இங்கிலாந்துப் பயணமும் சில குறிப்புகளும் – 4
Mar 26th, 2005 by இரா. செல்வராசு
ஊரைச் சுற்றும் நகரப் பேருந்துகளில் ஏறி ஈரோட்டில் வலம் வந்தீர்களானால் பூங்காவின் சுவடே இல்லாத பன்னீர் செல்வம் பூங்காவை அடைவீர்கள் (எப்போதோ பூங்கா இருந்த இடத்தில் இப்போது ஒரு கட்டணக் கழிப்பிடம் மட்டுமே இருக்கும்). அதைத் தாண்டிச் சில நிமிடங்களில் “மணிக்கூண்டெல்லாம் எறங்குங்க” என்ற நடத்துனரின் குரல் கேட்டு இறங்கி ‘அங்கியும் இங்கியும் அன்னாந்து’ பார்த்தீர்களானால் மணியையும் பார்க்க முடியாது; ஒரு கூண்டையும் பார்க்க முடியாது. ஆனால் இங்கிலாந்தின் ஃப்ரொட்ஷம், செஸ்டர் போன்ற சிற்றூர்களில் நூற்றாண்டுக் கட்டிடங்களாய் இருந்தாலும் சரி, குறுஞ்சாலையிடைச் சிறு தூண்களாய் இருந்தாலும் சரி, அங்கு பொருத்தப் பட்டிருக்கும் கடிகாரங்கள் இன்னும் சரியாக வேலை செய்து மணி காட்டிக் கொண்டிருக்கின்றன.
நிற்க. இதை எழுதி முடித்த பின் ‘மணிக்கூண்டு’ என்றால் என்ன என்று சந்தேகம் வந்துவிட்டது. உயரக் கட்டிடம் ஒன்றில் மாட்டி வைத்திருக்கிற கடிகாரமா? நீதிகேட்டு மக்கள் அடிக்கவென்று மன்னராட்சிக் காலத்தில் கயிறுகட்டி வைக்கப்பட்ட பெருமணியா? மாடு வந்து மணி அடித்த கதைத்தனமாக இருப்பதாலும், ‘கடலோரக் கவிதை’யாய் ஈரோடு இல்லை என்பதாலும், மணிக்கூண்டு என்பது இரண்டாவதன் பொருளாய் இன்றி மணி பார்க்கும் கூண்டாக – ஒரு கடிகாரச்சுவராகத் – தான் இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்கிறேன்.
லண்டனில் இருக்கிற ‘பிக் பென்’ என்கிற கடிகாரச்சுவர் தான் உலகிலேயே அதிகமாகப் படமெடுக்கப் பட்ட கட்டிடம் என்று எங்கோ படித்தேன். ஆனால் அங்கெல்லாம் போகாததால், போன இடத்துக் கதையை மட்டும் தொடர்வோம் ! 🙂 ‘பிக் பென்’ னுக்கு அடுத்த படியாக புகழில் இருப்பது செஸ்டர் நகரில் இருக்கும் இந்த வளைவுக் கடிகாரச் சுவர். லண்டனுக்கு அடுத்தபடியாகப் பெரிய நகரம் பர்மிங்ஹாம் என்றாலும், சுற்றுலாவிற்கு ஏற்றது லண்டனுக்கு அடுத்து செஸ்டர் நகரம் தான் என்று கேள்விப்பட்டேன்.
செஸ்டர் கொஞ்சம் வித்தியாசமான சிறு நகர். அது ஒரு பழைய ரோமானிய நகரம் என்றும் அதனை அப்படியே பழமையோடு வைத்திருக்க முயல்வதாகவும் அறிந்தேன். ஊரைச் சுற்றி ஒரு மதில் சுவர் இன்னும் இருக்கிறது. அந்த மதில் சுவரை ஒட்டி ஒரு புறம் பெரிய அகழியும் இன்னொரு புறம் ஒரு ஆறும் சரித்திரக் கதைகளைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. மதில் சுவரில் ஏறி ஊரைச் சுற்றி வர முடிகிறது. வழியில் காவல் சுவர்கள் (Watch Towers) இருந்த இடத்தில் இப்போது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் இங்கு பாவாடை மாதிரி ஒரு ஆடையணிந்து ஈட்டியேந்திய காவலர்கள் நின்று தொலைநோக்கி இருந்திருப்பர் என்று கற்பனை கிளம்புகிறது.
சாலைகள் குறுகலாக இருக்கின்றன. இரு புறங்களின் கட்டிடங்கள் எல்லாம் ரோமானியர் காலத்ததாகவும் விக்டோரியன் காலத்ததாகவும் உயர்ந்து நிற்கின்றன. சிறையாகவோ, ரகசிய அறையாகவோ, இருந்திருக்கக் கூடிய நிலத்தடிக் கல் மண்டபங்கள் சிலவற்றை மாற்றி இப்போது காப்பிக் கடை வைத்து அதிவேக இணைய இணைப்புத் தருகிறார்கள். மூலைகளில் கரிந்து போயிருந்த சுவர்களைப் பார்த்து அந்தக் காலத்தில் அங்கே தீப்பந்தங்கள் சொருகி வைத்திருக்க வேண்டும் என்று நானாகவே கற்பனையை வளர்த்துக் கொண்டேன்.
சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் வாணிகத்திற்குக் கூடிய இடமாக இருந்திருக்க வேண்டும். இப்போது அந்த இடங்களில் நவீனக் கடைவீதி (Shopping Malls) அமைந்திருக்கிறது. அழிவுறுகிற கட்டிடங்களைப் புதுப்பித்து உணவகங்களாகச் சிலவற்றை மாற்றியிருக்கிறார்கள்.
வரலாற்றுப் பின்னணியை இன்னும் கொண்டிருக்கிற இந்த ஊரை விட்டு வரும்போது தமிழகத்தில் இது போன்ற இடங்களைப் பராமரிக்காமல் போய் விட்டோமே என்ற ஆதங்கம் மனதில் பொங்குகிறது. பொன்னியின் செல்வனிலும் சிவகாமியின் சபதத்திலும் வரும் இடங்களை நேரில் சென்று பார்க்க முடிவது எவ்வளவு நன்றாக இருக்கும்! தற்போது ஒரு (யாஹூ) குழுவினர் அது போன்ற சரித்திர இடங்களுக்குச் சென்று இருக்கிற மிச்சங்களையேனும் பார்த்து வருகிறார்கள் என்று பவித்ராவின் பதிவில் பார்த்திருக்கிறேன். ஓய்வாக ஒரு நாள் வரலாறும் படிக்க வேண்டும். குறைந்த பட்சம் ராதாகிருஷ்ணன் சொன்னது போல் சில வரலாற்று நூல்களை வாங்கியேனும் அந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஏதோ கல்கி என்றொருவர் கதையெழுதிய காரணத்தால் தமிழக வரலாற்றைக் கொஞ்சமாக அறிந்திருக்கிறேன். ஆங்கிலேயனே அலட்டிக் கொள்ளாத பிரிட்டிஷ்காரன் வரலாற்றை ராபர்ட் கிளைவில் தொடங்கி மவுண்ட்பேட்டன் வரை சொல்லிக் கொடுக்கிற நம் பள்ளிக் கூட வரலாற்றுப் பாடங்கள், தமிழக வரலாற்றைக் கரிகாலன் கட்டிய கல்லணையைத் தாண்டிப் பெரிதாக அறிமுகப் படுத்துவதில்லை என்பது ஒருவகையில் இழுக்கும் கூட!
படங்கள் நன்றாக உள்ளன. //தமிழகத்தில் இது போன்ற இடங்களைப் பராமரிக்காமல்…// அதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டானாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை. 🙁