இங்கிலாந்துப் பயணமும் சில குறிப்புகளும் – 3
Mar 3rd, 2005 by இரா. செல்வராசு
இரண்டு நாளாய் மீண்டும் பனி கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. நியாயமாகப் பார்த்தால் க்ளீவ்லாண்டுப் பகுதியில் இருந்து வருபவனுக்கு இங்கிலாந்தின் பருவநிலை அப்படியொன்றும் குளிரைத் தரக் கூடாது. ஆனால், கடுங்காற்று வீசிக் குளிரை அதிகப் படுத்தியதால் எப்போதும் முக்காட்டைப் போட்டுத் தலையை மூடியபடியே தான் சென்று கொண்டிருந்தேன். இந்தக் குளிரிலும் தலையை மொட்டையடித்துக் கொண்டு நடப்பவர்களைப் பார்த்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
பொது இடமென்றும் பாராமல் மேலை நாட்டுக் காதலர்கள் கட்டிப் பிடித்துக் கொள்வது புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது! பாவம், குளிருக்கு இதமாய் இருக்குமாய் இருக்கும் ( 🙂 ). காதலனோடு இல்லாத இளம் பெண்கள் காதருகே ஒரு கைவைத்துச் செல்பேசியில் பேசிக் கொண்டு, மறுகையில் ஏதேனும் பை வைத்து ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். உடல்வடிவு பற்றிய தன்னுணர்வும் கவலையும் இன்றிப் பெண்கள் பெருந்தொப்பை வெளியே தெரிய உடையணிகிறார்கள்.
துணிவாங்கும் கடையில் பணிப்பெண்ணொருவர் நெஞ்சில் கடைப்பெயர்ப்பலகை குத்தியிருந்த இடத்தருகே ஒற்றைச்சாவி தொங்க விட்டிருந்தார். எதற்கென்று கேட்க எண்ணிப் பின் தெரியாத ஊரில் தர்ம அடி வாங்கவேண்டாம் என்று வந்துவிட்டேன்!
மகள்களுக்கு வித்தியாசமாய் ஏதேனும் வாங்கி வரலாம் என்று கண்ணில் பட்ட கையில்லாத ஸ்வெட்டர் (பாஞ்ச்சோ?) வாங்கினேன். பயனில்லாமல் போனாலும் “காஸ்ட்யூம்” என்று வேடமணியும் விளையாட்டுக்களுக்கு உதவும் என்று எண்ணியது வீண் போகவில்லை. கண்ணில் கண்ட அன்று முழுதும் அதைப் போட்டுக் கொண்டு கழட்டாமல் ஆடிக் கொண்டிருந்தார்கள். அதற்குக் கொடுத்த விலைக்குப் பயன் கிடைத்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். துணியளவுகள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வித்தியாசமாக இருக்கின்றன என்பது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதை உணராமல் வாங்கி வந்த கார்டிகன் ஸ்வெட்டரைப் பார்த்த மனைவி கேட்டார் – “இது என்ன என் தங்கச்சிக்கா?”.
அவசரமாய் நுழைந்த இன்னொரு கடை Tesco நம்மூர் சூப்பர் வால்-மார்ட் போல இருந்தது. ஒரு கூரையின் கீழ் எல்லாம் என்று சகலமும் கிடைக்கிறது. ரசீது கொடுக்கும் இடத்தில் பணியாளர்களுக்கு அமர்ந்து கொள்ள இருக்கை கொடுத்திருக்கிறார்கள். மக்கள் வசதிக்கும் அதிக முக்கியத்துவம் தரும் அமெரிக்காவில் மட்டும் அப்படியில்லாமல் பணியாட்களைக் கால் கடுக்க நிற்க வைத்து ஏன் கடுப்படிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
காய்கறிமளிகைக் கடையொன்றில் இருபது பவுண்டு நோட்டுக் கொடுத்து இரண்டு பவுண்டுக்கு வாங்கினால், “சின்ன நோட்டா இருந்தாக் குடுலா” என்கிறார்கள். நட்புணர்வோடு “லா” (இல்லை “லோ” வா?) கேட்க இதமாய் இருக்கிறது. “இல்லைலா” என்றால் “பரவாயில்லை-லா அதையே கொடு” என்று வாங்கிக் கொண்டார்கள். நூறு டாலர் நோட்டைக் கொடுத்து நாலணாவிற்கு வாங்கினாலும் பேசாமல் சில்லரை கொடுக்கும் அமெரிக்க வழக்கத்திற்கு இதுவும் மாறாய் இருந்தது.
காய்கறிமளிகைக் கடையில் சாப்பாடு விற்கும் இடத்தில் பஜ்ஜி போண்டாவெல்லாம் கிடைக்கிறது. சூடு பண்ணிக் கொள்ள வழியில்லையென்று வாங்காமல் வந்துவிட்டேன். வயிற்றுநலத்திற்கு உதவும் பாக்டீரியாக்கள் நிறைந்தது என்று யக்கூல்ட் (Yakult) என்று குட்டி டப்பாவில் மோர் கிடைக்கிறது. பல வருடங்கள் முன்பு ஒருமுறை ஆஸ்திரேலியா போயிருந்தபோது அங்கு வாங்கிய நினைவு வந்தது. என் மகள்களுக்குப் பிடிக்கும் என்றாலும் கொண்டு வர ஆகும் நெடுநேரத்தில் கெட்டுவிடுமே என்று அதையும் வாங்கவில்லை. அருகேயே பெனெகால்-குடி (Benecol) ஒன்றும் பார்த்தேன். பெனெகால் கொலஸ்டிராலைக் குறைக்க உதவும் ஒரு பொருள் என்று அமெரிக்காவில் வெண்ணையாகக் கிடைக்கிறது. நண்பர் ஒருவர் ரொட்டித் துண்டின் மீது தடவிச் சாப்பிடுவார். இப்படி மோராய்க் கிடைப்பதும் ஒரு வசதி தான். ஒரு நாளைக்கு ஒன்றிற்கு மேல் குடிக்காதீர்கள் என்று எச்சரிக்கையோடு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். குண்டு குண்டாய் இருக்கும் French Fries ஐச் Chips என்றும், Chips ஐக் Crisps என்றும் கூறுகிறார்கள்.
முக்கோண வடிவில் அடைக்கப் பட்ட ரொட்டித் துண்டுச் சாண்ட்விச்கள் (முட்டை, சிக்கன், இறால், சால்மன் முதலியன வைத்து) தினமும் புதிது புதிதாய்க் கடையில் கொண்டு வந்து வைக்கிறார்கள். சுமார் இரண்டு பவுண்டுக்கு கிடைத்து மதிய உணவிற்கு அதிகம் போனியாகிறது. முதலில் இரண்டு மூன்று நாட்கள் அதிகக் கவனமின்றி வாங்கியதில் அதில் சிலவற்றில் முப்பது கிராம் கொழுப்பு இருப்பது கன்னத்திலும் தாடையிலும் தெரிய ஆரம்பித்தது! பிறகு கவனமாய்ப் பார்த்து 3.8 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ள “ஆரோக்கிய” வகைகளை வாங்கினேன்.
பெரும்பாலானோர் மதியம் சாண்ட்விச்சிற்குப் பிறகு சாக்லேட் சாப்பிடுகிறார்கள் (குறைந்த பட்சம் நான் பார்த்த நாலு பேர்!). இங்கிலாந்தில் கிடைக்கும் காட்ப்ரீஸ் சாக்லேட் நன்றாக இருக்கிறது (இந்தியாவில் கிடைப்பதைப் போன்ற சுவை). ஒரே ஒரு சுவிஸ் சாக்லேட் மட்டுமே வீட்டிற்கு வாங்கி வந்தேன். அமெரிக்கச் சாக்லேட்டில் அமிலத்தன்மை சற்று அதிகமாய் இருப்பதால் வேறு சுவை வருகிறது என்றும் ஐரோப்பாவில் அந்த அமிலத்தைக் குறைப்பதுவாய்க் கொக்கோவைச் செலுத்துகிறார்கள் (processing) என்பதால் அந்தத் தனிச்சுவை வருகிறது என்றும் என் மனைவி காலங்கார்த்தாலே என்னிடம் விடும் கதையை வேறு தகவல்கள் தெரியாத வேதிப் பொறியாளன் நம்பிக் கொள்வதைத் தவிர வழியில்லை.
\எதற்கென்று கேட்க எண்ணிப் பின் தெரியாத ஊரில் தர்ம அடி வாங்கவேண்டாம் என்று வந்துவிட்டேன்!\
‘வருமுன் காப்போன்’ 🙂
எல்லாப் பதிவுகளும் படித்துக் கொண்டிருக்கேன்
அன்புடன்
மீனா
மீனா, படிச்சுட்டிருக்கீங்கன்னு சொன்னதுக்கு நன்றி. இன்னும் ஒண்ணு ரெண்டாவது போடாம இங்கிலாந்தை விடறதில்லேன்னு இருக்கேன் -வீட்டம்மாள் சவ்விழு என்று கிண்டல் செய்தாலும்.
வாங்க சுந்தரவடிவேல். ரொம்ப நாள் காணாமப் போயிட்டீங்க. கரம்பக்குடி மளிகைக் கடை மாதிரியே நானும் நம்ப ஊர்ல நிறைய இடத்துல பாத்திருக்கேன். இங்க நான் சொன்னது கடைக்கார ஆளுங்க நின்னுக்கிட்டே வேலை செய்யுறதும், அந்த ஊர்ல உட்கார்ந்துக்கிட்டு வேலை செய்யறதும் பத்தி. போன முறை இந்தியா போயிருந்த போது சென்னையில் இருந்த ஒரு சங்கிலிக் கடைக்குச் சென்றிருந்தேன். (ஃபுட் வோர்ல்ட்?). அங்கயும் பில் போடற இடத்துல உட்கார்ந்து வேலை செய்யறாங்கன்னு நினைக்கிறேன். நாள் முழுதும் இங்க நின்னுக்கிட்டே வேலை செஞ்சா கடுப்பாகிவிடாதான்னு தான். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. இனி உங்க காட்சியும் எழுத்துமாவது தொடரும். வருக.
//
மக்கள் வசதிக்கும் அதிக முக்கியத்துவம் தரும் அமெரிக்காவில் மட்டும் அப்படியில்லாமல் பணியாட்களைக் கால் கடுக்க நிற்க வைத்து ஏன் கடுப்படிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
//
அமெரிக்காவில் நுகர்வோருக்கு சலுகைகள் அதிகம். ஆனால் பணியாட்களுக்கு எல்லா நிறுவணங்களிலும் எதிர் மறையான சலுகை பிடுங்கல்கள் தான் அதிகம் என்பது என் எண்ணம்.
அடடா, ஊருக்குப் போயிட்டு வரும்போது அது வழியாத்தான் வந்தோம். தெரிஞ்சிருந்தா பாத்திருக்கலாமே:)
//ரசீது கொடுக்கும் இடத்தில் பணியாளர்களுக்கு அமர்ந்து கொள்ள இருக்கை கொடுத்திருக்கிறார்கள்.// எங்கள் ஊர், அதாகப்பட்டது கரம்பக்குடியில், மளிகைக் கடையில் ரோக்கா (அதாவது சாமான் பட்டியல்) கொடுத்துவிட்டு, பொட்டலம் கட்டிக் கணக்கு முடித்து வரும் வரை, முன்னாலேயே இருக்கும் பலகைக் கல்லில் உட்கார்ந்து கொள்ளலாமாக்கும்!
சுவாரசியமான பதிவு. மற்றதுகளையும் படிக்கிறேன்.
—
செல்வராஜ்,
ஃபையர்ஃபாக்ஸில் சரியாகத் தெரியவில்லை. css file-லில் “justify” test-spacing, letter-spacing போன்றவற்றை நீக்கிவிடவும்.
மேலும் permalink சரியில்லை என்று தோன்றுகிறது. .htacess-ன் permission-ஐ சரி பார்க்கவும்