இங்கிலாந்துப் பயணமும் சில குறிப்புகளும் – 5
Apr 16th, 2005 by இரா. செல்வராசு
மீண்டும் ஒருமுறை இங்கிலாந்துப் பயணமாகச் சுருக்கமாய் ஒரு வாரம் சென்றுவிட்டுத் திரும்பி வந்து இரு வாரங்களாகி விட்டது. அதே வழியில் அதே விமானங்களில் பயணித்து அதே ஊருக்குச் சென்றாலும் இம்முறை சற்று வித்தியாசமாய் இருந்தது பயணம். உடன் இன்னும் இருவர். வாரம் முழுதும் அலுவலகத்தின் அதே கட்டிடத்தில் சந்திப்புகள்; அதே காலை உணவு; அதே மதிய உணவு. ஊர் திரும்புவதற்குச் சனி, ஞாயிறு, இரண்டு நாட்களுக்கும் இடையே விமானக் கட்டணத்தில் இருந்த நாலாயிரம் டாலர் வித்தியாசம் ஒரு நாள் அதிகம் தங்கிவிடச் செய்தது. கிடைத்த அந்த ஒரே நாளில் இம்முறை பார்க்கச் சென்ற ஊர் லிவர்ப்பூல்.
லிவர்ப்பூல் என்றவுடனே பலருக்கும் உடனே நினைவு வருவது பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழுவினராகத் தான் இருக்கும். ஊருக்குள் நுழையும் போதே பீட்டில்ஸ் குழுவினரில் ஒருவரான ஜான் லென்னனின் பெயரை விமான நிலையத்திற்குச் சூட்டி இருப்பது கண்ணில் படும். இதில் இருந்தே இந்த ஊரினர் எந்த இடத்தில் இந்தக் குழுவினரை வைத்திருக்கின்றனர் என்பது புரியும். உலகப் புகழ் பெற்றிருந்த இந்தக் குழுவினரின் பாடல்களையோ பெருமைகளையோ அதிகம் அறியாத நான் இதற்கு மேல் எழுதுவது தவறு.
ஆல்பர்ட் டாக் (Albert Dock) என்னும் இடத்தில் The Beatles Story என்னும் காட்சியகத்தின் முன் நின்று கொண்டிருந்தபோது, பீட்டில்ஸ் பற்றி நினைவுகூர்ந்து என்னுடன் இருந்த இருவரும் மலரும் நினைவுகளாய்ப் பேசிக் கொண்டிருந்தனர். இடையில் நுழைந்து வேண்டுமென்றே,
“பீட்டில்ஸ் என்பது ஒருவகைப் பூச்சி தானே?” என்றேன்!
அடிக்காத குறையாய் முறைத்தார்கள். வம்பெதற்கு என்று பிறகு வாய்பொத்திக் கொண்டேன். காசு கொடுத்து உள்ளே போய்ப் பார்க்கும் அளவிற்கு பீட்டில்ஸ் கதையில் ஆர்வம் தலைதூக்கவில்லை என்பதால், அதே காசைக் கொடுத்து ஒரு திறந்தவெளி இரண்டடுக்குச் சுற்றுலாப் பேருந்தில் ஏறி ஊர் சுற்றப் போய்விட்டோம்.
மெர்ஸி என்னும் ஒரு ஆறும் லிவர்ப்பூலில் இருக்கிறது. அது பற்றிக் கூட ஏதோ ஒரு புகழ் பெற்ற பாட்டு இருக்கிறதே என்று அதைப் பற்றிச் சொன்னவுடனே தெரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். “ஓஹோ” என்று கதை கேட்டுக் கொண்ட என்னை நம்பிக்கையில்லாது பார்த்தார்கள். என்ன செய்வது? நமது இசைஞானம் அப்படி. வெளியுலாவிற்கு (Picnic ஹிஹி) ஏற்ற ஒரு இதமான நாளில் உள்ளூர் வானொலி நிலையத்தார் ஆற்றங்கரையில் வந்து ஏதோ பாட்டுப் போட்டுக் கொண்டிருக்கப் பலர் நேர்வரிசை நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
லிவர்ப்பூல் மிகவும் பழைய ஊராய் இருக்கிறது. எங்கோ இருக்கிற அருங்காட்சியகத்திற்குப் போனால் இந்த ஊரின் அடிமை வர்த்தகப் பங்கு பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்றார்கள். கப்பல் கட்டுமானத்திற்கு பெயர் பெற்றிருந்த இடமாகவும் உப்பு வணிகத்தில் ஈடுபட்டுப் பெரும்பொருள் ஈட்டி இருந்ததாலும் இந்த ஊர்க்காரர்கள் இங்கிருந்து கப்பல் எடுத்துக் கொண்டு ஆப்பிரிக்கா வரை சென்று அடிமைகளை ஏற்றிக் கொண்டு அமெரிக்கக் கண்டம் சென்று விற்றுவிட்டுப் பெருஞ்செல்வர்களாய்த் திரும்பி லிவர்ப்பூல் வந்து வாழ்ந்தனராம். அப்படிச் சேர்ந்த செல்வம் கொண்டு பெரும் கட்டிடங்களும் மாளிகைகளும் கட்டித் தள்ளி இருக்கின்றனர். சிறிய பரப்பளவில் இத்தனை உயரக் கட்டிடங்கள் கொஞ்சம் பொருந்தாதிருப்பதாய் எனக்குப் பட்டது. பராமரிப்புக் குறைந்து சிலவற்றில் புல் பூண்டு கூட முளைத்திருக்கின்றன. ஆனால் பழமை வாய்ந்த ஊராச்சே – 2008ல் ஐரோப்பாவின் கலாச்சாரத் தலைநகராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று பல கட்டிடங்களைப் புதுப்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சுற்றுலாப் பேருந்து நிறையத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது. மக்களைத் தான் அதிகம் பார்க்க முடியவில்லை என்று எண்ணிக் கொண்டிருக்க, சுற்று முடியும் தருவாயில் கடைவீதிப் பகுதிக்கு வந்தது. பார்த்தால், ஊரில் இருக்கிற அத்தனை பேரும் அங்கே தான் இருந்தார்கள். அட, இது தான் வேறு எங்கும் ஈ எறும்பையும் பார்க்க முடியாத காரணமா?
லிவர்ப்பூலில் எனக்குப் பிடிக்காத இன்னொரு விடயம் – அந்தக் கடைத் தெருவில் கட்டின்றிக் கிடந்த குப்பை கூளங்கள். பெரு நகரங்களில் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் இது ஆச்சரியத்தைத் தரக் கூடாது என்றாலும், வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இது பற்றி இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும். அதிலும் பழமைச் சின்னங்களும் தெருமுக்கிற் சிற்பங்களுமாய் இருக்கிற ஒரு கலாச்சாரத் தலைநகராகப் போகிற ஊர்? எனக்கு முன்னே சென்றவன் துப்பிய எச்சிலில் கால் படாமல் பார்த்து நடக்க வேண்டியிருந்தது!
இளவயதினரும் பதின்ம வயதினரும் கூட அங்கங்கே கூட்டமாய் நின்று கொண்டு இலக்கின்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஊதிக் கொண்டிருந்தனர். என்னவோ எமகிங்கிரர்களின் புத்திரிகள் போலத் தலையலங்காரங்களும், செம்பட்டையாகவும், காது மூக்கு மட்டுமின்றி உதடு கன்னம் இமை என்று நினைத்த இடத்தில் எல்லாம் துளை போட்டுத் தோடு குத்தியிருந்தார்கள். இது சம்பந்தமாய் வெங்கட் ஒருமுறை எழுதி இருந்ததையும் பார்க்க. இவர்களைத் தாண்டிச் செல்லும் சில நொடிகளே பார்த்தேன் என்றாலும், ஒரு இலக்கோ ஆர்வமோ உணர்ச்சியோ உற்சாகமோ இன்றிக் கிடப்பது போல் பட்டது. இப்படி இளஞ்சக்தியெல்லாம் இலக்கின்றி வீணாகப் போகிறதே. அவசர யுகத்தின் வேகத்தில் இடைச்சந்தில் விழுந்துவிட்டவர்களா இவர்கள்? இது யார் குற்றம். குமுகத்தின் குற்றமா? என்று திரும்பும் வழியில் யோசிக்க வைத்தது.