்கலாம். யார் கண்டது?”

இந்த முறை உறுதியாகத் தான் இருக்கின்றன. யாராவது விசாரித்தார்கள் என்று காதுகள் சொல்லி இருக்கக் கூடும். அதனால் ஒரு உந்தம் ஏற்பட்டிருக்கலாம். இல்லை, பலகாலமாய் முயன்று சோம்பலை உதற எண்ணிச் செயலாற்ற முனைந்திருக்கலாம். எப்படி இருந்தால் என்ன? அவற்றிற்கு அவை நினைத்தபடி கதையைச் சொல்ல நாம் உதவத் தான் வேண்டும். இல்லையென்றால் ‘என் கண்ணுல்ல’ என்று வெறும் கொஞ்சலில் என்ன அர்த்தம் இருக்கிறது?

பின்னோக்கி மனது ஓடுகிறது. பிறருடைய அலகுகளில் பெரியதா சிறியதா என்று நிறுத்துப் பார்க்க வேண்டியதில்லை. இவற்றின் அலகில் சொல்ல ஒரு கதை இருக்கத் தான் செய்கிறது. ஓடிய மனதை ‘ஏய் இங்கே வா’ என்று இழுத்து உட்கார வைத்துக் கொண்டிருந்தபோது,

“என்ன இன்னுமா யோசனை? தொடரலாமா?” என்று அவசரத்தில் துடித்தன கண்கள். “முதலில் இதுவரைக்கும் என்ன சொல்லியிருக்கோம்னு நினைவுபடுத்திக் கொள்ளலாம். அப்போ தான் சரியா இருக்கும்”

“சரி”, என்றேன் அமைதியாக.

* * * *

“ஒரு பெரிய கண்ணுப் பையனுக்குக் கிட்டப் பார்வை நேர்ந்ததும், அதற்கு அவன் போட்டுக் கொண்ட பெருஞ்சட்டக் கண்ணாடியும்” – இது முதல்க் கதை.

சுமார் பதிமூன்று வயதிருக்கும் போது, முதன் முறையாய் முகத்துக்கு மீறிய கண்ணாடியை அணிய வேண்டிய கட்டாயம் அப்படித்தான் ஏற்பட்டது எனக்கு.

* * * *
“வளரும் பருவமதில் குறையும் கண்சக்தியும் ஏறும் ஆடியின் சக்தியும், அதற்கு மாற்றுத் தேடிச் சென்ற பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமப் பயணங்களும்” – இது இரண்டாவது கதை.

நாட்கள் நகர்ந்தன. “பவர்” ஏறியது. கண்ணாடியும் அதன் சட்டங்களும் கூட மாறின. உடைந்து போய் விட்டால் என்ன செய்வது என்று ஒன்றிற்கு இரண்டு ஜோடிக் கண்ணாடிகளோடு அமெரிக்காவுக்கும் ஒருநாள் வண்டி ஏறினேன்.

* * * *

“வெளி நாட்டில் வந்து கண்ணுள்ளாடி (தொடுவில்லை) அணிந்ததும் அதைக் கழட்டிக் கழுவி மாட்டிக் கழட்டி வைத்துக்கொண்டிருந்த கதையும்” – மூன்றாவது.

Contact Lens இருந்தாலும் என்ன ? சுமார் பத்துப் வருடங்களுக்குப் பிறகு, கண்ணாடிச் சட்டங்களுக்குள் சிக்கி இராத எனது கண்களும் முகமும் எப்படி இருக்கின்றன என்று என்னாலேயே, தெளிவாகப் பார்க்க முடிந்த அந்தச் சந்தோஷம் அன்று எனக்குப் பெரிதாக இருந்தது !

* * * *

“கண்ணுள்ளாடிப் பராமரிப்புத் தலைவலிகளும், ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ கதையாக மீண்டு வந்த வெளிக்கண்ணாடியும்” – நான்காம் கதை.

அன்று கழட்டி வைத்தவன் தான், அதன் பிறகு கண்ணுள்ளாடியைத் தொடவே இல்லை. உள்ளாடி போச்சு, வெளியாடி வந்துது டும் டும் டும்.

* * * *

“லேசர் சிகிச்சை முறை வளர்ச்சி பற்றிய கவனிப்பும் யோசனைகளும்” – இது ஐந்தாவது கதை.

Lasik Flap பல ஆண்டுகளாய் என்னுள் முடங்கிக் கிடந்த உள்ளக் கிடக்கையை வெளியே எடுத்து அசை போட்டபடி, “என் கண்களுக்கு லேசர் சிகிச்சை பண்ணிக்கலாம்னு இருக்கேன் !” – பாதி யோசனையும் பாதி முடிவுமாகவும் கூறினேன்.

* * * *

இங்கே போட்ட -(தொடரும்) தான் இன்னும் தொடராமல் கிடக்கிறது.

“அப்புறம் என்ன? ‘ஒரு நாள் போனேன். லேசிக் சிகிச்சை செய்துக்கிட்டேன்’, அப்படீன்னு எழுதி முடிச்சுர வேண்டியது தானே”, என்றேன்.

ஓரத்தில் சுருக்கம் விழ தீர்க்கமாய் ஒரு சீற்றத்துடன் என்னைப் பார்த்தன கண்கள்.

“என் கதைய எப்படிச் சொல்லணும்னு நீ சொல்ல வேண்டாம்! நான் சொல்ற மாதிரி எழுது”, என்று ஆரம்பித்தன.

எனக்கு முன்பே தெரிந்த கதை தான். இருந்தாலும் மிச்சத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டேன். முடித்துவிட்டு என்னைப் பார்த்த போது அதன் கண்களில் ஈரம் முற்றிலும் வற்றி இருந்தது.

“ரெண்டு சொட்டு விட்டுக்கிட்டு நான் தூங்கப் போறேன். நீ எழுது” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றன. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். படியேறி அவை மறையவும் இருள் என்னைச் சூழவும் மிகச் சரியாக இருந்தது.

-(தொடரும்).

கண்கள் சொல்லும் கதை-1, கதை-2, கதை-3, கதை-4, கதை-5, கதை-6, கதை-7, கதை-8, கதை-9

Tags: வாழ்க்கை

2 responses so far ↓

  • 1 Nithya // Feb 11, 2006 at 7:46 pm

    Selvaraj,

    I was wondering why this story was left unfinished and now I am glad that you have continued it. It is a very interesting piece of imagination to have conversation with your eyes. So, your eyes think you are a prince,huh? Cool.

  • 2 கில்லி - Gilli » Kanngal Sollum Kathai - Selvaraj // Apr 7, 2006 at 6:57 pm

    […]