இங்கிலாந்துப் பயணமும் சில குறிப்புகளும் – 6
Apr 17th, 2005 by இரா. செல்வராசு
இங்கிலாந்தின் ரயில் பயணங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. உலகிலேயே பெரிய நிறுவனமான “இந்திய ரயில்வே”விற்கு வித்திட்டவர்களின் நாட்டிலே கிழக்கு-மேற்கு ரயில்பயணத்திற்குப் பெரும் சிக்கல். மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரையோரம் இருக்கிற நண்பன் ஒருவனைச் சந்திக்க இரண்டு மூன்று இடங்களில் வண்டி மாற்றிச் செல்ல வேண்டும் என்ற காரணத்தால் இடையில் சந்திக்கவேண்டியிருந்தது. அதிலும் வார இறுதிகளில் சில பகுதிகளில் ரயில் நிறுத்தப் படும் என்று பாதி தூரம் ரயிலிலும் மீதி ஒரு பேருந்திலும் கொண்டுபோய் விட்டார்கள்!
பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் ஏறிக் கொண்டால் பரிசோதகரிடம் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். (பேருந்து நடத்துனரிடம் பெற்றுக் கொள்வது மாதிரி!). ஃப்ரொட்ஷம் மாதிரி சின்ன ஊர்களின் ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு வாங்கும் இடமே இல்லை. நிலையம் என்று சொல்லிக் கொள்ள ஒரு கட்டிடம், உட்கார இரண்டு பக்கமும் ஒரு மரப்பலகை, ஊர் பேரைச் சொல்ல ஒரு பலகை, மறுபக்கம் செல்ல ஒரு நடைப்பாலம் இவ்வளவு தான்.
இங்கிலாந்தின் எல்லா இடங்களிலும் பார்க்க முடிவது போல் ரயில் நிலையங்களும் பழங்காலக் கட்டிடங்களாய் இருக்கின்றன. காலத்தில் சற்று பின்னோக்கி இழுத்துச் செல்வதாய் இருக்கிறது. பல நிலையங்கள் குப்பை கூழம் நிறைந்தும் கிடக்கின்றன. மூச்சா போகும் இடத்திற்குச் செல்ல நேரிட்டால் மூக்காவைப்(!) பிடித்துக் கொண்டு வரவேண்டியதாகவும் சில இடங்கள் இருக்கின்றன.
ரயில்வண்டிப் பெட்டிகளின் உட்புறம் நன்றாக இருக்கின்றது. தொட்டாற் திறக்கும் கண்ணாடிக் கதவுகள் வெளிச்சத்தத்தை மட்டுப் படுத்தும் வண்ணம் இருக்கின்றன. இருக்கைகளில் சில இடையிடையே ஒன்றையொன்று பார்த்தவண்ணம் அமைக்கப் பட்டிருக்கின்றன.
வெளியே இங்கிலாந்தின் நாட்டுபுறக் காட்சிகளும் ரம்மியமாக இருக்கின்றன. வயல்வெளிகள், சிற்றோடைகள், குளிருக்கு இதமாய்த் தம் கம்பளி சுமந்து நிற்கும் வளைந்த கொம்புச் செம்மறி ஆடுகள், இந்தக் குளிரிலும் துவைத்துக் கம்பிகளில் காயப் போட்டிருந்த துணிமணிகள், வழியில் இடையிடையே வரும் கற்பாலங்கள்… இப்படி. வெளியே தெரிந்த வீடுகளின் கூமாச்சிக் கூறைகளும், மேலெழும்பிக் கட்டப் பட்டிருந்த குளிர்காயுமிடத்துப் புகைபோக்கிகளும் கூடக் காட்சிக்கு நன்றாய் இருக்கின்றன. கல்மண்டபங்களும் ரயில்பயணங்களும் பற்றி மாண்ட்ரீசர் மொழிபெயர்த்திருந்த கவிதை விவரிக்கும் காட்சியையும் கொஞ்சம் கண்ணால் கண்டது போலிருந்தது.
வார இறுதிகளில் ரயில்போக்குவரத்தும் சரி, பேருந்துப் போக்குவரத்தும் சரி மிகவும் குறைந்து விடுகின்றன. சில சமயங்கள் சில வண்டிகள் திடீரென்று ரத்து செய்யப் படுகின்றனவென்றும் ஆனால் அது பற்றிய சரியான தகவல்களைச் சரியாக அறிவிக்காமல் மக்களுக்குப் பெரும் தொல்லை என்றும் ஒரு வாடகைக் காரோட்டி குறைபட்டுக் கொண்டார்.
ஹெல்ஸ்பி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டைப் பல்வழியெச்சிற்தெரிக்கும் ஆங்கிலேயக் காரோட்டியானாலும் சரி, டான்சேனியாவில் பிறந்து இந்தியாவில் சிலகாலமும் இங்கிலாந்தில் சிலகாலமுமாய் இருந்த பஞ்சாபிக்காரராக இருந்தாலும் சரி, வாடகைக் காரோட்டிகள் நிறையப் பேசுகிறார்கள். ஒரு பயணத்தில் பாலிவுட் படம் போன்ற தன் வாழ்க்கைக் கதை முழுவதையுமே சொல்லிவிட்டார் ஒருவர். தன் பள்ளிப் பருவம், டான்சேனிய வாழ்வு, திருமணம், விவாகரத்து, கொலை செய்ய முயன்ற முதல் மனைவி, கொடி கட்டிப் பறந்து பின் நொடித்துப் போன தன் தொழில், ஏமாற்றிப் பணம் திருடிக் கொண்ட மச்சினர், தனது குழந்தைகளை அபகரித்துக் கொண்டு ஓடி விட்ட (முன்னால்?) மனைவி, மறுமணம் செய்து கொள்ளப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண், பணம் அல்ல வாழ்க்கைக்கு முக்கியம் அன்பு தான் என்னும் தத்துவம் எல்லாவற்றையும் அந்த அரை மணி நேரத்தில் அடுக்கி வைத்துவிட்டார். சொன்ன கதைக்கு ரெண்டு பவுண்டு எச்சாகக் கொசுறு (டிப்ஸ்) கொடுத்துவிட்டு வந்தேன்.
பின்குறிப்பு: இந்திய ரயில்வே ரசிகர்கள் குழுமம் என்று இருக்கிற இந்த வலைத்தளத்தில் நிறைய செய்திகள் இருக்கின்றன. அதிகாரபூர்வ இந்திய ரயில்வே பக்கத்தை விட இங்கே ரயில்வே வரலாறு முதலியன விரிவாய்க் கிடைக்கின்றன.
காரோட்டிக்களைப் பொறுத்தவரை, எந்த ஊரிலும் அவர்களுக்கென்று சில தனிப்பட்ட குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன போலும் :-)) re இங்கிலாந்தின் ரயில்வே…வேகத்திற்கே அதிக மரியாதை உள்ள இந்த நாளில், இவ்வளவு மிஞ்சியிருப்பதே பெரிய விஷயம். 🙂
செல்வராஜ்,
நான் வலைப்பதிவுகள் உலகத்திற்குள் வந்தபின் எடுத்த முதல் முடிவு, ஒவ்வொரு வலைப்பதிவிலும் முதல் பதிவிலிருந்து படித்துமுடிக்க வேண்டும் என்பது. அப்படிச் சுற்றிக்கொண்டிருந்ததில், இந்த வாரம் உங்களுடையதில் வந்து நின்றேன். உங்கள் பதிவுகளில் நீங்கள் கொடுத்துவரும் இணைப்புகள் மிகப் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்தப் பதிவில் கொடுத்திருக்கும் மாண்ட்ரீசரின் மொழிபெயர்ப்புக் கவிதைக்கான இணைப்பும், இந்திய ரயில்வே பற்றிய இணைப்பும் அப்படியே. பதிவிற்குப் பொருத்தமாக இருப்பதோடு, படிப்பவர் மேலும் இரண்டு விஷயங்கள் அறிந்துகொள்ளவும் உதவுகிறது இம்முயற்சி. உங்கள் ஊமைச்சாமி கவிதையின் பின்னூட்டத்தில் நீங்கள் கொடுத்திருந்த “சித்தாட்ட” இணைப்பு சுந்தரவடிவேலின் “மறுமொழிக் கவியருவி” யில் கொண்டுபோய் விட்டது. மலைத்து விட்டேன் அதைப் படித்து. நன்றி.
பவித்ரா – நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் வந்துகொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. வருக. உங்கள் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும்.
செல்வநாயகி – வலைப்பதிவர்கள் இணையத்தில் எழுதினாலும் அதன் சாத்தியங்களை முழுவதும் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது ஒரு குறை தான். சம்பந்தப்பட்டவற்றிற்கு இணைப்புக் கொடுப்பது என்பது அதில் மிகமிகச் சாதாரணமான ஒன்று. சின்ன விஷயம் தான் என்றாலும் அதை இனங்கண்டு நீங்கள் பாராட்டியதற்கு நன்றி.
வாசிக்க நன்றாய் உள்ளது. ஆனாலும் , உங்கள் வழக்கமான நகைச்சுவை குறையுதே?
கருத்துக்கு நன்றி கா.ரா. (இது தான் உங்கள் புதுப்பெயராமே 🙂 ) கவனத்தில் வைத்துக் கொள்கிறேன். அங்கங்கு தூவி விட்டிருப்பதாய்த் தோன்றினாலும் கொஞ்சம் குறைந்துதான் போய் விட்டது போலும். அங்கும் ரயிலில் பின்னிருக்கையில் வாய்பிளந்து குறட்டைவிட்டுத் தூங்கிய பெண் பற்றிக் குறித்திருந்தால் கூடியிருக்கலாம்! விடுபட்டுவிட்டது.