சொந்த வீடும் கடன் சுமையும்
Apr 19th, 2005 by இரா. செல்வராசு
வாடகை வீடுகளிலேயே வாழ்ந்து வந்த பெரும்பான்மை இந்தியர்கள் சமீப ஆண்டுகளில் சொந்தமாய் வீடு கட்டிக் கொள்வது அதிகமாயிருக்கிறது. வரும் ஆண்டுகளிலும் இந்த வளர்ச்சியின் வேகம் குறையப் போவதில்லை என்று ஆய்வுகளும் புள்ளியல் கணக்குகளும் தெரிவிக்கின்றன. சொந்த வீடு வாங்குவோரின் எண்ணிக்கை வருடத்திற்குச் சுமார் 30 முதல் 40 விழுக்காடு வரை அதிகரிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று இவை அனுமானிக்கின்றன.
இந்த வளர்ச்சிக்குப் பல காரணங்கள். பொருள் நிலையில் மேம்பட்டுக் கொண்டிருக்கிற நடுத்தர வருக்கத்தினர், குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும் கடன், கட்டும் வட்டிக்கு உண்டான வரிச்சலுகை, குறைந்து கொண்டிருக்கும் செலுத்தக் கட்டணம் (processing fee), கடனளிக்க ‘நீ முந்தி, நான் முந்தி’ என்று போட்டியிடும் வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்கள்… இப்படி.
வீட்டுக் கடன் என்பது நீண்ட காலக் கடன். ஆனால் இதுபோன்ற கடன்களை வைத்துக் கொள்வது இந்தியர்களுக்குப் பழக்கமில்லை என்பதால் பெரும்பாலானோர் விரைந்து கடனைக் கட்டி முடித்துவிட முனைகின்றனர். ஆனால் இப்போது கிடைக்கக் கூடிய வரிச் சலுகைகளை வைத்துப் பார்க்கும் போது அப்படி விரைந்து கட்டாமல், வாங்கிய காலம் வரை கட்டுவது சிறப்பாய் இருக்கலாம் என்று சில கருத்துக்கள் உலவுகின்றன.
அதே சமயம் பலவித சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் தவித்துப் பின்விளைவுகளுக்கு ஆளாவோரும் உண்டு. வீணில் கடன் சுமையை பெரிதாக்கிக் கொள்வோரும் உண்டு.
குறிப்பாக இன்றைய இளைஞ இளைஞிகள் சுலபமாய்க் கிடைக்கும் கடனட்டைகளில் வாங்கித் தள்ளி, பிறகு அந்த அட்டைகளுக்குக் கட்ட வேண்டிய வட்டிக்கு ஈடு கொடுக்க முடியாமல் மேலும் கடன் வாங்கி இந்த ஊழிச்சுழலில் சிக்கிக் கொள்வதாய் எழும் செய்திகள் கவலைக்குரியன. கடனட்டைக்காரர்கள் அட்டைகள் மாதிரி – சற்றே ஏமாந்தால் குருதியை உறிஞ்சிவிடுவார்கள்! அமெரிக்காவில் கடனட்டைகளில் கடன் இருந்தால் குறைந்த வட்டிக்குக் கடனை மாற்றி மாற்றி வேறு அட்டைகளில் வைத்துக் கொள்வது ஒரு தனிக் கலை! தவறாய் எண்ண வேண்டாம் – கடனட்டைக் கடனை விரைவில் கட்டி முடிப்பது தான் விவேகமானது. வீட்டுக் கடனுக்கு இங்கும் வரிச்சலுகை உண்டு என்பதால் அது வேறு கதை.
சொந்த வீட்டுக்குச் செல்வோர் அதிகரிக்க வீட்டுக் கடன்கள் அதிகரிக்கிறது. கடன்கள் அதிகரிக்கும் போது வங்கிகளுக்குத் திரும்பி வாராக் கடன்களும் சற்றே அதிகமாகிறது. ICICI, SBI, HDFC போன்ற வங்கிகள் திரும்பி வாரா வீட்டுக் கடன்கள் அதிகமில்லை – சுமார் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவானது தான் என்றாலும், LIC போன்ற நிறுவனங்கள் பத்துப் பன்னிரண்டு சதவிகிதம் திரும்பி வருவதில்லை என்கின்றன. இதனால் தானோ என்னவோ இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தான் வழங்கும் வீட்டுக் கடன் தொகையை வசூலிக்கத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத் தொடர்ந்து சில காலம் கட்டாதவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் செய்தித்தாள்களில் படத்தோடு வெளியிட்டுத் தொகையை வசூலிக்க முயல்வதும் அதில் ஒன்று!
இது போன்ற அதிரடி நடவடிக்கைகளின் காரணமாய் நூற்றுக்கு எழுபது பேர் விரைந்து கடன் தொகையைக் கட்டி விடுகிறார்கள் என்று அந்த நிறுவனம் கருதுகிறது. இருந்தாலும் இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் சரியானதுதானா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. காவலர்களின் துணையோடு வசூலிக்க வருபவர்களைப் பார்த்துக் “கந்துக் கடக்காரனை விட மோசமா நடந்துக்கிறான்களப்பா” என்கிற கருத்து எழுகிறது. தவிர, ஒரு நிறுவனத்திற்கும் கடன் வாங்குவோருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத்தை இப்படிப் பகிரங்கப்படுத்துவது நியாயமற்றது – கடன் வாங்கியவரை அவமதிக்கும் வண்ணமும், குமுகாயத்தில் பெயரைக் கெடுப்பதாகவும், ஒருவரை நிலை குலையச் செய்வதாகவும் இருக்கிறது என்று சில நுகர்வோர் சங்கங்கள் கேள்விகளை எழுப்புகின்றன. தனிப்பட்ட முறையில் கொடுத்த கடனை வசூலிக்கவோ, சட்டத்தின் கீழோ, நீதிமன்றங்களின் உதவியுடனோ நடவடிக்கைகள் எடுக்க உரிமை உண்டு என்றாலும் இப்படிப் பொதுவில் வைப்பது ஒருவரின் தனிமைக்குப் (அந்தரங்கத்திற்கு? Privacy) பங்கம் உண்டாக்குவது தானே? இதனால் நின்றுபோகும் திருமணங்கள் போன்ற குமுகாயப் பாதிப்புக்களும் சில உண்டாகின்றன என்று இந்த முறையை எதிர்த்துக் குரல் எழுப்பி வருகின்றனர்.
எது சரி? கடன் கொடுக்கும்போதே வசூல்முறைகள் பற்றித் தெளிவாய் அறிவித்துவிட்டு, தொடர்ந்து நிலுவைத்தொகையைக் கட்டாதபோது போதுமான அறிவிப்புக்கள் கொடுத்துவிட்டு, எந்தப் பாகுபாடுமின்றி எல்லோரிடத்திலும் ஒரே மாதிரி நடந்துகொண்டு, இது போன்ற வசூலிப்பு முறைகளில் இறங்கினால் அதை முழுவதுமாய்த் தவறென்று சொல்லிவிட முடியவில்லை. இதில் நிறையக் கேள்விகள் இருக்கின்றன. இதுபோன்றவற்றை முன்னரே தெளிவாகக் கூறுகிறார்களா? எந்தப் பாகுபாடுமின்றி அனைவரையும் சமமாகப் பாவிக்கிறார்களா?
என்ன இருந்தாலும் தனிப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதைத் தனிப்பட்ட முறையிலேயே நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி பொதுவில் அவசியமின்றிப் பிரசுரித்துக் கடினமாய் நடந்துகொள்ள வேண்டியதில்லை என்பதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.
தங்களுக்கு வந்த அறிக்கைகளின் தீவிரம் அறியாது சிலகாலம் கட்டாமற் போன கடனுக்காக என் நெருங்கிய சொந்தங்களின் படங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தினமலரில் வந்திருந்து நிறையக் கண்ணீருக்கும் உறக்கங்கலைந்த இரவுகளுக்கும் காரணமாய் இருந்திருக்கிறது!
செல்வராஜ்
அடுத்தவரைப் போல நாமும் வசதியுடன் வாழ வேண்டும் என்று தேவைக்கு மேல் கடன் வாங்கி மனிதர்கள் தங்களைத்தான் ஏமாற்றிக்கொள்வது எப்போது நிற்கும் என்று புரியவில்லை.வங்கிகளும் கடனட்டையையும் முழு தொகையும் குறிப்பிட்ட காலத்தில் கட்ட முடியாவிட்டால் உபயோகிக்க கூடாது என்பது புரியாமல் அல்லறும் மக்களுக்காகவே இப்போதெல்லாம் CNN Money matters குறிப்புகள் கொடுக்க தொடங்கிவிட்டார்கள். பயனுள்ள பதிவு. நன்றி