இங்கிலாந்துப் பயணமும் சில குறிப்புகளும் – 2
Mar 2nd, 2005 by இரா. செல்வராசு
விமான நிலையத்தில் எனக்கு முன்னிருந்த பல பேர் ஆறேழெட்டடி உயரப் பைகள் வைத்திருந்தார்கள். பனிச்சறுக்கு உபகரணங்களை எடுத்துக் கொண்டு விடுமுறைக்குப் போகிறவர்களாய் இருக்கும். பக்கத்து இருக்கைக்காரர் கூட ‘எல்.ஏ’ சென்று அங்கிருந்து ‘ஹவாய்’ செல்கிறாராம். அவர் இருக்கும் இடத்தில் நிறையப் பாகிஸ்தானியர்கள் இருக்கிறார்கள் என்றார். இங்கிலாந்து முழுதுமே பாகிஸ்தானியர்கள் நிறைய இருப்பார்களோ? பங்களாதேசத்தவரையும் இவர்கள் பாகிஸ்தானியர்கள் என்றே சேர்த்து வழங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். என்ன மொழியில் எழுதுகிறேன் என்று கேட்டுத் தமிழைத் தெரிந்து கொண்டு தன் வாழ்க்கைக்கு ஒருநிமிடப் புண்ணியம் சேர்த்துக் கொண்டார்! 🙂
இங்கிலாந்தில் பணியிற்சேர்ந்த முதலாண்டே வருடத்திற்கு ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொள்ளும் உரிமை உண்டு. பிறகு விடுமுறைக்கு வெளிநாட்டில் பனிச்சறுக்கப் போவதில் என்ன தயக்கம்? எனக்கு அதில் பாதியாகப் பதினைந்து நாள் விடுப்புரிமை பெறுவதற்கே இங்கே ஐந்து ஆண்டுகள் பணி பூர்த்தியாகி இருக்க வேண்டும். (வார இறுதியையும் சேர்த்து இந்தப் பதினைந்து நாளைக் கௌரவமாய் மூன்று வாரங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம்!). இதே நிறுவனத்தில் இன்னும் மூன்றரை மாதங்கள் கழிந்தால் நான் அந்த இலக்கை எட்டி விடுவேன்.
பவுண்டுக்கு எதிராய் டாலரின் மதிப்புக் குறைந்து கொண்டிருக்கிற இந்நாட்களில் இங்கிலாந்தவருக்குக் சற்று வசதி தான். சமீப காலங்களில் விமானப் பயணமும் மிகவும் குறைந்த விலைக்கு வந்துவிட்டது. புதிது புதிதாய் ஐரோப்பியக் குறைந்த விலை விமானங்கள் (ரயன் ஏர், flybe, jet2.com, bmi baby, EUJet, GB Air) காளான்களாய் முளைத்ததில் ஏலம் போட்டு விற்காத குறையாய் 15 பவுண்டுக்கும் 19 பவுண்டுக்கும் மான்செஸ்டர்/லிவர்பூலில் இருந்து பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி என்று பல இடங்களுக்குப் போகச் பத்திரிக்கைகளிலும் செய்தித்தாள்களிலும் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். சற்றே யோசித்து அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு சுமாரான உணவகத்தில் ஒரு வேளை நல்ல சாப்பாடு சாப்பிட அதைவிட அதிகக் காசு வேண்டும்! ஒரு அரை மணி நேரம் அமெரிக்காவிற்குத் தொலைபேசினால் அதைவிடப் பல மடங்கு அதிகம் கொடுக்க வேண்டும்!
இந்தப் புதிய விமானங்கள் கொங்கு நாட்டுத் தனியார் உள்ளூர்ப் பேருந்துகளை நினைவுபடுத்துகின்றன (சென்னையில் எல்லாம் தனியார் ‘டவுன்பஸ்’ கிடையாதே!). ஒரு பேருந்து மட்டும் வாங்க முடிந்தவர் எல்லாம் தனி நிறுவனம் ஆரம்பித்து விடலாம்.
பொதுவாகவே இங்கிலாந்தில் எல்லாம் விலை உயர்ந்து கிடக்கிறது. முன்பே பழக்கமான சக அலுவலக ஊழியரும் சரி, முன்பின் அறியா இந்திய உணவகத்துப் பங்களாதேசத்துப் பணியாளரும் சரி, இதையே சொல்லிக் குறைபட்டுக் கொண்டிருந்தனர். என்னதான் நிறுவனச் செலவு என்றாலும் தங்கிய இடத்து இறுதி ரசீது பார்த்த போது சராசரியாய் ஒருவாரத்திற்கு ஆயிரம் பவுண்டு என்றது எனக்கும் மலைப்பாகத் தான் இருந்தது.
விடுப்புக் குறைவாய் இருந்தாலும் வாழ்க்கைத் தரமும், வாங்குசக்திகளும், வசதிகளும், ஊதியங்களும் இங்கிலாந்தை விட அமெரிக்காவில் அதிகம் என்று ஆங்கிலேயச் சக ஊழியர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். ‘ஃப்ரேன்க்ஸ்’ என்றொரு பிரெஞ்சு உணவகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு முன்வாரம் ஒருநாள் ‘நெதர்ட்டன் ஹால்’ என்று ஆங்கிலேயக் குடியகம்/உணவகம் அழைத்துச் சென்றிருந்தார்கள். உடன் வந்திருந்தவர்கள் எல்லாம் குடியகத்தில் (Bar) ‘தண்ணி’ வாங்கியடித்துக் கொண்டிருக்க நான் மட்டும் டீக்கடை நாராயணன் போல சுத்த சைவப் பெப்ஸி அடித்துக் கொண்டிருந்தேன். இந்த இரண்டு சந்திப்புக்களிலும் வேலை விஷயம் பற்றி மொத்தமாய் ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசி இருக்க மாட்டோம் என்றாலும் அதை நான் வரவேற்கிறேன். வேலை வேறு, வெளியிடத்தில் நட்புணர்ச்சி வேறு. இவற்றை மேம்போக்காகப் பார்க்காமல் மனித உறவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்களாய்ப் பார்க்க வேண்டும். அப்படித் தான் நானும் முயற்சிக்கிறேன். குறிப்பாய், கலகலப்பாய் கதைகள் துணுக்குகள் என்று சுவாரசியமாகப் பேச்சு வளர்க்கத் தெரியாத என்னைப் போன்றவர்களுக்குக் குறைந்தபட்சம் அவர்கள் பேச்சில் கலந்து கொண்டு பணிப்பூச்சுக்களைத் தாண்டி மனிதத்துள் எட்டிப் பார்க்க ஒரு வாய்ப்பு.
பேச்சு பல தளத்தில் சென்றது. வாடகைக்கார்க்காரர் இருபது நிமிடம் தாமதமாய் வந்துவிட்டது பற்றி இருபது நிமிடத்திற்கு மேல் குறைசொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் போய் ஒரு கண்டனக் கடிதம் எழுதப் போவதாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒருவர். முன்பொருமுறை இங்கு வந்திருந்த அமெரிக்கர் காரில் ஏறும்போது கையில் ஒரு காபிக் கோப்பையோடு வந்துவிட்டார் என்பது பற்றி அதிர்ச்சியே தெரிவித்தார்கள். அமெரிக்காவில் எல்லாம் காலைச் சாப்பாடு காரில் ஓட்டிக் கொண்டு போகும் போது தான் என்பது பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரவர் மதிய உணவையே காரோட்டிக் கொண்டு சாப்பிடுகிறார்கள் என்பது பற்றித் தெரிந்தால் இவர்களுக்கு நெஞ்சடைப்பே வந்துவிடும்! இங்கே பெரும்பாலானவர்களின் கார்கள் உள்ளே சுத்தமாக இருப்பதன் காரணம் புரிகிறது.
உடன் வந்தவர்களுக்கெல்லாம் (ஒருவர் தவிர) வயது ஐம்பதையோட்டி இருக்க வேண்டும். பேச்சு குழந்தைகள் பற்றித் திரும்பிய தருணத்தில் இரண்டு பெண்களுக்குத் தகப்பன் ஆன பாஃல் (Paul), அவர்கள் தம் எல்லைகளைச் சோதிப்பதைப் பற்றிக் கூறினார்.
“ஓ! எனது பெண்களால் பெரும் தொல்லை. பையன்கள் கூடப் பரவாயில்லை என்று நினைக்கிறேன். பெண்கள், அதிலும் அவர்கள் வளர வளர நமக்குப் பிரச்சினை தான். சதா எல்லைகளைச் சோதிப்பதும், எதிர்த்துப் பேசுவதும், எனக்கே எல்லாம் தெரியும் என்றிருப்பதும், எதிர்கேள்விகள் கேட்பதும், அப்பப்பா…”
வளர்ந்த பெண்கள் குறித்து மேலும் தொடர்ந்தார்.
“இப்பொது எனக்குத் தெரிவதெல்லாம் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தெரிந்திருந்தால் குழந்தைகளே வேண்டாம் என்றிருப்பேன்”
வயதில் இன்னும் சற்று முத்தவரும் தானும் இரண்டு பெண்களுக்குத் தகப்பனுமான ஜான் வேறு கருத்து வைத்திருந்தார். அவருக்கும் இரண்டு பெண்கள். அதியிருபதுகளில் (28,29) இருக்க வேண்டும்.
“எனது அனுபவம் வித்தியாசமானது. எனது வாழ்க்கைக்கு அருமையைச் சேர்த்தவர்கள் எனது பெண்கள். பதின்ம வயதுப் பிரச்சினைகள் முதற்கொண்டு வேறு வளர்நிலை வித்தியாசங்களும் வேறுபாடுகளும் எங்களுக்கிடையேவும் ஏற்பட்டாலும், அவற்றையெல்லாம் மீறி எனக்குச் சிறந்த நண்பர்களாய் அமைந்திருக்கிறார்கள். அவர்களோடு இன்னும் நான் வெளியே செல்கிறேன். நேரம் செலவிடுகிறேன். அதையெல்லாம் பெரும் பேறாக எண்ணுகிறேன்”
வெவ்வேறாய் வெளிப்பட்டாலும் இருவர் சொல்வது ஒன்று தான் என்பது என் எண்ணம். சில பெற்றோர்கள் ‘இவனால் ஒரே தொல்லை. அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டு, அதையும் இதையும் எடுத்துப் போட்டுக் கொண்டு, எப்போதும் பின்னாடியே அலைய வேண்டியிருக்கிறது’ என்று குறைபட்டுக் கொள்வது போல் சொன்னாலும் உள்ளே பெருமிதம் தான் பொங்கிக் கொண்டிருக்கும். இன்னும் சில பெற்றோர்கள், ‘இவர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை. சமர்த்துக்கள். “பொட்டாட்டம்” (கொங்குத்தமிழ்) சொன்ன பேச்சுக் கேட்டுக் கொள்வார்கள்’ என்று வேறு வகையாகப் பெருமைப் பட்டுக் கொள்வார்கள்.
பாஃல் குறைபட்டுக் கொண்டதும் முதல்வகையைப் போன்றது தான். உள்ளுக்குள்ளே பெரும் அன்பை வைத்திருக்கிறார். அதனால் தானே இருபத்து மூன்று வயதான தன் பெண்குழந்தைக்கு (!) ‘ஆரஞ்சு’ செல்பேசி வாங்கிக் கொடுக்க இணையம் வழியாய் முனையும் போது வலைப்பக்கத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து மூன்று நாளாய்க் கேள்வி கேட்டு நோண்டிக் கொண்டு, மைக்ரோசாஃப்ட் தளத்தில் சென்று நிரலிகளை இற்றைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் மூன்று மாதம் கழித்துத் திருமணம் செய்து கொள்ள இருப்பவளுக்கு இப்போதிருந்தே வார இறுதிகளில் திட்டமிட்டு வேலைகள் செய்து கொண்ட்டிருக்கிறார். இவர் அன்பை வெளிக்காட்டுகிற விதம் வேறு. இவர் கூறிய சொற்களை விட்டு விட்டு அதன் பின்னணி அர்த்தத்தைப் பார்த்தால் அதை உணர்ந்து கொள்ளலாம்.
நானோ ஜான் வகையறா. இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னொரு நாள் அவரைப் போலவே என் ‘நல்ல நண்பர்களைப்’ பற்றியும் (நெனப்ஸ் தானுங்க!), அவர்களது நல்வாழ்வு பற்றியும் பெருமை பேசிக் கொண்டிருப்பேன். அருகிருந்தாலும் தொலைவிருந்தாலும் நமது செல்வங்கள் நமது இயக்கத்திற்கும் நம்பிக்கைகளுக்கும் வலுச்சேர்த்துக் கொண்டிருப்பதும் வாழ்க்கையின் ஒரு விந்தை தான். அது நாடு, மதம், மொழி எல்லாம் தாண்டி எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது.
சுவராசியமான பயணக்கட்டுரை(கள்).நன்றி செல்வராஜ்.
எனது பெற்றோர்கள் இரு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தது சென்று வந்த
பின்னர்,தங்குவிடுதி அறைகள் அமேரிக்கா போன்று விசாலமாக இல்லாததைப்
பற்றியும் அவற்றின் தூய்மையின்மை குறித்தும் புலம்பிக் கொண்டிருந்தனர்!
//என்ன மொழியில் எழுதுகிறேன் என்று கேட்டுத் தமிழைத் தெரிந்து கொண்டு தன் வாழ்க்கைக்கு ஒருநிமிடப் புண்ணியம் சேர்த்துக் கொண்டார்! //
//அமெரிக்கர் காரில் ஏறும்போது கையில் ஒரு காபிக் கோப்பையோடு வந்துவிட்டார் என்பது பற்றி அதிர்ச்சியே தெரிவித்தார்கள்//
:))))
//பாதியாகப் பதினைந்து நாள் விடுப்புரிமை பெறுவதற்கே இங்கே ஐந்து ஆண்டுகள் பணி பூர்த்தியாகி இருக்க வேண்டும். (வார இறுதியையும் சேர்த்து இந்தப் பதினைந்து நாளைக் கௌரவமாய் மூன்று வாரங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம்!).// அடப்பாவமே! விடுப்புக் கிடைப்பது அங்கு அவ்வளவு கடினமா? இதனால்தானா மக்கள் இரண்டு மூன்று வருடங்களுக்கொருமுறை ஊருக்குச் செல்கின்றனர்! ம்..
தங்கமணி நன்றி. அலாஸ்கா நன்றாக இருக்கிறதா? வாசன் – முதன் முறை தங்குமிடத்துள் நுழைந்தவுடன் அதன் சிறிய அளவு தான் கண்ணில் பட்டது (முன்பே எழுதினேன்). பரி வந்து இங்கே அபார்ட்மெண்ட் பற்றிய கருத்துச் சொன்னார். உண்மை தான்.
இராதாகிருஷ்ணன் – அதே. நான் கூட மூன்று வருடமாய்ச் சேர்த்து வைத்துப் போன வருடம் நீண்ட விடுப்பில் சென்று வந்தேன். சில சமயம் இரண்டு வருடத்திற்கு மேல் சேமித்து வைக்க முடியாது. அதனால், டிசம்பர்/ஜனவர் மாதமாய்ப் பார்த்துப் போகத் திட்டமிட வேண்டும். சுவிஸ்ஸிலும் நிறைய விடுப்புக் கிடைக்கும் என்று நினைக்கிறேன் (வருடம் ஒரு மாதம்?)
ஆமாம் செல்வராஜ், இங்கு விடுப்பின் அளவு நன்றாகவே உள்ளது.