இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

பனம்பூர் கடலில் இறைவனைக் காணல்

December 28th, 2005 · 7 Comments

“…நாளைக்கு எல்லாக் கோயில்களையும் வெட்டி விடலாம்” என்றேன்.

விரைந்து செல்லும் வண்டியின் பின்னாலோ பக்கவாட்டிலோ கீழே தரையைப் பார்த்திருந்தீர்களானால், நேர் கீழே உள்ள சாலை ஒரு அவசரகதியில் ஓடிப்போவதைப் பார்த்திருக்கலாம். சற்றே எட்டிப் பின்னே பார்வையைச் செலுத்தினால் ஓடுகிற சாலையின் வேகம் கொஞ்சம் மிதமாவதையும், இன்னும் சற்றே தள்ளி ஒரு சடத்துவ நிலையை அடைவதையும் அவதானிக்கலாம். ஒரு பெரும் சமுத்திரத்தை ஓடிச் சென்றடையும் நதியைப் போல. ஆனால் சாலையோட்டத்தின் இந்த வித்தியாசங்களோ நம் பார்வையில் மட்டும் தான். இருந்து பார்க்கும் இடம் பொருத்து நிலை மாறுபட்டிருந்தாலும், சாலை என்பது ஒன்றே.

பின்னிருக்கையில் அமர்ந்தபடி சாலையாராய்ச்சி செய்தபடி உஜ்ரேவில் கிளம்பி உடுப்பியை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். ‘எல்லாக் கோயில்களையும் வெட்டி விடலாம்’ என்று முதலில் எண்ணினாலும், இவ்வளவு தூரம் வந்துவிட்டு முக்கியமான இடங்களைப் பார்க்காமல் செல்வது வெட்டியாகத் தோன்றியது. நாள் முழுதும் பயணித்து இன்னும் மூன்று நான்கு கோயில்களுக்கும் சென்று விடலாம் என்றாலும், சிறுசுகளுக்காக ஒரு கடற்கரையைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும் என்று கொடி உயர்த்தப்பட்டது. எந்த ஒரு பயணமானாலும், ஆறோ, வாய்க்காலோ, சிற்றோடையோ, அருவியோ, கடலோ, ஏதோ ஒரு நீர் நிலை உள்ள இடத்தைச் சேர்த்துக் கொண்டோமானால் அது தரும் இனிமையே தனி.

Panambur Waves

இப்படி முன்பதிவில் ஒரு கடற்கரைக்காகப் பாதி நாள் ஒதுக்கப் பட்டுவிட, மிச்சமிருக்கிற நேரத்தில் முடிந்த இடங்கள் போக முடிவு செய்யப் பட்டது. சிருங்கேரியில் துள்ளும் துங்கபத்திரை மீன்களைப் பார்க்கவென்று ஒருவருக்கு ஆசை; எம்.ஜி.ஆர் புகழ் கொல்லூர் மூகாம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்று இன்னொருவருக்கு; ஹொரநாடு(?) அன்னபூர்னேஸ்வரி கோயில் அற்புதமாய் இருக்கும் என்று ஒருவருக்கு; உடுப்பி மிக அருகிலேயே இருக்கு, அங்கு போகாமல் எப்படி என்று ஒருவருக்கு; பேலூர், சரவணபெலகோலா, ஹளபேடு என்று எப்போதும் சேர்ந்து வரும் இந்த மூன்று இடங்களும் பற்றியும் ஒரு யோசனை; ரெண்டு நாள் குடுங்க எல்லாத்தையும் பாத்துரலாம் என்று ஓட்டுனரின் யோசனை; இப்படியாகப் பலவித கலந்துரையாடல்களுக்குப் பிறகு இருக்கிற நேரத்தில் உடுப்பிக்கும் மங்களூருக்கும் மட்டும் சென்று வருதலே உசிதம் என்று முடிவு செய்து கிருஷ்ண பரமாத்மாவைக் காணச் சென்று கொண்டிருந்தோம்.

Panambur Thennaiகாலைச் சூரியனில் கலந்து ஒளிர்பச்சை நிறத்தில் உயர்ந்தோங்கி இருக்கும் மரங்களை இருபுறமும் பார்த்தபடி அந்தச் சாலையில் சென்று கொண்டே இருக்கலாம். உள்ளத்தின் ஆழங்களை இயற்கை மீட்டி விடும்போது பல தளங்களுக்கு சென்று வர முடிவது நல்ல அனுபவம். அப்படியான ஒரு தளத்தில் சில சாதாரணர்கள் தத்துவாராய்ச்சிகள் செய்து கொண்டோம்.

கடவுள் என்றால் என்ன? கடவுள் இருக்கிறாரா? இப்படி ஊர் ஊராய்க் கடவுளைத் தேடிப் போக வேண்டியதன் அவசியம் தான் என்ன?

  • கடவுள் என்பது ஒரு அகப்பாடு. ஒருவரின் கடவுள் இன்னொருவருக்கு வேறு.
  • கடவுள் என்பது எல்லா விதயங்களிலும் நூறு சதவீதமாய் இருப்பது. பரிபூரணம்.
  • கடவுள் என்பது ஒரு கவ்வைக் கோல். வாழ்க்கையின் கடின காலங்களில் மேலே இழுத்து விடும் ஒரு கயிறு. நம்பிக்கை.
  • கடவுள் என்பது இயற்கை. மனித சக்திக்கும் மேம்பட்ட சக்தியின் பெயர். ஆதாரக் கேள்விகளின் விடை ஊற்று.
  • கடவுள் என்பது ஒரு பிரம்மாண்டம். சுய ஒழுக்கம் பேணுவதற்கு ஒரு பயத்தைத் தரக்கூடிய படிமம்.
  • கடவுள் என்பது பிறரைத் தொந்தரவு செய்யாமல் தன் வேலையுண்டென்று இருத்தல்.

இப்படியாக, இருந்து பார்க்கும் இடம் பொருத்து நிலை மாறுபட்டிருந்தாலும் இறை என்பதும் ஒன்றே!

Udupi

உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் மேற்சட்டையைக் கழட்டும்படி இருந்த பலகையறிவிப்புக்களைப் பார்த்துக் கழட்ட எத்தனிக்கையில், ‘வேண்டியதில்லை போங்க’ என்றனர். ஆகா, உடுப்பியிலும் பழையனவற்றைக் கேள்வி கேட்க ஆள் இருக்கிறது என்று புதிய மாற்றங்களை மனதுள் வரவேற்றுக் கொண்டு சென்றோம். வரிசை நீளம் அதிகமில்லை. கோயில் வித்தியாசமாய் இருந்தது. மொத்தமும் மூடிய கூரை. பூட்டிய கதவினுள் இருந்த சாமியைச் சாளர இடுக்கு வழியாகத் தான் பார்த்தோம். ஏன் என்று பெரிதாகக் கேள்வி கேட்காமல் அங்கும் கிடைத்த பிரசாதம் சாப்பிட்டோம். ஆசி வழங்க நின்று கொண்டிருந்த யானையும் வித்தியாசமாய் இருந்தது. குட்டி யானை அல்ல, ஆனாலும் குட்டியாக இருப்பது போல் தோற்றம். ஒரு ரூவாய்க் காசு வாங்கிக் கொண்டு ஆசீர்வதிக்கிறேன் என்று தலையில் நறுக்கென்று குட்டி வைத்தது.

Udupi Elephant

உலகம் பூராவும் வந்து மசால் தோசை செய்து கொடுக்கிறவர்களின் ஊரில் வந்து வெறும் இளநீர் மட்டும் குடித்துவிட்டுக் கிளம்பினோம். க்ளீவ்லாண்டில் கூட ஒரு உடுப்பி உணவகக் கிளை இருக்கிறது. உடுப்பியில் இருந்து ஐந்தே நிமிடத் தொலைவில் ஒரு கடற்கரை இருக்கிறது என்று பின்னர் அறிந்தாலும், அன்றென்னவோ ஓரிரு மணி நேரப் பயணத்தில் இருந்த பனம்பூருக்குத் தான் எங்களைச் சாலையும் இறையும் அழைத்துச் சென்றன.

Panambur Thullalவண்டியை விட்டிறங்கி நாலெட்டு வைத்துக் கடற்கரை மணலை அடைந்த போது தான் தேடி வந்த திரவியம் கிடைத்தாற்போன்ற ஒரு உற்சாகத் துள்ளல். வெண்மணற் பரப்பு மதிய வெய்யலில் ஜொலித்துக் கிடந்தது. கண்ணாடி போல் தெளிந்த நீர்ப்பரப்பு. கடற்கரைக்கே உரிய தூரத்து தென்னைகள் காற்றில் ஆடியபடி இருந்தன. சுழன்றடித்த காற்றில் பறந்த மணல் அமர விரித்த விரிப்பைச் சில நிமிடங்களிலேயே மூடி விட்டது. உள்ளே நுழைந்த போது காட்சியளித்த கப்பல் ஒன்று மறுமுறை நினைவு வந்து நோக்கும் போது காணாமல் போயிருந்தது. தூரத்தில் புள்ளியாய்த் தெரிந்தது.

Panamburகடல் பிரம்மாண்டமாய்க் கிடந்தது. சில சமயம் ஒரு பயத்தையும் கொடுத்தது. சென்ற வருடச் சுனாமியின் பாதிப்பாய்க் கூட இருக்கலாம். அறிவிப்புப் பலகையில் கூட இந்தக் கடலில் நிறையப் பேர் மூழ்கி இறந்திருக்கின்றனர் என்று புள்ளிவிவரம் சொல்லியது. இந்தப் பக்கம் போக வேண்டாம், அலை அதிகமாய் இருக்கிறது என்று எச்சரிக்கை கொள்ள வைத்தது.

கடல், இருப்பினும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. உள்ளே செல்வதெல்லாம் வெளியே வந்து விடும் என்று அதுவே ஒரு பாதுகாப்பைக் கொடுத்தது. மிருதுவான மணலும் அலைகளில் இதமும் ஒரு சுகத்தைக் கொடுத்தது.

கடல், எழில்நிறை காட்சிகளோடு பரிபூரணமாய் இருந்தது. முழுமையாய் விவரிக்க முடியாதபடி பல கிளைகளில் உள்ளே படர்ந்து கொண்டிருந்தது. அந்தக் குதூகலத்தில் துள்ளிக் குதிக்க வைத்துத் தலைகுப்புற அலையில் விழ வைத்தது.

கடல் எல்லோரையும் அனுபவிக்க விட்டபடி தன் பாட்டுக்குக் கிடந்தது. தன் வேலையுண்டென்று அலையடித்துக் கொண்டிருந்தது. விருப்பு வெறுப்புக்கள் இல்லை. வேறொரு பிரிவினைகளும் காட்டவில்லை. எல்லோரும் தனக்குச் சமமென்று சமத்துவம் பேசிக் கிடந்தது.

Panamburகடல் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அனுபவத்தைக் கொடுத்துக் கிடந்தது. தூரத்தில் பேரலைகளைக் கண்டு கிளர்ந்து சிலர் அலையேறிக் கொண்டிருந்தனர். இடையிடையே மிகப் பெரிய அலை ஒன்று புரட்டிப் போட, முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் கூடக் கைகோர்த்துத் துணை சேர்த்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். வெளியே மணலில் கல்லும் கிளிஞ்சலும் பொறுக்கிக் கொண்டு சிலர். கணுக்கால் அளவு தண்ணீர்ல் மட்டும் ஓடியபடி சில சிறுசுகள். மீண்டு திரும்பும் அலை காலடி மண்ணை அரித்துக் கொண்டு செல்கையில் குறுகுறுப்பூட்டுவதை ரசித்தபடி நின்றிருந்தவர்கள் சிலர். அகழி தோண்டி ஈர மண்ணெடுத்துக் கோட்டை கட்டிக் கொடி நட்டபடி சிலர். விரிப்பில் அமர்ந்து புருவத்தருகே கை வைத்து நிழற்படுத்திப் புத்தகம் படித்தபடி சிலர். ஒருவரின் கடலனுபவம் இன்னொருவருக்கு வேறாய் இருந்தது.

கடல் மொத்தத்தில் இயற்கைச் சக்தியின் ஒரு சிறு எடுத்துக் காட்டாகச் சக்தி வாய்ந்திருந்தது. ‘இறையும் நானே’ என அலைகளின் மீதாய் வந்த சிறு நுரை வெடிப்பாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

Panambur Sands

* * * *

கர்நாடகத் தொடர்பயணக் கட்டுரைகள் இதோடு முற்றும். இதன் மற்ற பகுதிகளின் வரிசை:

ஈரோடு போயி மைசூரு ஏறுதல்
தசராவின் மைசூரில் மகராஜன் ஊர்வலம்
மங்களூர்ச் சாலையில் குக்கே தர்மசாலா
பனம்பூர் கடலில் இறைவனைக் காணல்

* * * *

Tags: பயணங்கள்

7 responses so far ↓

  • 1 ramachandran usha // Dec 28, 2005 at 2:43 am

    செல்வராஜ், கனகதாசர் என்ற கவி தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். கோவில் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அதனால் கோவிலுக்கு வெளியில் நின்று கிருஷ்ணனின் தரிசனத்தை வேண்டிப் பாடியப்பொழுது, அங்கிருந்த ஜன்னலில் முகம் தெரியும்படி சிலை திரும்பியதாய் ஐதீகம்.
    அதனால் கோவில் சிலை மெயில் எண்டரன்சைப் பார்க்காமல், திரும்பி இருக்கும். கனகதாசர் க்ருதிகள் கன்னடத்தில் நிறைய உண்டு, அத்தனையும் கிருஷ்ண பக்தி பாடல்கள்.

  • 2 தாணு // Dec 28, 2005 at 10:28 am

    உண்மையாகவே அந்த யானை வித்தியாசமாகவே இருக்கிறது, நறுக்கென்று குட்டியது உட்பட!ஊருக்கு வந்தால் போன் செய்யவும்.புதுவருடத்துக்கு நெல்லை செல்கிறோம்.

  • 3 செல்வராஜ் // Dec 28, 2005 at 11:44 am

    உஷா, தகவலுக்கு நன்றி. சுவாரசியமாக இருக்கிறது. அவசரப் பயணத்தில் இது போன்ற தகவல்களை முழுதும் அறிய முடிவதில்லை.

    தாணு, ஊருக்கு வந்திருந்தேன். இனிமேல் வர நாட்கள் பலவாகும். தனியஞ்சல் அனுப்புகிறேன்.

  • 4 Padma Arvind // Dec 28, 2005 at 6:31 pm

    உஷா சொன்ன தகவலைத்தான் நானும் கேட்டிருக்கிறேன். கடற்கரையில் பொங்கும் அலைகளும், மீண்டும் வந்து கரையை தொட்டு, பாறைகளில் மோதும் முயற்சியும் பறந்து செல்லும் அழகும் காலை சூரியனும் எல்லாமே அழகு. பாண்டிச்சேரியில் படித்த போது முழுநிலவு அன்று இரவும், ஞாயிறுகளில் காலை கதிரவன் உதயம் காணவும் தவறாமல் செல்வேன்.

  • 5 சுதர்சன் // Jan 1, 2006 at 2:16 pm

    //கடவுள் என்பது ஒரு பிரம்மாண்டம். சுய ஒழுக்கம் பேணுவதற்கு ஒரு பயத்தைத் தரக்கூடிய படிமம்.//

    🙂

  • 6 Thangamani // Jan 1, 2006 at 4:16 pm

    குழந்தைகளின் படங்கள் அருமை. அவர்களுக்கு கடல் என்பது நினைவுகளில் தங்கி ரொம்ப நாட்களுக்கு இனி அலையடித்துக்கொண்டே இருக்கும்.

  • 7 செல்வராஜ் // Jan 1, 2006 at 11:15 pm

    பத்மா, நீச்சல் கூடச் சரியாகத் தெரியாதென்றாலும் எனக்கும் கடல் என்னவோ பிடித்தமான ஒன்று. சென்னைக் கல்லூரி நாட்களில் இனம்புரியாத தகைவு வந்து உள்ளத்தைச் சூழ்கையில் மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு பெசந்த் நகர் கரைக்குச் சென்று தனியாக மணலில் அமர்ந்து படுத்துக் கிடந்திருக்கிறேன். ஓரிரு முறையே பார்த்திருந்தாலும் பௌர்னமி நிலவின் பொன்னிறம் அலைகளில் பட்டுத் தெறித்து வரும் மெரீனாவின் அழகில் லயித்திருக்கிறேன். அலைகளின் ஓசையும், ஆர்ப்பரிப்பும், நுரைகளின் குதூகலமும், இதமான காற்றும், மனதிற்கும் அமைதியைத் தரவல்லவை என்று உணர்ந்திருக்கிறேன்.

    அத்தகைய ஒரு மகிழ்வை குழந்தைகளுக்கும் இந்தப் பயணம் கொடுத்திருக்கக் கூடும் என்று படங்களைப் பார்த்தபோது தோன்றியதில் ஒரு திருப்தி. நன்றி தங்கமணி. இந்த மகிழ்வு அவர்களுக்கும் நீண்ட நாட்களுக்கு அலையடித்துக் கிடக்க வேண்டும்.

    சுதர்சன், உங்களுக்கும் நன்றி. கடவுள் பற்றிய அதுபோன்ற ஒரு கருத்துருவாக்கமும் இருந்தது.