இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

கண்கள் சொல்லும் கதை – 1

May 7th, 2004 · 5 Comments

சாதாரணமாகவே பெரிய கண்கள் எனக்கு என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். சிறு வயதில் எனக்கு அழகான சிரிப்பும் விரிந்த கண்களும் என்று பிறர் கூறியது உண்டு. அதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் (ஹி..ஹி..). திருமணத்தின் பிறகு, உண்மை விளம்பிகளான மச்சான் மச்சினிகள் எனக்கு MKM (முட்டைக் கண்ணு மச்சான்) என்று பெயர் வைக்கும் அளவிற்குப் பெரியதாக இருந்தது என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.

பெரிய கண்ணுடையவர்களுக்குக் கிட்டப்பார்வைப் பிரச்சினைகள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத என்னுடைய உள்மனக் கோட்பாடு ஒன்று பின்னாளில் ஏற்பட்டது உண்டு. கண்கள் பெரிதாய் இருந்தால் தான், தூரத்து ஒளிக்கற்றைகள் கண்ணின் ஆடி வழியாய்க் குவிந்து சரியான இடத்தில் விழாமல், சற்று முன்னரே விழுந்து, பிறகு சற்றே விரிந்து போய் ரெட்டினாவில் படுவதால் மங்கலாகத் தெரிகிறது என்கிற ஒரு அரைகுறைத் தத்துவம்.

அப்படி ஒரு கிட்டப்பார்வைப் பிரச்சினை என் பெரிய கண்களுக்கும் ஒருநாள் ஏற்பட்டது.


பரிசோதனையை முடித்த கண் மருத்துவர் ஒரு ஆச்சரியத்துடன் கேட்டார், “தம்பீ, ஒரு ஆறு மாசமா எப்படி உனக்குக் கண்ணு தெரிஞ்சுது?”

பள்ளியிலே சற்றுப் பழமாக முதல் வரிசையில் எனக்கு இருக்கையாதலால் அருகிலேயே இருந்த கரும்பலகையில் ஆசிரியர்கள் எழுதியது என்றும் தெரியாமல் போகவில்லை. சிறிது ஓரத்தில் அமர்ந்து இருந்த காரணத்தால், சற்றே மங்கலாய் இருந்த நேரங்களை, வெளியே இருந்து வந்த ஒளி சிதறி அப்படித் தெரிகிறது என்று நானே எண்ணிக் கொண்டிருந்தேன். தவிர, கண் பார்வை மங்கி இருக்கிறது என்று மங்கிய பார்வை ஒன்றையே கொண்டிருக்கும் ஒருவர் எப்படித் தெரிந்து கொள்வது ?

தற்செயலாய் ஓய்வான ஒரு நேரம் கடைசி வரிசையில் இருந்த நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கரும்பலகையில் இருக்கும் ஒன்றைச் சுட்டிக் காட்டி அவன் பேச, “அங்க இருக்கறது இங்க இருந்து உனக்குத் தெரியுதா?” என்றேன்.

ஏற்கனவே கண்ணாடி போட்டிருந்த அவன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“இல்லடா, நெஜமாவே கேக்கறேன், எனக்குத் தெரியல்லே”

சற்றே அவநம்பிக்கையுடன் அவனுடைய கண்ணாடியைக் கழட்டிக் கொடுத்தான். “இந்தா, இதைப் போட்டுப் பாரு”.

என்னால் நம்பவே முடியவில்லை. பளிச்சென்று தெரிந்தது. இருந்தாலும், “டேய் இது பவர் கிளாஸ். அதிக நேரம் போட்டா என் கண்ணு கெட்டுப் போயிரும்!” என்று அவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டேன். ஆனால் அப்போது தான் எனக்கு மெல்லச் சந்தேகம் உண்டாயிற்று.

அதன் பிறகு பெற்றோருடன் ஒரு நாள் திரைப்படம் பார்க்கச் சென்றிருக்கையில் ஆரம்பத்தில் வரும் எழுத்துக்கள் எனக்குத் தெரியவே இல்லை என்பதை அம்மாவிடம் கூற, “நீ ரொம்ப சினிமா பாக்காதே. குறச்சுக்கோ. எல்லாம் சரியாப் போயிடும்” என்று அறிவுரை சொன்னார்கள் ! அப்போது தான் தனியாகவே சினிமாவுக்குப் போய்ப் பழகி இருந்த காலம்.

“ஆமா, ரொம்ப நாளா இப்படி இருக்கா ? நீ மட்டும் சினிமாவுக்குப் போகும் போது மட்டும் எப்படித் தெரியுது?”

என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் மட்டும் தனியாகச் சினிமாவுக்குப் போகும் போது அப்போது எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. தரை-டிக்கெட் என்று சொல்லப் படும் பெஞ்ச் பகுதிக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு, பள்ளி வகுப்பரையைப் போல, முதல் வரிசையில் போய் உட்கார்ந்து கொள்வேன்!! பின்னாலே பல இருக்கைகள் காலியாக இருந்தாலும், “படத்தை நல்லாப் பாக்கோணும்” என்று கழுத்து வலிக்க முதல் வரிசையில் உட்கார்ந்து ‘அன்னாந்து’ பார்த்துக் கொண்டிருப்பேன். இப்போதைய திரையரங்குகள் போல அப்போதெல்லாம் பெரும் உயரத் திரைகள் அதிகம் கிடையாதாகையால் அப்படிப் பார்ப்பதில் அதிகம் பிரச்சினை இல்லை. சும்மா ஒரு வெள்ளை வேட்டியை விரிச்சு வச்ச மாதிரி தான் இருக்கும்.

எனக்குக் கண் கெட்டதற்கு அது காரணமா, அல்லது கண் கெட்ட காரணத்தால் அப்படி உட்கார்ந்தேனா என்பது, முட்டையில் இருந்து கோழி வந்ததா, கோழியில் இருந்து முட்டை வந்ததா என்பது போலத் தான்.

“கண்ணாடி போட்டுத் தான் ஆகணும் தம்பீ. அதுவும் பவர் -2.5 இருக்கு”, என்றார் மருத்துவர். எனக்கு வார்த்தையே வரவில்லை. உடன் வந்தவர் தான் “ஏங்க எதாவது ஆகாரம் கீகாரம் சாப்பிட்டுச் சரி பண்ண முடியாதா ? கண்டிப்பாக் கண்ணாடி போட்டே ஆகணுமா? ”

“இல்லீங்க. ஆரம்பத்திலேயே பாத்திருந்தா எதாவது முயற்சி பண்ணி இருக்கலாம். அதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. எப்படி ஆறு மாசமா நடமாட முடிஞ்சுதுண்ணு ?”

“கண்ணாடி போட்டுக்கங்க. அதுக்கு எழுதித் தரேன். அப்புறம் தினமும் முட்டை, பாலு, கீரைன்னு நிறையச் சேத்தச் சொல்லுங்க. வளர்ற வயசு. பவர் அதிகமாகாமக் கட்டுப் பாட்டில வச்சுக்க முயற்சி பண்ணணும்”

அன்றும் சரி, அதன் பிறகு கண் பரிசோதனை பண்ணச் செல்லும் போதும் சரி, எனக்குப் பிடிக்காத விஷயம் ஒன்று உண்டென்றால், மருந்து ஊற்றி வாசலில் உட்காரச் சொல்லி விடுவார்களே அதுதான். அவ்வப்போது வந்து பார்த்து, இன்னும் டைலேட் (dilate) ஆகலை என்று சொல்லி இன்னும் கொஞ்சம் மருந்து. இப்படியே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும். மருந்து கண்ணுக்கு மட்டும் சென்றால் பரவாயில்லை. அது எங்கே எப்படி என்று தெரியாமல், உள் வழியாக, எங்கோ மூக்கிற்கும், தொண்டைக்கும் இடையே எங்கோ சென்று கசக்க வேறு செய்யும். விழுங்க முடியாமல் எச்சிலை விழுங்கிக் கொண்டு, கன்னத்தில் வழியும் மருந்தா கண்ணீரா – அதையும் ஒரு பஞ்சு, கைக்குட்டையில் துடைத்துக் கொண்டு…

விரிவாங்கிய கண் விழி, மீண்டும் சரி நிலைக்கு வர ஒரு நாளுக்கு மேல் ஆகும். அதுவரை வெளியே சென்றால் எந்தச் சக்தி வாய்ந்த ஒளியும் பட்டு, பயங்கரமாகக் கூசும். முதல் பரிசோதனை முடிந்த மறுநாள் பள்ளி செல்லும் போது சூரிய ஒளி பட்டுக் கூசியதும், முன்பிருந்ததை விடச் சரியாகத் தெரியாததும் காரணமாக, மிகவும் சோகமாக உணர்ந்தேன். ஒழுங்கா இருந்த கண்ணு மருத்துவரிடம் காட்டிய பின் இப்போ ரொம்பக் கெட்டுப் போச்சு என்றொரு நினைப்பு !

மனதிற்குள் இன்னும் ஒரு சந்தேகம் வேறு. ஒருவேளை என் கண் கெட்டதற்கு, மொட்டை வெய்யலில் சூரியனைப் பார்க்க முயற்சி செய்ததும் காரணமாய் இருக்குமோ ? சூரிய உதயத்தின் போதோ, மறைவின் போதோ வட்டமான சூரியனைப் பார்ப்பது சுலபம். ஆனால் மதிய உச்சி வெய்யலில் யாராவது பார்க்க முயன்றிருக்கிறீர்களா ? சாலையோரத்தில், வெய்யலில் காயப் போட்ட பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டு, இரண்டு கை விரல்களைக் குறுக்கும் நெடுக்கும் ஒரு வளை மாதிரி செய்து கொண்டு அதில் ஒரு துளை வழியே ஒரு மாதிரி பார்த்தால், கதிர்களை விலக்கிவிட்டுச் சில வினாடிகளுக்குச் சூரியனின் வட்டத்தைப் பார்க்கலாம். அதற்குள் கண்களில் கண்ணீர் வந்துவிடும். மிக மெதுவாக, மிக மிக மெதுவாக, ஆடாமல் அசையாமல், கைகளை விலக்கினால், ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் எந்தக் கைவளையும் இன்றி அந்த வட்டம் தென்படும். அதற்குள் கண் கூசி இமைகளை மூட வேண்டியிருக்கும். அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மேல் எங்கு பார்த்தாலும் சூரியன் அளவிற்கு இருட்டோ, பயங்கர ஒளியோ அப்படி என்னவோ ஒன்று தான் தெரியும்.

இது போல் சில முறைகள் செய்தது தான் என் கண் பிரச்சினைகளுக்குக் காரணமா என்று தெரியாது. ஆனாலும் அது அவ்வளவாய் நல்லதுக்கில்லை என்று உள்மனது எச்சரிக்கிறது. அதனால் யாரும் முயற்சி செய்ய வேண்டாம் !

“நல்ல பெரிய ஃபிரேமாப் பாத்துக் குடுங்க”. கண்ணாடிக் கடைக்காரரிடம் கேட்டேன். சட்டம் பெரிதாய் இருந்தால், சோடா புட்டி போலத் தெரியாது என்று ஒரு நம்பிக்கை. இருந்தாலும் -2.5 என்பது கணிசமான ஒரு ‘பவர்’ தான். அதிலும் இப்போது போல எடைக்குறைவான பிளாஸ்டிக் கண்ணாடிகள் அப்போது பரவலாக இல்லை என்பதால் கனமான கண்ணாடிக் கண்ணாடி தான்.

அடுத்த நாள் பள்ளியில் ஆங்கில ஆசிரியை ஜெசிந்தா படியில் இறங்கிக் கொண்டிருக்கும் போது என் கண்ணாடியைக் கவனித்து விட்டு விசாரித்தார்கள். “How sad” என்று ஆங்கிலத்திலேயே அவர்கள் பச்சாதாபப் பட்ட போது ஒரு புறம் வருத்தமாகவும், மறுபுறம் சந்தோஷமாகவும் ஒரே நேரத்தில் இருந்தது.

சுமார் பதிமூன்று வயதிருக்கும் போது, முதன் முறையாய் முகத்துக்கு மீறிய கண்ணாடியை அணிய வேண்டிய கட்டாயம் அப்படித்தான் ஏற்பட்டது எனக்கு.

-(தொடரும்)

(படத்தில் மைக் அருகே இருப்பது ஜெசிந்தா மிஸ்)
Selva8th.jpg

கண்கள் சொல்லும் கதை-1, கதை-2, கதை-3, கதை-4, கதை-5, -இடையுரை, கதை-6, கதை-7, கதை-8, கதை-9

Tags: வாழ்க்கை

5 responses so far ↓

  • 1 Dubukku // May 7, 2004 at 11:05 am

    நல்ல பதிவு. “டேய் சோடாப்புட்டின்னு” யாரும் கூப்பிடலையா?

  • 2 balaji-paari // May 9, 2004 at 11:05 am

    Nalla irukku unga eluththu….

  • 3 sundaravadivel // May 9, 2004 at 4:05 pm

    சின்னப் பிள்ளையில நான் கண்ணாடி போட்டுக்கனும்னு ஆசைப் பட்டதுண்டு. சிறுபிள்ளைத்தனம்னா அதானோ? எப்படியோ, இது வரைக்கும் போடாம ஓட்டிட்டேன். ஆனா, அந்தக் காலம் வந்துக்கிட்டு இருக்குங்கறது மங்கலாத் தெரியுது.

    //கன்னத்தில் வழியும் மருந்தா கண்ணீரா// பத்தி வலியை உணர வைத்தது!

  • 4 செல்வராஜ் // May 9, 2004 at 10:05 pm

    நன்றி டுபுக்கு, சுந்தர், பாரி-பாலாஜி. சுயபுராணமா எழுதலாமா வேண்டாமான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். நல்லா இருக்கு-ன்னு சொல்லி மாட்டிக்கிட்டீங்க. அதனால இன்னும் கொஞ்சம் இப்படியாய் இழுக்கப் போறேன்!
    டுபுக்கு அப்புறம் உங்கள வலைப்பூ பக்கம் பார்க்கிறேன். கலக்குங்க.

  • 5 கைகாட்டி // May 10, 2004 at 6:05 am

    நானும் மொட்டை வெய்யிலில் உட்கார்ந்து வெறும் கண்ணால் சூரியனைப் பார்த்ததுண்டு. மொட்டை வெய்யிலில் உட்கார்ந்து படித்ததும் உண்டு.(நல்லா மண்டையில் ஏறும் என்ற நம்பிக்கையில்). இப்போதுதான் தெரிகிறது எந்த அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறோம் என்று