இங்கிலாந்துப் பயணமும் சில குறிப்புகளும் – 1
Mar 1st, 2005 by இரா. செல்வராசு
சிகாகோ விமான நிலையத்தில் விறைப்பான குரலில் இம்மிகிரேஷன் (தமிழில்?) குடியேற்ற அதிகாரி ‘எவ்வளவு காலம் வெளியே போயிருந்தீர்’ என்று வரவேற்புத் தந்தார். மாற்றல் விமானத்திற்காகக் காத்திருக்கையில் தாமதமாகிவிட்ட முன்விமானத்தில் மாற்றிக் கொண்டதில் க்ளீவ்லாண்டிற்கு நினைத்ததை விட ஒரு மணி நேரம் முன்னரே வந்து சேர முடிந்தது. அகன்ற நெடுஞ்சாலைகளின் ஓரம் மிச்சமிருந்த பனியின் வெண்மையும், மேலெழும்பிய மணற்குன்றில் இலையிழந்த குச்சி மரங்களும் ஒரு பழகிய உணர்வைத் தந்தன. பலகாலம் இருந்து பழகிய ஊரும் நாடும் ஒரு சொந்தத்தைத் தருகின்றன என்று க்ளீவ்லாண்டுச் சாலைகளில் வாடகை வண்டியில் வீடு நோக்கிப் போகும் போது தோன்றியது. இங்கிலாந்தில் இருந்து என்ன, இந்தியாவில் இருந்து திரும்பி வரும்போதும் இந்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
bmi விமானப் பயணம் இனிதாகவே இருந்தது. காலை நன்கு நீட்டி வைத்துக் கொள்ள இடமிருந்தது. கேட்காமலே படிக்கப் பத்திரிக்கையும், புட்டிகளில் தண்ணீரும் கொடுத்தார்கள். சிக்கன் குருமா சாப்பாடும் நன்றாகவே இருந்தது. ஒவ்வொரு இருக்கையின் பின்னாலும் ஒரு காட்சித்திரை வைத்திருக்கிறார்கள். ‘இந்தப் படத்தைத் தான் நீ பார்க்க வேண்டும்’ என்று கட்டாயப் படுத்தாமல் ஏழெட்டுப் படங்களை வெவ்வேறு அலைவரிசைகளில் போட்டு ‘எதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்’ என்கிறார்கள். ‘விமான ஓட்டியின் பார்வையில்’ என்று படக்கருவி வைத்து அங்கிருந்தும் சலனப் படம் காட்டுகிறார்கள். வெறும் மேகக் கூட்டங்களைப் பார்ப்பதில் என்ன பலனோ? ஒருவேளை ஏறு இறங்கு முகத்தில் தெரியும் காட்சிகள் நன்றாக இருக்கலாம்.
மான்செஸ்டர் விமான நிலையத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது அந்தக் குழந்தையைப் பார்த்தேன். ஒன்றரை இரண்டு வயதுக்கு மேல் இருக்காது அவளுக்கு. வெளியூர் செல்லவிருந்த தன் தந்தையின் கால்களைக் கட்டிக் கொண்டும் சுற்றிக் கொண்டும் இருந்தது. அவரின் முழங்கால் உயரமே இருந்த அவளது பிஞ்சுப் பாதங்களில் குட்டியாய் கருப்புப் பாத அணிகள். மிருதுவான நிறத்தில் உடையணிந்து உயிருள்ள ஒரு பொம்மைக் குட்டியாய் எந்தத் தயக்கம், பயம், கலக்கம், இலக்கு, எதுவுமின்றி அங்கும் இங்கும் அலைந்தபடி திரிந்து கொண்டிருந்தது. நிமிடத்திற்கு ஒருமுறை ‘ஆன்யா… ஆன்யா…’ என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்தபடி அவளது அம்மா ஓரத்தில் அசதி களைய அமர்ந்திருந்தார். அருகே வயதிற் சற்றே பெரியவனாய் ஒரு பையன். இரு சிறு குழந்தைகளைப் பெற்று அவர்கள் அலைகிற பக்கமெல்லாம் சதா கவனத்தையும் பார்வையையும் வைத்திருக்க வேண்டிய அம்மாக்களுக்கு நிச்சயம் ஓய்வு தேவை தான்.
ஊக்கமாய்த் திரிந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். ஒரு நிமிடம் என் பார்வையைச் சந்தித்து நிலை குத்திப் பார்த்துவிட்டுப் பின் தன்பாட்டுக்குப் போய்விட்டது. சிறிது காலம் முன்பு தான் எனது மக்கள் நந்திதாவும் நிவேதிதாவும் இது போலவே சிறிதாய் இருந்தார்கள் என்ற நினைவு கிளர்ந்தது. ஆனால் காலம் எவ்வளவு வேகமாய் ஓடுகிறது! இன்னும் சிறு குழந்தைகளாய் எண்ணிக் கொண்டிருக்கும் அவர்கள், இந்தப் பிஞ்சோடு ஒப்பிடுகையில் எவ்வளவு வளர்ந்து இருக்கிறார்கள்!
நீண்ட பிரிவிற்குப் பின் நேரில் பார்த்த போது ஓடி வந்து குதித்துச் சிறியவள் கட்டிக் கொண்டாள். அதே ஆர்வத்துடன் ஓடி வந்த பெரியவளைப் புதிதாய் ஒரு வெட்கம் வந்து தடுத்ததையும் அதை அவள் முகம் காட்டியதையும் பார்க்க முடிந்தது. நான் துரத்த ஓடி ஒளிந்து கொள்ளச் சென்ற அவளுக்கு அந்தப் புது உணர்ச்சியில் இருந்து சரிநிலைக்குத் திரும்பச் சிறிது நேரமாயிற்று.
ஊரில் இருந்த போது தினமும் தொலபேசியில் அழைத்துச் சிறிது பேசினேன். சில நாட்கள் அவசரமாய் ஒரு ‘குட்நைட் அப்பா’ மட்டும் கிடைக்கும். சில நாட்கள் விளையாட்டு முசுவில் அதுவும் கிடையாது. “எனக்குப் பேச ஒன்றுமில்லையம்மா” என்று பின்னணியில் குரல் மட்டும் கேட்கும். சில நாட்கள் நீச்சல் குளம் சென்ற கதையோ, வகுப்பில் தோழியுடன் நடந்த ஊடாடலோ, ஆசிரியையின் கூற்றோ நாளுக்குத் தக்கபடி ஏதேனும் கிடைக்கும். ஒரு நாள் ஒரு பலூன் கதை கிடைத்தது.
“அப்பா, இப்போ நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா ?” – தொலைபேசியை அம்மாவின் கையில் இருந்து வாங்கிய உடனே பெரியவள் கேட்ட முதற்கேள்வி அது தான்.
“தெரியல்லியேம்மா… சொல்லு…” அயல்தேசத்தில் இருந்து அழைத்த அப்பாவிடம் தன் புதிய சாகசத்தைப் பகிர்ந்து கொள்ளும் பூரிப்பான குரலில் தொடர்ந்தாள்.
“டியேகோவின் பார்ட்டியில் வாங்கி வந்த பலூன் இன்னும் காத்துப் போகாமல் இருக்கு. அதைக் காலில் கட்டி வைத்து உதைத்துக் கொண்டிருக்கிறேன்”.
எவ்வளவு முக்கியமான செய்தி இது !
சிறு சிறு விளையாட்டுக்களில் சந்தோஷம் காணும் இந்தக் குழந்தைத்தனமான பூரிப்பு நெடுநாள் நீடிக்க வேண்டும். அவ்வாறு காணத் தெரியாத வளர்நிலையின் இயலாமையோடு சிறு போலித் தனம் கலந்த, “ஓஓ…அப்படியா?”, என்னும் ஆச்சரியத்தை மட்டுமே என்னால் காட்ட முடிந்தது.
தனது மகிழ்ச்சியில், பெருமிதத்தில் என்னையும் மகள் சேர்த்துக் கொண்டாள் என்பது மிகவும் சாதாரணமான விஷயமாய் இருக்கலாம். இருந்தாலும் அதற்காகப் பூரிப்படைந்து கொள்ளும் குழந்தைத் தனம் என்னிடமும் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது என்று எண்ணிக் கொள்ள விழைகிறேன்!
“முதல்ல சித்தியத் தான் கட்டிவிடச் சொன்னேன். ஆனா அப்போ சரியா உதைக்க முடியல்லே. அப்புறம், நானே யோசிச்சுக் கண்டுபிடிச்சு வேற மாதிரி கட்டிக் கிட்டேன். இப்போ நல்லா இருக்கு”.
நான் ஊரில் இல்லாத இரண்டு வாரத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் அந்த வெற்றிடத்தைப் போக்கிக் கொள்ள என் மனைவி மக்களுக்கு உதவிய அந்தச் சித்திக்கும், அத்தனை நாட்கள் இளம் மனைவியைப் பிரிந்திருக்கச் சம்மதித்த சித்தப்பாவிற்கும் நன்றி.
“பரவாயில்லையே… நல்லது நல்லது. ஆமா நந்து என்ன பண்றா?”
“அவளும் பலூனைக் காலில் கட்டிவிடச் சொல்லிச் சித்தியைக் கேட்டுக்கிட்டிருக்கா”. ஒருவர் செய்த ஒன்றையே மற்றவரும் செய்யும் தொடர்ச்சி எங்கள் வீட்டில் தவறாமல் நிகழும் ஒன்று.
என்றையதோ என் நல்வினைப் பயன் காரணமாய் இருக்க வேண்டும். இன்னும் ஒரு நாள் பேச்சில் எனக்கு வைத்திருக்கும் ஆச்சரியத்தைப் பற்றிப் பேசியது குழந்தை.
“டேய்… ப்ளீஸ்… என்னன்னு சொல்லுடா…” கொஞ்சலுடன் சற்றுக் கெஞ்சலுமாய்க் கேட்டேன்.
“என்ன வைத்திருக்கிறாய்? ஆ… என்னால காத்திருக்க முடியாதே…”
இவ்வளவு தூரம் கேட்க வேண்டியதில்லை. இளகிய மனம் இவளுக்கு. ஆனால் அவளளவுக்கு இது எனக்கும் ஒரு ஆர்வமான விளையாட்டு. ‘அதெல்லாம் சொல்ல முடியாது அப்பா’ என்று பிகு பண்ணிக் கொள்ளத் தெரிவதில்லை. ‘ஓ… அப்பா பாவம் இவ்வளவு தூரம் கேட்கிறார்களே’ என்று இரங்கியும், எனது எதிர்வினையில் மகிழ்ந்தும், உண்மையும் ரகசியங்களும் வெளிவந்துவிடும்.
“உங்களுக்கு ஒரு நல்வரவுப் பரிசு (welcome back gift) செஞ்சுக்கிட்டிருக்கேன்”.
மாசற்ற அன்பில் திளைக்கும் பேறு எனக்குக் கிட்டியிருக்கிறது. அப்பா திரும்பி வர இன்னும் பத்து நாட்கள் ஆகும் என்பது பற்றியெல்லாம் அவளுக்குக் கவலையிருக்கவில்லை. அது அவருக்குப் பிடிக்குமா, பயனுள்ளதா, தேவையா என்ற பெரியவர்களது பல்வித யோசனைகள் இல்லை. அப்பாவிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் மட்டும். ஏதேனும் வரைந்து வைத்திருப்பாள். விதவித வடிவங்களை வெட்டி ஒட்டியும் இருக்கலாம். புதிதாய்ப் பள்ளியில் கற்றுக் கொண்டபடி சுற்றிலும் அலங்கார வடிவங்களை வரைந்திருக்கலாம்.
எதுவாய் இருந்தாலும் மகிழ்ச்சியே என்று வந்தவனுக்கு அழகாய் ஒரு ஒன்றாம் எண் மெடல் கிடைத்தது! குழந்தைகள் உடனான உலகம் சுகமானது.
குடியேற்றம் = immigration
குடியேறுதல் = to immigrate
அன்புடன்,
இராம.கி.
வாங்க வாங்க. நீங்க என்ன வாங்கி வந்தீங்க, அதுக்கு என்ன எதிர்வினை?
இராமகி ஏற்கனவே இதுகுறித்து (immigrate and migrate) சொல்லியிருக்கின்றார். குடிவரவு, குடியகல்வு என்ற பதங்கள் ஈழத்தில் பாவிக்கப்படுகின்றன என்று நினைக்கின்றேன்.
//தனது மகிழ்ச்சியில், பெருமிதத்தில் என்னையும் மகள் சேர்த்துக் கொண்டாள் என்பது மிகவும் சாதாரணமான விஷயமாய் இருக்கலாம். இருந்தாலும் அதற்காகப் பூரிப்படைந்து கொள்ளும் குழந்தைத் தனம் என்னிடமும் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது என்று எண்ணிக் கொள்ள விழைகிறேன்!//
இதுக்குத்தான் மெடல்!
நல்ல அப்பா, நல்ல பொண்ணுங்க!
நல்ல பதிவு. நன்றி!
இராம.கி, டிஜே நன்றி. குடிவரவு என்பதாகத் தான் முதலில் எண்ணினேன். சரியாய்த் தெரியவில்லை. இது பற்றிய விவாதம் ஒன்றை முன்பு எங்கோ படித்தது மட்டும் நினைவில் இருந்தது. அடிக்கடி பாவிக்கவில்லையென்றால் சில சொற்கள் மறந்துவிடுகின்றன. இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும். அதுவரை, இது போன்ற எழுத்து முயற்சிகள் புதுப்பித்துக் கொள்ள உதவுகின்றன.
தங்கமணி, காசி, நன்றி. ஒண்ணும் வாங்கறதுக்கு நேரமில்லைன்னு சொல்ல மனம் வராமல் அடிச்சுப் பிடிச்சு ஒண்ணு வாங்கி வந்தேன். அதுபற்றி விரைவில் (இன்னொரு பாகம் போடணுமில்லே! 🙂 ).