தளம் – மாறியவையும் மாறாதவையும்
Mar 22nd, 2005 by இரா. செல்வராசு
“சும்மா வந்த மாட்டப் பல்லப் புடிச்சுப் பாத்தவன்” கதையாய் எனது முந்தைய இணையதளச் சேவை நிறுவனத்தார் சொல்லாமல் கொள்ளாமல் பெரிய நெற்றிப் பட்டையாய் கூகிள் விளம்பரத் தட்டி வைக்கத் தொடங்கியது பிடிக்காமற் போயிற்று. இலவசமாய்ச் சேவை கொடுக்கிற எங்களுக்குத் தள மாற்றங்கள் செய்ய உரிமை இருக்கிறது என்று தான்தோன்றித்தனமாக அவர்கள் நடந்து கொள்ள, இணையம் ஒரு சுதந்திரமான இடம், நான் வேறிடம் பார்த்துக் கொள்கிறேன் போ என்று மாறிவிட்டேன். அந்த விளம்பரத் தட்டியைத் தூக்கி எறியக் கேட்ட காசு அதிகமில்லை. மாதம் ஒரு டாலர் தான். ஒருவேளை அவர்களுக்கு அதைத் தந்துவிட்டு அதே விளம்பரப் பலகையை நானாக வைத்திருந்தால் அந்தக் காசை ஈட்டி இருக்கலாமோ என்னவோ. இருந்தாலும் முன்னறிவிப்பின்றி அவர்கள் அப்படிச் செய்தது ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கவில்லை. அதே நேரம் விருப்பம் இருந்தால் மட்டும் காசு கொடுங்கள் என்று சொல்லி அருமையான சேவையை வழங்கி வருகிற ஜேடியின் வெப்லாக்ஸ் தளத்திற்கே மீண்டும் வந்துவிட எண்ணிவிட்டேன். சென்ற ஆண்டு இங்கே தான் வலைப்பதிவை வைத்திருந்தேன். இப்போதும் கட்டணம் ஏதும் தரவேண்டியதில்லை என்றாலும் நல்ல சேவையை வழங்கி வருகிறவருக்கு ஊக்கமளிக்கும் வண்ணமாக இவருக்கு ஒரு பே-பால் எள்ளுருண்டை வழங்கலாம் என்றிருக்கிறேன்.
இன்னொரு நல்ல சேவை வழங்கி வருகிற ஒரு உப்புமாக்காரருக்கும் ஒரு எள்ளுருண்டை (அதாங்க ஏழைக்கேத்தது!) வழங்க ஏற்பட்ட சத்தம் கொஞ்சம் ஆறிப் போயிருக்கிறது. இந்த நட்சத்திரமோ ஏட்டுச் சுரைக்காயே (புத்தகங்கள்) போதும் என்று கூறிவிட்டார். மத்தளச் சத்தத்தில் (மேளக்கச்சேரி 1, 2) மாலையிடச் சென்றவர் வந்தபின் மீண்டும் இந்த ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும். மாலையிட்டவருக்கு வாழ்த்துச் சொல்லுவதில் நானும் சேர்ந்து கொள்கிறேன்.
இந்தத் தள மாற்றங்களுக்கு இன்னொரு உந்துதல் வெப்லாக்ஸ் வோர்ட்பிரஸ் செயலியைப் பாவிக்கத் தொடங்கியிருப்பதும், அதன் 1.5 பதிப்பினை நிறுவியிருப்பதும் தான். நான் முன்பிருந்த இடத்தில் இதன் முந்தைய பதிப்பான 1.2 தான் வைத்திருந்தேன். அதில் எரிதத் தொல்லை அதிகரித்து, தமிழ்மணம் பின்னூட்டப் பகுதியில் பழசெல்லாம் வெளியே வந்து கொஞ்சம் ஓசி விளம்பரம் கிடைத்தாலும், தினமும் கொசு அடிப்பதற்கே நேரம் சரியாய் இருந்தது. இந்தப் புதுப்பதிப்பில் அந்தத் தொல்லையைக் களைய மையச் செயலியிலேயே சில வசதிகள் இருக்கின்றன.
மூன்று நான்கு வலைப்பதிவு செயலிகள் பாவித்த அனுபவத்தில் எனக்கு வோர்ட்பிரஸ் பிடித்திருக்கிறது. நியூக்ளியஸ் சிஎம்எஸ் போன்றவையும் நன்றாக இருப்பதாகக் காசி, வெங்கட் போன்றோர் கூறியிருக்கின்றனர். இருப்பினும் நிறுவுவதற்கு ஐந்து நிமிடம் போதும் என்று மிகவும் எளிமையாக இருக்கிற இந்த வோர்ட்பிரஸ் மீது ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. அந்த ஈர்ப்புத் தான் பலருக்கும் இருக்க வேண்டும். இதனைப் பாவிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு வளர்ந்து வருகிறது. இன்னொரு தனியீர்ப்பு – இது ஒரு திறவூற்று மென்பொருள். ஒரு விக்கி மூலம் உதவிப் பக்கங்களும் நன்றாக இருக்கின்றன. சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றில் பல மைக்ரோசாஃப்ட் உலாவியின் கோணங்கித் தனங்களால் ஏற்பட்டவை.
இந்த மாற்றங்களுக்கிடையே மாறாத ஒன்றாய்ப் பழைய வலைத்தள முகவரியையும் (blog.selvaraj.us) வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்துவிட்டேன். இந்த நிலையான முகவரி blog.selvaraj.us என்கிற உண்மை முகவரிக்குக் கொண்டு வந்து விட்டுவிடும். அதற்குப் பெயர் சேவை அளிக்க zoneedit தளம் உதவுகிறது. இல்லையெனில் நிலையான முகவரி என்று சென்ற முறை மாறிய போது பீற்றிக் கொண்டதில் பொருளின்றிப் போயிருக்கும். இப்போதும் இதை வெளியே சொல்லாமலேயே யாருக்கும் மாற்றம் தெரியாமல் அடித்தளத்தில் ஏற்பாடுகள் செய்திருக்க முடியும். இருந்தாலும், தமிழ்மணத்தில் நட்சத்திரச் சேவை, பின்னூட்ட எண்ணிக்கைச் சேவை போன்றவற்றில் குழப்பம் உண்டாகிவிடுமே என்கிற காரணத்தால் அங்கு இந்தப் புது(ப்பித்த)த் தள முகவரியை மாற்றிப் பதிவு செய்யப் போகிறேன். பெரும்பாலான வாசகர்கள் அங்கிருந்து செல்கிறவர்கள் தான் என்பதால் மாற்றம் பெரும் பாதிப்பில்லை. இன்னும் ஓரத்தில் தொடுப்புக் கொடுத்திருக்கும் பலர் வெப்லாக்ஸ் முகவரியையே மாற்றாதிருக்கிறார்கள். இப்போது அதுவும் சரியான இடத்திற்கே கொண்டு வந்துவிட்டுவிடும்.
தமிழ் வலைப்பதிவர்களிடையேயும் வோர்ட்பிரஸ் பாவனை அதிகரித்து வருகிறது. எஸ்கே, நவன் போன்றோர் அவரவர் சொந்தமாய்த் தமிழ் (தன்)மொழியாக்கம் செய்திருந்தாலும், பொதுவாய்க் காசி நியூக்ளியஸிற்குச் செய்தது போல பொதுவாய் எல்லோருக்கும் பயன்படுகிற மாதிரி செய்து வோர்ட்பிரஸ் தளத்திலேயே சேர்த்துவிட வேண்டும். இத்தனைக்கும் இது பன்மொழியாக்கத்தை மையமாக வைத்தே செய்யப் பட்ட செயலியென்பதால் தமிழ்மொழியாக்கம் ஒரு பெரிய வேலையாய் இருக்கக் கூடாது. தற்போதைக்கு நேரப் பற்றாக்குறையால் என்னால் அதைச் செய்ய இயலவில்லை. இடையில் யாரும் செய்யவில்லை என்றால் நான் செய்யப் போகிறேன். ஆனால் அப்படி ஒரு நாளை எதிர்பார்த்து எனது தள இடைமுகத்தை இப்போதைக்கு அரைகுறையாய்த் தமிழ்ப் படுத்தாமல் அப்படியே விட்டு வைத்திருக்கிறேன்.
“ஆமாம், எதற்கு இத்தனை வேலியேறித் தாண்டனும் ? அதான் பிளாக்ஸ்பாட்டிலேயே ஒரு பதிவு வச்சுக்கிட்டாப் பத்தாதா? அருமையா வேலை செய்யுதே”, என்பவர்களுக்கு: இந்த வலைப்பதிவுகளின் குறிக்கோளாய் இரண்டு விஷயங்களை நான் எண்ணி இருக்கிறேன். ஒன்று தமிழில் எழுத்துப் பயிற்சி, முயற்சி. இன்னொன்று நுட்ப விஷயங்களை அறிதல். இந்த இரண்டாம் குறிக்கோளுக்கு இந்த மாற்றங்கள் பெருமளவு உதவியிருக்கின்றன. புதிது புதிதாய்க் கற்றுக் கொண்டவையும், கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன என்கிற மலைப்பும் ஒரு விதத்தில் நிறைவைத் தருகின்றன.
இனி முதல் குறிக்கோளுக்கு வருவோம். இங்கிலாந்துக் குறிப்புக்களில் இன்னும் ஒன்று இருக்கிறது. பதிவு செய்துவிடலாமா? இதுவும் ஒரு மாறாத தொல்லை தான்! “அய்யா சாமி, தயவு செய்து விட்டுடுங்க” என்று என் மனைவியைப் போலக் கையெடுத்துக் கும்பிட்டாலும் விட்டுவிடுவதாய் உத்தேசம் இல்லை. 🙂 ஓரிரு நாட்களில் சந்திப்போம். ஓடி விடாதீர்கள் !
//வலைப்பதிவுகளின் குறிக்கோளாய் இரண்டு விஷயங்களை நான் எண்ணி இருக்கிறேன். ஒன்று தமிழில் எழுத்துப் பயிற்சி, முயற்சி. இன்னொன்று நுட்ப விஷயங்களை அறிதல்.//
இதே தான் என்னுடைய குறிக்கோளும். ஆனால் இரண்டாவது தான் ஜரூரா நடந்துட்டிருக்கு.
-0-
வோர்ட்ப்ரெஸ் மொழியாக்கம் பற்றி… நான் செய்த மொழியாக்கம் 1.2 பதிப்பிற்காக செய்தது. அதிலும் வெளியில் தெரியும் இடைமுகத்திற்கான சொற்றொடர்களை மட்டும் தான் .pot கோப்பு கொண்டு மாற்றியிருக்கிறேன். இந்த மொழியாக்கத்தை தான் உதவி தளத்தின் வலைப்பக்கத்தில் உபயோகிக்கிறார்கள்
தவிரவும், நான் செய்திருக்கும் மொழியாக்கம் மேல் எனக்கே திருப்தி இல்லை. அதனால் நேற்று எஸ்.கேயின் வலைப்பதிவில் ஒரு பின்னூட்டம் விட்டிருந்தேன். spaminator தூக்கி அடித்து விட்டது போலிருக்கிறது. மீண்டும் ஒரு முறை அவரிடமும் கேட்டுவிடலாம்.
நான் நெடு நாட்களாக இது பற்றி நினைத்து வந்தேன். இது பற்றிய பேச்சினை துவக்கி வைத்திருப்பதற்கு நன்றி.