மகள் வரைந்த ஓவியம்
Apr 15th, 2004 by இரா. செல்வராசு
சென்ற வாரம் நிவேதிதா ஒரு ஓவியம்வரைந்து கொண்டிருந்தாள். வசந்த-விடுப்பு என்று பாலர்பள்ளி இரண்டு வாரமாய் விடுமுறை. ஈரி ஏரியோரம் இருக்கும் க்ளீவ்லாண்டில் தான்வசந்தம் இன்னும் முழுதாய்வந்த பாட்டைக் காணோம். தமிழ்ப்புத்தாண்டு (எல்லோருக்கும் தாமதமான வாழ்த்துக்கள்) அன்று30 (F) டிகிரிக் குளிர். இந்த ஓரிரண்டு நாட்களாய்ப் பரவாயில்லை. வசந்தம் வந்து கொண்டிருக்கும் அறிகுறிகள் தெரிகின்றன.
விடுமுறை என்றுவீட்டில் இருக்கும் மக்கள் இருவரையும் மேய்க்கும் வேலை மனைவிக்கு. தினமும் ஓவியமும், நடனமும், பிறகலைகளும், வெட்டி ஒட்டுதல்களும், பசையைக் கார்ப்பெட் தரையெங்கும் ஒழுக விடுவதும், இப்படியாய்ப் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி பார்ப்பதை முடிந்தவரை குறைக்க வேண்டுமெனில் வேறு வழிகளில் அவர்களது கவனத்தை ஈர்க்கும் வேலைகளைக் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது.
எப்போதும் போல் ஓவியம் வரைகிறேன் பேர்வழி என்று ஏதோ கிறுக்கிக் கொண்டு இருக்கிறாள் என்று எண்ணினேன். எட்டிப் பார்த்துக் கேட்டேன், “என்னடா வரையிற?”
சூரியன், மேகம், பூ என்று எல்லாவற்றிற்கும் கண், மூக்கு, வாய் நிச்சயம் உண்டு இவளின் ஓவியத்தில். இன்றோ அவை தவிர, பல திசைகளில் பல பறவைகள் பறந்து கொண்டிருந்தன. வண்ணங்கள் சேர்க்காமல் கருப்பு வெள்ளைப் படத்தில் கருத்தாய் மூழ்கி இருந்தவள் பெருமிதத்தோடு திரும்பிப் பார்த்துச் சொன்னாள் – “நம்ம கேம்பிங் ட்ரிப், அப்பா”.
ஆச்சரியமாய் இருந்தது. சில விஷயங்கள் எப்படிப் பிஞ்சு உள்ளங்களில் பதிந்து விடுகின்றன. சென்ற வருடம் இன்னொரு நண்பர் குடும்பத்துடன் ஒரு கூடார முகாம் பயணம் சென்றிருந்தோம். சிறுமிகளின் முதல் முகாம் பயணம். ஆனால் கடும் மழை வந்து கூடாரங்கள் எல்லாம் நனைந்து விடவே அடுத்த நாள் கிளம்பி வந்து விட்டோம். பெரியவர்களே பெரிதாய் ரசிக்காத பயணம் என்றாலும் இந்தப் பெண்ணுக்குப் பயணம் எப்படிப் பதிந்து இருக்கிறது ! ஒரு வருடம் கழித்து இன்னும் நினைவு வைத்திருக்கிறாள். வந்து கொண்டிருக்கிற வசந்த காலம் இந்த நினைவுகளை இவளிடம் கிளறி விட்டிருக்கும்.
பெண்ணின் ஞாபகத் திறமையை மெச்சி மனைவியிடம் பெருமையடித்துக் கொண்டேன்.
“ஆமா, உங்க பொண்ணுக்குக் காலையில நான் சொன்னதெல்லாம் ஒன்னும் நினைவில்லே. ஒரு வருஷத்துக்கு முன்ன நடந்தது நினைவிருக்குதாம்” என்று இடக்காய்ப் பதில் வந்தது மனைவியிடம் இருந்து ! ஆனால் உள்ளுக்குள் அவருக்கும் பெருமை தான் என்று முகம் காட்டிக் கொடுத்தது.
ஓவியத்தில் ஒவ்வொன்றாய்ச் சுட்டிக் காட்டினாள் மகள். கீழ் வலது ஓரத்தில் “சுதா அத்தை, சுதாகர் மாமா, அவர்கள் இருவரின் கையைப் பிடித்தபடி இடையில் ரோஹன்” (ஒரு வயது). அவர்களுக்கு முன் அவர்களின் “டென்ட், பிக்னிக் டேபிள்”.
இடது ஓரத்தில் “நம்முடைய டென்ட். பிக்னிக் டேபிள்”.
“இது அம்மா, நந்து, நான்” என்று அவள் நிறுத்த, எனக்குள் துடிப்பு. அவசரமாய் என் குரல்.
“டேய், நான் எங்கடா ? ”
“இதோ, நீங்க இங்க இருக்கீங்க அப்பா. நீங்க தான நம்ம வீட்டிலயே பெரியவங்க”
அப்போது தான் கவனித்தேன். உயரமாய், காற்றில் ஆடுகிற பலூன் மாதிரி ஒரு தலையுடன் நான் பறவைகளுடன் அளவளாவிக் கொண்டிருந்தேன். என்னை விட்டுவிடவில்லை அவள் என்று அப்போது தான் மனது சமாதானம் அடைந்தது. “அப்பாடா!”.
“படம் நல்லா இருக்கும்மா, நம்ம ப்ளாக்லே போட்டிருவோமா ?”
எவ்வளவு தூரம் இந்த வலைப்பதிவுகள் அவளுக்குப் புரிகின்றன என்று தெரியவில்லை. ஆனால், அப்பா ரொம்ப நேரம் கணினி முன் அமர்ந்து ப்ளாக் ப்ளாக் என்று கதை விட்டுக் கொண்டிருப்பது அவள் கவனத்தில் தப்பவில்லை. அதோடு அவர்களது படங்களும் அங்கங்கு போட்டிருக்கிறேன் என்று கூப்பிட்டுக் காட்டியதில் அது பற்றித் தெரிந்து வைத்திருந்தாள். மேற்சொன்ன கேள்வியைக் கேட்டவுடன் அவள் கண்களில் ஒரு ஆர்வம் பளிச்சிட்டது.
“ஓக்கே அப்பா”.
“வெறும் கருப்பு வெள்ளையாய் இருக்கிறதே… போய்க் கொஞ்சம் கலர் அடித்து வாம்மா”
“தேதியும் போடு. சும்மா ஏப்ரல் 2004 மட்டும் போட்டாப் போதும்”. நம்ம சுறுசுறுப்புக்கு இந்த மாத இறுதிக்குள் இதனைப் பதிவு செய்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவளோ நாளையும் தேதியில் போடுவேன் என்று “6 ஏப்ரல் 2004” என்று எழுதி எனது ஒரு வாரச் சோம்பலை இந்த உலகம் அறியும்படி செய்து விட்டாள் !
வண்ணம் சேர்க்கையில் படம் கெட்டுப் போய் விடுமோ என்று முதலிலேயே ஒரு நகல் எடுத்துக் கொண்டேன். அடுத்த நாள் வண்ணம் தீட்டப்பட்டு வந்த படத்தைப் பார்த்தேன். அப்படி ஒன்றும் கெடவில்லை. இடது ஓரத்தில் இருக்கும் எங்கள் கூடாரத்தைப் பார்த்தேன். நிஜத்தில் பல பயணங்களைப் பார்த்துப் பல்லிளித்துக் கிடக்கும் அது படத்தில் பல வண்ணங்கள் சேர்ந்து பதவிசாய் இருந்தது.
“சூப்பரா இருக்குமா” என்றேன். “பின்னே என்ன” என்பது போல் என்னை ஒரு பார்வை பார்த்தவள் அது ஒரு வானவில் கூடாரம் என்றாள். “அப்பா, It’s a rainbow tent”.
ஓ! இவளுக்கும் வானவில் பிடிக்கும் !
இன்னும் நிறைய இனிய நினைவுகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.
அருமையாக இருக்கிறது படம் – இதை உங்கள் மகளிடம் என் சார்பாக சொல்லுங்கள். எங்கள் வீட்டிலும் இது மாதிரி ஒரு செல்ல மகள் இருக்கிறாள்.
அன்புள்ள செல்வராஜ்,
குழந்தைகளின் வேலைகள் எப்போதுமே இன்பமளிப்பவைதான். மேலும் குழந்தைகளின் குவிப்பு(Fபோகஸ்) பெரியவர்களைவிட அதிகம் என்பதும், ஞாபக சக்தி அதிகம் என்பதும் அறிவியற்பூர்வமான உண்மை. இதற்கு தத்துவமும் பதில் சொல்கிறது. சராசரியாக 15,16 வயதுக்கு மேல்தான் ஞாபக மறதி அதிகப்படுகிறது என்பது பெரும்பாலாருக்கு பொருந்துகிறது. இதற்கும் மரபணுக்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு….
சந்தோஷமான ஒரு போஸ்டிங்குக்கு நன்றி..
ஐயோ சமத்துக் குட்டி!
அந்த பெரிய மனுஷிகிட்டே சொல்லுங்க
படம் ரெம்ப ரெம்ப நல்லாருக்குன்னு
அதுலயும் அந்த ஒட்டடைக் குச்சி அப்பா!
கேம்ப்பிங் ஒரு வித்தியாசமான, நல்ல அனுபவம்.
இரண்டு முறை சென்ற போதும் பக்கத்தில் விளையாண்ட வாண்டுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்குதான் அவர்கள் முழுவதும் சுதந்திரமாக இருப்பதாகப் பட்டது!
இங்கே தமிழ்ச்சங்க ஆண்டுவிழா மலருக்காக சுட்டிகள் வரைந்த ஓவியங்கள் எல்லாம் கைவசம் உள்ளது.
புத்தகத்தில் படங்கள் பக்கத்திற்கு நான் கொடுத்த முன்னுரை
“ஃபோட்டோ இனிது பெயிண்ட்டிங் இனிது என்பர்
தம்மக்கள் கிறுக்கல் காணாதவர்”
🙂
À¼õ ÝôÀá þÕìÌ…¦ºøÅáˆ. þýÛõ ¦¸¡ïºõ ±Ø¾Ä¡õ. þô§À¡Ð §¿ÃÁ¢ø¨Ä:-)
அழகான வாசிப்பு. உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் என் வாழ்த்துக்கள். வசந்தத்தைக் கொண்டாடுங்கள்!!
செல்வராஜ்
இங்கு யேர்மனியில் பிள்ளைகளின் மனநிலையை அறிந்து கொள்ள ஓவியங்களைத்தான் வரைய விடுவார்கள்.
பிள்ளைகள் வரையும் முதல் ஓவியத்தை பாடசாலைகளில் கூடப் பத்திரப் படுத்தி வைத்து அவர்கள் அந்தப் பாடசாலையை விட்டு வெளியேறும் போது பெற்றோரிடம் ஒப்படைப்பார்கள்.
மருத்துவர்கள், ஆசிரியர்கள்… என்று ஒவ்வnருவரும் பிள்ளைகளின் ஓவியத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்.
காரணம் ஒரு குழந்தை வரையும் ஓவியத்தில்
குழந்தையின் அவதானம், திறன், கற்பனை, ஒளவியல்…………. என்று பல சமாச்சராரங்கள் ஒளிந்துள்ளனவானம்.
நிவேதிதாவுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்து விடுங்கள்.