மூன்று வயதின் மாடர்ன் ஆர்ட்
Apr 18th, 2004 by இரா. செல்வராசு
“அக்காவின் படம் மட்டும் போட்டால் எப்படி? என்னையும் கண்டு கொள்ளுங்கள்” என்றாற் போல் தானும் ஒரு படம் போட்டு என்னிடம் நீட்டினாள் நந்திதா. எதற்கெடுத்தாலும், எல்லாவற்றிலும் பெரியவளுடன் போட்டி. அல்லது நகலெடுத்தாற் போல் நிவேதிதா செய்வதையே இவளும் செய்வது பல சமயம் வேடிக்கையான ஒன்று. போட்டிகள் தகராறுகள் அவ்வப்போது நிறைந்திருந்தாலும் பல நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் உற்ற துணையாய் நட்புடன் விளையாடும் இவர்களைக் காண்பது பேரின்பம்.
அவசர வாழ்க்கையில் சில சமயம் இது போன்ற இன்பங்களை நின்று கவனிக்காமல் போய் விடுகிறோம் என்பது தான் பெரும் இழப்பு. அந்தச் சுழலில் நானும் சில சமயம் சிக்கிக் கொண்டாலும் அவ்வப்போது விழித்துக் கொண்டு வெளிவர முயற்சி செய்வதுண்டு. அதற்கும் இந்த வலைக்குறிப்புக்களும், எழுத்தும் உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை.
நந்து என்ன வரைந்திருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. எந்தத் திசையில் பார்க்க வேண்டும் என்றும் புரியாத ஒரு நவீனப் படம் இது! என் அறிவுக்குப் புலப்பட்டவரை தீர்மாணித்து இந்தத் திசை தான் சரியாய் இருக்கும் என்று இங்கு பதிகிறேன்.
இந்தப் பக்கமாய் வந்தவளை அழைத்து இது என்னவென்று கேட்டேன். இரண்டு மூன்று முறை கேட்டும், சற்றே வெட்கமா, பெருமிதமா, தயக்கமா என்று புரியாத ஒரு உணர்ச்சியுடன் “Something Cool…” என்ற பதில் தான் வந்தது! பெரியவள் நிவேதிதா இதைப் பார்த்துப் புதிது புதிதாய்க் கண்டுபிடித்துச் சொல்ல, பிறகு ஆம் ஆம் என்று நந்துவும் எல்லாவற்றிற்கும் மகிழ்வாய் ஆமோதித்து, இருவரும் சேர்ந்து இதைப் பார்த்து ஒரு கதையே சொல்லிவிட்டார்கள். இதில் ஒரு park, monkey bar, jumping trampoline, pool, sky, wooden log, children, treasure map (spot marked X), honey inside என்று தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்த கற்பனைக் குதிரையைப் பிடித்து நிறுத்தவேண்டியது பெரிய வேலையாகப் போய்விட்டது. இப்படித் தான் நவீனப் படங்களைச் சுய கற்பனையோடு பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
எங்களுக்கு இப்படியான “மாடர்ன் ஆர்ட்” படங்களுக்குக் குறைவே இல்லை. தினமும் பாலர் பள்ளியில் இருந்து எங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவலோடு இது போல் பல நவீனப் படங்கள், கலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் எல்லாம் தேடி வந்து சேரும். நானெல்லாம் இந்த வயதில் பள்ளிக்குச் சென்று ‘கூட்டத்தோடு கோவிந்தா’ என்பது மாதிரி ஏதாவது கத்தி விட்டு, மீதிப் பாதி நேரம் உறங்கியது தான் நினைவில் இருக்கிறது. இன்றோ இப்படிப் பல சாதனைகள் செய்யப்பட்டு வீடு தேடி வருகின்றன. அளவில்லாமல் இப்படி மாடர்ன் ஆர்ட் கிடைக்கிறதே என்பதால் தான் நாங்கள் இன்னும் ஒரு முறை கூட ஆர்ட் மியூசியம் பக்கம் சென்றதில்லை!
என்னதான் காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்று இவற்றைப் போற்றிக் கொண்டாலும், இப்படியாய் வந்து சேருகிற சரக்குகள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும் முடியாது. கழிக்க முயற்சி செய்வதும் ஒரு பெரிய வேலை. அவர்களுக்குத் தெரியாமல் குப்பைக் கூடைக்குள் செலுத்த வேண்டும். அப்படியும் சில நாட்கள் கண்டு பிடித்து விடுவார்கள். “அப்பா…” அல்லது “அம்மா…” என்று பெருங்குற்றம் செய்துவிட்டது போல் குரல் கொடுப்பார்கள்!
சில சமயம் நன்றாக இருந்தவற்றைத் தூக்கிப் போட்டு விட்டோமே என்று நாங்களே நினைப்பதுண்டு. விளையாட்டில் கிறுகிறுவென்று வரும்படி அவர்களைத் தூக்கிக் கொண்டு சுத்துவது மிகவும் பிடிக்கும். விதம் விதமாய்ப் பிடித்துத் தூக்கிக் கொள்வதுண்டு. ஒருமுறை ஹெலிக்காப்டர் மாதிரி வேண்டும் என்று சொல்ல முற்பட்டு வார்த்தைகளில் விளக்க முடியவில்லை என்று படம் போட்டுக் காண்பித்தாள் நிவேதிதா. ஆச்சரியமாய் இருந்தது. தகவல் பரிமாற்றத்திற்கு மொழி உதவாத அந்த நேரத்தில் ஒரு ஓவியம் தான் உதவியது! ரொம்ப நாள் அந்தப் படத்தை வைத்திருந்தேன். இன்று தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.
இப்படி அன்றாட வாழ்வில் ஏற்படுகிற இன்பங்கள் எல்லாவற்றையும் தொகுத்துச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு தவிப்பு ஏற்படுகிறது. வளர்ந்திருக்கும் நுட்பச் சாதனங்கள் வழியாய்ப் நிலைப்படங்களும், தொடர்படங்களும், குரல் பதிவுகளும், வலைக் குறிப்புக்களுமாகப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் முனைப்பு. இவற்றில் மும்முரமாய் இருக்கும் நேரத்தில் இன்னும் கொஞ்சம் இன்பங்களைக் காலம் கடத்திப் போகிறது. இதுவா அதுவா என்று இடையில் ஏற்படும் தவிப்பைத் தான் தன் கருத்திலும் நண்பர் இரமணீதரன் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
நீங்கள் சொல்லும் பரிதவிப்பு முக்கியமானது. பொதுவாக, மகிழ்ச்சியான பொழுதுகள் இத்துணையையும் எப்படிச் சேகரித்துக்கொள்ளப்போகிறேன் என்ற அவதியிலேயே முழுமையாக அனுபவிக்கமுடியாமற் போய்விடுவதுமுண்டல்லவா?
எண்ணிப் பார்க்கையில் நாமும் சின்னக் குழந்தைகள் போலத் தானோ ? எல்லாம் வேண்டும், எதுவும் தொலைக்காதிருக்க வேண்டும் என்று எண்ணிச் சேர்த்து வைத்துக் கொள்ள முனையும் எண்ணம் நம்மிலும் உண்டு. ஆனால் அப்படியான எண்ணம் இருந்தாலும் அடுத்து வரும் புதிய ஈடுபாட்டில் மனம் செலுத்தி, சில நாட்களில் முன்பு இருந்தவற்றை மறந்து போய், எப்போதும் மகிழ்வுடன் இருக்கும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள நமக்கும் நிறைய உண்டு என்றே தோன்றுகிறது.
நந்திதாவுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்து விடுங்கள்.
வர்ணங்களை இணைப்பதில் அவரிடம் ஒரு தனித்தன்மை தெரிகிறது.
அழகாகப் பளிச்சென்று தெரியும் வர்ணங்களை தேர்ந்துள்ளார்.
மற்றும் அவர்கள் ஓவியங்களை மறந்தும் எறிந்து விடாதீர்கள்.
கவனமாக ஒரு ஃபைலில் போட்டு வையுங்கள்.
எனது பிள்ளைகளினதை நான் அப்படித்தான் சேர்த்து வந்தேன்.
நான் சேர்த்து வந்ததே அவர்களுக்குத் தெரியாது.
ஒரு சமயம் எனது அலுமாரியினுள் அவைகள் பத்திரமாக இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்து போனார்கள்.
பிள்ளைகள் வளர்ந்து தமது காலில் தனித்து வாழத் தொடங்கும் போது அவர்களிடமே கொடுங்கள்.
இவைகள் அவர்களுக்குக் கிடைக்கும் விலைமதிப்பற்ற பரிசுகள்.
சந்திரவதனா
எதற்கும் உங்கள் உள்ளூர் நாளிதழில் குழந்தைகள் பக்கம் என்றிருந்தால், அதில் வெளியிட முடியுமா என கேட்டுப் பாருங்கள்.
அழகான ஓவியம்.வாழ்த்துகள்.
என் பையன் கூட ( 9 வயது) உள்ளூர் நாளிதழில் தனது படம் வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்.
//நானெல்லாம் இந்த வயதில் பள்ளிக்குச் சென்று ‘கூட்டத்தோடு கோவிந்தா’ என்பது மாதிரி ஏதாவது கத்தி விட்டு,//இன்னும் மாறவில்லை செல்வராஜ்.நான் சமிபத்தில் ஊருக்கு சென்ற போது 5 வயது பிள்ளைகளின் பாடங்களை பார்த்து பயந்துவிட்டேன்.ஸ்கூல் அட்மீஷ்னுக்காக இரண்டரை வயது குழந்தையை பாடம் சொல்லிக்கொடுத்து தாயார் செய்வது கொடுமை.
நன்றி ச.வ., நீங்கள் சொல்வது உண்மை. எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும், நன்றாக உள்ள பலவற்றைச் சேகரித்து வைப்பதில் நாங்கள் இன்னும் சிறிது கவனம் செலுத்த வேண்டும்.
சிறு வயதில் வானொலி நிகழ்ச்சியில் நான் எழுதிய கடிதத்தை வாசித்தபோது மகிழ்ந்தது நினைவில் உள்ளது. அது போல தம் படைப்புக்கள் பிரசுரமாகும் போது குழந்தைகள் மகிழப் பெரு வாய்ப்பு இருக்கிறது என்று சுட்டிக் காட்டியமைக்கு வாசனுக்கு நன்றி.
ரவியா. உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி. ஊரில் பள்ளிச் சேர்க்கை முறைகள் பற்றி எனக்குச் சரியாகத் தெரியவில்லை. பெற்றோர்களுக்குக் கூடப் பல மணி நேரம் செவ்வி இருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் கூறிய போது ஆச்சரியமாகத் தான் இருந்தது.
அந்த ஓவியங்களை பத்திரமாக வைத்திருங்கள் செல்வராஜ். அவைகள் உண்மையில் அவர்களுக்கு பெருமகிழ்வளிக்கும் செல்வங்கள். உங்கள் மகளுக்கு என் அன்பு. மாடர்ன் ஆர்ட் குழந்தைகளுக்குத்தான் எளிதாக வரும்.
ÀðÎô À¡Å¡¨¼Ôõ ºð¨¼ÔÁ¡ ÌÆó¨¾ ¦Ã¡õÀ «Æ¸¡Â¢Õ측. þôÀ§Å þ¦¾øÄ¡õ
§À¡ðÎ «ÆÌ À¡Õí§¸¡. ´Õ 12 ÅÂÍìÌôÀ¢ÈÌ, «Ðí¸ þ‰¼òÐì̾¡ý ¯¨¼.
¿¡õ ¬¨ºÂ¡¸ ±Îì¸È ÀðÎôÀ¡Å¡¨¼¦ÂøÄ¡õ «ôÒÈõ À£§Ã¡×ľ¡ý àíÌõ.
«ÛÀÅôÀð¼Åû ¦º¡ø§Èý. ( ±õ ¦À¡ñÏìÌ 20 ÅÂÍ )
இதெல்லாம் பாதுக்காத்து வைக்கணும் என்று தோணும். ஆனால் சோம்பேறித்தனம்…ஹும்.
(அப்புறம் பேரெல்லாம் சுருக்காதீங்க சந்திரவதனா ச.வ. ஆவதெல்லாம் நல்லால்லை 😉
என் அப்பாவை நினைவுபடுத்துகிறீர்கள் செல்வராஜ். நான் என் அப்பாவைக் கொண்டாடுவதைப் போலவே நீங்கள் அப்பாவாய் கிடைத்ததற்காக நாளைக்கு அவர்கள் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அருமையான அப்பா! அம்மாவும் கூடத்தான்….இல்லையா செல்வராஜ்.
எல்லோருக்கும் நன்றி.
தங்கமணி, இப்போதெல்லாம் குழந்தைகளின் ஓவியங்களை இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கிறேன். சேர்த்து வைக்க சீரிய முயற்சி எடுக்க வேண்டும்.
துளசி, நீங்கள் கூறுவதும் உண்மை தான். இப்போதே பல சமயம் தாங்கள் நினைப்பது தான் போட்டுக் கொள்ள வேண்டும் என்று நிற்கிறார்கள். சுதந்திரமாய் இருக்க விரும்புவது ஒரு புறம் நன்றாக இருந்தாலும், சில சமயங்கள் பொறுமையைச் சோதிக்கின்றது.
காசி, நன்றி. சோம்பல் ஒரு புறம். அயர்வு ஒரு புறம். ஆனாலும் சேர்த்து வைக்க வேண்டும் என்று பலரும் மறுமொழி கூறி அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறார்கள். (எப்போது நடைமுறைப்படுத்துவேன் என்பது வேறு விஷயம்:-)). பெயர்ச்சுருக்கியது பற்றிச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. அதுவும் ஒரு சோம்பல் தான். தவறு தான். ச.வ. (சந்திரவதனா) தவறாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது. சுந்தரவடிவேலுவை எங்கோ யாரோ சு.வ. என்று எழுதியிருந்தது மனதில் நின்று அப்படிச் செய்துவிட்டேன்.
உதயா, உங்கள் கனிவிற்கு நன்றி. சிறப்பானதொரு அப்பாவாய் இருக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது. செயலில் குறை இருந்தால் அவ்வப்போது உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் எண்ணிக் கொள்கிறேன். அம்மாவும் வெகு சிறப்புத் தான். ஆனால் போயும் போயும் இந்த அப்பாவோடு ஒப்பிட்டு விட்டீர்களே. 🙂
—