இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

கண்கள் சொல்லும் கதை – 4

May 22nd, 2004 · 11 Comments

கண்ணுள்ளாடியைப் போட்டுக் கொள்ள நன்றாக இருந்தாலும் அதன் பராமரிப்பு வேலைகள் எக்கச்சக்கம். முதலில் கையில் (பையில்) ஒரு சின்னச் சொட்டு மருந்துக் குடுவை ஒன்றை எப்போதும் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது கண் ஈரப்பசை காய்ந்து போகும் போது இரண்டு சொட்டு விட்டுக் கொள்ள வேண்டும். கண்களும் மூச்சு விடுமாமே! இந்த உள்ளாடியைப் போட்டுக் கொள்ளும் போது கண்ணின் நுண்ணிய துவாரங்கள்(?) அடைபட்டுக் கொண்டால் காற்று உள்நுழைய முடியாமல் போவதாலும் இப்படிக் காய்ந்து போய் விடுமாம்.

பிறகு இரவில் அதனைக் கழட்டி அதற்கென இருக்கும் ஒரு டப்பாவில் ஒரு திரவத்தை ஊற்றி, ஊற வைக்க வேண்டும். காலையில் மீண்டும் அதற்கென இருக்கும் ஒரு சோப்புத் திரவத்தில் இரண்டு சொட்டு விட்டுத் தேய்த்துப் பிறகு மீண்டும் அதற்கென இருக்கும் இன்னொரு உப்புத் திரவத்தை ஊற்றி நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கென அத்தனை இருந்தது!


அதோடு நின்றதா ? இந்த உள்ளாடி வில்லைகளின் மீது கண் புரதங்கள் ஏதோ படிந்து, இந்தச் சாதாக் கழுவல்களுக்கு எல்லாம் சரியாகி விடாதாம். மெலிதாய், கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பார்வையை மங்க வைக்கிற ஒரு புகை படிந்தாற்போன்ற நிலையை அடைந்துவிடும் என்று, அதனை நீக்க ஒரு மாத்திரைக் கழுவல் அவசியம். அதற்கென்று இரண்டு பிளாஸ்டிக் குடுவை தனியாய் உண்டு. வாரம் ஒரு முறை அதில் குறிப்பிட்ட அளவு திரவம் ஒன்று ஊற்றி அந்த enzymatic மாத்திரைகளை முதலில் உள்ளே போட்டு விட வேண்டும். அது “சொய்ங்” என்று நுரை விட்டுக் கொண்டு கரைந்து போன பிறகு, அன்றிரவிற்கு உள்ளாடிகளுக்கு அதனுள்ளே ஒரு குளியல்.

எல்லாம் சரிதான். இந்த நிலையில் வெளியூர் செல்ல வேண்டிய நிலையை எண்ணிப் பாருங்கள். இந்தப் பராமரிப்புச் சரக்குகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போவதற்கென்றே ஒரு தனி லாரி… இல்லை சாரி… ஒரு தனிப் பையை வைத்திருக்கவேண்டியதாகப் போய் விட்டது !

இவ்வளவும் செய்ய வேண்டி இருந்த போதிலும் கர்ம சிரத்தையாய்ச் செய்து கொண்டு தொடர்ந்து உள்ளாடிகளை அணிந்து வந்தேன். சௌகரியமாய் இருந்து பிடித்திருந்த காரணத்தால், இந்த வேலைகள் எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன். ஆனால், இப்படி முன்னரே தெரிந்து செய்ய வேண்டியிருந்த வேலைகள் தவிர, எதிர்பாராத விதமாய் ஏற்படுகிற சில சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அப்போதெல்லாம் வீட்டில் அடுப்பங்கரைக்கும் சென்று கொண்டிருந்த நாட்கள். சமையல் எல்லாம் கூடச் செய்ததாய் ஞாபகம் இருக்கிறது ! நல்ல காரமாய் வேண்டுமென்று பச்சைமிளகாய் வெட்டிப் போட்டுச் சமைத்தது உண்டு. அவசரப் படாதீர்கள் – பச்சை மிளகாய்க் கையை வைத்துக் கொண்டு உள்ளாடியைக் போட்டுக் கொள்ளப் போய் விட்டேன் என்று நினைத்து விடாதீர்கள் ! அந்த அளவிற்கு மடத்தனம் செய்யவில்லை. அதெல்லாம் சுத்தமாகச் சோப்புப் போட்டுச் சுடுதண்ணீர் விட்டுக் கழுவிக் கொண்டு தான் போனேன். ஆனாலும் பாருங்கள். இந்தப் பச்சை மிளகாய் அவ்வளவு லேசுப் பட்டதாய் இல்லை. அத்தனை கழுவல்களுக்குப் பிறகும் அதன் காரம் கையில் ஒட்டி இருந்திருக்கவேண்டும். அதிலும், நன்றாக ஆடியைத் தேய்த்துக் கழுவி எடுத்து மாட்டிக் கொண்ட போது கிளம்பிய எரிச்சல் இருக்கிறதே ! அனுபவித்தால் தான் தெரியுமோ ? கண்கள் எரிந்து கலங்கி, மீண்டும் ஆடியைக் கழட்டி நன்றாக அதையும் கையையும் கழுவி, கண்களில் குளிர் நீரை விட்டு ஆற்றிக் கொண்டு, ஒரு துண்டை எடுத்துச் சுருட்டி உஃப்பூ என ஊதி ஒத்தடம் கொடுத்துப் பிறகு ஒரு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் முயன்று மாட்டிக் கொண்டு அப்பாடாவென்று சென்ற நாட்களும் சில உண்டு.

அப்புறம், கண்ணில் மாட்டிக் கொள்ளும் நேரத்தில் கை தவறிக் கீழே விழுந்துவிட, மண்டி போட்டுக் கொண்டு கார்ப்பெட் தரையில் முன்னும் பின்னும் தடவித் தடவிக் கண்டுபிடித்த நாட்கள் சிலவும் உண்டு. இதில் ஒரு முறை மனைவியின் வீட்டில் இப்படி நடந்து விட, என்னோடு மனைவி, மச்சினன், மாமனார், மாமியார் எல்லோரும் சேர்ந்து என்னாடியைத் தேடிய காட்சி அன்று சற்றே வெட்கமாய் இருந்தாலும் இன்று வேடிக்கையாய் இருக்கிறது. எல்லோர் தேடலுக்கும் கிடைக்காத உள்ளாடி, மேலே பீங்கான் தொட்டியின் ஓரத்தில் ஒட்டி வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது.

ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், தொலைத்துவிட்டு வேறு வழியின்றி வேறு வாங்கக் கடைக்கு ஓட வேண்டிய நிலை மட்டும் என்றும் ஏற்படவில்லை. இத்தனையையும் செய்து கொண்டு உள்ளாடியோடு ஒரு ஐந்து ஐந்தரை வருடங்கள் உறவாடியாகி விட்டது.

இடையில் திருமணமாகி ஒரு செல்லப் பெண்ணுக்கு அப்பாவும் ஆகி என் கண் ஆடிக்குத் தினசரி அவ்வளவு நேரம் செலவு செய்ய முடியாத ஒரு நிலை. கூடவே வருடங்களாய்ச் சேர்ந்து கொண்ட சோம்பல். வேலை நிமித்தமாய் ஒரு இரசாயனத் தொழிற்சாலைக்குச் சில மாதங்கள் செல்ல வேண்டியிருக்கலாம் என்று இருந்த போது, அங்கே உள்ளாடி போட்டு வரக்கூடாது என்று அமைந்திருந்த சட்டம். “உள்ளாடியை விடக் கண்ணாடி தான் உங்களுக்கு அழகாய் இருக்கு” என்று கட்டியவளின் கருத்து. (இதுக்கு மேல என்ன வேணும்?). இப்படி எல்லாமுமாய்ச் சேர்ந்து ஒரு நாள் மீண்டும் கண்ணாடி ஒன்றையும் வாங்கிக் கொள்ளக் கடைக்குச் சென்றேன்.

“நல்ல சட்டமா (frame-ஆ) நான் தேர்ந்தெடுத்துத் தருகிறேன், வாங்க” என்று அருமை மனைவி தான் அழைத்துச் (இழுத்துச்) சென்றார்.

“சரி வரேன். ஆனால், இன்னும் உள்ளாடியே போட்டுக்குவேன். எப்போதாவது அவசரமாய்க் கிளம்பணும்னா, இல்லை ஒரு மாறுதல் வேணும்னா தான் இந்தக் கண்ணாடியைப் போட்டுக்குவேன். இல்லாட்டி அந்தத் தொழிற்சாலைக்குப் போகணும்னா போட்டுக்குவேன். சரியா ?”

“சரி. சரி. வாங்க ! ”

அன்று கழட்டி வைத்தவன் தான், அதன் பிறகு கண்ணுள்ளாடியைத் தொடவே இல்லை.

உள்ளாடி போச்சு, வெளியாடி வந்துது டும் டும் டும்.

-(தொடரும்)

kaNkaL4.PNG

கண்கள் சொல்லும் கதை-1, கதை-2, கதை-3, கதை-4, கதை-5, -இடையுரை, கதை-6, கதை-7, கதை-8, கதை-9

Tags: வாழ்க்கை

11 responses so far ↓

  • 1 -/இரமணிதரன், க. // May 23, 2004 at 1:05 am

    கைக்குழந்தை பராமரிப்பதிலும்விடப் பராமரிப்பு அதிகம் தேவைப்படுவதாக இருக்கிறதே கண்ணுள்ளாடி! என்னோட அம்மணி கண்ணாடியிலிருந்து கண்ணுள்ளாடிக்கு மாறும் எண்ணத்தோடு இருக்கிறாள்; இந்தக்கட்டுரை அந்தக்கருத்தினைக் கட்டுடைப்புச் செய்யுமாக்கும் 🙂

  • 2 sundaravadivel // May 23, 2004 at 6:05 am

    இந்தப் பழிப்பு உள்ளாடிக் கடைக் காரி(கை)க்கோ?! 🙂
    என்னோட நண்பியொருத்தரின் ஆடி இப்படித்தான் தொலைஞ்சுபோயி, ஆய்வகமே தேடித்திரிய, வெங்காயத் தோலு மாதிரி வாசல்கிட்ட சுருண்டு கிடந்ததை ஐயாதான் கண்டுபிடிச்சார்!

  • 3 செல்வராஜ் // May 23, 2004 at 9:05 am

    அட மாட்டிக்கிட்டேனா ? இரமணிதரன், சரி உங்க அம்மணி சார்பாகவும் ஒரு குறிப்பு. இத்தனை வேலைகள் தேவைப்படாத அணிந்து-பின்-தூக்கியெறி-ஆடியும் (disposable) இப்போது இருக்கிறது. அதை விட நீள்-அணி-ஆடி (extended wear) போட்டுக்கொண்டால் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை தூங்கும்போதும் போட்டுக் கொள்ளலாமாம். சுத்தப் படுத்தும் வேலை இல்லை. என்ன? அதைத் தூக்கிப் போட்டுவிட்டுப் புதுசாய் வாங்கிக் கொள்ளக் கொஞ்சம் பசையுள்ள ஆளாய் இருக்க வேண்டும்! 🙂

    சுந்தரவடிவேல், சுருண்ட/சுருங்கிய வெங்காயத் தோல் உவமை மிகவும் பொருத்தம். நான் கண்டிருக்கிறேன். (எனது பழிப்பு சென்ற வருடம் நயாகராவில் என் வீட்டுப் பெண்களிடம் ஒரு விளையாட்டுக் கோபம் காட்டி – இங்கு பொருத்தமாய் இருந்ததாய்த் தோன்றியது – சட்டமும், ஆடியின் வலுவும் கொஞ்சம் தெரிகிறதே)

  • 4 மீனா // May 24, 2004 at 6:05 am

    கண்கள் கதையை நல்லாத்தான் சொல்லுது, அடுத்து கதை சொல்லப் போறது மூக்குதானே?

  • 5 achimakan // May 24, 2004 at 10:05 am

    பாண்டிச்சேரியில் பயிற்சி பெற்ற பலபேர், தொடர்ந்து பயிற்சி செய்ததன் பலனாகக் கண்ணாடியின் உதவியின்றி வாழ முடிகிறது என்று நான் கேள்விப்பட்டேன்.

    பாண்டிச்சேரியில் மட்டுமின்றி வேறு பல யோகசனப் பயிற்சி மையங்களிலும் கண் பயிற்சி பெற்ற பலர் கண்ணாடியைத் தூர எறிந்துவிட முடிகிறதாம் – வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சிகளிலும் கண் பயிற்சி அடங்கும்.

    இதுகுறித்து யாருக்கும் தெளிவான கருத்துக்கள் இருக்குமானால் தெரிவிக்க வேண்டுகிறேன்

  • 6 -/ramanitharan, k. // May 24, 2004 at 1:05 pm

    இப்படி பல தேர்வு வசதிகள் கண்ணுக்கு இருப்பின், அம்மணிக்குக் கண்ணாடி உதவுநர் என்பதே என் தொழிலாக நடப்பதிலேதான் இந்தக்கண்ணாடி, வில்லை மாற்றுகிற விளையாட்டு வினையாகும்போல இருக்கிறதே. 🙂

  • 7 செல்வராஜ் // May 24, 2004 at 9:05 pm

    மீனா, ரொம்ப சுயபுராணம் பாடறேன்னு மக்கள் நினைச்சுடுவாங்கன்னு மூக்கு கதையைக் கிடப்பில் போட்டு வச்சுட்டேன் 🙂
    ஆச்சிமகன், நன்றி. அரவிந்தர் ஆசிரம பயிற்சிகளால் கண்ணாடி தேவைப்படாத யாரையும் எனக்கு நேரடியாகத் தெரியாது. ஒருவேளை குறைந்த “பவர்” இருப்பவர்களுக்கு உதவியதோ என்னவோ ?
    இரமணி, கண்ணாய் இருப்பவருக்கு அப்படி ஒரு உதவுநராய் இருக்கலாம் தான். இன்னும் பல வழிகள் இருக்கு. கொஞ்சம் பொறுத்திருங்க. சொல்றேன் !

  • 8 achimakan // May 25, 2004 at 10:05 am

    கண்களைப் பற்றிய கதை படித்தன் தொடர்வினையாக என் மூக்கின் கதையை என் வலைப் பதிவில் எழுதியுள்ளேன். எங்க வீட்டுப் பக்கமும் கொஞ்சம் வாங்க:
    http://achimakan.blogspot.com

  • 9 sathyarajkumar // May 27, 2004 at 5:05 pm

    en kathaigaL kuRiththa ungaL paaraattukku mikka nanRi selvaraj. ungaL kangaL sollum kathai thodar nalla suvaaraSyam.

  • 10 karthikramas // May 27, 2004 at 10:05 pm

    அடடா,
    கண்ணுக்கு கண்ணாடிய போட்டவுடன், வாயிக்கு என்ன ஆச்சு? 🙂

  • 11 செல்வராஜ் // May 28, 2004 at 12:05 am

    சத்யராஜ்குமார், நன்றி. உங்கள மாதிரி ரெண்டு பேர் சொல்லிடறாங்கன்னு பிடிச்சிக்கிட்டு கண்களின் கதையை இன்னும் இழுத்துக்கிட்டு இருக்கேன் 🙂

    கார்த்திக், அதையேன் கேட்கிறீங்க. கண்ணு புராணம் இப்போது போதும். வாய் மூக்கு இதெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன்!